2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

முஸ்லிம் சமூகம் மந்திரித்து விடப்பட்ட ஆடுகளா?

Mayu   / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

ஒரு தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சமூகம் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்க முடியும்.  பதவியையும் பணத்தையும் தமது அரசியல் இருப்பையும் பற்றிச் சிந்திக்காமல் சமூக நலனை முன்னிறுத்திச் செயற்படுகின்ற அரசியல் கட்சிகள் ஏதுமிருப்பின், அவர்களும் இது விடயத்தில் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது.  

 குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, கடந்த கால அனுபவங்களை, பாடங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கலாம். சமூகம் சார்ந்த உடன்பாடுகள் அடிப்படையில் ஆதரவளிக்கலாம். ‘எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் இருப்பது பாதுகாப்பானதல்ல’ என்ற கோணத்தில் சிந்தித்து ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் தமது ஆதரவை அளிக்கலாம்.  

முஸ்லிம் சமூகத்திற்கு இதுவும் ஒரு முக்கியமான தேர்தலாகும். இதற்கு முன்னைய காலங்களில் ‘இவர் இனவாதி’, ‘முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தவர்’ அல்லது ‘கடும்போக்காளர்’ என முத்திரை குத்தக் கூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதனால் ஒருவரை வெளிப்படையாகவே புறக்கணிக்கக் காரணம் இருந்தது.  

2024 ஜனாதிபதித் தேர்தல் களம் அப்படி அமையவில்லை. பிரதான வேட்பாளர்களான மூவரையும் அப்படி முத்திரை குத்திவிட முடியாத நிலை உள்ளது. எனவே, முஸ்லிம் கட்சிகள் என்ன முடிவை எடுத்தாலும், முஸ்லிம் சமூகமானது தாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும். என்ற இறுதித் தீர்மானத்தை சுயமாகச் சிந்தித்தே எடுக்க வேண்டும் 
தமிழர் அரசியல் உண்மையாகவே வடக்கு, கிழக்கிலும் சரி கொழும்பிலும் சரி மலையகத்திலும் சரி இறங்குமுகமாக இருக்கிறது. நடிகைகளைக் கூட்டி வந்து படம் காட்டியது போல, மலையக அரசியல் மாயைகளுக்குப் பின்னால் மக்களை இழுத்துச் செல்கின்றது. கொழும்பு தமிழர் அரசியலோ முஸ்லிம் அரசியலோ இன்னும் ‘சேரி’ வாழ்க்கைக்குக் கூட முடிவு கட்டவில்லை. 

 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை தேர்தலில் தமிழர்கள் மிகவும் பிளவுபட்டுள்ளனர். பொது வேட்பாளர், தேர்தலைப் புறக்கணித்தல், பெருந்தேசிய வேட்பாளர்களுடன் இணங்கிப் போவது என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், பல துண்டங்களாக வாக்குகள் பிளவுபடப் போகின்றன. இதனால் தமிழர் அரசியல் இன்னும் பலவீனமடையும் சாத்தியமுள்ளது. 
ஆகவே, இந்த முறை முஸ்லிம் மக்களின் வாக்குகள் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் கணிசமான பங்கை வகிக்கப் போகின்றன என்பது தொட்ட தெளிவாகப் புலப்படுகின்ற விடயமாகும். எனவே தீர்க்கமான, தீர்க்கதரிசனமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். 

 அதைவிடுத்து, சொந்த இலாபங்களின் அடிப்படையில் முஸ்லிம் அணிகள் முடிவெடுக்குமாயின், ஒரு கட்சி எடுக்கின்ற முடிவுகளை அதன் எம்.பிக்கள் புறக்கணித்து பல்டி அடிப்பார்களாயின்,  மக்களை எப்படி நிலையாக வைத்திருக்க முடியும்? அல்லது மக்கள் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது?

அந்த வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சரியாக வழிப்படுத்துவதற்கான அருகதையை, கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை முஸ்லிம் கட்சித் தலைவர்களும், எம்.பிக்களும் கொண்டிருக்கின்றார்களா என்று மீள் வாசிப்பொன்றைச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. 

இங்கு ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஆளும் தரப்பில் இருப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்கள் ஒப்பீட்டளவில் சில நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய தர்க்கமே என்றாலும். வெற்றி பெறுகின்ற பக்கம் நாம் நிற்க வேண்டும் என்ற மனப்பாங்கு கொள்கையில்லாத அரசியலின் அடையாளமாகும். 
ஒரு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு விடயம் இருக்கின்றது. யார் வெற்றி பெறும் சாத்தியமுள்ளது என்று இன்னும் ஒரு விவகாரம் இருக்கின்றது. ஆனால், ஜனநாயக வழிமுறை என்பது நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்று கருதுகின்றோமோ அவருக்கு வாக்களிப்பதாகவே இருக்கும். 

நமது கொள்கை என்பது நமது சமூகத்திற்கு, நாட்டுக்குப் பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களிப்பதாக இருக்க வேண்டும். யார் ஜனாதிபதியாக வரக்கூடும் என்ற அடிப்படையில் வெற்றி பெறுபவரின் அணியில் நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணி வாக்களிக்கும் மனநிலைக்குள் மக்களை முஸ்லிம் கட்சிகள் தள்ளிவிடக்கூடாது. 

 அதேவேளை, இவர்தான் சரியான, பொருத்தமான ஜனாதிபதி, இவர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார். இவர்தான் முஸ்லிம்களுக்குச் சாதகமானவராக இருப்பார், எனவே, இவருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வதற்கு முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள், எம்.பிக்கள் யாருக்குமே எந்த அருகையும் இருக்கின்றதா என்ற வினாவும் இவ்விடத்தில் எழுகின்றது.  

கடந்த கால் நூற்றாண்டு அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன் கணித்த என்ன விடயங்கள் நடந்திருக்கின்றன? இவர்தான் பொருத்தமான, சாதகமான ஆட்சியாளர் என்று நீங்கள் வாக்களித்தவர்கள் வெற்றி பெற்றார்களா? நீங்கள் தேர்தலுக்குப் பின்னர் அந்தப் பக்கம் தாவி பதவி, பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பது உண்மையா அல்லது மக்களுக்குப் பிரதிபலன்களைப் பெறுக் கொடுத்தீர்கள் என்பது உண்மையா? 

 முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்திற்கான அரசியலைச் செய்கின்றார்களா தத்தமது அரசியல் சார்ந்த வாழ்வாதாரத்திற்கான அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்களா என்பது ரகசியமான விடயமல்ல.  

இதற்கு முன்னர் கூடவிட்டுக் கூடு பாய்ந்த முஸ்லிம் கட்சிகள், எம்.பி. பதவியை எடுத்துக் கொண்டு பல்டி அடித்த அரசியல்வாதிகள் தொடக்கம் இப்போது, குரங்கு பாய்ச்சல் அடித்துள்ள எம்.பி. தொட்டு  மதில் மேல் பூனையாகத் தருணம் பார்த்துக் கொண்டு நிற்கின்ற அரசியல்வாதிகள் வரை... பலரது அரசியலை மக்களாகிய நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம். 

 இதுவரை முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை நம்பி, ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்ததால் சமூகத்திற்குக் கிடைத்த நன்மை என்ன? சுயநல நகர்வுகளால் ஏற்பட்ட அனுகூலங்களை விட இழப்புக்களே அதிகம் என்பதை மறுக்க முடியுமா ? 

நீங்கள் மொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கூட்டி அள்ளிக் கொண்டு போய், ஆட்சியாளர்களின் முன்னே கொட்டிவிட்டு, சில பொற்காசுகளை அல்லது பதவிகளைப் பெற்றுக் கொண்டீர்கள். அன்றேல், உங்களது கோப்புகளைப் பாதுகாத்தீர்கள். இதனால் சமூகத்திற்குக் கிடைத்த நன்மைகள் என்ன என்று கூற முடியுமா? 

முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகள், அதன் மீதான இனவாத நெருக்கடி, மத ஒடுக்குமுறை, வளம் மற்றும் பதவி ஒதுக்கீடுகளில் பாகுபாடு, வாழ்வாதார நெருக்கடிகளை இத்தனை முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்களும் தீர்த்து வைக்க முடிந்ததா?  இல்லை.

 அப்படியென்றால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த முறையும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு அல்லது புறக்கணிக்குமாறு பரிந்துரை செய்வதற்கு முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  

ரணிலையா, சஜித்தையா அல்லது அனுரவையா ஆதரிப்பது என்பது இங்குப் பிரச்சினையல்ல!

 மாறாக, முஸ்லிம் அரசியல்வாதிகளின் போலி நாடகங்களை நம்பி, சமூகம் தன் முடிவுகளை எடுக்கத் தேவையில்லை. ஏனெனில், இங்கே எந்த முஸ்லிம் கட்சித் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் நிலையான கொள்கையோ நிலைப்பாடோ இல்லை. சமூகம் சார்ந்து முடிவெடுப்பதாக ஒரு படத்தைக் காட்ட முற்பட்டாலும் நிஜத்தில் அவ்வாறில்லை. 
 எனவே, முடிவுகள் சரியாக இருக்க வேண்டும். இதில் கட்சியின் தலைவரும் எம்.பிக்களும் நிலையாக இருக்க வேண்டும். ‘குரங்கு’ அரசியல் மனநிலை கூடாது. மதில்மேல் பூனைகளும் கீழிறக்கப் பட வேண்டும். அற்பத்தனமான அரசியலைப் பேசி, இனவாதம் என கூப்பாடு போட்டு, கொச்சையாகப் பிரசாரங்கள் செய்ய வேண்டியதில்லை. 

 சரியான வழித்தடத்தில்  முஸ்லிம் வாக்காளர்களை வழி நடத்தத் தகுதியற்ற அரசியல் தலைவர்கள், முன்னாள் இந்நாள் எம்.பிக்கள் முடிவெடுப்பதற்கான பொறுப்பை சமூகத்தின் கையில் கொடுத்துவிட்டு, உங்களது சொந்தக் கூடாரங்களுக்கு ஒதுங்கிக் கொள்ளலாம். 

 ஏனென்றால், சுயநல தலைவர்கள், எம்,பிக்களுக்கு பின்னால் மந்திரித்து விடப்பட்ட ஆடுகளைப் போல முஸ்லிம் சமூகம் இனியும் செல்ல முடியாது.

08.20.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .