A.P.Mathan / 2011 மார்ச் 26 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக முஸ்லிம் பெண்ணொருவர் உள்ளூராட்சி மன்றமொன்றின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் - திருமதி சல்மா அமீர் ஹம்ஸா! இவருக்கு முன்னர் கிழக்கிலிருந்து முஸ்லிம் பெண் எவரும் அரசியல் சபையொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில்லை.
திருமதி சல்மா ஓர் ஆசிரியை. இயல்பான பெண். பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்புகளைப் பூர்த்தி செய்துள்ள இவர் - தற்போது கலாநிதிப் பட்டத்துக்கான படிப்பினை மேற்கொண்டு வருகின்றார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் - காத்தான்குடி நகரசபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு உறுப்பினர் திருமதி சல்மாதான்! இவருக்கு அரசியல் புதிதில்லை. இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தங்கை. சல்மாவின் மாமனார் (கணவரின் தந்தை) காத்தான்குடியின் தவிசாளராகப் பதவி வகித்தவர். சேர்மன் இப்றாகிம் எனும் பெயரால் பிரபல்யமானவர்.
இதேவேளை, காத்தான்குடியைத் தளமாகக் கொண்டியங்கும் 'பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்' பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றி வருகின்றார்.
சல்மாவின் கணவர் அமீர் ஹம்ஸா. இனிய மனிதர். வெகு இயல்பாகப் பேசுகின்றார். ஹம்ஸாவின் சகோதரியொருவரைத்தான் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான திருமணம் செய்துள்ளார்.
சல்மா - ஹம்ஸா ஆகியோருக்கு ஒரேயொரு பெண் பிள்ளை. அவர் வெளிநாடொன்றிலே மருத்துவத்துறையில் கற்றுவருகின்றார்.
சல்மா மற்றும் அவருடைய கணவர் ஹம்ஸா ஆகியோரை – ஒரு நேர்காணலுக்காக அவர்களுடைய காத்தான்குடி 'வைற் ஹவ்ஸ்' வீட்டில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம்.
அதன்போது நாம் பதிவு செய்தவை:
சல்மாவிடம் கேள்வி: அரசியலுக்குள் நீங்கள் நுழைந்தபோது உங்கள் கணவரின் மனநிலை எவ்வாறு இருந்தது?
சல்மா: என்னை அரசியலுக்குள் கொண்டு வந்ததே எனது கணவர்தான். என் வெற்றிக்காக அவர்தான் உழைத்துக் கொண்டிக்கின்றார்.
கேள்வி: கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் உள்ளூராட்சி பெண் உறுப்பினர் நீங்கள்தான் என்று – தெரிவானபோது அறிந்திருந்தீர்களா?
சல்மா: இல்லை. ஆனால் பிறகு தெரிந்து கொண்டேன்.
கேள்வி: நமது சமூகக் கட்டமைப்பில் பெண்களின் கருத்துகள் முதன்மைப் படுத்தப்படுவதில்லை, பத்து ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் இருப்பதென்பதே சங்கடமான விடயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறான அசௌகரியங்களையெல்லாம் நீங்கள் எவ்வாறு மீறினீர்கள்?
சல்மா: பாடசாலைக் காலத்தில் மாணவத் தலைவியாக இருந்துள்ளேன். சகோதரர் ஹிஸ்புல்லா பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்லும் போது – அவரின் மேடைப் பேச்சுக்கள் தொடர்பில் கருத்துக் கூறுவேன். அதேபோன்று எமது பெண்கள் அமைப்பில் பணிப்பாளர் பதவிநிலையை வகித்து வருகின்றேன். இதனால், நீங்கள் கூறும் அசௌகரியங்களை பெரிதாக நான் முகம்கொண்டதுமில்லை, அவை என்னைப் பாதித்ததுமில்லை.
கேள்வி: கட்சிக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
சல்மா: இதுவரை எதுவித பதவி நிலைகளும் வழங்கப்படவில்லை. கட்சியின் பெண்கள் தரப்பினை பொறுப்பெடுத்துச் செய்யுமாறு வாய்மொழி மூலமாகக் கூறப்பட்டது. இப்போது அரசியல் அதிகார சபையொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் - கட்சி அதுபற்றி கவனம் செலுத்தும் என நம்புகிறேன்.
கேள்வி: உங்கள் சகோதரர் ஹிஸ்புல்லாவோடு இணைந்து ஏன் உங்களால் அரசியலை மேற்கொள்ள முடியாமல் போயிற்று?
சல்மா: ஆரம்ப காலத்தில் அவரோடுதான் இருந்தேன். ஆனால் அவர் 2005ஆம் ஆண்டு யாருக்கும் சொல்லாமல் பொதுஜன முன்னணியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமாக மாறியபோது, அவரோடு இணைந்து எங்களாலும் மாற முடியவில்லை. அவ்வாறு மாறுவது எங்களுக்குச் சங்கடமாக இருந்தது. அதனால், அவருக்கு எதிரணியிலிருந்து செயற்பட வேண்டியேற்பட்டது.
கேள்வி: நீங்கள் என்னதான் சொன்னாலும் 'ஹிஸ்புல்லாவின் தங்கை' எனும் அடையாளம்தான் அரசியலில் உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற உதவியிருக்கிறது என்று நான் சொல்கிறேன்...
சல்மா: அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், எத்தனையோ அமைச்சர்களின் சகோதரிகள் இருக்கின்றார்கள். அவர்களின் பெயர் என்னவென்றே நமக்குத் தெரியாது. சமூக அமைப்புகளில் நான் வகிக்கும் பொறுப்புக்களினூடாகத்தான் எனக்கான அடையாளம் கிடைத்தது. ஆனாலும், 'ஹிஸ்புல்லாவின் தங்கை என்கிற அடையாளம்' தவிர்க்க முடியாமல் என்னைத் தொடர்கிறது. ஆனால் எனக்கான அங்கீகாரம் அந்த அடையாளத்தினூடாகக் கிடைக்கவில்லை. இது தவிர, எனது அரசியலில் ஹிஸ்புல்லாவின் ஆசீர்வாதமோ, அங்கீகாரமோ, ஆதரவோ எனக்கு இதுவரை கிடைக்கவேயில்லை!
(குறிப்பு: மூத்த சகோதரரை முஸ்லிம்களில் சிலர் 'காக்கா' என்று அழைப்பார்கள். இந்த நேர்காணல் முழுக்க - ஹிஸ்புல்லாவை 'காக்கா' என்றுதான் சல்மா கூறினார். வாசிப்போர் விளங்கிக் கொள்வதற்காக – அவர் 'காக்கா' எனக் கூறிய இடங்களில் ஹிஸ்புல்லா எனும் பெயரை நாம் பயன்படுத்தியிருக்கின்றோம்)
கணவர் ஹம்ஸாவிடம் கேள்வி: உங்கள் மனைவி அரசியல்வாதியாக மாறியபோது, பிரபலம் பெறும் போதெல்லாம் – உங்களுக்குள் சங்கடங்களோ, தாழ்வுச் சிக்கல்களோ தோன்றவில்லையா?
கணவர் ஹம்ஸா: இவரை அரசியலுக்குள் கொண்டு வந்ததே நான்தான்! இந்தத் தேர்தலில் இவரை அழைத்துக் கொண்டு 06 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு பிரசார நடவடிக்கைகளுக்காகச் சென்றிருக்கின்றேன். அப்போது இவர் களைப்படைவார். அந்த வேளைகளில் இவரை உற்சாகப்படுத்துவேன். நீங்கள் சொல்வது போல் தாழ்வுச் சிக்கல்கள் எனக்குள்ளிருந்தால் இவைகளை நான் செய்திருப்பேனா? இந்த வெற்றியை ஹிஸ்புல்லாவுக்கானதொரு சவாலாகவே பெற்றோம்!
கேள்வி: அது என்ன சவால்?
கணவர் ஹம்ஸா: சுமார் 18 வருடங்களாக ஹிஸ்புல்லாவின் செயலாளராக, இணைப்பாளராக, தேர்தல் நடத்துபவராக என்று அவருடன் நான் நெருக்கமாக இருந்தேன். அந்தவகையில், ஹிஸ்புல்லா- மு.காங்கிரஸிலிருந்து இரண்டாவது தடவையாகவும் ஐ.ம.சு.முன்னணியின் பக்கமாக மாறுவதற்கு முயற்சித்த போது, அவ்வாறு மாட வேண்டாம் என நான் கூறினேன். எனது எதிர்ப்பை வெளியிட்டேன். ஆனால், 'மாறவேண்டாம் எனக் கூறுவதற்கு நீங்கள் யார்?' என்று – பலரின் முன்னிலையில் என்னிடம் ஹிஸ்புல்லா கேட்டார். உடனடியாக அந்த இடத்திலிருந்து நான் கிளம்பி விட்டேன். அப்போது, 'நீங்கள் போவதென்றால் போங்கள் உங்களிடம் இரண்டு வாக்குகள்தானே இருக்கின்றன' என்றார் ஹிஸ்புல்லா. இரண்டு வாக்குகள் என்று அவர் கூறியது என்னுடையதும், எனது மனைவியின் வாக்கினையும்தான்.
அன்று நான் தீர்மானித்தேன். ஹிஸ்புல்லாவுக்கு நாம் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று! அதை என் மூலமாக நிரூபிப்பதை விடவும், அவரின் தங்கை மூலமாக நிரூபித்தால் அது அவருக்கு இன்னும் உறைக்கும் என்று நினைத்தேன். அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தேன். அந்த வகையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் எனது மனைவியைக் களமிறக்கினேன். 35 வாக்கு வித்தியாசத்தில் எமக்கான வெற்றி நழுவிப் போயிற்று.
ஆனாலும், இந்தமுறை எமக்கு வெற்றி கிட்டியிருக்கிறது. எம்மிடம் இரண்டு வாக்குகளல்லளூ ஆயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன என்பதை என் மனைவியின் வெற்றி மூலம் ஹிஸ்புல்லாவுக்கு நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம். நான் மனதுக்குள் ஏற்றுக் கொண்ட சவாலில் வெற்றி கண்டுள்ளேன்.
சல்மாவிடம் கேள்வி: இம்முறை நீங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது உங்கள் சகோதரர் ஹிஸ்புல்லா அரசியல் ரீதியாக உங்களை எதிர்த்தாரா?
சல்மா: ஆம், மிகக்கடுமையாக எதிர்த்தார். வீடு வீடாகச் சென்று எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறினார். கடைசியாக இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சகோரதர் ஹிஸ்புல்லா பேசியபோது, எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியதை நான் கேட்டேன்.
கேள்வி: ஹிஸ்புல்லா – சல்மா இருவருக்குமிடையில் உங்கள் தாயார் எங்கு நிற்கிறார்?
சல்மா: உம்மாவுக்கு இப்போது 80 வயதாகிறது. அவருடைய முழுமையான ஆதரவை எனக்கு இம்முறை வெளியிட்டார். இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. தங்கச்சி தேர்தலில் போட்டியிடுகிறார், இந்தத் தேர்தலில் நீ போட்டியிடவில்லைதானே. எனவே, எந்தவிதமான அநியாயங்களையும் உன் சகோதரிக்கு நீ செய்து விடக்கூடாது. அவ்வாறு செய்தால் - எனது முகத்தை நீ பார்க்கக் கூடாது என்று தாயார் சொல்லி விட்டார். அதனால், அவரின் நேரடித் தாக்குதல்கள் கொஞ்சம் குறைவாக இருந்தது.
கேள்வி: இப்போது நீங்கள் ஓர் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளீர்கள். இனி உங்கள் குரலுக்கு ஓர் அங்கீகாரமிருக்கிறது. இதனூடாக எதைப் பிரதானமாகச் செய்ய வேண்டுமென நினைக்கின்றீர்கள்?
சல்மா: பெண்கள் விடயத்தில் கூடிய கவனமெடுக்க விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம், மற்றும் கல்வி தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சில இடங்களில் தமது கிராம சேவகர் யார் என்பதே சில பெண்களுக்குத் தெரியாது. இவ்வாறான நிலைமைகளை மாற்ற வேண்டும்.
கணவர் ஹம்ஸாவிடம் கேள்வி: உங்கள் மனைவி இப்போது முழுமையானதொரு அரசியல்வாதி ஆகிவிட்டார். இனி அவர் பரபரப்பான பெண்மணி! இதனால், ஒரு மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய சில விடயங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஒரு மனைவின் வகிபாகத்தை உங்கள் மனைவியால் சில வேளைகளில் நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதை நீங்கள் எவ்வாறான மனநிலையோடு அணுகப் போகின்றீர்கள்?
கணவர் ஹம்ஸா: எனது மனைவியை இந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கான காலங்களில் நான் பல விடயங்களைச் சமாளித்துள்ளேன். இனி புதிதாக எனக்கு எதுவும் நேர்ந்து விடப்போவதில்லை. அது தவிர, இந்த அரசியலை விடவும் - அரசசார்பற்ற அமைப்புக்களில் எனது மனைவி இயங்கத் தொடங்கிய காலங்கள் இன்னும் பரபரப்பானது. அதனோடு ஒப்பிடுகையில் அரசியல் பரவாயில்லை. இன்னுமொன்று, வாழ்வில் ஒரு சவாலை அடைய வேண்டுமென்றால், ஏதாவதொன்றை இழந்தே ஆக வேண்டும். ஒன்றை இழக்காமல் இன்னொன்றை அடைய முடியாது!
நேர்காணல்: மப்றூக்
.jpg)
.jpg)
2 hours ago
5 hours ago
9 hours ago
waz Sunday, 27 March 2011 11:36 AM
இனிய வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் மேலும் உயர்வடைய வேண்டும் இறைவன் அருளால்!
Reply : 0 0
mohamed plus Sunday, 27 March 2011 04:25 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
abdulmohamed Sunday, 27 March 2011 05:37 PM
பலே பலே
Reply : 0 0
jaliyath Sunday, 27 March 2011 06:37 PM
உண்மையில் முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்பது இதுதான் போல .ஆகவே வாசகர்களே வெற்றிப்பாதையை நோக்கி நகருங்கள்.
Reply : 0 0
Mahadevah Sunday, 27 March 2011 06:39 PM
வாழ்த்துக்கள்!
Reply : 0 0
Mohamed Rismy Sunday, 27 March 2011 06:58 PM
அன்பின் சகோதரிக்கு, உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் மேலும் பல உயர் பதவிகளில் வெற்றியைத் தர துஆ செய்கிறேன்.
எனது தயவான வேண்டுகோள்....
தயவு செய்து உங்கள் வீட்டுப் பிரச்சனைகளை பகிரங்கப் படுத்த வேண்டாம். இன்றோ நாளையோ அரசியல் முடிந்துவிடலாம். அரசியலுக்காக குடும்பத்தை பகைக்க வேண்டாம். என்றோ ஒரு நாள் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவீர்கள். அப்போது இதையெல்லாம் நினைத்து கவலை அடைவீர்கள். குடும்பம் தான் வாழ்வின் முக்கிய அங்கம்.
'இன்னும் பல வெற்றிகளைப் பெற்று நற்பணி செய்ய வாழ்த்துகின்றேன்.
Reply : 0 0
Ameen Hamzak Sunday, 27 March 2011 07:39 PM
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் முஸ்லிம் பெண்களுக்காக போராடவேண்டும்..... நீங்கள் எந்த தவறுகளையும் இழைக்காதீர்கள் ...... அது முஸ்லிம் பெண்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதை மறந்து விட முடியாது ..
Reply : 0 0
abdul Wadood Sunday, 27 March 2011 07:52 PM
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Reply : 0 0
xlntgson Sunday, 27 March 2011 09:25 PM
அப்படியாக இருந்தால் சரி! சகோதரர் ஹிஸ்புல்லாவின் துணை இன்றி தொடர்ந்தும் அரசியல் புரிவீர்களாக!
Reply : 0 0
im ilyas Monday, 28 March 2011 02:08 PM
CONGRADULATION சிஸ்டர். மரத்தில் FIFTY மெம்பெர் BULATH டென் ONLY
Reply : 0 0
M.M.A.M.Rilan Monday, 28 March 2011 05:00 PM
இஸ்லாத்தில் ஆண்களைப் போன்று எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பதை இவர் நிருபித்து கட்டி உள்ளார். எனவே அல்லாஹுத் தாலா உங்களது அரசியல் பயணத்தை சீர் செய்து தர வேண்டும் (ஆமின்)
Reply : 0 0
asker Thursday, 07 April 2011 07:09 PM
பெண் அரசியல் ஹராம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago