2025 மே 19, திங்கட்கிழமை

ஜெயலலிதா -கருணாநிதி இடையே நடக்கும் "தன்மான" போராட்டம்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இடையே மீண்டும் "வார்த்தை யுத்தம்" தொடங்கியிருக்கிறது. அதனையொட்டி இரு கட்சிகளுக்குள்ளும் மேடைப் பேச்சுகள் தீவிரமாகியிருக்கின்றன. திருச்சி அருகில் உள்ள திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் வருடந்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. திருவரங்கத்தில்தான் அந்த வார்த்தை யுத்தத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. திருவரங்கத்திற்கும் இலங்கைக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று தமிழகத்தில் பேசுவார்கள். அதேபோல் இந்த முறை இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தித்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது கண்டனக் கணைகளைத் தொடுத்தார். அன்னதான திட்டம் தொடக்கி வைக்கப்பட்ட பிறகு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா.சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும், இலங்கை தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் வரை மற்ற நாடுகளுடன் சேர்ந்து இலங்கையில் பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்" என்றெல்லாம் இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி விளக்கிப் பேசிவிட்டு, "தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழிய காரணமாயிருந்தவர், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதுபோல் நாடகமாடுகிறார்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடினார். அதைவிட குறிப்பாக இந்த பிரச்சினையில் மத்திய அரசை(இந்திய அரசு) எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர் இலங்கை தமிழர்களுக்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றி விட்டார் என்றும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டிற்கு கடைசியில் மத்திய அரசு கொடுத்த கெடுபிடி காரணமாக அந்தப் பெயரை "ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு" என்று மாற்றியதைத்தான் முதல்வர் ஜெயலலிதா அப்படி திருவரங்கம் கூட்டத்தில் இடித்துரைத்தார்.

அதே மேடைப் பேச்சில் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டினார் முதல்வர் ஜெயலலிதா. அது சர் பிட்டி தியாகராயர் பற்றிய சம்பவம். அது இதுதான். "முன்பொருமுறை சர் பிட்டி தியாகராயர் சென்னை மேயராக இருந்த நேரத்தில் வேல்ஸ் இளவரசர் வந்தார். அவரை வரவேற்க சென்னை முதல் குடிமகன் என்ற நிலையில் கவர்னருடன் செல்வதாக இருந்தது. அப்போது கவர்னரிடமிருந்து ஒரு தகவல் வந்தது. "நீங்கள் கோட், சூட்டுடன் இளவரசரை வரவேற்க வர வேண்டும்" என்பதே. ஏனென்றால் தியாகராயர் எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை தலைப்பாகை, வெள்ளைக் கோட் சகிதமாக இருப்பார். ஆனால் தியாகராயரோ, "நான் என் டிரஸ்ஸில்தான் வருவேன், அப்படி வரக்கூடாது என்றால் நான் வரவேற்புக்கே வரவில்லை” என்றார். இதைக் கேட்ட கவர்னரோ "சரி. உங்கள் டிரஸ்ஸிலேயே வாருங்கள்" என்று கூறி அழைத்துச் சென்றார். இப்படி சர் பிட்டி தியாகராயர் நடந்து கொண்ட விதம்தான் தமிழனின் தன்மானம்" என்று பேசி விட்டு, "இப்படித் தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது" என்று சாடினார்.

இந்தப் பேச்சின் பின்னணியில் முதல்வர் ஜெயலலிதா ஓர் அரசியல் தந்திரத்தை கடைப்பிடித்தார் என்றே சொல்ல வேண்டும். அவர் திருவரங்கத்தில் கூறியது மத்திய அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாமம், மத்தியில் தான் ஆதரவளிக்கின்ற மத்திய அரசே தன்னுடைய மாநாட்டிற்கு (டெசோ) ஆதரவு அளிக்கவில்லை என்றதும் அதைத் தட்டிக் கேட்க முடியாமல் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் இலங்கை தமிழர் பிரச்சினையில் தன்னை குற்றம் சாட்ட வேண்டும் என்பதே முதல்வர் கேட்டிருந்த கேள்வி. அதையும் விட ஒருபடி மேலே போய் இவ்வளவும் நடந்த பிறகும் மத்திய அரசிலிருந்து ஏன் தி.மு.க. விலகவில்லை? ஏன் காங்கிரஸுடனான உறவினை முறித்துக்கொள்ளவில்லை? என்பதுதான் முதல்வரின் பேச்சில் வெளிவந்த "அரசியல் யுக்தி". இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி இல்லை என்பதில் அ.தி.மு.க. ஏறக்குறைய தெளிவுபெற்று விட்டது. அதனால்தான் அதே திருவரங்கம் கூட்டத்தில், "வியாபாரி- வக்கீல் கதை" ஒன்றைக் கூறி விஜயகாந்தை மறைமுகமாக "கறுப்பு வியாபாரி" என்று காரசாரமாக தாக்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அந்த பேச்சில், "ஒரு சிலர் காரியம் கைகூடும் வரை உடன் இருந்து விட்டு பின் நம் மீதே பழிச் சொற்களை நாள்தோறும் வீசி வருகிறார்கள்" என்று சென்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டு, இப்போது நம்மைத் தூற்றுகிறார் என்று விஜயகாந்தை தாக்கிப் பேசினார். ஒருபுறம் விஜயகாந்தை "கறுப்பு வியாபாரி" என்றும் இன்னொரு புறம் முன்னாள் முதல்வர் கருணாநிதியை "தன்மானம் இழந்தவர்" என்றும் விமர்ச்சித்திருப்பதும் அந்த அரசியல் யுக்தியின் அடிப்படையிலேயே! அவரைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும். விஜயகாந்த் தி.மு.க. அணியில் சேராமல் தனித்துப் போட்டியிட வேண்டும். இந்த இரு அம்சத்திட்டத்தை மனதில் வைத்தே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் விமர்சித்துள்ளார்.

அப்படியென்றால் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. விரும்புகிறதா? என்ற கேள்வி எழுகிறது. முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க.தான் இன்றைக்கு நம்பர் ஒன் கட்சி என்று திடமாக நம்புகிறார். அதனால் அவர் காங்கிரஸ் அல்லது தே.மு.தி.க. (விஜயகாந்த் கட்சி) ஆகியவற்றின் கூட்டணி வேண்டும் என்று இன்றுவரை யோசிக்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் எதிரி என்பது போல் முன்னிறுத்தி, அந்தக் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர முடியாத அளவிற்கு செய்ய வேண்டும். அப்படி செய்து விட்டால், தி.மு.க.வின் பலத்தை நாடாளுமன்றத் தேர்தலில் குறைத்து விட முடியும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க.விற்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் சேர்ந்து விடாத அளவிற்கு தனியாக ஓர் ரகசிய திட்டத்தை சில "அரசியல் லாபி" செய்வோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது என்னவென்றால், "2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நீங்கள் தி.மு.க.வுடனும் கூட்டணி சேர வேண்டாம். அ.தி.மு.க.வுடனும் கூட்டணி சேர வேண்டாம். பா.ஜ.க. போன்ற கட்சிகளுடன் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். 2016 உங்களுக்கு (அதாவது முதல்வர் பதவி) பிரகாசமாக இருக்கிறது" என்று தெம்பூட்டுகிறார்கள். இந்த ஆலோசனையின் உள்நோக்கம் தே.மு.தி.க. வாக்கு வங்கி அடிப்படையில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க.வுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துவிடக்கூடாது என்பது மட்டுமே! தி.மு.க.விற்கு தே.மு.தி.க. இல்லை என்றால், அவர்களால் காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடர முடியாது என்று அ.தி.மு.க. தலைமை கருதுகிறது. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் 1998 நாடாளுமன்றத் தேர்தல் போல் தனியாக நிற்க வேண்டும். தி.மு.க.வும் தனியாக போட்டியிட வேண்டும். தே.மு.தி.க.வும் தனியாக போட்டியிடட்டும். பிறகு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் "நாற்பதுக்கு நாற்பது" என்ற தங்கள் பிரசாரத்திற்கு வெற்றி கிடைத்து விடும் என்று அ.தி.மு.க. தலைமை கருதுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் திருவரங்கம் கூட்டத்தில் விஜயகாந்த் மற்றும் கருணாநிதி மீது காட்டமான அட்டாக்கைத் தொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா.

இதில் அப்செட்டான முன்னாள் முதல்வர் கருணாநிதி, விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தில் (இது வருடா வருடம் தி.மு.க. கொண்டாடும் விழா. பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. தோன்றிய நாள்- இந்த மூன்று நாளையும் சேர்த்துக் கொண்டாடப்படும் விழாக்கோலத்திற்குத்தான் முப்பெரும் விழாக் கொண்டாட்டம் என்று பொருள்) இந்த "தன்மானம் இல்லாதவர்" என்ற வார்த்தைப் பிரயோகத்தை எடுத்துக் கொண்டும் அவரும் வேகமாகவே பேசியிருக்கிறார். அதில், "உலகத்திலே அடிக்கிற லூட்டி எல்லாம் அடித்து விட்டு ஒருவன் தன்மானம்- தன்மானம் என்று சொன்னால் என் வரலாறு உங்களுக்குப் புரியும். சொன்னவர்களுக்குச் சொல்கிறேன். அதுபோல அவர்களுடையை வரலாறு எனக்குத் தெரியும். போட்டி வைக்கலாமா? தன்மானத்தை இழந்த சம்பவங்கள் எவையெவையென? சட்டசபையிலே அல்ல பொது மண்டபத்தில் தன்மானத்தைப் பற்றிப் பேசலாம் வாருங்கள். பட்டிமன்றத்தில் பேசுவதால் ஒன்றும் தகராறு வந்து விடாது... ஆகவே தன்மானத்தைப் பற்றிப் பேசுகின்ற பேச்சை இத்தோடு நிறுத்துங்கள். இதற்கெல்லாம் என் தம்பிமார்கள் பதில் சொல்ல ஆரம்பித்தால் அது எங்கேயோ போய் முடிந்து விடும்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். தி.மு.க.வை நாடாளுமன்ற தேர்தலில் தனிமைப்படுத்தவே முதல்வர் ஜெயலலிதா திருவரங்கத்தில் அட்டாக் பண்ணியிருக்கிறார் என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி புரிந்து கொண்டதாலேயே "திருவரங்க பேச்சுக்கு" "விழுப்புரம் பேச்சு" மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

"கோல்கேட்" ஊழல், "சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அணுமதி" "டீசல் விலை உயர்வு, வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மான்ய விலையில் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு"- உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மத்திய அரசு (இந்திய அரசு) கூட்டணிக் கட்சிகளின் கிடுக்கிப்பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிடியிலிருந்து மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் விலக முடியாத சூழ்நிலை உருவாகுமேயானால், விரைவில் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் கட்டாயம் ஏற்படலாம். ஏனென்றால் இப்போதுதான் முதல் முறையாக திரினாமூல் காங்கிரஸ், தி.மு.க., முலயாம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியிலும் உள்ளேயும் இருந்து ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே முகமாக தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரலாம் என்று கருதிய அ.தி.மு.க. முன்கூட்டியே சீனியர் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த அனுப்பியிருக்கிறது. இதேபோல் தி.மு.க.வும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 30 சதவீதம் தொகுதிகள் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் ஒதுக்கப்படும் என்று விழுப்புரம் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறது. ஆகவே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் "தன்மானம்" என்ற வார்த்தைப் பிரயோகத்தை தங்கள் கையில் எடுத்து தாக்கிக் கொண்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் முன்னிலைப்படுத்தியிருக்கிறது. விரைவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அணி அமைக்க, வெற்றி வாகை சூட இரு கட்சி தலைவர்களுக்குமே இந்த "முன்னிலைப்படுத்துதல்" தேவைதானே!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X