2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உறவுப்பாலமாய் பயணிக்கும் யாழ்தேவி

A.P.Mathan   / 2011 ஜூன் 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)


'பதினைந்து வயதான நான், இன்றுதான் முதற் தடவையாக புகையிரதத்தை பார்த்துள்ளேன். மிகவும் சந்தோஷமாகவுள்ளது. இதுவரை நான் கொழும்பு சென்றதில்லை. இந்த புகையிரத வண்டி மூலம் எனக்கு கொழும்பு போக ஆசை' இது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஓமந்தை பிரதேச சிறுமி ஒருவரின் குமுறுலாகும்.

கடந்த மே 27ஆம் திகதி ஓமந்தை புகையிர நிலைய திறப்பு விழாவிற்கு சென்றபோதே இச்சிறுமி கடந்த 15 வருடங்களாக புகையிரதத்தை பார்த்ததில்லை என்பது தெரியவந்தது.

தென் மாகாணத்திற்கும் வட மாகாணத்திற்குமான உறவுப் பாலமாக ஆரம்பிக்கப்பட்ட 'யாழ்தேவி' புகையிரத சேவை- 411 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் இடம்பெற்றது.

இந்த புகையிரத சேவையினூடாக தமிழர்கள், சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் பயணம் செய்தனர்.

கொழும்பில் தொழில்புரியும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களில் விடுமுறையை கழிப்பதற்காக இந்த புகையிரதத்தையே பயன்படுத்தினர்.

இதற்கு மேலதிகமாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு செல்வோரும் இந்த புகையிரதத்தின் மூலமே மதவாச்சி சென்றனர். பின்னர் அங்கிருந்து தலைமன்னார் சென்று இந்தியா செல்வது வழமை.

இவ்வாறான நிலையிலேயே, 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ்தேவி புகையிரதம் முறிகண்டியில் வைத்து ரெலோ இயக்கத்தினரின் கண்ணிவெடிக்கு இலக்காகியது.

இதனால் இராணுவ வீரர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

இதற்கு மேலதிகமாக புகையிரத திணைக்களத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.

இதனையடுத்து வட மாகாணத்திற்கான யாழ்தேவி புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை புகையிரத சேவை இடம்பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.

காங்கேசன்துறை வரையான இச்சேவை இடைநிறுத்தப்பட்ட காலப் பகுதியில் வட மாகாணத்தின் பல பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இக்காலப்பகுதியில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் புகையிர நிலையங்கள் என்பன தமிழீழ விடுதலை புலிகளினால் அவர்களின் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2009ஆம் ஆண்டு வட மாகாணத்தின் பல பகுதிகள் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட போது 'உதுரு வசந்தய' எனப்படும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்தேவி புகையிரத சேவையை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் 2009ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்தேவி புகையிர சேவை புனர்நிர்மாண பணிகள் இலங்கையிலுள்ள பல தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) ஓமந்தையை சென்றடைந்தது.

தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையினை இராணுவமும் ரயில்வே திணைக்களமும் இணைந்து புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

'இந்த புகையிரத சேவையினூடாக ஓமந்தையை இலகுவாக சென்றடைய முடிவதையிட்டு மகிழ்சியடைகிறோம். இச்சேவை மிக விரைவில் காங்கேசன்துறையை சென்றடைய வேண்டும்' என ஒமந்தையை சேர்ந்த கணேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, கைத்தொழில் முதலீட்டு அமைச்சினால் முதலீட்டு சபை திட்டத்தின் கீழ் ஒமந்தை பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளமையால், ஒமந்தை புகையிரத நிலையத்தில் பொருட்களை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் மேடை அமைக்குமாறு (boarding place) போக்குவரத்து அமைச்சரிடம் வவுனியா மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள இன்னும் பல இடங்களில் கைத்தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளமையால் செட்டிகுளம் மற்றும் பறையனாலங்குளம் ஆகிய இடங்களில் புகையிரத நிலையங்கள் அமைக்கும் போது பொருட்களை ஏற்றி இறக்க கூடிய மேடைகளையும் அமைத்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மேடை அமைக்கும் பட்சத்தில் வவுனியா மாவட்டத்தில் அமையவுள்ள கைத்தொழில் பேட்டைகளுக்கான பொருட்களை வெளியிடங்களிலிருந்து இலகுவான முறையில் கொண்டுவர முடியும் என தெரிவித்த வவுனியா மாவட்ட செயலாளர் இதன் மூலம் வவுனியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்யமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

'கொழும்பு – ஓமந்தை புகையிரத சேவையினூடாக அனைத்து இன மக்களும் மிக ஒற்றுமையாக பயணிக்கிறோம். சுமார் ஆறு மணித்தியால பயணத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடில்லாமல் ஒருவருக்கொருவர் பல விடயங்களை பகிர்ந்துகொள்கின்றோம்' என யாழ்தேவி புகையிரத்தில் பயணித்த சுபாஷ் குறிப்பிட்டார்.

இந்த யாழ்தேவி புகையிரத சேவை தினமும் கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நண்கபல் 12 மணியளவில் ஓமந்தையை சென்றடைகிறது. பின்னர் ஓமந்தையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடைகிறது.

இதேவேளை, யாழ்தேவி புகையிரத சேவை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காங்கேசன்துறையை சென்றடையும் என போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம - ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழாவில் தெரிவித்தார்.

இதற்கான கடனுதவியை இந்திய அரசு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கடன் திட்டத்தின் கீழ் ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரையான புகையிரத பாதை புனரமைப்பு நடவடிக்கையில் இந்திய கம்பனியான Rcon ஈடுபடவுள்ளது.

யாழ்தேவி புகையிரத சேவையின் இறுதி நிலையமான காங்கேசந்துறையை புகையிரதம் சென்றடைய இன்னும் 146 கிலோ மீற்றரே உள்ளது. இதற்கிடையில் சுமார் 15 புகையிரத நிலையங்களும் 11 உப புகையிரத நிலையங்களும் பல பாலங்களும் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன.

இந்நிலையில், எப்போது நாங்கள் யாழ்தேவி புகையிரதத்தின் ஊடாக காங்கேசந்துறையை சென்றடைவது? என்ற கேள்வி நாட்டு மக்களிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • sukkan Wednesday, 15 June 2011 08:39 AM

    ஒற்றுமையை புகையிரத்தால் உருவாக்க முடியாது.அனைவரும் சம உரிமையோடு வாழும்போதுதான் உருவாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .