2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல்!

A.P.Mathan   / 2011 ஜூன் 03 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

•    மப்றூக்

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது!

பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு – குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் என்கின்றது அரச தரப்பு!

சரி, தலைமைத்துவப் பயிற்சி என்றுதான் வைத்துக் கொள்வோம். அதைக் கொண்டுபோய் ஏன் இராணுவ முகாம்களில் வைக்க வேண்டும்? மாணவர்களை எங்காவதொரு பொது இடத்தில் தங்க வைத்து – அங்கு உரிய தரப்பினை அழைத்துப் பயிற்சியளித்தால் என்ன என்பது மற்றொரு தரப்பாரின் வாதமாகும்!

பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றார்கள். அவர்களிடம் சுத்தமில்லை, சீர்மை இல்லை, நேரகாலத்துடன் எழும்புவதில்லை, உடற்பயிற்சி செய்வதில்லை, இன்னும் சொன்னால் - அவர்களின் உடுப்புக்களையே அவர்களுக்குக் கழுவத் தெரியாது, தாய்மார்தான் துவைத்துக் கொடுக்கின்றனர். எனவே - இவ்வாறான குறைகளை அவர்களிடமிருந்து களைந்து – அவர்களை நேர்த்தியானவர்களாக ஆக்கி – பல்கலைக்கழகத்துக்குள் நுழைய வைப்பதற்காகவே இராணுவத்தினரை வைத்து இந்தத் - தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறுகின்றார்.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சியில் - மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குச் சொல்லிக் கொடுக்கவில்லை, குண்டுகள் வீசுவதற்குக் கற்றுக் கொடுக்கவில்லை, யுத்த டாங்கிகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து பயிற்சியளிக்கவில்லை. பிறகு எப்படி இதை இராணுவப் பயிற்சி என்று அழைக்க முடியும் என்று கேட்கிறார் அமைச்சர் திஸாநாயக்க!

உண்மையில் அமைச்சர் கேட்பது சரிதான். தற்போது பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 21 நாள் பயிற்சிப் பட்டறையில் எவ்விதமான ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்படவில்லைதான். ஆனாலும், மாணவர்களை இராணுவ முகாம்களுக்கு அழைத்து இந்தப் பயிற்சியினை வழங்குவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் இதை எதிர்ப்போர்!

மாணவர்களுக்கு இப்படியானதொரு பயிற்சி வழங்கப்படப் போவது குறித்து நாடும், ஊடகங்களும் உரத்த குரலில் விவாதித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், நமது முஸ்லிம் அரசியல்வாதிகளில் மிக அதிகமானோர் இது குறித்து விளையாட்டுக்கும் வாய்திறக்கவில்லை! சிலருக்கு இப்படியொரு பிரச்சினை நடப்பது பற்றியே தெரியாது! இவர்கள்தான் நமது பிரதிநிதிகள்!!

இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் - இது குறித்து பல்வேறு அச்சங்கள் காணப்பட்டன. உதாரணமாக, முஸ்லிம் மாணவர்களுக்கான ஹலால் உணவு, முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான ஆடை விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் எவ்வாறு அனுமதிக்கப்படும் என்கிற கேள்விகள் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக – நமது முஸ்லிம் அமைச்சர்களில் பலர் இவ்விடயம் குறித்து அலட்டிக் கொள்ளவேயில்லை!

எவ்வாறிருந்தபோதும், இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பயிற்சி முகாமில் மாணவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக சமயம், கலாசாரம் சார்ந்த பிரச்சினைகளை முகம்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அல்லது – பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் கிடைத்திருக்கின்றன.

உதாரணமாக, 'ரந்தம்பே' பயிற்சி முகாமில் - ஆரம்ப தினத்தன்று உடற்பயிற்சியின் போது அனைவரும் ஒரே வகையான 'ரி ஷேட்'களை அணிய வேண்டும் என பயிற்சியாளர்களால் கூறப்பட்டிருந்தது. ஆனால், முஸ்லிம் பெண் பிள்ளைகள் - தலை மற்றும் மார்பை மறைத்து 'ஸ்காஃப்' அணியாமல் வெறுமனே 'ரி ஷேட்'டை மட்டும் தம்மால் அணிந்து வர முடியாது எனத் தெரிவித்ததோடு, இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் பேசியிருக்கின்றனர். இறுதியில் முஸ்லிம் மாணவிகள் உடற்பயிற்சியின் போது 'ஸ்காஃப்' அணிந்து வர அனுமதி கிடைத்திருக்கிறது.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் தற்போதைய பயிற்சி நெறி தொடர்பில், ரந்தம்பே முகாமிலுள்ள மாணவர்களுடன் நாம் பேசினோம். இந்தப் பயிற்சி குறித்து அவர்கள் மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். இந்தப் பயிற்சியானது தமக்கு மிகவும் பிரயோசனமுள்ளதாய் அமைந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதேவேளை, தமக்கு எவ்விதமான ஆயுதம் சார்ந்த பயிற்சிகளும் அங்கு வழங்கப்படவில்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

அப்படியென்றால், இந்தப் பயிற்சியை ஏன் சிலர் எதிர்க்கின்றார்கள் என்று நீங்கள் கேட்கலாம்!

இதற்கு ஆகக் குறைந்தது மூன்று காரணங்கள் இருக்கின்றன.    

01) அரசாங்கத்தை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டும் என்கிற அரசியல் காரணம்.
02) இராணுவம் அல்லது இராணுவம் என்கிற பதம் தொடர்பான கசப்புணர்வு.

இவை இரண்டும் எதிர்ப்புத் தெரிவிப்போரின் நலன்சார் காரணங்களாகும்.

ஆனால் மூன்றாவது காரணம் நேர்மையானது, பொதுநலன் கருதியது. அதாவது, பயிற்சியை வழங்குங்கள் ஆனால், அதை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்து வழங்காதீர்கள் என்பதாகும்.

இது ஒருபுறமிருக்க, இவ்வாறான பயிற்சியினை அதிபர்களுக்கும் வழங்கப் போவதாக அரசாங்கம் கூறியிருப்பது எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது. அதிபர்களுக்கு இவ்வாறான பயிற்சியினை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு இப்போதே எதிர்ப்புக்களும் கிளம்பத் தொடங்கியுள்ளன.

மேற்படி தலைமைத்துவப் பயிற்சி குறித்து பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாகவே இருந்தனர் என்கிற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, முஸ்லிம் சமூகம் சார்ந்த பொது அமைப்புக்களில் அதிகமானவையும் மௌனமே காத்தன!

குறிப்பாக, முஸ்லிம்களின் மத விவகாரங்கள் தொடர்பில் - உயர் அமைப்பாகக் கருதப்படும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இது விடயத்தில் போதியளவு அக்கறை செலுத்தவில்லை என்பது பலரினதும் குற்றச்சாட்டாகும். மேற்படி தலைமைத்துவப் பயிற்சியை வழங்கப் போவதாக, பல மாதங்கள் பேசப்பட்டு வந்தபோதிலும், பயிற்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முந்தைய தினங்களிலேயே இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சில நகர்வுகளை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள்குழு அறிக்கை வெளியான சூடு ஆறுவதற்குள் அதை எதிர்த்து - ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி அறிக்கை விடத் தெரிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினருக்கு - மேற்படி தலைமைத்துவப் பயிற்சியின் போது, முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளலாம் என அஞ்சப்பட்டிருந்த விடயங்கள் குறித்து ஏன் உயர்கல்வி அமைச்சருடனோ, அரச உயர்மட்டத்தாருடனோ துவக்க காலத்திலேயே - பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியவில்லை என்று மக்கள் கேட்கின்றனர்!
இது இப்படியிருக்க, தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் 21 நாட்களைக் கொண்ட பயிற்சிக் காலம் போதாது என்றும், அடுத்த வருடத்தில் இந்தப் பயிற்சிக் காலத்தை மூன்று மாதங்களாக அதிகரிக்கப் போவதாகவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்திருக்கின்றார்.

இந்தப் பயிற்சி நெறியே தேவையில்லை என்கிறதொரு இழுபறி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், பயிற்சிக் காலத்தை அதிகரிக்கும் தன்னுடைய திட்டம் குறித்து அமைச்சர் எஸ்.பி. முந்திரிக் கொட்டைத்தனமாக இப்போது பேசியிருக்கத் தேவையில்லை என்பது பொதுவானதோர் கருத்தாகும்!

அண்மைக் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்க, 'காக்கியுடை அணிந்த - இரக்கமற்றதொரு சப்பாத்துக்காரனின்' மனநிலையோடு நடந்து கொள்வதாக பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே 'ஆரோக்கியமாக' அமையும்!

குறுகிய காலமொன்றினுள் உயர் கல்வி அமைச்சரொருவர் பல்கலைக்கழக மாணவர்களுடன் இந்தளவு முரண்பட்டதும், இத்தனை எதிர்ப்புக்களைச் சம்பாதித்துக் கொண்டதும் ஆச்சரியம்தான்! சில வாரங்களுக்கு முன்னர் 'நன்றியுள்ள பிராணி'யின் மேல் - அமைச்சரின் பெயரைக் குறிக்கும் எழுத்துக்களை மாணவர்கள் எழுதி – குறித்ததொரு பல்கலைக்கழகச் சுற்றுப்புறச் சூழல்களில் உலாவ விட்டமையானது அமைச்சருக்கும் - பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையிலான மோதலின் உச்சகட்ட விளைவாகும்!
இந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் தலைமைத்துவப் பயிற்சி நெறிக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் அனைத்தினையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மீயுயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது.

அப்படியென்றால், இனியும் மேற்படி தலைமைத்துவப் பயிற்சியினை எதிர்த்துக் கொண்டு சட்டம் பேசிக் கொண்டிருக்க முடியாது. இதை வேறுவகையில்தான் அணுக வேண்டியிருக்கிறது. உண்மையாகவே மாணவர்களுக்குப் பயனுள்ளதும், பயிற்சியினைப் பெறுகின்ற மாணவர்களே சிலாகிக்கின்றதுமான ஒரு பயிற்சி நெறியினை - நாம் ஏன் வம்புக்கு எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்கின்றார் - பயிற்சி முகாமிலுள்ள மாணவரொருவரின் தந்தை ஒருவர்!

சரியாகச் சொன்னால், மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளில் பிரச்சினையே இல்லை. அதை நடைமுறைப்படுத்தும் விதத்தில்தான் சிக்கல்கள் இருக்கின்றன.

அரிவரியிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பாடசாலைகளில் கற்கும் போது, மாணவர்களுக்கு அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள சுத்தம், சீருமை, ஒழுக்கம் சார்ந்த விடயங்களை கற்றுக் கொடுத்திருந்தால், இந்தப் பயிற்சி முகாம்களின் தேவை இருந்திருக்காதல்லவா?

அப்படியென்றால் குறைபாடு எங்கேயிருக்கின்றது என்பது குறித்து - நமது அமைச்சர்களும், கல்விசார் உயர் மட்டத்தினரும் கூடியிருந்து கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

சிறப்பானதொரு கல்வித் திட்டம் நம்மிடம் இல்லை என்பதன் எதிர் விளைவுகள்தான் இவை எல்லாமே என்று - நான் கூறினால், அதை உங்களில் எத்தனை பேர் மறுக்கப் போகிறீர்கள்!!


  Comments - 0

  • MANMATHAN Saturday, 04 June 2011 07:24 AM

    இதை இந்த ஊத்தை அரசியல் வாதிகளுக்கு கொடுங்க...

    Reply : 0       0

    mam.fowz Saturday, 04 June 2011 10:08 AM

    செய்தி ஆசிரியர் அவருக்கு... எமது மனப்பபூர்வ வாழ்த்துக்கள், இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    Thowfeek Khan Saturday, 04 June 2011 04:45 PM

    AumsA முன்கூட்டியே அமைச்சரை உலமா சபையுடன் சென்று சந்தித்து இது சம்பந்தமாக கலந்துரையாடியது. இதற்கு ரவூப் ஹக்கீம் சில ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    Reply : 0       0

    ruthrar Saturday, 04 June 2011 05:18 PM

    உங்களது கருத்துக்களில் நியாயம் இருக்கின்றது. உண்மையில் இவ்வாறான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்பொழுதே அவர்கள் தமது ஒழுக்கநெறியை சிறப்பாக கடைப்பிடித்து செல்வார்கள். ஆனால் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும் இடம் ஒரு சிக்கலுக்குரியது என்ற கருத்தை மறுக்கமுடியாது.

    பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த பயிற்சிகள் மக்களின் பிரதிநிதிகளுக்கும் வழங்கினால் அவர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட கொஞ்சமேனும் முயல்வார்கள் என்று நினைக்கின்றேன். இப்போதைய சூழ்நிலையில் அவர்களுக்குத்தான் இவ்வாறான பயிற்சிகள் அவசியப்படுகின்றது. இருக்கையில் அமர்ந்து அமரந்தே வயிற்றை வளர்த்துக்கொண்ட இவர்கள் ஒழுக்கத்தை பற்றியும் நேர்மையை பற்றியும் சிந்திப்பதற்கு திணறுகிறார்கள். இவர்களுக்கு இராணுவத்தின் கடுமையான பயிற்சியை வழங்கினால் கொஞ்மேனும் திருந்துவதற்கு வாயப்புகள் உண்டு. அதைவிடய இவர்களுக்கு உடலுக்கு வழங்கிய உடற்பயிற்சியாகவும் அது இருக்கும்.

    Reply : 0       0

    Dr. I.M. Javahir Saturday, 04 June 2011 05:57 PM

    இப்பயிற்சி நெறியினை இராணுவ முகாம்களில் வைத்து வழங்குவது மிக பொருத்தமானதாகும். உடற்பயிர்ற்சியும் ஒழுக்க நெறிகளும் போதிக்கப்படுவதற்கு என்றே அமையப்பெற்றுள்ள இராணுவ முகாம்களைவிட வேறு பொருத்தமான இடங்கள் எங்கே உண்டு? இதனால் பெரும் தொகையான பணத்தை அரசு மீதப்படுத்திக்கொள்ள முடியும்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 04 June 2011 10:23 PM

    ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்து...
    தும்பை விட்டு விட்டு வாலைப்பிடித்து...
    இதற்கெல்லாம் 'படிமம்' எதற்கு?
    அது இது உது

    Reply : 0       0

    Anniyan SEUSL Sunday, 05 June 2011 04:11 AM

    பாவம் அமைச்சர் தென்கிழக்கில் வந்து அவமானப்பட்டுட்டார்.

    Reply : 0       0

    MOHAMED ILYAS AHAMED IRFAN_Akkaraipattu Monday, 06 June 2011 04:12 AM

    காலத்துக்கு ஏற்ற ஒரு விமர்சன ஆக்கம் தந்ததுக்கு முதலில் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கிறேன் . முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை விமர்சித்தல் ஒரு வகையில் ஏற்றுப்பட்டாலும் கூட அகில இலங்கை ஜமாத்தே உலமாவே விமர்சித்தது ஏற்றுகொள்ளமுடியது என்பதே எனது தனிப்பட்ட ஆதங்கமாகும். ஏனெனில் குறிப்பிடபட்ட விடயம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சை அணுகி எழு விடயங்கள் கலந்தாலோசித்த பின்னரே எதோ தங்களால் குறிப்பிட்டளவாது முஸ்லிம் பெண்கள் மார்க்க வரையறுக்குள் உள்ளார்கள் என்பதே எனது நிலைப்பாடாகும்.

    Reply : 0       0

    rinas Wednesday, 08 June 2011 12:25 PM

    அஸ்ஸலாமு அழைக்கும் ,

    எழுத்தாளர் அவர்களுக்கு நன்றி, இப்படிப்பட்ட நல்ல ஆக்கபூர்வமான கட்டுரையை தந்ததற்கு ,

    இது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என எழுத்தாளர் குறிப்பிடிருக்கிறார். ஆனால் ஒரு வாதத்திற்கு அவர்கள் அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றுதான் குறிப்பிடிருக்கிரர்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட முதலில் (அவர்கள் முஸ்லிம் பெண்கள்) தலைமைத்துவ பயிற்சி தேவை இல்லை என்று சொல்லவரவில்லை இஸ்லாமிய கட்டுபாடுகளும் அவசியம் .

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க இதை பத்தியே தெரியாத நாம் நமது வாக்குகளால் தேர்ந்தெடுத்த எங்களதுமக்கள் பிரதிநிதிகள் நமது சமூகமும் நமது தலைமைகளும் எங்கே போய்கொன்டிருகிறது???????? சிந்திபதட்கு நேரமே இல்லை தேர்தல் வந்தால் காசுகளை கொடுத்து மக்கள் வாயையும் சில ஊடகங்களின் வாயையும் அடைத்து வெற்றிபெற்று விஎங்கே பொய் சொல்ல??????????????????????????

    Reply : 0       0

    hari Saturday, 11 June 2011 06:39 PM

    கட்டுரை ஆசிரியருக்கு நன்றி . இன்னுமொரு விடயத்தை மறக்கிறீர்கள். நான்கு வருடத்தில் பல்கலைக்கழகம் கொடுக்கும் தலைமைத்துவ பயிற்சியாலோ அல்லது அங்குள்ள கல்விமான்களால் முடியாததை 21 நாட்களில் வழங்கி அவர்களை நாகரீகமானவர்களாக மாற்றி இருக்கிகிறோம் என தம்பட்டமடிப்பது கல்விமாகளை அவமதிப்பதாக அமையாதா? அடுத்தது சிறிய ஒரு விடயத்துக்காக தம்பட்டமடிக்கும் இன்றைய அரசியலில் அமைதியாக செய்யும் கருமம் எடுபடாது. இன்று சிறுபான்மையினர சில விடயங்களை அமைதியாகத்தான் அணுக வேண்டும். உரிமைப் பிரச்சினயாகக் கூடாது.

    Reply : 0       0

    Nowsad Monday, 27 June 2011 05:35 PM

    எழுத்தாளர் அவர்களுக்கு,
    மாணவர்களுக்கான சுத்தம், நேரம் பேணுதல் போன்றவற்றை பாடசாலைகளில் கற்பிப்பது தொடர்பாக குறை கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் அவற்றை பெற்றோர்கள் வீட்டில் கற்றுக் கொடுக்க வேண்டிய அடிப்படை விடயம் என்பதை தாங்கள் அறிய வேண்டும். வாதத்திற்காக எல்லோரையும் குறை கூறுவது பொருத்தமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .