2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொருளாதார குற்றங்களும் ஜெனீவா செல்கின்றன

Johnsan Bastiampillai   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

 

இலங்கை மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது, இந்நாட்டு பொருளாதாரத்தை கையாண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இழைத்த பொருளாதாரக் குற்றங்களின் விளைவாகும் என்றே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கருதுகிறார். 

மனித உரிமைகளுக்கான ஐ.நா பதில் உயர்ஸ்தானிகர் நதா அல் நஷீப், செப்டெம்பர் 13ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான அறிக்கை மூலம் இது தெரியவந்தது. இலங்கை அரசாங்கம், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற அந்தச் சொற்பிரயோகத்தை ஏற்க மறுத்துள்ளது.

தற்போது, சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையில் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, அந்தச் சொற்பிரயோகம் தெளிவற்றது என்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டார். 

பொருளாதார நெருக்கடிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் முறையற்ற செயற்பாடுகளாலும் ஊழல், மோசடி போன்றவற்றாலுமே ஏற்படுகின்றன. இந்தப் பொதுவான நிலைப்பாட்டில் இருந்து, ஆட்சியாளர்களின் அவ்வாறான நடவடிக்கைகளை, ‘பொருளாதார குற்றங்கள்’ என்று குறிப்பிடுவது பிழையெனக் கூற முடியாது. ஆனால், மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள், இதற்கு முன்னர் எந்தவொரு நாட்டின் தலைவர்களின் செயற்பாடுகளையும் இவ்வாறு குறிப்பிட்டதில்லை. 

1980ஆம் ஆண்டு வரை, ‘ரொடேசியா’ என்றழைக்கப்பட்ட தற்போதைய சிம்பாப்வே, கடந்த சில வருடங்களாக இலங்கையைப் பார்க்கிலும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. அதற்கும் காரணம் அந்நாட்டுத் தலைவர்களின் ஊழல்களேயாகும். ஆயினும், அந்த ஊழல் நடவடிக்கைகளை எவரும் ‘பொருளாதார குற்றங்கள்’ என்று குறிப்பிடவில்லை. ஏனெனில், அந்நாட்டு மனித உரிமைகள் மீறல்கள், உலகளவில் பெரிதாக பேசுபொருளாகவில்லை. 

இம்முறை மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில், ‘பொருளாதார குற்றங்கள்’ (Economic crimes) என்ற சொற்பிரயோகம் ஏழு இடங்களில் வந்துள்ளது. ‘மனித உரிமைகள் மீறல்களுக்கும் பொருளாதார குற்றங்களுக்கும் தண்டனை இன்மை உள்ளிட்ட, நெருக்கடியின் அடிப்படை காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கு, சர்வதேச சமூகம் இலங்கைக்கு உதவுவதை உயர்ஸ்தானிகர் ஊக்குவிக்கிறார்’ என்று ஓர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனையின்மையை விவரிக்கும்போது, ‘2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஊழல், ‘பொருளாதார குற்றங்கள்’ தொடர்பான பல வழக்குகள், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி, குற்றங்களையோ அல்லது குற்றப்பத்திரங்களையோ வாபஸ் பெறுவதன் மூலம் கைவிடப்பட்டுள்ளன’  என்று மற்றோர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தில், ஊழல்களும் பொருளாதார குற்றங்களும் வெவ்வேறான விடயங்கள் என்ற கருத்து தரப்படுகிறது. ஆனால், அந்த அறிக்கையில் மற்றோர் இடத்தில், ‘ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோம் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைக்கு, புதிய நிர்வாகம் சாதகமான பதிலை வழங்கும் என உயர்ஸ்தானிகர் எதிர்ப்பார்க்கிறார்’ என்று கூறப்படுகிறது. இந்த வசனமானது, ஊழல் என்பது பொருளாதார குற்றங்களில் ஓர் அம்சம் என்ற கருத்தை தருகிறது. எனவே, உயர்ஸ்தானிகரின் ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகம் தெளிவற்றது என்ற அமைச்சர் சப்ரியின் வாதத்தை நிராகரிக்க முடியாது. 

எனினும், ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகம், உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற அமைச்சர் சப்ரியின் வாதம் சரியானதாகத் தெரியவில்லை. ‘மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் திருடப்பட்ட சொத்துகளை கண்டுபிடிக்கவும் இலங்கைக்கு உதவுமாறு’ உயர்ஸ்தானிகரின் அறிக்கை, மனித உரிமைகள் பேரவைக்கு பரிந்துரை செய்கிறது. 

மனித உரிமைகள் மீது, பொருளாதார குறறங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பின், நிச்சயமாக அந்தக் குற்றங்கள், மனித உரிமைகள் பேரவையினதும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரினதும் அதிகார எல்லைக்குள் வருவதை நிராகரிக்க முடியாது. 

மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், திருடப்பட்ட சொத்துகளை கண்டுபிடிக்கவும், இலங்கைக்கு உதவுமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்த போதிலும், இலங்கை அரசாங்கம் பொருளாதார குற்றங்கள் இடம்பெற்றதாகவோ பொதுச் சொத்து திருடப்பட்டதாகவோ இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை; ஏற்றுக் கொள்ளும் என்று கருதவும் முடியாது. 

இவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கம், பொருளாதார குற்றங்கள் தொர்பாக விசாரணை செய்யும் என்றோ திருடப்பட்ட பொதுச் சொத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும் என்றோ கருத, எந்தவோர் அடிப்படையும் இல்லை. எனவே, நடைபெறாத நடவடிக்கைகளுக்கு எப்படி உதவ முடியும்?

மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள், உண்மையிலேயே இலங்கையில் இடம்பெற்று இருக்கின்றனவா? இலங்கை இன்று பாரியதொரு பொருளாதார அழிவையே சந்தித்துள்ளது. 50 பில்லியன் டொலருக்கு மேல், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் உள்ளது. அதற்கு வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் இல்லை. அதன் காரணமாகவே வெளிநாட்டு செலாவணியைத் தரும் கைத்தொழில்கள், சேவைகளை நடத்திச் செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. 

நாட்டில் பெரும்பான்மையாக வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மத்தியில் வறுமை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. உலக உணவுத் திட்டத்தால், மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம், அந்த ஆய்வில் கலந்து கொண்ட குடும்பங்களில் 73 சதவீத குடும்பங்கள், அன்றாட உணவு உட்கொள்ளலை குறைத்துக் கொண்டுள்ளன. போஷாக்கின்மையால், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளதாக ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ‘யுனிசெப்’ நிறுவனம் கூறியது. 

2016ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே, ‘யுனிசெப்’ அந்த முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இலங்கையில், ஏழைகளை போஷாக்கின்மை அவ்வளவு பாதிக்கவில்லை என்று கூறுவதற்காகவே அமைச்சர் அவ்வாறு கூறுகிறார். 

ஆனால், 2016ஆம் ஆண்டைப் பார்க்கிலும், மிக மோசமான பொருளாதார நிலைமையையே கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏழைகள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். 

மருத்துவமனைகளில் பல உயிர்காப்பு மருந்துகளுக்கும் கருவிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்துக் கடைகளில் அவற்றை வாங்குமாறு மருத்துவர்கள், நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையால், மருந்துக் கடைகளிலும் பெரும்பாலான மருந்துகள் இல்லை. இருக்கும் மருந்துகளின் விலையும் கடந்த வருடத்தைப் பார்க்கிலும் குறைந்தது மும்மடங்காக அதிகரித்துள்ளன. 

பல மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 500 மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்தும் அறிவிக்காமலும் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். 

வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையால், பல கைத்தொழில்கள் முடங்கிவிட்டன; அல்லது, மந்த நிலையில் இயங்குகின்றன. அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் வருமானமின்றி அவதியுறுகின்றனர். பல நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம், கடந்த இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு மக்களின் வருமானம் வேகமாகக் குறையும் நிலையில், விலைவாசி வானளாவ உயர்கிறது. இதனால், நாட்டில் பட்டினி பரவுகிறது. மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உரிமை இழப்பாகும். 

இவை எதுவும் இயற்கை அனர்த்தங்களாலோ, உலக சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களாலோ வெளிநாட்டு ஆக்கிரமிப்பொன்றாலோ ஏற்பட்டவையல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, தவறான முகாமைத்துவத்தின் விளைவாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கடந்த மே மாதத்தில் கூறியிருந்தார். 

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதாயின், நாட்டில் இடம்பெறும் ஊழல்களைத் தடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறுகிறது.

இலங்கையில் தற்போதைய நிலைமையைப் பற்றி, அமெரிக்க செனட் சபையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையொன்றில், நேரடியாகவே ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஊழல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இலங்கை, 2022 ஏப்ரல் மாதம், தனது வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து, இலங்கையின் பிணைமுறி கொள்வனவு செய்த ‘சென் கீட்’ தீவைச் சேர்ந்த ஒரு வங்கி, “இலங்கை தம்மிடம் பெற்ற கடனை திருப்பித் தரவில்லை” என்று நியூயோர்க் நகர நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவிலும் ‘ராஜபக்‌ஷர்களின் ஊழல்’களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, பல தசாப்தங்களாக ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளினதும் ஊழல்களினதும் விளைவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும், கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளன. அவை மக்களின் உரிமை மீறலாகும். 

எனவே, ‘பொருளாதார குற்றங்கள்’ என்ற சொற்பிரயோகத்தில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், அவற்றைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரணை செய்ய வேண்டும் என்று, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிடுவது விந்தையான விடயமாகும். 

போர்க் கால உரிமைகள் மீறல் சம்பவங்களைப் பற்றி, 13 ஆண்டுகளாக வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்பதையும் இங்கு நினைவுபடுத்துவது உகந்தது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .