Super User / 2011 ஏப்ரல் 24 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்-
தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் சென்று சில நாட்கள் தங்கவுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எப்போது அவர் யாழ்ப்பாணம் சென்ற தங்கவுள்ளார் என்பது பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத்
தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருந்து நாளுக்கு நாள் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி, மக்களின் மனதில் இடம்பிடிப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அத்துடன் யாழ்ப்பாண மக்களுக்கு அரசாங்கத்தின் எண்ணங்கள் மற்றும் போருக்குப் பிந்திய திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், தமிழர்கள் மத்தியில் அரச எதிர்ப்புணர்வுகள் உருவாகாமல் தடுப்பதும், அவர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதும் அவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மே முதலாம் திகதி அரசாங்கம் பாரியளவிலான பேரணிகளை கொழும்பில் நடத்தவுள்ளது.அதற்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கு மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் முரளிதரன் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போதே வடக்கில் பரவலான அவருக்கு ஆதரவான பேரணிகளை நடத்தி ஐ.நாவுக்கு எதிர்ப்பை வெளியிட அரசாங்கம் விரும்புகிறது.
பங்களாதேசில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர், கடந்தவாரம் அலரி மாளிகையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் நோக்கமே வடக்குஇகிழக்கில் அரசுக்கு ஆதரவான பேரணிகளை நடத்துவதும், ஐ.நாவுக்கு எதிர்ப்பை வெளியிடுவதும் தான். ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக தெற்கில் பாரிய பேரணிகள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை விடவும்- வடக்கில் ஒருசில சிறிய பேரணிகளை நடத்துவதே அதிக தாக்கதை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கருதுகிறது. இதற்கான வியூகங்கள அலரி மாளிகையில் வகுக்கப்பட்டன.
சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் தான் இந்தப் பேரணிகளை பரவலாக நடத்தப் போவதாகக் கூறியுள்ளார் பிரதி அமைச்சர் முரளிதரன். எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் நேரத்தில்தான் பெரும்பாலும் இந்தப் பேரணிகள் நடக்கப்போகின்றன என்று ஊகிக்க முடிகிறது.
பிரதி அமைச்சர் முரளிதரன் மே முதலாம் திகதிக்குப் பின்னரே வடக்கு, கிழக்கில் பேரணிகளுக்கு ஒழுங்கு செய்ய்படவுள்ளதாக கூறியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணப் பயணம் மே முதல்வாரத்தில் இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
மே முதல் வாரம் என்பது இன்னும் பல விவகாரங்களால் முக்கியமானது. அதாவது மே முதல் வாரத்தில் தான் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிரிவுக்கான உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளார்.
அவர் முன்னதாக இந்த மாத நடுப்பகுதியில் இலங்கை வரும் திட்டத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அரசாங்கம் தான் அவரது பயணத்தைப் பிற்போட வைத்தது.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வெளிநாட்டில் இருக்கிறார், அவர் வந்த பின்னர் கொழும்பு வருமாறு அரசாங்கமே பிளேக்கிற்கு தகவல் அனுப்பியது. வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அப்போது பிரித்தானியாவில் தங்கியிருந்தார்.
அமெரிக்காவின் மனிதஉரிமைகள் நிலவர அறிக்கையுடன் கொழும்பு வந்து அரசுடன் பேசத் திட்டமிட்டிருந்தார் பிளேக். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்ற நிலை காணப்பட்ட அந்தச் சூழலில் – இலங்கை அரசாங்கத்தைச் சாடும் வகையிலான மனிதஉரிமை நிலவர அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருந்த நிலையில், பிளேக்கின் வருகையை அரசாங்கம் விரும்பவில்லை.
பிளேக் வருகை பிற்போடப்படத் தாம் காரணமில்லை என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், அவரே ஒரு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருந்தார்.
அத்துடன் தான் விரைவில் கொழும்பு வருவேன் என்றும் அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். எனவே, பிளேக்கின் கொழும்புக்கான பயணத் திட்டத்தை தடுக்க முடியாது என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.
மே 3ஆம் திகதி பிளேக் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ் போன்றவர்களையும் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்கை சந்தித்துப் பேச விரும்பவில்லை என்றே உள்ளகத் தகவல்கள் கசிகின்றன. ஏற்கனவே இந்தமாத முற்பகுதியில் பிளேக் கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த போதும் அவரைச் சந்திக்க ஜனாதிபதி விரும்பியிருக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதுபோலவே, மே முதல் வாரத்தில் கொழும்பு வரும் பிளேக்கை சந்திக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்றே இப்போதும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனிதஉரிமைகள் அறிக்கையில், இலங்கை அரசாங்கம் மீதும் ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவரைப் பெரிதும் வெறுப்படையச் செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.
அதைவிட போர்க்குற்றங்கள் தொடர்பாக பிளேக் அண்மைக்காலமாக வெளியிட்ட கருத்துகளில் இலங்கை தொடர்பான இறுக்கமான போக்கை வெளிப்படுத்தியிருந்தார். இவையெல்லாம் பிளேக் மீதான- அமெரிக்கா மீதான அரசாங்கத்தினது வெறுப்புக்கு முக்கிய காரணங்கள் எனலாம்.
இப்போது அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாகவே, மேற்குலகமே ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் கூறுவதைக் காணமுடிகிறது. மேற்குலகம் என்பது அமெரிக்காவை மையப்படுத்தியதாகவே உள்ளது. இந்தநிலையில், பிளேக்கை சந்திக்காமல் புறக்கணிக்க ஜனாதிபதி முடிவு செய்தால் அது ஆச்சரியப்படும் வகையிலானதொரு முடிவாக இருக்கமாட்டாது. ஏற்கனவே, கொழும்பு வந்த பிரித்தானிய அமைச்சரைச் சந்திக்காமல் அவர் ஒதுக்கி வைத்தவர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஆனால் பிளேக்கைச் சந்திக்காமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதாவதொரு காரணம் தேவை. கொழும்பில் இருந்து கொண்டே அவர் பிஸியாக இருக்கிறார் என்று கூற முடியாது. வெளிநாட்டுக்குப் போய் விட்டதாகவும் பொய் சொல்ல முடியாது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்தில் முக்கியமான அரசியல் சந்திப்புகளில்- மக்கள் பணியில்- அமெரிக்கா வலியுறுத்தும், நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறலாம். எனவே, பிளேக் கொழும்பு வரும்போது பெரும்பாலும் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று விடுவார் என்றே கருதப்படுகிறது.
பிளேக் இலங்கையில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வடக்கில் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் ஐ.நாவுக்கு எதிராகவும் பேரணிகள் நடப்பதை நிச்சயம் அரசாங்கம் விரும்பும். மே முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் போய் தங்கிக் கொண்டால், பிளேக்கையும் சந்திக்க வேண்டியதில்லை. நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை இறங்கியுள்ளதான கருத்தையும் ஏற்படுத்தலாம். வடக்கில் மக்களின் நம்பிக்கையையும் கட்டியெழுப்பலாம். வடபகுதி மக்கள் அரசுடனேயே உள்ளனர் என்று உலகிற்கும் பிரகடனம் செய்யலாம். இப்படிப் பல ஆதாயங்கள் ஜனாதிபதி ஜனாதிபதிக்குக் கிடைக்கும்.
அதைவிடஇ மே முதல் வாரத்தில் இன்னொரு விவகாரமும் குறுக்கிடுகிறது. அதுதான் உள்ளூராட்சித் தேர்தல் விவகாரம். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்தமாதம் நடத்தப்படவில்லை.
இந்த சபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முடிந்த நிலையில் மே 5ஆம் திகதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 5ஆம் திகதி தீர்ப்பு தமக்குச் சாதகமாகவே அமையும் என்று அரசாங்கத் தரப்பு உறுதியாக நம்புவதாகத் தெரிகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதை அண்மையில் கூறியிருந்தார்.
வடக்கில் உள்ளூராட்சி சபைகளை ஆளும்கட்சி வெற்றி கொள்வதன் மூலம் அங்குள்ள மக்கள் தமது பக்கமே இருக்கிறார்கள் என்ற காண்பிப்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமாக உள்ளது.
எனவே தீர்ப்பு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கும் அவர், மே 5 ஆம் திகதிக்குப் பின்னர் தீவிர பிரசாரங்களை அங்கு மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், மே முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தில் இறங்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவரது யாழ்ப்பாணப் பயணத் திட்டத்தின் நோக்கமே பல காய்களை இலக்கு வைத்து கல் எறிவது தான். ஆனால் அவர் வீசப் போகும் ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள் விழப் போகின்றன என்பது தான் புதிராக உள்ளது.
3 hours ago
6 hours ago
02 May 2026
Mohamed Nusky Monday, 25 April 2011 03:22 PM
நான் இந்த இனைய முகவரியில் நிறைய விடயங்களை அறிந்த வண்ணமாக இருக்கிறேன். இதில் இன்னும் பல நல்ல சுவரகசியமான செய்திகளை இடவேண்டும் என்று எதிர்பார்க்கிறான் மிகவும் நன்றி.
Reply : 0 0
xlntgson Sunday, 01 May 2011 09:21 PM
உள்நாட்டிலேயே தீர்வு இருக்கிறது என்பதை ஜனாதிபதி மட்டுமல்ல தவிகூவும் அறிந்து நேரம் நெருங்கி வரும் பொது நெஞ்சை மறைக்கும் கோழைத் தனத்தை செய்யாமல் அவருடன் இணைந்தால் நாடு குழம்பாது. அதே நேரம் மேலை நாடுகளின் நரிக்குக் கொண்டாட்டம் என்னும் நிலையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். மாறி மாறி அவர்கள் குழப்பத்தை தூண்ட வல்லவர்கள் எப்படியாக இருந்தாலும், என்பது கவலைக்குரிய விடயமே, இந்தியாவை நாட வேண்டியது இருக்கும் இருதரப்பினருக்கும் ஆனால் இந்தியா நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026