2025 மே 19, திங்கட்கிழமை

கலக்கும் 16,000 கோடி ரூபாய் "கிரானைட்" முறைகேடு; தேடப்படும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலக்கரி முறைகேடு இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் 16,000 கோடி (இந்திய) ரூபாய் கிரானைட் குவாரி முறைகேடுகள் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுரை மாவட்டத்தில் அதிரடி கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை "கிரானைட் சாம்ராஜ்யத்தின்" அதளபாதாளத்தை அசைத்துப் பார்த்துவிட்டது. அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை தங்கள் கணக்கில் திருப்பி விட்டுக் கொண்டவர்கள் இப்போது தடுமாறுகிறார்கள். கிரானைட் சாம்ராஜ்யத்தின் முக்கியத்தூணாக இருந்த பி.ஆர்.பழனிச்சாமி (பி.ஆர்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்) இப்போது சிறைக் கொட்டடியில் இருக்கிறார். அவரது மகன்கள் தேடப்படுகிறார்கள். தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி வலை வீசி தமிழக பொலிஸால் தேடப்படுகிறார். "அவர் எங்காவது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றால் எங்களுக்கு தகவல் கொடுங்கள்" என்று குடியுரிமை அதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதுவரை பி.ஆர்.பி.யின் மீது 11இற்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு விட்டன.

அதிரடி கலெக்டர் சகாயத்தின் சரவெடி
இந்த ஒட்டு மொத்த நடவடிக்கைக்கும் காரணமான கலெக்டரின் கடிதத்தில் உள்ள சாரம்சம் என்ன?
* துரை தயாநிதி (மத்திய அமைச்சரின் மகன்) மற்றும் கனகராஜ் ஆகியோருக்குச் சொந்தமான தில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், சிந்து கிரானைட், பி.ஆர்.பி எக்ஸ்போர்ட் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 23.42 கோடி ரூபாய். இதே போல் பி.ஆர்.பி. நிறுவனம் 91 குவாரிகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களால் ஏற்பட்ட பலகோடி ரூபாய் இழப்பு கணக்கிடப்பட வேண்டும்.

* பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் கற்கள் இருப்பு வைக்கும் இடத்தில் டாமின் (மாநில அரசின் கனிமவள நிறுவனம்) குவாரியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சுமார் 3350 கோடி ரூபாய் மதிப்புள்ள கற்கள் உள்ளதாகவும், அதற்கு ஏற்ற விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

* டாமின் நிறுவனம் சில லட்சம் கோடி மட்டுமே சம்பாதிக்க, தனியார் ஒப்பந்தக்காரர்கள் சம்பாதிக்கும் தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் என்பதே உண்மை.

* மேலூர் வட்டத்தில் (மதுரை மாவட்டத்தில் இருக்கிறது) அரசு புறம்போக்கு நிலங்கள், வண்டிப் பாதைகள் போன்றவற்றில் அனுமதி பெறாமல் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் மதிப்பு சுமார் 16338 கோடி ரூபாய் அரசுக்கு உத்தேசமாக இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

* கிராமங்களில் வேளாண் நடவடிக்கைகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. எளிய கிராம மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் அளிக்கும் கால்நடை செல்வங்கள், மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் அழிக்கப்பட்டதாலும், அவை செல்லும் பாதை கிரானைட் கற்களால் தடை செய்யப்பட்டதாலும் எண்ணிக்கையில் பெருமளவு குறைந்து விட்டது.

* ஒரு காலத்தில் கிரானைட் சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஆவேசமாகப் போராடிய விவசாயிகள், கால ஓட்டத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களாக எழுந்து நிற்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் நின்று நிலைக்க முடியாமல் முடங்கி விட்டார்கள். அச்சம் காரணமாக சிதைக்கப்பட்ட இந்த கிராமிய கூட்டமைப்பில் சிரமத்தோடு வாழப் பழகி விட்டார்கள்.

* பி.ஆர்.பி., பி.கே.எஸ். போன்ற கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக- அசுரத்தனமாக பண பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்துகின்ற அளவிற்கு எழுந்து நிற்கின்றன.

* கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பயத்தினாலோ அல்லது நிதி இலாபத்தினாலோ ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.

* விலைமதிப்பில்லாத கனிம வளம் என்பது பொதுவான சமூக சொத்து- தேசச் சொத்து. பொதுவான சமூகச் சொத்தை தனி நபர்களும், நிறுவனங்களும் சுரண்டுவதையும், சூறையாடுவதையும் நாம் என்றைக்கும் அனுமதிக்க முடியாது.

* மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞான பூர்வமாக நவீன கால தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்தால் 16000 கோடி ரூபாய் நிதியிழப்பு இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக இருக்க வாய்ப்பு உண்டு.

கண்டெடுக்கப்பட்ட "ரகசிய அறை"
கலெக்டரின் இந்த கடிதத்தைத் தொடர்ந்து அவர் மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் கோர்ப்பரேஷன் மனேஜிங் டிரெக்டராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அறிக்கையின் பேரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பி.ஆர்.பி. மீது இதுவரை 11இற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடையை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. வீடுகள், உறவினர் வீடுகள் சோதனையிடப்பட்டன. கிரானைட் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது, ஆளில்லா விமானம் மூலம் சோதனையிடப்பட்டு அங்கிருந்த பாதாள ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சில இரும்பு பெட்டிகள் உள்ளதும், அவற்றில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரெய்டு நடைபெற்றதும் அங்கிருந்து கம்பெனி தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதா என்பது பற்றி தனியாக ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கிரானைட் கற்களால் ஆன விதவிதமான நாற்காலிகள், பொம்மைகள் அந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைவிட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் கொத்துக் கொத்தாக அந்த ரகசிய அறையிலிருந்து எடுக்கப்பட்டதாக பொலிஸ் அறிவித்துள்ளது. கிரானைட் கல்குவாரியின் ரகசிய அறையில் பல்கலைக்கழக விடைத்தாள்கள் ஏன் வந்தது என்பது பல கல்வியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கஜானாவிற்கு திருப்ப நினைத்த எம்.ஜி.ஆர்.
இவ்வளவு பிரமாண்டமான முறைகேடு வளர்ந்த கதைதான் என்ன? கிரானைட் குவாரிகள் தனியார் நிறுவனங்கள் சம்பாதிக்கும் வகையிலேயே முன்பு இருந்தன. முன்பு தி.மு.க. ஆட்சியில் "ஜெம் கிரானைட்" நிறுவனம் இந்த வியாபாரப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அந்த சிண்டிக்கேட்டை உடைத்தார். அப்படி உடைப்பதற்கு அன்று எம்.ஜி.ஆருக்கு ஐடியா கொடுத்தவர் சரவணன் என்ற சென்னை மாநிலக் கல்லூரியின் உதவிப் பேராசிரியராக இருந்தவர். பிறகு அவரையே கிரானைட் குவாரிகளை கட்டுப்படுத்தும் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தின் (டாமின்) தலைவராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர். அந்த உதவிப் பேராசிரியரோ தன்னுடன் படித்த ஜியாலஜி மாணவர்களுக்கு டாமின் நிறுவனத்தில் வேலை கொடுத்தார். அது அவருடையை பொற்காலம். ஆனால் டாமினுக்கு கற்காலம் என்று சொல்வோர் உண்டு. அவருடைய மாணவர்களாக டாமினில் புகுந்த சுமந்த் பாபு, மனோகரன் ஆகியோர் டாமினின் கதாநாயகர்களாகவே வலம் வந்தார்கள். இவர்களில் மனோகரன் இப்போது தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் கிரானைட், கிரே கிரானைட், காஷ்மீர் ஒயிட் கிரானைட் என்று டாமின் குவாரிகளில் கிடைக்கும் அற்புதமான கிரானைட் கற்களை கவர தனியார் நிறுவனங்கள் காலப்போக்கில் தேனீக்கள் போல் வந்து மொய்க்கத் தொடங்கின. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைந்தார். சரவணனும் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டாமின் நிறுவன தலைவர் பதவிக்கு வந்தார்கள். 1989இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இதே டாமின் நிறுவனத்தின் கற்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்வது பற்றி அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மருங்காபுரி பொன்னுச்சாமி சட்டப்பேரவையிலேயே பேசி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார்.

விசாரணை கமிஷன், வில்லங்கத்தில் சிக்கிய ஐ.ஏ.எஸ்.
1991-1996 அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. கிரானைட் குவாரிகள் விடயத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் முறைகேடுகள் நடந்து விட்டன என்று கூறி சென்னை ஹைகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனையே அமைத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியின் போது  தலைவர் மற்றும் மனேஜிங் டிரெக்டர் பதவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தியானேஸ்வரனின் காலம் டாமின் தமிழக அளவில் பிரபலமா பேசப்பட்ட காலம். சசிகலா தனக்கு உறவினர் என்று சொல்லிக் கொண்டு அவர் நடத்திய ராஜ்யம் அப்போது பெரும் பிரச்சினைக்குள்ளானது. அதனால் அவர் பதவியிலிருக்கும் போதே வருமானவரித்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து சில காலம் கழித்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இப்படி பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடுத்தடுத்து இந்த டாமின் நிறுவனத்திற்கு வந்தாலும், கல்லிலே தனியார் பணம் பார்ப்பது என்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கல்குவாரிகளை ஏலம் விட்டாலோ, அல்லது டாமினே நேரடியாக நடத்தினாலோ கஜானாவிற்கு பணம் வந்து குவியும். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தலைமை தாங்கும் அரசும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியதில்லை. கிரானைட் கற்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் காஸ்ட்லி மெஷின்களுடன் தொடங்கப்பட்ட டாமின் ஆலைகள் கூட முடங்கிக் கிடக்கின்றன. இப்படியொரு லாபம் சம்பாதிக்கும் கிரானைட் குவாரிகளில் கால் எடுத்து வைத்தார் பி.ஆர்.பி. இவர் முன்பு மதுரை வட்டாரத்தில் உள்ள பெரியாறு கால்வாய்களில் சிமென்ட் சிலாப் பதிக்கும் கான்டிராக்டராக இருந்தவர் அவ்வளவுதான். இவர் வளர்ச்சி என்ற கிராப் போட்டால் அது 1991-96 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் முதலில் தொடங்கியது.

கொடிகட்டிப் பிறந்த "பி.ஆர்.பி" ராஜ்யம்
ஆனால் இவரது ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது 2001-2006 வரை இருந்த அ.தி.மு.க. ஆட்சியில்தான். அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவு செய்யும் அளவிற்கு வளர்ந்து நின்றார். இடைத் தேர்தல்கள் வந்தால் இவரை நோக்கியே பிரதான அரசியல் கட்சிகள் ஓடி நின்றன. கேட்டவர்களுக்கு எல்லாம் தேர்தல் நிதி கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக பி.ஆர்.பி. இப்பகுதியில் திகழ்ந்தார். அது மட்டுமின்றி மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து "சமுதாய வள்ளல்" என்ற பெயரையும் எடுத்தார். இப்போது கூட அவரது கைதை எதிர்த்து மதுரை சுற்றுப்புற பகுதிகளில் "கண்டன போஸ்டர்" அடித்து ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2006இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது. முதலில் இவருக்கும், தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் மு.க. அழகிரிக்கும் லடாய் வெடித்தது. அதனால் மேலூர் பகுதியில் அரசே கிரானைட் பேக்டரி கொண்டு வரும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். "பி.ஆர்.பி.யின் பேக்டரி அங்கு இருக்கிறது. அதை முடக்கவே இப்படியொரு திட்டம்" என்று அப்போதே பேச்சுக் கிளம்பியது. ஆனால் அதன் பிறகு அழகிரியும், பி.ஆர்.பி.யும் மிகவும் நெருக்கமானார்கள். அந்த வகையில் தோன்றியதுதான் அழகிரி மகன் துரை தயாநிதி நடத்தும் திள் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம். இந்நிறுவனத்தின் பத்து மாத காலம் டிரெக்டராக இருந்து விட்டு பிறகு விலகியிருக்கிறார் துரை தயாநிதி.

மு.க. அழகிரியை எதிர்க்கத் தயங்கிய பி.ஆர்.பி.
அழகிரியும், பி.ஆர்.பி.யும் எந்த அளவிற்கு நெருக்கம்? 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மதுரை தொகுதியில் மு.க. அழகிரி போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் சிலரோ, "நீங்கள் அழகிரியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும். நீங்கள்தான் அவரை எதிர்த்து பணம் செலவு செய்ய வெயிட்டான வேட்பாளர்" என்று கூறினர். ஆனால், "எனக்கு அரசியல் வேண்டாம். விட்டு விடுங்கள்" என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போதே அ.தி.மு.க.வின் "வேண்டப்படாதோர் பட்டியலில்" பி.ஆர்.பி. சேர்ந்தார். ஆனாலும் மீண்டும் 2011இல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தனது உறவை சுமூகப்படுத்திக் கொண்டார். "நாம் பிஸினஸ்மேன். எதற்கு அரசியல். ஆட்சியிலிருப்பவர்களுடன் அனுசரித்துப் போய்விடுவோம்" என்ற மனநிலைக்கு வந்தார் பி.ஆர்.பி. இதுபோன்றதொரு காலகட்டத்தில்தான் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயம் கொடுத்த கடிதம் "கிரானைட் கொள்ளை" என்ற தேன்கூட்டில் கல்லெறிந்த கதையாக மாறியது. கலெக்டரின் கடிதத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கலெக்டரின் கடிதத்தில் உள்ள அனைத்து சாரம்சங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா மற்றும் பொலிஸ் எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தினமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். குவாரிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். கலெக்டர் தனது முதல் கட்ட அறிக்கையில் 1800 கோடி அரசுக்கு நஷ்டம் என்ற அறிக்கை கொடுத்துள்ளார். இறுதிக் கட்ட அறிக்கையில் என்ன மதிப்பீடு வரப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் கொடுத்துள்ள தகவல்களின் படி நவீன தொழில் நுட்பங்களை வைத்து பரிசோதனை செய்தால், கிரானைட் குவாரிகளை தனியார் வெட்டி எடுத்ததால் அரசுக்கு இழப்பு என்பது 30,000 கோடியை எட்டி விடும் என்று முந்தைய கலெக்டர் சகாமயமே கூறியிருக்கிறார்.

தேடப்படும் மத்திய அமைச்சரின் மகன்
பி.ஆர்.பி. மீதான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு, முதல்வரே முன்னின்று சில ஆலோசனைக் கூட்டங்களையும் அதிகாரிகளுடன் நடத்தியிருக்கிறார். இந்த கிரானைட் முறைகேட்டின் அடுத்த இலக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிதான். பி.ஆர்.பி.யின் தயவுடன் ஆரம்பித்த "திள் ஒலிம்பஸ் கிரானைட்" நிறுவனத்தில் துரை தயாநிதி பத்து மாதங்கள்தான் டைரக்டராக இருந்தாராம். பிறகு அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார் என்று தகவல். ஆனால் இந்த நிறுவனமும் அனுமதியற்ற முறையில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறது. துரை தயாநிதியின் முன் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு நிலுவையில் உள்ளது. அதே போல் பி.ஆர்.பி. மகன்களின் முன் ஜாமின் மனுவும் உள்ளது. இந்நிலையில், "நான் சரண்டர் ஆக மாட்டேன். எந்த வக்கீலை வைத்தாவது முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கள்" என்று தன் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம் துரை தயாநிதி. ஏனென்றால் தி.மு.க. ஆட்சியிலிருந்த சென்ற 2006-2011 காலகட்டத்தில் சென்னையின் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற பிரச்சினைகள் பற்றிய விவரங்களை அரசு தனியாக இப்போது தூசு தட்டி எடுத்து வைத்திருக்கிறது என்று கிடைத்த தகவல்தான் காரணமாம். பி.ஆர்.பி. மீதே 11இற்கும் மேற்பட்ட வழக்குகள் என்றால், நம்மீது எத்தனை புகார்கள் வருமோ என்ற அச்சத்தில் துரை தயாநிதி இருப்பதாக தகவல்.

இயற்கை வளங்கள்- சுப்ரீம் கோர்ட் பார்வை
2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வியும், கங்குலியும், "இயற்கை வளங்கள் தேசிய சொத்து. மக்களின் அறங்காவலர்கள் என்ற ரீதியில் அரசுதான் இயற்கை வளங்களின் சட்டப்படியான உரிமையாளர். அந்த இயற்கை வளங்களை அலாட் பண்ணும் உரிமை அந்த வகையில் அரசுக்கு வந்தாலும், அந்த நடைமுறை சமத்துவம், பொதுநலன் ஆகிய அரசியல் சட்ட கொள்கைகளை வழிநடத்திச் செல்லும் விதத்தில் இருக்க வேண்டும்" என்று புரட்சிகரமான தீர்ப்பை வழங்கினார்கள். ஒதுக்கீடு செய்யும் போது அரசுக்கு வர வேண்டிய வருமானம், பொது நலன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து வெளிப்படையான தன்மையும், நியாயமாக செய்ய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த தீர்ப்பின் சிறப்பம்சம். அதன்படி கிரானைட் குவாரிகள் போன்ற இயற்கை வளங்களையும் வெளிப்படையான நடைமுறையின் வாயிலாக இதுவரை நடைபெற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் ஒதுக்கீடு செய்திருந்தால், அரசுக்கு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லக்கூடிய 30,000 கோடி ரூபாய் இழப்பீட்டை தவிர்த்திருக்கலாம். இவ்வளவு சீரியஸான நடவடிக்கைக்குப் பிறகாவது, கிரானைட் குவாரிகள் அலாட் பண்ணும் முறையில் வெளிப்படையான கொள்கை வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்படியொரு கொள்கை முடிவை அறிவிக்க ஏற்கனவே முதற்கட்ட ஆலோசனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தியிருக்கிறார் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X