Super User / 2011 மே 17 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்சயன்)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது, பெரும்பாலானவர்களை அது ஆச்சரியப்பட வைத்ததா அல்லது அதிர்ச்சியடைய வைத்ததா என்று கூறமுடியாது. அந்தளவுக்கு கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு.
தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு இப்படியொரு தோல்வியை எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவும் இல்லை.
உண்மையில் சொல்லப் போனால் இந்த வெற்றியை ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்கமாட்டார். அதுபோல கருணாநிதி இதுபோன்ற தோல்வியையும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்தளவுக்கு இது எதிர்பாராத முடிவைத் தந்துள்ளது.
அதிமுகவின் வரலாற்றில் பல படுதோல்விகளைச் சந்தித்துள்ளது. ஏழு, எட்டுத் தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய வரலாறும் அதற்கு உள்ளது.
ஜெயலலிதா கூட தோல்வியைத் தழுவிய வரலாறும் உள்ளது. ஆனால் திமுக 1991 ஆம் ஆண்டில் ராஜிவ்காந்தி கொலையின் பின்னர் ஏற்பட்ட அனுதாப அலையில் சந்தித்த தோல்விக்கு அடுத்ததாகஇ சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வி இது.
1991இல் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் திமுகவுக்கு இரண்டே இரண்டு ஆசனங்கள் தான் கிடைத்தன. அதற்கு அனுதாப அலை என்று காரணம் இருந்தது. ஆனால் இந்தமுறை அப்படியான எந்த அலையும் தேர்தல் காலத்தில் வீசவில்லை. அனுதாப அலையும் இல்லை- ஆதரவு அலையும் இல்லை. ஆனால் அதிமுக அலை இரகசியமாக வீசியுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக வாக்களிப்பு அதிகம் இருந்த போதே ஒரு மாற்றம் நிகழப்போகிறது என்பது தெளிவானது. அதிகளவிலானோர் வாக்களிக்க வந்தது ஒரு மாற்றத்தை விரும்பித் தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அனைவருமே மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தான் தெரிந்தது.
உண்மையில் இந்த வெற்றிக்காக அதிமுக கடுமையாக உழைத்தது என்றெல்லாம் சொன்னால் அது தவறு. அப்படியான பெரியளவு பிரசாரங்கள் நடக்கவில்லை. ஆனாலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுவும் மிகப்பெரியதொரு அலை வீசியுள்ளது.
இந்த ஆட்சி மாற்றத்துக்கும், அதிமுக அலைக்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று இலங்கைத் தமிழர் விடயத்தில் திமுக பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போரை நிறுத்துவதற்கு திமுக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
போர்நிறுத்தம் செய்யக்கோரி அரை மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தது கருணாநிதியின் மிகப்பெரிய நாடகம். இந்திய மத்திய அரசு போருக்கு ஆதரவளித்து- அதற்கு திமுக அரசாங்கம் முண்டு கொடுத்து வந்தது.
இலங்கைத் தமிழர் விவகாரம் இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பெரியளவில் தாக்கம் செலுத்தாது என்றே கணிப்புகள் கூறின. இருந்தபோதும் திமுகவின் இந்தத் தோல்விக்கு அதுவும் கணிசமான பங்கை வகித்துள்ளது.
திமுக மீது உள்ள ஏனைய குற்றச்சாட்டுகளான ஊழல் ஆட்சி, குடும்ப ஆதிக்கம் என்பனவெல்லாம் இதற்கு முன்னரும் கூறப்பட்டவை தான்.
அப்போதெல்லாம் திமுகவுக்கு இதுபோன்ற தோல்விகள் வந்ததில்லை.
ஆனால் இந்தமுறை ஏற்பட்டுள்ள படுதோல்வியானது புதியதொரு வலுவான காரணத்தின் அடிப்படையிலானதாகவே இருக்க வேண்டும். அதுவே இலங்கைத் தமிழர் விவகாரம் என்று கருத வைக்கிறது.
இலங்கைத் தமிழர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வர கருணாநிதி அரசாங்கம் துணைபோனதாக தமிழகத்தில் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக அரசின் மீது அள்ளி வீசிய சில கட்சிகள் கூட கருணாநிதியுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டன. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற இலங்கைத் தமிழர் ஆதரவுக் கட்சிகள் திமுகவுடன் சேர்ந்து கொண்டு தோல்வியைத் தழுவியுள்ளன..jpg)
திமுகவின் தோல்விக்கு இலங்கைத் தமிழர் விவகாரமும் ஒரு காரணம் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அதிமுக வெற்றி பெற்றதும் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துகள் முக்கியமானவை.
போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கையைப் பணிய வைக்க முயற்சி செய்வதாகவும், அதற்கு மசியாது போனால் பொருளாதாரத் தடையை விதிக்க வலியுறுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது, நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தமிழீழம் பற்றியெல்லாம் பேசியிருந்தார்.
ஆனால் இந்தமுறை தேர்தலில் அடக்கி வாசித்து வந்த அவர், கடைசி நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுவேன் என்று கூறியிருந்தார்.
ஒருபக்கத்தில் கருணாநிதி மத்திய அரசுக்குத் துணை போய் தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டதான கருத்து வலுவாகத் தோற்றம் பெற்றிருந்த நிலையில்இ ஜெயலலிதா பதவிக்கு வந்திருப்பது முக்கியமான விடயம். அவர் தெரிவு செய்யப்பட்டதும் கூறியுள்ள கருத்து அதைவிட முக்கிமானது.
இந்த எதிர்பார்ப்புகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பரிமாறியுள்ளனர்.
மேலும் பல அமைப்புகளும் வாழ்த்துக் கூறியுள்ளன. வெற்றி பெற்றவரை வாழ்த்துவது பொதுவான இயல்பு. ஆனால், இந்த வாழ்த்துகளின் பின்னணி வேறு விதமானது. இலங்கைத் தமிழரின் நிம்மதியாக- உரிமைகளுடன் வாழ ஜெயலலிதா உதவவேண்டும் என்று இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், வெற்றி பெற்றதும் ஜெயலலிதா கூறிய ஒரு கருத்து பலரது கவனத்தை ஈர்க்கவில்லை. இலங்கைத் தமிழர் விடயத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டியது மத்திய அரசு தான், மாநில அரசு அதற்கு அழுத்தம் கொடுக்க மட்டுமே முடியும் என்பதே அந்தக் கருத்து.
இலங்கைத் தமிழர் விடயத்தில் திமுக அரசு- மத்திய அரசின் போக்கிற்கு விட்டுக் கொடுத்து பவ்வியமான நடந்து கொண்டதே தவிர, அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
ஆனால், ஜெயலலிதா அப்படி இருப்பாரா அல்லது அவரும் கருணாநிதி போலவே மத்திய அரசுடன் ஒட்டிக் கொள்வாரா என்பது கேள்வியாக உள்ளது. மத்திய அரசு இப்போது திமுகவை கைவிட்டு விட்டு அதிமுகவுடன் அணிசேர முனைகிறது.
இந்தக்கட்டத்தில் ஜெயலலிதாவினால் எந்தளவுக்கு தமிழர்களுக்காக அழுத்தங்கள் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குரிய விடயம் தான்.
தமிழ்க்கட்சிகள் பலவும் ஜெயலலிதாவிடம் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் இந்த விடயத்தில் மிகையான நம்பிக்கையையோ, எதிர்பார்ப்பையோ வைத்திருப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான விடயமாக இருக்காது.
திமுகவின் தோல்விக்குப் பின்னர் இது கடவுளின் காட்சி என்று கூட சிலர் அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற உணர்ச்சி வசப்பட்ட கோரிக்கைகளும், அறிக்கைகளும் எந்தளவுக்குத் தமிழர்களின் நலனுக்கு உகந்ததாக அமையும் என்று சொல்ல முடியாது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்பது தனியே கருணாநிதியாலோ அல்லது ஜெயலலிதாவினாலோ கூடி வந்துவிடப் போவதில்லை. அழுத்தங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும்.
இரண்டு பேரும் சேர்ந்து கொடுக்கக் கூடிய அழுத்தங்களே அதிக நலன்களைக் கொடுக்கக் கூடியது. ஆனால் அது நடக்கப் போவதில்லை.
தமிழர் நலனுக்காக மத்திய அரசிடம் ஜெயலலிதா எந்தளவுக்கு கண்டிப்பாக இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அடுத்த காய்கள் நகர்த்தப்படவுள்ளன.
ஒருவகையில், இந்தியாவின் உயர்நிலைக் குழுவினரின் கடந்தவாரப் பயணம் பிற்போடப்பட்டதற்கு ஒரு காரணம் தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவும் தான்.
மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரசுக்கு திமுக போனால் அதிமுக என்ற கொள்கைதான். எனவேதான் ஆட்சியில் அமரும் தரப்பைக் கணிக்க கால அவகாசம் தேவைப்பட்டது.
இப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துள்ளார். அவரது நிலைப்பாட்டை அறிந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தவே மத்திய அரசு சற்றுப் பொறுமை காக்கிறது.
அவசரப்பட்டு எடுக்கக் கூடிய முடிவுகள் ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்றே அக்கறை காண்பிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஈழத்தமிழர் நலன் என்பது தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ள போதும், அதன் எதிர்காலம் எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. மத்திய, மாநில அரசுகளின் நலன்களை முன்னிறுத்தியே இது தீர்மானிக்கப்படப் போகிறது.
கருணாநிதி போய் விட்டதற்காகக் கொண்டாடுவதோ, அல்லது ஜெயலலிதா வந்து விட்டதற்காகக் கொண்டாடுவதோ முக்கியமில்லை. அவர்களின் நகர்வுகளை அவதானித்து அதற்கேற்ப காய்களை நகர்த்துவதே புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறை. இதுதான் இப்போ தமிழர் தரப்புக்குத் தேவைப்படுகிறது.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை வெளியிடுவதாலோ அல்லது புதிய ஆட்சி அமைந்து விட்டதால் இலங்கை தமிழரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு விடும் என்று எவரும் நம்பி விடக் கூடாது.
அப்படியான கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தால் அது மற்றொரு ஏமாற்றத்துக்கு வழிவகுக்கலாம். நம்பிக்கெட்ட வரலாறு தான் தமிழருக்கு நிறைய உள்ளதே?
2 hours ago
5 hours ago
9 hours ago
Guru Wednesday, 18 May 2011 10:25 AM
அம்மா அதிகூடிய ஆசனங்களை பெற்று தனி ஆட்சி அமைப்பார் என்பது தமிழ் நாட்டுமக்கள் அறிந்த விடயம்தான். அதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ் நாடு மக்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. காரணம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் (தொல் திருமாவளவன்) கட்சி 'திமுக' வில் பெற்ற 10 இடங்களில் ஒன்றிலும் வெற்றி பெற முடியாமல் போனதுஇ மற்றொன்று ஈழத்தமிழர்களுக்காக வீதியில் இறங்கி போராடிய வைகோ, அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதாவால் கூட்டணியிலிருந்து தூக்கி வீசியபோது வைகோ ஆணவம் பிடித்த அம்மாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியபோதும் மக்கள் மனம் மாறாமல் அம்மாவைதான் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தார்கள்.
Reply : 0 0
xlntgson Wednesday, 18 May 2011 08:28 PM
தமிழ்நாட்டினர் சாய்ந்தால் சாய்ந்த பக்கம் அள்ளிப்போட்டு இருக்கின்றனர் வரலாறு காணாத விதத்தில். அவர்களது எதிர்பார்ப்புக்கு ஜெ ஒன்றும் செய்து விடமாட்டார். இலவசமாக கொடுப்பதாகச் சொன்னதெல்லாம் கொடுக்க இயலாது. கொடுக்க முயற்சித்தாலே ஊழல் புகுந்து விடும் என்பது உறுதி. '67 காங்கிரஸ் அரசு போல மின்சாரம் வழங்கவும் காவேரி நீரைப்பெற கர்நாடகாவோடு பிணங்கிக் கொள்ளாமல் நியாயமாக நடந்து நீர் பெறவும் கல்வியை இலவசமாக்கவும் மருத்துவமனைகளில் நல்ல மருந்து உணவு கிடைக்கச் செய்யவும் அவர் பெரும்பாடு படவேண்டும். ஈழம், கோஷம் மட்டுமே!
Reply : 0 0
IBNU ABOO Monday, 20 June 2011 03:25 AM
மேலே சொன்னே மிஸ்டர் குரு கரக்டாகத்தான் கூறினார். என்றாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அம்மா தி.மு. கா வுக்கு எதிராகவும் நமது நாட்டுக்கு எதிர்ப்பாகவும் லாவகமாகவும் ,லாபகரமாகவும் கையாண்டதால் ஜெய்த்தார் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago