A.P.Mathan / 2011 மே 27 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாம்பு கடியினால் ஏற்படும் விஷத்தை போக்க வழங்கப்படும் மருந்தினால் ஏற்படும் ஒவ்வாமையை கட்டுப்படுத்துவதற்கு விலையில் குறைந்த, இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய 'அட்ரீனலின்' எனப்படும் மருந்து உகந்ததென இலங்கையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு குழு மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையை பொறுத்தமட்டில் பாம்புக் கடி பாரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகியுள்ளது. பிரதானமாக நாட்டின் உலர் வலயப் பகுதியில் அதிகளவானோர் பாம்புக் கடிக்கு உள்ளாகின்றனர். அதிலும் பெருமளவானோர் விவசாயிகளாவர். இந்த பாம்புக் கடிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் ஆயிரக் கணக்கில் அமைந்துள்ளது. விசேடமாக பருவபெயர்ச்சி மழை
காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கின்றது.
இந்த பாம்பு கடிக்கு மிகச் சிறந்த சிகிச்சை முறையாக விஷக்கட்டுப்படுத்தி (Anti Venom) வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாம்பு விஷத்தின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்காக இந்தியா மற்றும் ஏனைய அண்டை நாடுகளில் தயாரிக்கப்படும் விஷத் தடுப்பு மருந்து வகை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மருந்து வகைகளைக் கொண்டு விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் பொழுது பல்வேறு சிக்கல்களை மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் நோயாளிக்கு இந்த மருந்தின் மூலம் ஏற்படும் ஒவ்வாமையை குறிப்பிட முடியும். 'அனபிலக்சிஸ்' எனப்படும் கடும் ஒவ்வாமை
ஏற்படுவதால் நோயாளிக்கு கடும் வலி போன்ற பக்க விளைவுகள் சிகிச்சையின் போது ஏற்படுகிறது.
இந்த பாம்பு கடித்தலுக்கான சிகிச்சையின் போது ஏற்படும் கடும் ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையைச் சேர்ந்த ஆய்வுக்குழு பிறிதொரு சீராக்கியை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த ஆய்வை பேராசிரியர் அசித டி.சில்வா தலைமையில் சுமார் 3 ஆண்டுகள் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வில் இலங்கையின் முன்னணி அரச வைத்தியசாலைகளைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள், களனி பல்கலைக்கழகம், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மருத்துவ பரீட்சார்த்த பிரிவின் மருத்துவ ஆய்வாளர்கள் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் லிவர்பூல் கல்வியகத்தின் அயனமண்டலத்துக்கான ஆய்வாளர்களினதும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது சுமார் 1,000 பாம்பு தீண்டல்களுக்கு உள்ளானவர்கள் பரீட்சார்த்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் மூலம் வெளியான முடிவுகளின் படி, பாம்பு கடிக்கு விஷக்கட்டுப்படுத்தி (Anti Venom) சிகிச்சை முறையானது மிகச் சிறந்தது. ஆயினும் எமது நாட்டில் விற்பனையாகும் இந்த விஷக் கட்டுப்படுத்தியானது பாம்பு கடிக்கு உள்ளாகும் சுமார் 75 வீதமானவர்களிடையே ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதில் பெருமளவான வெளிப்பாடுகள் பாதிப்பு குறைவானதாகவே
காணப்படுகிறது. ஆயினும் இதில் சுமார் 40 வீதமானோருக்கு கடும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன் மூலம் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலையும் தோன்றலாம். இந்த கடும் ஒவ்வாமைக்கு 'அட்ரீனலின்' ஆனது அவசர மருத்துவ தீர்வாக பயன்படுத்த முடியும். அன்டிஹிஸ்டமின்ஸ் மற்றும் ஹைட்ரோகோர்டிசோன் போன்றவற்றை உள்ளெடுக்கவும் முடியும்.
இந்த முக்கியமான ஆய்வின் போது ஆய்வாளர்கள் மூன்று தடுப்புகளை பரிசோதித்திருந்தனர். அவையாவன அட்ரீனலின், புரோமெதசைன் மற்றும் ஹைட்ரோகோர்டிசோன் ஆகும். இதில் குறைந்தளவு செறிவில் தசையின் கீழே அட்ரீனலின் உள்ளெடுப்பது பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து அவுஸ்திரேலியாவின் நியுகாசில் பல்கலைக்கழகத்தின் நிபுணரான வைத்திய கலாநிதி ஜெஃப்ரி இஸ்பிஸ்டர் கருத்து தெரிவிக்கையில்...
'இலங்கையில் காணப்படும் பாம்பு கடிக்கான சிகிச்சை மருந்துகள் அதிகளவு பக்க விளைவுகளை கொண்டது. இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பெருமளவான சிகிச்சை மருந்துகள் குதிரையின் குருதி மூலம் தயாரிக்கப்படுகின்றன. இது மனித
உடலுக்கு சில சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆய்வின் மூலம் பெருமளவான விடயங்களை எம்மால் அறிந்து கொள்ள முடிந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் எமக்கு ஒவ்வாமையை போக்க அட்ரீனலின் வழங்கப்படுவது சிறந்தது எனும் முடிவுக்கு வரமுடியும்' என்றார்.
பாம்புக் கடியின் மூலம் குறிப்பிடத்தக்களவு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன. களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிறிதொரு ஆய்வுக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் வருடமொன்றுக்கு சுமார் 20,000 பேர் வரை பாம்பு தீண்டி உயிரிழப்பதாகவும், 421,000 பேர் வரை நஞ்சுத் தாக்கத்துக்கு உள்ளாவதும் அறிய வந்திருந்தது. இந்த
எண்ணிக்கை தெற்கு, தென்கிழக்கு மற்றும் உப சஹாரா ஆபிரிக்க நாடுகளிலும் அதிகமாக காணப்படுகிறது. இலங்கையை பொறுத்த மட்டில் கண்ணாடி வீரியன், நாகம், விரியன், இலங்கை விரியன், சுருட்டை விரியன், கடல் பாம்பு போன்றவற்றின் மூலம் அதிகளவு நஞ்சு மனிதனுக்கு கடத்தப்படுகிறது. இதில் 90 வீதமான உயிரிழப்புகள் மற்றும் நஞ்சேறல் முதல் மூன்று விதமான பாம்புகளின்
மூலமாக ஏற்படுகிறது. பாம்புக் கடியால் பாதிக்கப்படும் சுமார் 35,000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதில் பெருமளவானோருக்கு விஷக்கட்டுப்படுத்தி மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையை மேலும் மெருகேற்ற, வழங்கப்படும் விஷக்கட்டுப்படுத்தியின் தரத்தை உயர்த்துவது கட்டாயமானதாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் விஷக்கட்டுப்படுத்தி வழங்கப்படும் போது அதன் செயற்பாடு குறித்து வைத்திய அதிகாரி அவதானமாக தொடர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
.jpg)
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago