Super User / 2011 மே 03 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
இலங்கை அரசின் மீது போர்க்குற்றம் சுமத்தும் ஐ.நாவின் அறிக்கை வெளியான பின்னர், அதிகம் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ள தரப்பு என்றால், அது தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தலைமைகள் தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் நடைபெற்று முடிந்தபோது, அதனால் பெரிதும் அழிவுகளையும், பாதிப்புகளையும், துன்பங்களையும் சுமந்து நின்றவர்கள் தமிழர் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போனதும், பல ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததும், உடல் உறுப்புகளை இழந்து
போனவர்கள் இன்னமும் துன்பங்களில் உழல்வதும் நிதர்சனமான உண்மை.
ஐ.நா அறிக்கையில் பல பத்தாயிரம் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் போரில் பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, அவர்களின் மனிதஉரிமைகள் மீறப்பட்டதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நாவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அந்தவகையில் பார்க்கும் போது, இந்த நிபுணர்குழு அறிக்கையின் பரிந்துரைகளால் தமிழர்தரப்பு ஒரு விதத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும்.
தமிழர் தரப்புக்கு ஏற்பட்ட எல்லாவிதமான இழப்புகள், அவலங்களையும் இந்த அறிக்கை பதிவு செய்யாது போனாலும்- அதில் ஒரு பகுதியாவது ஒரு சர்வதேச ஆவணமாகப் பதிவாகியுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதையிட்டு உண்மையில் தமிழர் தரப்புத் தான் அதிகம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அத்தகைய பிரதிபலிப்பை தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளிடத்தில் இருந்தோ அல்லது அரசியல் தலைமைகளிடம் இருந்தோ காணமுடியவில்லை.
தமிழ் மக்களுக்காக அரசியல் நடத்தப் புறப்பட்ட தலைமைகள் பல இந்த விவகாரத்தில் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளன என்பதே உண்மை.
ஐ.நாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகள் வரவேற்றுள்ளன.
இந்தக் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துவதால், இதை வரவேற்பதை விட வேறு வழி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயக மக்கள் முன்னணியும் இதற்குச் சார்பான கருத்தையே முன்வைத்துள்ளது.
ஆனால் ஏனைய கட்சிகளான புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இதொகா, மலையக மக்கள் முன்னணி, ஈரோஸ் என்று தேர்தல் காலத்தில் களைகட்டிக் கூடும் கட்சிகளெல்லாம் இந்த விடயத்தில் மௌனமாகவே உள்ளன.
ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆங்கில இணையம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அறிக்கையை நிராகரித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி இந்த அறிக்கை பற்றி சில விடயங்களை சுட்டிக்காட்டி அரசுக்கு ஆலோசனை கூற முன்வந்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் பேட்டியில் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை என்கிறார்.
அதுமட்டுமன்றி முப்பது ஆண்டுகாலப் போரில் இடம்பெற்ற 70 ஆயிரம் பேரின் மரணங்களுக்கும் புலிகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பக்கத்தில் அமைச்சர் டியு குணசேகர , போர் என்றால் பொதுமக்களும் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
போரின்போது காயப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் செஞ்சிலுவைக் குழுவின் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டனர். இதை யாரும் மறுக்க முடியாது- அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்திய மருத்துவக்குழுவினரே சிகிச்சை அளித்தனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது எப்படி?
இவர்கள் எல்லோரையும் புலிகள் தான் சுட்டனர் என்று யாரும் கூறவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனரகரத்தினம் கூட கடைசிக் கட்டத்தில் 600 பொதுமக்களைத் தான் புலிகள் சுட்டதாக கூறியுள்ளார்.
அப்படியானால் ஏனைய பொதுமக்களை யார் கொன்றது- அவர்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை.
புலிகள் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்று யாராலும் வாதிட முடியாது. அதேவேளை புலிகள் தான் எல்லாவற்றையும் செய்தனர் என்று சொல்லிக் கொள்வது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
ஏனென்றால் இந்தப் போரை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. போருக்குள் வாழ்ந்த நான்கு இலட்சம் வரையான மக்கள் அங்கு நடந்த சம்பவங்களுக்குச் சாட்சியாக உள்ளனர்.
.
அதேவேளை, முன்னர் புலிகளோடு இருந்த அமைச்சர் கருணாவும் சொல்கிறார்- எல்லாவற்றையும் செய்தது புலிகள் தான் என்று.
ஆனால் முன்னர் அவர் தானே புலிகளின் பிரதம தளபதியாக இருந்து எல்லாச் சண்டைகளிலும் வெற்றி பெற்றுக் கொடுத்ததாக மார்தட்டியவர். அப்படியானால் அந்தச் சண்டைகளின் போது ஏற்பட்ட இழப்புகளுக்கு அவரும் பொறுப்பல்லவா?
இப்போது கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் மட்டும் எதுவும் பேசாமல் இருக்கிறார். கிழக்கில் ஐ.நா அறிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட நிகழ்வுகளில் அவரது கட்சியினர் பங்கேற்கவில்லை. அவரும் மூச்சுவிடவில்லை.
இந்தக் கட்டத்தில் தான் கடந்தவாரம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
படையினர் போர்க்குற்றங்கள் எதையும் புரியவில்லை என்பதை வெளிப்படுத்த தடுப்புக்காவலில் உள்ள கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை அரசாங்கம் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
கே.பி.க்கு இப்போது தான் சோதனை வந்துள்ளது என்றால் மிகையில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டில் இருந்து குரல் கொடுத்து வந்த கேபி இப்போது என்ன சொல்லப் போகிறார்?
இதுவரை அவருக்கெதிராக விமர்சனங்கள் வந்தபோது தடுப்பிலுள்ள போராளிகளின் நலனுக்காகவே தான் அரசுடன் இருப்பதாக கூறித் தப்பி வந்துள்ளார். ஆனால் இப்போது அவர் என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுகிறது.
அதுமட்டுமன்றி தடுப்பிலுள்ள புலிகளின் ஏனைய தலைவர்களையும் கூட, போர்க்குற்றங்களைப் படைத்தரப்பு இழைக்கவில்லை என்று கூற வைப்பதற்கு அரசாங்கம் பயன்படுத்தவுள்ளதாக தெரிகிறது. அவர்கள் அத்தனை பொதுமக்களையும் தாமே கொன்றதாக கூறப் போகிறார்களா?
அரசாங்கத்துக்கு இந்த அறிக்கையால் நெருக்கடி உள்ளதெல்லாம் உண்மை தான். ஆனால் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதையும் செய்யும் நிலையில் உள்ளது.
அதற்காக தமிழர் தரப்பில் உள்ள தலைமைகளையும் கட்சிகளையும் மட்டுமன்றி முன்னாள் போராளிகளையும் பயன்படுத்தப் போகிறது.
இந்தக் கட்டத்தில் உண்மை என ஒன்றுள்ளது. அதை யாராலும் மாற்றவோ முறுக்கவோ முடியாது.
அந்த உண்மைக்கு முரணாகப் பேச எந்தவொரு தமிழர் தரப்பாவது முனைந்தாலும் அதை உலகம் ஏற்கிறதோ இல்லையோ தமிழர்கள் ஏற்பதற்கு வாய்ப்பில்லை.
அப்படியான நிலை வந்தால் அது தமிழர் தரப்புக்குள் மோதல்களையும் முரண்பாடுகளையும் அதிகரிக்கவே வழிசெய்யவும் போகிறது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026