2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தற்போதைய அரசியலமைப்பிலுள்ள அதிகார பரவலாக்கம் உண்மையானதல்ல: சுமந்திரன் எம்.பி.

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போதைய அரசியலமைப்பிலுள்ள அதிகார பரவலாக்கம் உண்மையானதல்ல. ஸ்திரமானதுமல்ல. அது பிரச்சினைக்கான காரணத்தை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கச் செய்கிறது - என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் 34ஆவது சிரார்த்த தின சொற்பொழிவின்போது கூறினார்.

பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'அதிகார பரவலாக்கம் மூலம் நிலையான அரசியல் தீர்வு' என்ற தொனிப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றினார்.

அவ்வுரையில் அவர் மேலும் கூறியதாவது:

சில வருடங்களுக்கு முன்னர் சட்டக் கல்லூரி நூலகத்தில் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவின் உருவச்சிலை திறப்பு வைபவத்தின்போது அவரின்கீழ் கனிஷ்ட சட்டத்தரணியாக பணியாற்றிய சமந்த வீரகோன் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ஒரு தடவை தான் வாதாடவுள்ள கிரிமினல் விடயமொன்று குறித்து கொல்வின் மிக கவலையுடன் இருந்தாராம். அப்போது 'சேர் நீங்கள் ஏன் கவலையடைகிறீர்கள்? இந்த நாட்டின் கிரிமினல் வழக்குகளில் அரைவாசி உங்களால் இயற்றப்பட்டது' என சமந்த வீரகோன் கேட்டாராம். அதற்கு 'ஏனைய அரைவாசியும் நான் கூறியதை அவர்கள் செவிமடுக்காததால் இயற்றப்பட்டது' என கொல்வின் பதிலளித்தாராம்.

எமது நாட்டின் இன்றைய நிலையும் அப்படித்தான் உள்ளது என நான் நினைக்கிறேன். ஏனெனில் தந்தை செல்வா கூறியவற்றை அவர்கள் கேட்கவில்லை.  கொல்வினே 1956இல் 'இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழி இரு நாடுகள்' என்று கூறிவிட்டு அதை அவர் 1970களின் முற்பகுதியில் அரசியலமைப்புச் சபையில் செவிமடுக்கவில்லை.

பிரித்தானியர்கள் வெளியேறுகையில், அவர்கள் எமக்குத் தந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பின்போது ஆரம்பித்த இன உறவுகளின் மெதுவான மரணத்திற்கு 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு இறுதிச்சடங்கை செய்தது. ஆசியாவிலேயே சர்வஜன வாக்குரிமைப் பெற்ற முதல் நாடு என்ற சிறப்பை கொண்டிருந்த நிலையில் நாம், மக்களின் பல்லினத் தன்மையையும் அவர்களின் வித்தியாசமான கலாசாரங்களையும் புறக்கணித்ததாலும் அவர்களை ஒரே மாதிரியான தன்மையான சமூகத்தினராக கருதியதால் ஜனநாயகத்தின் அனுகூலங்களை நாம் குழிதோண்டி புதைத்துவிட்டோம்.

1947ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் சட்டமூலம் மீது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் குடியேற்ற நாடுகளுக்கான செயலாளர் கிறீச் ஜோன்ஸ் உரையாற்றுகையில்,

'இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் தனது சொந்த அரசியலமைப்பில் திருத்தம் செய்துகொள்ளக்கூடியதாக இருக்குமாயினும் அரசியலமைப்பிலுள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிக்கும் சரத்துகள் நீடிக்க வேண்டுமென உணர்ந்துள்ளது.
இலங்கையில் இந்த விடயத்தில் சர்ச்சை எதையும் தூண்டாதிருப்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக விரும்புகிறது. இதனால் பாகுபாடான சட்டங்கள் இயற்றுவதை தடுக்கும் சரத்துகள் இலங்கை அரசாங்கத்தால் தக்க வைத்திருக்கப்படும்'
என்றார்.

அதற்கு எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த கெம்மான்ஸ் பதிலளிக்கையில் பின்வருமாறு கூறினார்:

'இலங்கை எதிர்கொள்ளும் இரண்டாவது ஆபத்தை குடியேற்ற நாடுகளுக்கான செயலளார் மிகச் சுருக்கமாகத் தவிர குறிப்பிடவில்லை. இலங்கை ஒரு தனி இனத்தை கொண்டதல்ல. அங்கு சிங்களவர்களும் வடக்கில் யாழ்ப்பாணத் தமிழர்களும் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத் தமிழர்கள் மொத்தமான 6500,000 மக்களில் 1500,000 பேராவார். அவர்கள் சிங்கள மக்களிலிருந்து இனம், மொழி, மதம் பின்னணியால் வேறுபட்டவர்கள். அவர்கள் மிக ஆற்றலும் புத்திசாலித்தனமும் மிக்கவர்கள். அவர்களுடன் நான் அதிகம் பழகியிருக்கிறேன். ஏனெனில் மலாயாவை அபிவிருத்தி செய்வதில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர். யாழ்ப்பாணத் தமிழர்கள்தான் ரயில்வே மற்றும் அரச சேவைக்கு அதிக எண்ணிக்கையில் வந்தார்கள். இனத்துவ சிறுபான்மையினர் அந்த நாட்டில் இருப்பதால் அவர்கள் நிரந்தரமான அரசியல் சிறுபான்மையினராகும் ஆபத்து உள்ளது. 1963ஆம் ஆண்டு இலங்கை மீதான ஜனநாயக அடிப்படையில் மதிப்பீடு தோல்வியை நோக்கிச் செல்லக்கூடியது' என்றார்.

பல வருடங்களுக்குப் பின்னர் 1963ஆம் அண்டு சோல்பரி பிரபு பி.எச்.பார்மரின் இலங்கை ஒரு பிரிந்த தேசம் என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையொன்றில் இந்தியா, பாகிஸ்தான் மலாயா, நைஜீரியா மற்றும் ஏனைய நாடுகளின் அரசியலமைப்பில் உள்ளதைப் போன்று அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அம்சங்களை தனது ஆணைக்குழு சிபாரிசு செய்யாமல் விட்டமை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

அதேகாலத்தில் சிங்கப்பூரின் சிற்பியான முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, 'இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது அது சுதந்திரத்திற்கான நிதானமான சிறந்த மாதிரியாக விளங்கியது. பரிதாபமாக, அது செயற்படவில்லை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது அடிப்படை பிரச்சினையைத் தீர்க்கவில்லை. 80 லட்சம் பெரும்பான்மை சிங்களவர்கள், உத்தியோகபூர்வ மொழி ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாற்றப்பட்டதால் பிரதிகூலத்திற்குள்ளாகக்கப்பட்டிருந்த 20 லட்சம் யாழ்ப்பாணத் தமிழர்களை எப்போதும் இலகுவாக விஞ்சி விடுவார்கள்' எனக் கூறியிருந்தார்.

இதுதான் இந்த நாட்டைச் சூழ்ந்த பிரச்சினை. இந்நாட்டின் பிரஜைகளின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி பிரஜைகள் சகல விடயங்களிலும் எந்த ஜனநாயகத் தெரிவுகளையும் மேற்கொள்வதிலிருந்து ஒதுக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பான்மையினருடன் போட்டியிட வேண்டியிருந்தது. ஒரு நிரந்தர சிறுபான்மையினர் இத்தீவில் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க முடியாதிருந்தமையே பிரச்சினை. இது தமிழர்களை மாத்திரம் பாதிக்கவில்லை, நாட்டின் முக்கியமான பகுதியாகிய பேகர்களும் கணிசமானளவில் இந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

அரசியலமைப்பின் 29(2)ஆவது சரத்தின் மூலமான பாதுகாப்பு 'வால்வு' செயற்படவில்லை. அது பிரித்தானியர்களின் ஒரு தோல்வியுற்ற பரிசோதனையாகும்.

அனைத்து பிரஜைகளுக்கும் அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்கான முழுமையமான சமத்துவமான வாய்ப்பு எமக்களிக்கப்பட்ட ஒற்றையாட்சி தன்மையான அரசியலமைப்பிற்குள் அடைய முடியாதது.

இத்தகைய ஒற்றையாட்சி மாதிரிகளுக்குப் பதிலாக மொழிவாரி மாநிலங்கள், மற்றும் பலவகையான கூட்டாட்சி வகைகளை வித்தியாசமான மொழி, இன சமூகங்கள் உள்ள நாடுகளில் பிரித்தானிய அரசாங்கம் பயன்படுத்தியது. அம்மாதிரிகள் இனத்துவ பதற்ற நிலையையும் போட்டிகளையும் தணிப்பதில் பெரும் பங்கு வகித்தன. துரதிர்ஷ்டவசமாக, இலங்கை தமிழரசுக் கட்சி முன்வைத்த சமஷ்டிக் கட்டமைப்புக்கான கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகியது. சுதந்திரமடைந்த இரு வருடங்களுக்குள் 18-02-1949ஆம் திகதி அரசாங்க எழுதுவினைஞர்கள் சங்கத்தின் மருதானையிலுள்ள கட்டிடத்தில் நடைபெற்ற அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலாவது கூட்டத்தின்போது தந்தை செல்வா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

சுதந்திரத்திற்கு முன்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இத்தகைய கோரிக்கையை முன்வைக்காவிடினும் கண்டிய லீக், குறிப்பாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சமஷ்டி திட்டத்தை முன்வைத்தனர். 1926ஆம் ஆண்டு சமஷ்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு பண்டாரநாயக்க 6 கடிதங்களை எழுதினார். 1926 ஜூலை 17ஆம் திகதி பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய பிரபலமான உரையில் சமஷ்டி அரசாங்கத்தை அவர் பகிரங்கமாக பரிந்துரைத்தார். அத்துடன் சுவிட்ஸர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட சமஷ்டி அமைப்பு முறை இலங்கைக்கு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் கூறினார்.

கண்டிய லீக், டொனமூர் ஆணைக்குழு முன் இலங்கையில் 3 மாகாணங்களைக் கொண்ட சமஷ்டி இலங்கையை வலியுறுத்தியது. அவற்றில் ஒன்று வடகிழக்கு மாகாணமாகும். இதனால் கண்டி சிங்களவர்களே முதன்முதலில் வடக்கு கிழக்கு இணைப்பை பரிந்துரைத்தனர். பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் ஏனைய இடதுசாரி கூட்டணிகளும் சோல்பரி ஆணைக்குழு முன் சமஷ்டி அரசியலமைப்பை நாடினர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சமஷ்டியையோ ஒற்றையாட்சியையோ குறிப்பாக தெரிவு செய்யாவிடினும் அது சோல்பரி ஆணைக்குழு அறிக்கையை கடுமையாக எதிர்த்தது. பிரச்சினையானது இவ்விரு கொள்கைகள் குறித்ததாக இருக்கவில்லை. மாறாக, தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் ஜனநாயகத்தின் அனுகூலங்கள் அவர்களின் குறைந்த எண்ணிக்கை காரணமாக நழுவும் நடைமுறை குறித்ததாக பிரச்சினை இருந்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் லண்டனுக்குச் சென்று இலங்கை போன்று சமூக பிளவுகள் ஆழமாக உள்ள நாட்டில் பெரும்பான்மை இன சமூகத்தவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்கப்படக்கூடாது என வாதிட்டார். அவர் இலங்கைத் தமிழர்களுக்கும் சனத் தொகையில் 25 சதவீதமாக இருந்த இந்தியத் தமிழர்களுக்கும் குறைந்தபட்சம் 33 சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும் எனக் கோரினார்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் சுதந்திரம் பெற்று, அகில இலங்க தமிழ் காங்கிரஸ் எதிர்த்த பிரஜாவுரிமை சட்டம் ஏற்படுத்தப்பட்டபின் இணக்கப்பாட்டு அரசியலை பரிசீலிப்பதற்காக பொன்னம்பலம் அரசாங்கத்துடன் இணைந்தார். எவ்வாறெனினும் 5 வருடங்களில் அது தவறெனக் கருதி 02.11.1954ஆம் ஆண்டு அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

'...ஐந்து வருடகால ஒத்துழைப்பின் பின்னரும் பெரும்பான்மை ஆட்சி என்ற பெயரில் இன மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான சந்தேகமற்ற சமிக்ஞைகளை காண்கிறேன். இப்போது தமிழ் தேசியத்தை கூடுதலாக பரிந்துரைப்பவனாக என்னை நான் காண்கிறேன்' என அவர் கூறினார்.

சுதந்திரமடைந்து இரு வருடங்களுக்குள் சாதாரண பெரும்பான்மை ஆட்சி இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு நன்மையளிக்காது என்பதை தந்தை செல்வா உணர்ந்துகொண்டார். சோல்பரி யாப்பின் 29(2)ஆவது சரத்தின் மூலம்கூட அதை காணமுடியவில்லை. 1948ஆம் ஆண்டின் பிரஜாவுரிமை சட்டம் 1949ஆம் ஆண்டின் இந்திய, பாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டம் இறுதியாக 1956ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ மொழிச்சட்டம் என்பவற்றின் மூலம் இது இது தோல்வியடைந்த ஓர் அரசியலமைப்பு பரிசோதனை என்பது தெளிவாகியது.

அடுத்த 10 வருடங்களுக்குள் இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பிரதமர்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் - அவை இந்நாட்டை சமஷ்டி முறையிலானதாக மாற்றியிருக்கக்கூடியதல்ல என்றபோதிலும் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன. அரசியலமைப்புச் சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் பெரும்பான்மையினத்தவர்களால் ஒருவருக்கு ஒரு வாக்கு முறைமையின்கீழ் தோற்கடிக்கப்பட்டமை வியாதியின் தெளிவான வெளிப்படுத்துகை ஆகும். இது குடியரசாக்கலுக்கான அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிலிருந்து தமிழ் மக்களை ஒதுக்கியது. நான் வலியுறுத்த விரும்பும் விடயம் ஆட்சிமுறைமை ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்ற வர்ணனைகள் அல்ல. மாறாக ஜனநாயகத்தின் அனுகூலங்களையும் அனைத்து மக்களுக்குமான பூரண பிரஜாவுரிமையை உண்மையாக உணர்வதுமே முக்கியம்.

ஆளப்படுவோரின் ஓர் அரசாங்கம் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களுக்கான வழியை கொடுப்பதாக இருக்க வேண்டும். ஆட்சிபுரிபவர்களும் ஆளப்படுபவர்களும் ஒரே தரப்பினராக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வித்தியாசமான மக்கள் வௌ;வேறு அளவுகளில் இருக்கும்போது ஒரு தரப்பு தொடர்ச்சியாக மற்றைய தரப்பை ஆளுவதாக இருக்கும். அது ஜனநாயகத்தின் ஒரு குறைபாடாக மாத்திரமல்லாமல், அரசியல் அடக்குமுறையாகவும் இருக்கும். அந்நிலைமை அனைத்துவித ஜனநாயக ஆட்சிக்கும் முரணானது.

கவர்ச்சிகரமான பல தத்துவங்கள் உள்ளன. ஆனால், அவற்றை பலனில்லை என்றால் அல்லது நடைமுறைபடுத்த முடியாவிட்டால் அவற்றில் அர்த்தமில்லை.  கத்தியென்றல் அது வெட்ட வேண்டும், இல்லாவிட்டால் அது கத்தியல்ல என்ற சீன முதுமொழியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இறைமை தொடர்பாக காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமருக்கு சம்பந்தன் அளித்த பதிலை அவர் எமக்கு பல தடவை நினைவூட்டியுள்ளார். இறைமை என்பது உடைந்துபோகக்கூடிய கண்ணாடியில் வைத்து பாதுகாக்க வேண்டிய பொருளல்ல. அது உபயோகமானதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்குரியது என்று அரசியலமைப்பில் குறிப்பிடுவது மாத்திரம் போதுமானதல்ல. ஆனால், அது அனைத்து பிரஜைகளும் இறைமையை முழுமையாக பகிர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என அவர் (சம்பந்தன்) கூறினார்.

ஒரு நாட்டின் வித்தியாசமான மக்களிடையே அரசியல் அதிகாரங்களை பகிர்வதற்கான வழி மாகாண அல்லது பிராந்திய ரீதியிலான சிறிய அலகுகளுக்கு  அந்த அதிகாரங்களை பகிர்வதாகும். நாட்டின் நிரந்தர சிறுபான்மை இனத்தவர்கள் அந்நாட்டின் சில மாகாணங்களில் பிராந்தியங்களில் பெரும்பான்மையினராக இருந்தால் மேற்படி முறைமை மிகவும் வினைத்திறனானதாக இருக்கும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் மிகச்சிறந்த உதாரணம் மொழி அல்லது இன அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ள எமது அயல் நாடான இந்தியாவாகும்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வருகின்றனர். சிங்களவர்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் வசித்துவருகின்றனர். தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலான எந்தவொரு அதிகார பரவலாக்கமும் இந்த வரலாற்று புவியியல் விடயத்தை சாதமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நிலம் தொடர்பாக மக்கள் உணர்வு பூர்வமான பிணைப்பை கொண்டிருக்கலாம் என்பது உண்மை. ஆனால் அந்த நிலம் அங்கு வாழும் மக்களைவிட முக்கியமானதல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 5 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் சமாதானக் கருத்தரங்கொன்றில் நான் பங்குபற்றினேன். அதில் உலகின் வித்தியாசமான பாகங்களில் நடைபெறும் மோதல்கள் குறித்து ஆராயப்பட்டன. அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களிடம் காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவுக்கா பாகிஸ்தானுக்கா சொந்தமானது என சமாதானச் செயற்பாட்டாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஏறத்தாழ அனைவரும் இளம் இந்தியர்களாக இருந்த பங்குபற்றுநர்கள் ஒருமித்த குரலில் இந்தியாவுக்குரியது என பதிலளித்தனர். அதன்பின் அந்த சமாதான செயற்பாட்டாளர் சிக்கலான கேள்வியொன்றை கேட்டார். 'காஷ்மீர் இந்தியாவுக்குரியது என்பதன் மூலம் நீங்கள் அர்த்தப்படுத்துவது அங்குள்ள மக்களையா அல்லது நிலத்தையா? என்று கேட்டார். அரசியல் ரீதியில் சரியான பதிலை அளிக்க விரும்பிய அந்த இளம் மக்கள் தாம் காஷ்மீர் மக்களை அர்த்தப்படுத்துவதாக கூறினர். அதற்கு அந்த சமாதான செயற்பாட்டாளர், 'இல்லை. நீங்கள் மக்களை அர்த்தப்படுத்தவில்லை. நிலத்தையே அர்த்தப்படுத்துகிறீர்கள். காஷ்மீர் உங்களுக்குரியது என்றால் எமது புதல்வர்கள் வீதிகளில் கொல்லப்பட்டபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? எமது சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? எமது தந்தைமார் கடத்திச் செல்லப்பட்டபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? நாங்கள் உங்களுக்குரியவர்கள் என நீங்கள் கருதினால் அந்த வேளைகளில் நீங்கள் எமக்காக பேசியிருக்க வேண்டும். நீங்கள் நிலத்தில் மாத்திரமே அக்கறை கொண்டிருக்கிறீர்கள், மக்களாகிய எம்மில் அல்ல' என அவர் கூறினார்.

இரு வருடங்களுக்கு முன்னால் எமது மண்ணில் நடத்தப்பட்ட பயங்;கர யுத்தத்திலிருந்து நாம் இன்னும் மீண்டுவர வேண்டியுள்ளது. நேர்மையாக பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி யாதெனில், அந்த யுத்தம் மக்களை விடுவிப்பதற்காகவா அல்லது நிலத்தை மீளக் கைபற்றவா என்பதாகும். அது மக்களுக்கானது எனில், நிச்சயமாக, நிலத்தைவிட அந்த மக்களின் உரிமைகள் முன்னுரிமை பெற வேண்டும்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து வடக்கு கிழக்கின் குடித்தொகைப் பரம்பலை மாற்றும் நோக்குடன் அரச அனுசரணையுடனான குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1827ஆம் ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின்படி கிழக்கில் சிங்கள மக்களின் விகிதாசாரம் அரைச் சதவீதமாகும். 1881 மற்றும் 1921ஆம் ஆண்டின் குடித்தொகை மதிப்பீடுகளின்படி கிழக்கில் சிங்கள மக்கள் 4 சதவீதமாக இருந்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றபோது 1947இல் கிழக்கில் சிங்கள மக்கள் 9 சவீதமாக இருந்தனர். பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கையின்போது 13 சதவீதமாகவும் டட்லி –செல்வா உடன்படிக்கையின்போது 19 சதவீதமாகவும் சிங்கள மக்கள் இருந்தனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி கிழக்கில் சிங்கள மக்கள் 25 சதவீதமானோராவர். சுதந்திரம் பெற்றவேளையில் -1947 இலிருந்து 1981ஆம் ஆண்டுவரையான காலத்தில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் அதிகரிப்பு 238 சதவீதமாகும். இது ஏறத்தாழ இரண்டரை மடங்காகும். இதே காலப்பகுதியில் கிழக்கில் சிங்கள மக்களின் அதிகரிப்பு 888 சதவீதம், சுமார் 9 மடங்காகும்.

இந்த தரவுகள் உயர் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் 1987ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட முறை தவறென அளிக்கப்பட்ட தீர்ப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகார பரவலாக்கம் வெற்றிகரமாக அமைவதற்கு குறித்த மாகாணங்களில் அல்லது பிராந்தியங்களிலுள்ள மக்கள் தமது சொந்த அரசியல் தலைவிதியை தீர்மானித்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதுவரை குறைபாடுகள் கொண்ட அரசாங்கக் கட்டமைப்பை தமிழ் மக்களும் அதை உண்மையாக பயன்படுத்தக்கூடியதாக்குவதற்கான உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களும் முழுமையாக சமத்துவமாக அரசாங்கத்தை பயன்படுத்தத்தக்க வகையில், தற்போதைய அரசியலமைப்பும் அதன் சகல திருத்தங்களும் சடுதியாக மாற்றத்திற்குள்ளாக்கப்பட வேண்டும். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள அதிகார பரவலாக்கம் உண்மையானதல்ல. ஸ்திரமானதுமல்ல. அது பிரச்சினைக்கான காரணத்தை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

எனவே, அனைத்து மக்களினதும் நிரந்த முன்னேற்றத்திற்கும் செழிப்புக்கும் பங்களிக்கும் வகையில் ஒவ்வொரு பிரஜையும் தமது பிரஜாவுரிமையை முழுமையாகவும் சமத்துவமாகவும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் நாடு குறித்த தந்தை செல்வாவின் எண்ணத்தோற்றத்திற்கு மீண்டும் செல்ல நாம் முயற்சிப்போம்.

(இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமை உரை வீடியோ வடிவில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது)


  Comments - 0

  • Pathmadeva Friday, 29 April 2011 01:17 AM

    This news item should be fully published in English.

    Reply : 0       0

    Dilan Friday, 29 April 2011 01:40 AM

    உண்மையான தகவல்களும் சிறந்த கருத்துகளும்

    Reply : 0       0

    java Saturday, 23 February 2013 04:16 PM

    நான் இந்த பக்கத்தை விரும்புகிறேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .