2025 மே 15, வியாழக்கிழமை

‘எழுக தமிழ் அரசியல் கட்சிகள்’ காலத்தின் தேவை

Thipaan   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வீகன்

‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகள் தமிழ் மக்களின் மத்தியில் மேற்கொள்ளப்படுவதிலும் பார்க்க அவ்வாறான - அல்லது அதற்கு சம செறிவுள்ள கலந்துரையாடல்கள் - தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் தேவை என்று கடந்த தடவை எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் மேற்குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் ஆழமாக உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. 

இந்த இரண்டு வெவ்வேறான நிகழ்வுகளையும் சற்று ஆழமாகப் பேசினால் பல வினாக்களுக்கு சில பதில்களையாவது பெற்றுக்கொள்ள முடியும். 

குறிப்பிட்ட நிகழ்வானது ஒரு சாதாரண புத்தக வெளியீட்டு விழா என்பதைத் தாண்டி ‘எழுக தமிழ்’ உள்ளரங்க நிகழ்வுபோல தோற்றமளிக்கப்போகிறது என்பது அந்த நிகழ்வின் அறிவிப்பு விளம்பரத்திலேயே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அழைக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவமும் ஒரு சாதாரண நிகழ்வுக்கு அப்பால், ஏற்பாட்டாளர்களின் அரசியலையும் ஓரளவுக்குப் பிரதிபலித்திருந்தது. 

கடைசியில், எது நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அது தப்பாமல் நடைபெற்று முடிந்துவிட்டது.  

அந்த வகையில், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்ற கூச்சல்கள், குழப்பங்கள் என்பவற்றுக்கும் பின்னணியில் உள்ள மாசு படிந்த அரசியல் கலாசாரத்தையும் அது எதிர்கால பயணங்களில் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் மிக்க அதிர்வுகளையும் ஆராய்வதுதான் இந்தப் பத்தியின் நோக்கம். 

போர் முடிவடைந்து ஏழாண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் அரசியல் களம் எனப்படுவது மிகுந்த ஏமாற்றங்களுடனும் விரக்தியுடனும் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் அமரர் ஊர்தியாகவே காணப்படுகிறது. இதுதான் இன்றைய உண்மை நிலை. இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.  

ஆட்சி மாற்றம் எனப்படுவது மூச்சுவிடும் பெருவெளியை வரப்பிரசாதமாகத் தந்துவிட்டது என்று எவ்வளவுதான் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதற்குத் தமிழர்களே காரணம் என்று மார்தட்டிக் கொண்டாலும், இன்று அந்தப் பயனை அதிகம் அனுபவிப்பது தமிழர் அல்லாத தரப்புக்களே தவிர தமிழர்கள் அல்ல.  

ஆட்சி மாற்றத்துக்கு சமமான சாதனைகளைத் தமிழர்களுக்கு அறுவடை செய்து தந்துவிடப்போகிறது என்று பெருநம்பிக்கையுடன் அண்ணாந்து பார்க்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று மக்களது அடிப்படை எதிர்பார்ப்புகளைக்கூட - குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் - பூர்த்திசெய்ய முடியாத தரப்பாகத் திணறிக்கொண்டு பயணிக்கிறது.  

நிரந்தரத் தீர்வு தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், அடிப்படைப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளுக்கே அரசின் பங்காளியாக இருந்துகொண்டு, இன்னமும் இறைஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் கூட்டமைப்பு ‘குத்தி முறிந்து’ கொண்டிருப்பது வாக்களித்த மக்களுக்கு அதிருப்தியைக் கொடுத்த வண்ணமுள்ளது. 

இப்படியான ஒருதொகை ஏமாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களைத் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அண்மையில் ‘எழுக தமிழ்’ என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று முடிந்தது. உண்மையில், இந்த நிகழ்வின் மூலம் யாருக்கு எவ்வளவு பயன் கிட்டியது? என்று கேட்டால் ‘எமது அபிலாசைகளை உரத்துச் சொல்லியிருக்கிறோம்’ என்ற ஒற்றைப் பதிலைத் தவிர வேறெதையும் இந்த ஏற்பாட்டளர்களிடமிருந்து கேட்கமுடியாது.

இப்போது நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வானது இரண்டு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஒன்று, இந்த மக்களிடம் உணர்வு வற்றிவிட்டதா என்று சந்தேகம் கொண்டதால் மேற்கொள்ளப்பட்ட - நிகழ்த்தப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது, மக்கள் தொடர்ந்தும் உணர்வோடு உள்ளார்கள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர், அவர்களது அந்த உணர்வைத் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.  

நடந்து முடிந்த நிகழ்வும் அது நிகழ்ந்த பாணியும் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எவ்வாறான ஒரு தேவை இருந்தது என்பதை பட்டவர்த்தனமாகக் காண்பித்துவிட்டது.  

‘எழுக தமிழ்’ நிகழ்வை வெற்றியாக அறிவித்துக் கொண்டிருக்கும்; பூரிப்பு எங்கிருந்து ஊற்றெடுத்திருக்கிறது என்று பார்த்தால், கடந்த காலத் தேர்தல்களில் தம்மை நிராகரித்ததுபோல, மக்கள் அவ்வளவு பாரதுரமாக இம்முறை தூக்கியெறிந்துவிடவில்லை என்ற தோல்வியற்ற நிலையினால் ஏற்பட்டுள்ள கொண்டாட்டம்தான் இதுவே தவிர, இந்த நிகழ்வு உண்மையிலேயே பரிபூரண வெற்றியோ அல்லது ஒட்டுமொத்த மக்கள் திரண்டு வந்து பேராதரவளித்த சம்பவமோ அல்ல என்பது ஏற்பாட்டாளர்களுக்கே புரிந்த ஒன்று. 

இலட்சக்கணக்கில் விருப்புவாக்குகளைப் பெற்ற முதலமைச்சரை முன்னிறுத்தி அவரின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்ட பேரணி ஒன்றுக்கு வெறும் ஆயிரக்கணக்கில்தான் மக்களைத் திரட்ட முடிந்திருக்கிறது என்றால் இந்தப் பேரணியின் வெற்றிக்கனதி எத்தகையது என்பது மக்களுக்கு ஓரளவுக்குப் புரிந்திருக்கும்.  

இந்தப் பேரணியின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றும் சம கனதியான - அதேநேரம் சில வித்தியாசமான - செய்தியை தமிழ் அரசியல் களத்தில் ஆழமாக உரையாடியிருக்கிறது. 

அதாவது, குறிப்பிட்ட புத்தக வெளியீட்டு விழாவில் சுமந்திரன், தவராசா, ஆனந்த சங்கரி ஆகியோர் பேசும்போது ஏற்படுத்திய குழப்பங்களும் கூச்சல்களும் பல விடயங்களைத் தமிழ் அரசியல் களத்தில் பரிசோதனைக்காக விட்டுச் சென்றிருக்கின்றன. 

தங்களுக்குப் பிடிக்காத ஒரு தரப்பு பேசும்போது, அந்தத் தரப்பைப் பேசவிடாமல் குழப்பி, அவர்களது ஜனநாயக உரிமையை அடக்குவது மாத்திரமல்லாமல், அவர்களது பேச்சைக் கேட்பதற்கு வந்திருந்தவர்களது உரிமையையும் நசுக்கி, அந்தப் பேச்சினைக் கேட்பதற்குரிய உரிமையையும் தரமாட்டோம் என்ற கொடுமையான - ஜனநாயக விரோத விரும்பிகளாக - தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் மாறிவிட்டார்கள் என்ற அச்சத்தை அன்றைய நிகழ்வு எதிரொலித்திருக்கிறது. 

அதேவேளை, இப்படியான குழப்பங்கள் ஏற்படும்போது, அதனைத் தங்களுக்குரிய சாதகமான சம்பவங்களாகக் கருதி, அவற்றுக்குச் சாமரம் வீசிவிடுபவர்கள் போல இந்தக் குழப்பவாதிகளைக் கண்டிக்காமல், அவர்களைக் கண்களால் பார்த்துச் சிரித்துப் புளகாங்கிதமடையும் அரசியல்வாதிகள்தான் கூட்டமைப்பின் மாற்று அணியினராகத் தங்களைப் பிரகடனம் செய்துகொள்வதற்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள் என்ற அச்சத்தையும் அன்றைய நிகழ்வு அம்பலமாக்கியிருக்கிறது. 

அதேபோன்று, தமிழ் ஊடகங்களும்கூட அன்று நடைபெற்ற இந்தச் சம்பவங்களை அடக்கி வாசித்துக் குறிப்பிட்ட அரசியல் தரப்புக்கள், குழப்பவாதிகளின் கைகளில் அகப்பட வேண்டியவர்கள்தான் என்பது போன்ற மறைமுகமான அங்கீகாரத்தைத் தங்கள் செய்திகளில் காண்பித்திருப்பது இன்னொரு பெரிய ஊடக ஆபத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது. 

இலங்கை அரசியலின் மிகக்கூரான விளிம்புகளில் இன்று பயணம் செய்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் தரப்பும் அவர்களது அரசியலும் மேலே குறிப்பிட்ட விடயங்களின் மூலம் மிகப்பாரதுரமான சவாலை சந்தித்துள்ளனர் என்பதும் -  

இந்தப் பதற்றமான நிலைமைகளை உடனடியாகச் சரிசெய்வது யார் என்பதும்? தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு முன்னால் வியாபித்துள்ள மிகமுக்கியமான கேள்விகள் ஆகும். 

முப்பதாண்டு காலப்போரின் அழிவுகளில் இருந்தும் வடுக்களில் இருந்தும் வெளிவந்து, நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தீர்வினைப் பெற்றுத் தங்களது சொந்த இடங்களில் வாழக்கூடிய அமைதி நிலையை விரும்பும் தமிழர் தரப்பு, இன்று சகல தரப்புக்களுடனும் தங்கள் கெளரவத்தை இழக்காமல் நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கு இயன்றவரை முயற்சிசெய்து வருகிறது. அந்த நல்லிணக்கம் எனப்படுவது சகல தரப்பிலிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைச் சகல தரப்புக்களும் வலியுறுத்துகின்றன.  

எல்லோரையும் பகைத்துக் கொண்டு ‘வீர அரசியல்’ செய்வதுதான் குறிக்கோள் என்று வன்வலுவில் காதல்கொண்டவர்களாகத் தங்களை அடிக்கடி பிரகடனப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் அவ்வாறான போலிக்கோட்பாடுகளின் மத்தியில் லயித்துக்கிடந்து, அவற்றை நோக்கி மக்களை வசியம் செய்யும் நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்பட்டாலும் - நாட்டில் சிங்கள, முஸ்லிம் இன மக்களுடன் ஒரு பாரிய நல்லிணக்க பொறிமுறை ஒன்றின் ஊடாகத் தற்போது நகர வேண்டிய கட்டாய புள்ளியில் தமிழ் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 

தென்னிலங்கையிலும் கிழக்கிலும் உள்ள சிங்கள - முஸ்லிம் தரப்புக்கள் இதற்கான முயற்சிகளை ஓரளவேனும் மேற்கொண்டு வருகின்றன. 

ஆனால், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தரப்புக்களாலேயே ஓர் எதிர்க்கருத்தை முன்வைக்க முடியாத நிலை இருக்குமாக இருந்தால் - அதனை ஜனநாயக ரீதியில் செரிமானம் செய்துகொள்வதற்கான களநிலைவரம் இல்லாது இருக்குமானால் வேறிடங்களிலிருந்தும் - தெற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் - நல்லிணக்க ஏற்பாடுகளுக்காக வருகை தரவுள்ளவர்கள் எவ்வளவு சௌகரியத்துடன் தங்களது இதய சுத்தியான முயற்சிகளை முன்னெடுக்கப்போகிறார்கள்?  

நாங்களே வீடுகளை எரித்து விளையாடிக் கொண்டு, அதனை கட்டித்தருவதற்கு திரண்டு வாருங்கள் என்று ஏனைய சமூகங்களுக்கு அழைப்பு விடுத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? இதனை இன்றைய காலகட்டத்தில் சீர்திருத்தவேண்டியவர்கள் யார்?  

இன நல்லிணக்கத்தையும் தீர்வின் தாற்பரியங்களையும் மூச்சுக்கு மூச்சு பேசும் தமிழ் அரசியல் தலைமைகள், முதலில் தங்களை தலையில் தூக்கி வைத்திருக்கும் மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தவேண்டும். கொள்கை சார் பிளவுகள் எவ்வளவுதான் இருந்தாலும் தமிழ் அரசியல் களம் எனப்படுவது எப்போதும் பிரிந்துவிடாத பொதுத்தளமாக இருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை உடைத்துவிடுவதற்கு தாங்களே துணைபோகக்கூடாது.

இதனை முன்னெடுப்பதாயின் இந்த அரசியல் தரப்புக்கள் முதலில் தங்களுக்குள் பேசவேண்டும். 

முதலிலே கூறியதைப்போல, ‘எழுக தமிழ்’ போன்ற சம செறிவுள்ள கலந்துரையாடல்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிளவுகளின் மத்தியில் தங்களின் நலன்சார் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டு, புகுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் பல தரப்புக்கள் ஆவலோடு காத்திருக்கின்றன. 

பூகோள அரசியல் பேசும் இந்தத் தலைவர்கள் எவருக்கும் இந்த உண்மை தெரியாததும் அல்ல! ஆக, தற்போது உடடியாக செய்யப்படவேண்டிய நிகழ்வு - ‘எழுக தமிழ் அரசியல் தரப்புக்கள்’   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .