2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் மையம் கொள்ளும் இந்திய எதிர்ப்புணர்வு

Super User   / 2011 மே 25 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.சஞ்சயன்)

கொழும்பு அரசியலில் ஐ.நாவின் அறிக்கை குறித்து இருந்து வந்த எதிர்ப்புணர்வு இப்போது இந்தியாவின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது.

சிங்களத் தேசியவாதிகள் பலரும் இப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முதலாவது காரணம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பது. இரண்டாவது காரணம் இந்தியா கொடுக்கத் தொடங்கியுள்ள அழுத்தங்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்து வந்த மிகநெருக்கமான உறவு இப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது.  அக்கினிப் பிரவேசத்தைக் கடக்க வேண்டிய நிலை என்று சொன்னால் கூற அது மிகையில்லை.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் திருப்திகரமானதொன்றாக அமையவில்லை.

இந்தப் பயணத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணங்களைத் தேட முனைகின்றனர்.

சிலர் இதை வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் இயலாமை என்கின்றனர். இன்னும் சிலர் அவரது இராஜதந்திர பலவீனம் என்கின்றனர்.

ஆனால் இலங்கை அரசாங்கம் இந்தியாவை சரியாகக் கணக்குப் போடாததும்- இந்தியாவை மிகையாக நம்பியதும் தான் இந்த ஏமாற்றத்துக்குப் பிரதான காரணமாகக் கொள்ளலாம்.

அதாவது இலங்கை அரசாங்கம் சீனாவுடனான தனது நெருக்கத்தை வைத்துக் கொண்டு, இந்தியாவை தன் விருப்பப்படி வளைத்துப் போடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது.

அதனால் தான், இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை சுலபமாகத் தோற்கடித்து விடலாம் என்ற கனவுடன்- நம்பிக்கையுடன் காத்திருந்தது.

அது தொடர்பான இந்தியாவின் வாக்குறுதியுடன் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வந்து சேர்வார் என்று எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவரோ இந்தியா கொடுத்து அனுப்பிய- நிறைவேற்ற வேண்டிய கட்டளைகளுடன் தான் கொழும்பு வந்து சேர்ந்தார். இதுதான் கொழும்பு அரசியலில் இந்திய எதிர்ப்புணர்வு மீண்டும் தோற்றம் பெறக் காரணம்.

ஐ.நா. அறிக்கை வெளியாகி பல வாரங்களாகியும் இந்தியாவின் பக்கத்தில் இருந்து எந்தக் கருத்தும் வராத நிலையில் தான், வெளிவிவகார அமைச்சரை அரசாங்கம் புதுடெல்லிக்கு அனுப்பியது. அதுமட்டுமன்றி இந்தியக் குழு கொழும்பு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான மூவர் அணி புதுடெல்லி செல்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இரண்டுமே நடக்காத நிலையில் தான்- வெளிவிவகார அமைச்சர் பீரிஸை, தனியாக அழைத்து விபரங்களை கூறி அனுப்பியுள்ளது இந்தியா.

பீரிஸின் பயணத்தின் முடிவில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் ஐ.நா. அறிக்கை பற்றிய ஒரு சொல் கூடக் கிடையாது. ஆனால் அதுபற்றியே நீண்டநேரம் பேசப்பட்டுள்ளது. இலங்கை  எதிர்பார்த்தது போன்று இந்தியா, ஐ.நா. அறிக்கையை உடனடியாக எதிர்க்கவோ அல்லது இலங்கை அரசுக்காக பரிந்துபேசவோ தயாராக இல்லை. இது சிங்களத் தேசியவாதிகளை கடும் சினத்துக்குள்ளாக்கியுள்ளது.

குணதாச அமரசேகர, கோமின் தயாசிறி போன்ற பலருக்கும் இந்தியாவின் அணுகுமுறை கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால் தான் அவர்கள் இந்தியாவின் மீது எரிந்து விழத் தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி இந்தியாவுடன் கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட வெளிவிவகார அமைச்சர் பீரிஸையும் கடுமையாகச் சாடத் தொடங்கியுள்ளனர். அவர் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாகவும் கூட குற்றம் சாட்டியுள்ளனர் இவர்கள்.

வரும் நாட்களில் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் இந்தியாவுக்கு எதிரான பேரணிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார் குணதாச அமரசேகர. ஜேவிபியும் இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மீண்டும் ஓர் இந்திய எதிர்ப்புணர்வு கொழும்பில் மையங்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இதற்குப் பின்னால் அரசாங்க தரப்பின் ஆதரவும் இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்களும் வலுவாகவே உள்ளன. காரணம், அரசாங்கத்துக்குக் கூட  இந்தியாவின் அணுகுமுறை பிடிக்கவில்லை. ஆனால் அதை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

கூட்டறிக்கையில் இந்தியா அழுத்தம் கொடுத்தது போன்று காட்டிக் கொள்ளாமல்- மிகவும் நாசூக்கான முறையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவற்றை நீக்க வேண்டியது பற்றிய குறிப்புகள் இந்தியாவின் கருத்தாக கூட்டறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட  அதிகாரப்பகிர்வு பற்றிய கருத்துகள் இந்தியாவின் பக்கத்தில் இருந்து கூறப்படவில்லை. அதை வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் கருத்தாகவே இணங்கப்பட்டுள்ளது.

ஆக, இலங்கை அரசின் வாயினாலேயே 13ஆவது திருத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு பற்றி இந்தியா கூற வைத்துள்ளது.

இதுபற்றி கூட்டறிக்கையிலும் கையெழுத்திட்டு விட்டு வந்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். இதுதான் மிகவும் முக்கியமான பிரச்சினை. இலங்கை அரசாங்கம் இப்போது கூட்டறிக்கை என்றாலே பெரும் சிக்கலாக மாறி வருகிறது.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கொழும்பு வந்திருந்தபோது இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் படியே நிபுணர் குழுவை அமைத்ததாக கூறியிருந்தார்.

இப்போது இந்தியா இந்தக் கூட்டறிக்கையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறதென்று தெரியவில்லை. ஆனால் இந்தமுறை இந்தியா வலுவானதொரு பிடிக்குள் இலங்கையைக் கொண்டு வந்துள்ளது என்பதே உண்மை.

கடந்த காலங்களில் சீனாவுடனான ஆதிக்கப் போட்டியில் இந்தியா பல சறுக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. ஆனால் இந்தமுறை இந்தியாவின் வலுவான பிடிக்குள் இலங்கை மாட்டிக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பல காரியங்களை பட்டியல் போட்டு அனுப்பியுள்ளது இந்தியா. அவற்றில் இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகளை அகற்றுதலும் ஒன்று.

இந்தியாவைச் சமாளிக்கும் ஓர் உத்தியாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் இந்தியப் பயணத்துக்கு முன்னரே, காங்கேசன்துறைத் துறைமுகத்தைப் புனரமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆனால், இந்தியாவோ இலங்கை அரசாங்கம் இழுத்தடிக்கும் சம்பூர் அனல் மின்திட்டம் உள்ளிட்ட எல்லாத் திட்டங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான தடைகளை அகற்றக் கோருகிறது.

இவையெல்லாம் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியாக உள்ளன. இந்தியா கூறியுள்ள மறைமுக நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் அல்லது நடைமுறைப்படுத்தினால் தான் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை முறியடிப்பதற்கான ஆதரவை இந்தியா வழங்கும்.

அதுவேளை கூட்டறிக்கையில் மற்றொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனிதஉரிமை மீறல்கள் பற்றிய நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதே அது.

மனிதஉரிமை மீறல்கள் என்று பேசினால் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு கடுமையான கோபம் வந்து விடும். இங்கேயும் அது தான் நடந்திருக்கிறது.

இந்தியப்படைகள் இங்கிருந்த காலத்தில் செய்த மனிதஉரிமை மீறல்களையெல்லாம் மறந்து விட்டு- மனிதஉரிமை மீறல்கள் பற்றி விசாரிக்குமாறு கோரும் தகைமை இந்தியாவுக்கு உள்ளதா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவைதான் இந்தியாவுக்கு எதிரான உணர்வு –அல்லது இந்திய விரோதப்போக்கு கொழும்பில் தற்போது முளைவிடக் காரணம்.

இந்தியா தனது அணியை கொழும்புக்கு அனுப்பாமலேயே இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விட்டது. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?

இந்தியாவின் சொற்படி நடக்கலாம் அல்லது அதன் பேச்சை மீறிச் செயற்படலாம். இந்தியாவின் சொற்படி நடப்பதானால், அதற்காக அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு போன்ற சிக்கலான காரியங்களை நிறைவேற்றியாக வேண்டும். இதைச் செய்யப் போனால், பெரும் சிக்கலுக்குள் அரசாங்கம் மாட்டிக் கொள்ளும்.

என்ன தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசிக் கொண்டிருந்தாலும் அதிகாரப் பகிர்வுக்கு அரசு தயாராகி விட்டது என்று தெரியவந்தால் சிங்களத் தேசியவாதிகள் சும்மா இருக்கப் போவதில்லை.

எனவே அதை நிறைவேறுவதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டும். இல்லையேல் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பகைத்துக் கொண்டால், அதன் விளைவு ஐ.நா. வரை கூட இலங்கை அரசைக் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும். இதனால், இலங்கை அரசு மெல்ல மெல்ல சிங்களத் தேசியவாத சக்திகளை உசுப்பி விடத் தொடங்கலாம்.

இந்தியாவின் அழுத்தங்களை சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள், இந்தியாவுக்கு அடிபணிந்தால் நாட்டில் மீண்டும் கிளர்ச்சிகள் உருவாகும் என்றெல்லாம் ஒரு பிரமையை ஏற்படுத்த அரசாங்கம் முனையலாம்.

அதையெல்லாம் இந்தியா அவ்வளவு சுலபமாக நம்பி விடும் என்றும் கூற முடியாது. எனவே, இப்போது இந்தியாவுக்கு வளைந்து கொடுத்தாலும் சரி, அல்லது அதனுடன் முரண்பட்டாலும் சரி- இலங்கை அரசுக்கு அழுத்தங்களும் நெருக்கடிகளும் அதிகரிக்கப் போகிறதே தவிர குறையப் போவதில்லை.

இந்தியா கூறுவதைச் செய்தால் உள்நாட்டில் நெருக்கடிகள் வலுக்கும். இந்தியா கூறுவதைச் செய்யாது போனால் வெளிநாடுகளில் நெருக்கடிகள் வலுக்கும்.

உள்ளூர் பேயா- வெளியூர் பிசாசா? எதைத் தெரிவு செய்வதென்று தெரியாத நிலையில் தான் இலங்கை அரசாங்கம் சிக்கியுள்ளது. இந்தச் சிக்கலில் இருந்து இலங்கை அரசு அவ்வளவு சுலபமாக விடுபட்டு விட முடியாது. ஏனென்றால் இப்போது நிலைமைகள் கையை மீறிச் சென்று விட்டன.


  Comments - 0

  • ajan Thursday, 26 May 2011 06:50 PM

    நல்ல கட்டுரை .
    எல்லா புகழும் தருமன் அறிக்கைக்குகே (ஒன்றுமே இல்லை என்று லங்கா சொல்லும் அறிக்கை ) (அது தான் நானும் அதே பெயரில் சொல்லி இருக்கிறேன் ):P
    ஆகா மொத்தம் எதுவித அதிகார பகிர்வும் இல்லை. எதுவித தீர்வு திட்டமும் இல்லை . இது எங்களுக்கு எப்போதே தெரியும்.
    வெறுமனே பேச்சி என்று சொல்லி உலகை எம்மாத்த நடக்கும் வேலை தற்போது நடந்துகொண்டு இருக்கிறது ஆனால் பொய்,எமாத்து வேலை ரொம்ப நாளைக்கு நீடிக்காது.

    Reply : 0       0

    xlntgson Thursday, 26 May 2011 08:41 PM

    "நேரம் வந்த வேளை நெஞ்சை மறைத்த கோழை"
    பதின்மூன்றை இந்தியா வலியுறுத்தினால் அதற்கு மேலால் போக வேண்டுமென அடம் பிடிப்பது, ஆனால் தேசப்பற்று தேசிய இயக்கமும் காவி சங்கங்களும் 'ஒன்றும் தர இயலாது இப்போது அனுபவிக்கின்றீர்களே அதுவே அதிகம் என்று!'.
    வெட்கங்கெட்டு இருதரப்பாரும் எப்போதோ நடந்தவை என்று கூறிக்கொண்டு விசாரணை கமிஷன் கேட்பார்கள்!
    இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று தெரியவில்லை.
    தமிழகம் இந்தியா முழுமையும் பிரதிபலிக்கவில்லை. ஆட்சி மாற்றம் வந்தாலும் அவர்கள் ஒரு பக்கத்தை மட்டும் ஆதரிப்பார்கள் என்று என்ன நிச்சயம்?

    பதின்மூன்றை இந்தியா வலியுறுத்தினால் அதற்கு மேலால் போக வேண்டுமென அடம் பிடிப்பது, ஆனால் தேசப்பற்று தேசிய இயக்கமும் காவி சங்கங்களு...')">Reply : 0       0

    S.Yogi Saturday, 28 May 2011 12:30 AM

    உள்ளூர் பேயா? - வெளி ஊர் பிசாசா? நல்ல கேள்வி.
    எமக்கும் எழுந்தது இப்படி ஒரு பிரச்சனை, ராஜபக்ஷவா பொன்சேகாவா நாட்டை ஆளப்போகிறார்கள் என்று. இப்போது அது சிங்களவர்களுக்கும் வந்துள்ளது இந்தியாவால். தர்மம் நிச்சயம் வெல்லும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .