Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
• மப்றூக்
நாட்டில் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பாடசாலைகள் - எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையிலும் கூட இயங்கி வருகின்றமை பற்றியும், அந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளிலும், மட்டங்களிலும் சாதனைகள் பதித்து வருகின்றமை பற்றியும் நாம் அறிவோம்!
இன்னும் சொன்னால், சில பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இல்லாத நிலையில், மாணவர்கள் மரங்களின் கீழ் - மண் தரையில் அமர்ந்து தமது கல்வியை இன்றளவும் தொடர்ந்து வருகின்றமை குறித்தும் நாம் பார்த்துள்ளோம் அல்லது கேள்வியுற்றுள்ளோம்!
இவைகளுக்கு மாறாக - குறித்துச் சொல்லத்தக்க வளங்கள் இருந்தும், மாணவர்கள் வருகையின்மையால் ஒரு பாடசாலை உறைந்து போய்க் கிடக்கின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
நம்பியே ஆக வேண்டும்!
அந்தப் பாடசாலையின் பெயர் – அம்பாறை தமிழ் மகாவித்தியாலயம்! அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை கல்வி வலயத்திலுள்ள ஒரேயொரு தமிழ் மொழிப் பாடசாலை இதுவாகும். அம்பாறை நகரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில், அம்பாறை - உகணை வீதியில் அமைந்துள்ள இந்தப் பாடசாலையானது – சுமார் 60 வருட வரலாற்றினைக் கொண்டதாகும்!
1952ஆம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து 11 வரை வகுப்புகள் உள்ளன. ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் - இந்தப் பாடசாலையில் கற்பதற்கு மாணவர் ஒருவர் கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக இயங்கி வந்தது இந்தப் பாடசாலை! ஆனால், 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட இன முரண்பாட்டின் பின்னர் மாணவர் வரவில் வீழ்ச்சியேற்படத் தொடங்கியது. 1990ஆம் ஆண்டு வரையிலும் இந்தப் பாடசாலையின் அண்மைச் சூழலில் வசித்து வந்த மாணவர்களின் குடும்பங்கள் அம்பாறையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புதிய வளத்தாப்பிட்டி எனும் கிராமத்துக்கு இடம்பெயர்ந்தமையே – மாணவர் வரவு வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், மாணவர் வருகையை உயர்த்தும் நோக்குடன் சில காலங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற மாணவர்கள் வசித்து வரும் புதிய வளத்தாப்பிட்டியிலிருந்து அம்பாறை நகர் வரையும் விசேட போக்குவரத்துச் சேவையொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், சில சிக்கல் காரணமாக குறித்த போக்குவரத்து வசதி சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.
கடைசியாக 2009ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் - இந்த அம்பாறை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களின் வருகையும் நின்று போனது! பாடசாலையில் பெற்றுக் கொண்ட தகவல்களின்படி இறுதியாக 27 மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, மாணவர்கள் இல்லாத போதும், பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்கள் நால்வரும் இன்று வரை வேலை நாட்களில் தினமும் பாடசாலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளியிடங்களைச் சேரந்தவர்கள். மேலும், ஆசிரியர்களில் இருவர் பெண்களாவர்.
மாணவர்கள் எவருமில்லாத நிலையில், தினமும் பல மைல் தூரம் பயணம் செய்து இந்தப் பாடசாலைக்கு - தாம் வெறுமனே வந்து போகின்றமை குறித்து இங்குள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்கள் விரக்தி தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வேறு பாடசாலைகளுக்கு தாம் இடமாற்றம் கோரியும் இதுவரை தமக்கு இடமாற்றங்கள் எவையும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களற்ற இவ்வாறானதொரு பாடசாலையில் தாம் இருப்பதால் தமக்கான சம்பள உயர்ச்சிப்படியும் வழங்கப்படுவதில்லை எனவும் இங்குள்ள ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மேலும், இவ்வாறு வெறுமனே இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தப் பாடசாலைக்கு வந்து போவதால் தமது கற்பிக்கும் திறன் தேக்கமடையும் அபாயம் உள்ளதாகவும் இங்குள்ள ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மட்டுமன்றி, இவ்வாறானதொரு பாடசாலையில் தாம் இருப்பதால் ஆசிரியர்களுக்கான கல்விக் கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறை போன்றவைகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் தமக்குக் கிடைப்பதில்லை எனவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவே நாம் அதிகம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் - இங்கு மாணவர்கள் இன்மையால் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அம்பாறை கல்வி வயத்திலுள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான அம்பாறை தமிழ் மகாவித்தியாலயத்துக்கு மாணவர்களைக் கொண்டு வருவதனூடாக இந்தப் பாடசாலையினை மீண்டும் இயங்க வைக்க முடியும் என நம்பப்படுகிறது.
இதேவேளை, குறித்த பாடசாலையில் இருந்து மாணவர்கள் ஏன் திடீரென வருகை தராமல் போனார்கள் என்பதையும், அதற்கான காரணத்தினையும் அறிந்து கொள்ளும் பொருட்டும், மீண்டும் இந்தப் பாடசாலையினை நோக்கி மாணவர்களை வர வைப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்தப் பாடசாலையிலிருந்து இடை விலகிய மாணவர்கள் சிலரை புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் சந்தித்து கேட்டோம்!
போக்குவரத்து வசதியின்மையே – தாம் இடை விலகுவதற்குப் பிரதான காரணம் என்று நாம் சந்தித்த மாணவர்களில் அதிகமானோர் கூறினார்கள்!
அம்பாறை கல்வி வலயத்திலுள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையானது மூடப்படும் ஆபத்தான நிலையில் உள்ளமை குறித்து இதுவரை - இந்த மாவட்டத்தினைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஏன் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை? அவ்வாறு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் ஏன் இந்தப் பாடசாலையானது இன்னும் உறைநிலையில் இருக்கின்றது? என்கின்ற கேள்விகளுக்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பதிலளித்தே ஆகவேண்டும்.
மாணவர்கள் இல்லாமல் உறைந்து போய்க் கிடக்கும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் மீண்டும் இயங்குமா? மாணவர்களில்லாத பாடசாலையொன்றில் இருந்து கொண்டு தமது எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு விடிவு கிட்டுமா?
இவ்வாறான கேள்விகளுக்கு சிறந்த நடவடிக்கைளினூடாக தீர்வு வழங்க வேண்டியவர்களின் கண்களில் அம்பாறை தமிழ் மகாவித்தியாலயம் இதுவரை படவேயில்லை என்பது ஆச்சரியமாக இல்லையா??!!
manithan Monday, 05 September 2011 07:51 PM
ஐயோ பாவம். இந்தப் பாடசாலையின் இன்றைய நிலையைக் கருத்திற் கொண்டு, அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply : 0 0
reemco Monday, 05 September 2011 08:51 PM
தமிழ் பேசும் மக்கள் அம்பாறையில் வசித்தார்கள் என்பதற்கான ஒரு அத்தாட்சியே இந்தப் பள்ளிக்கூடம். இது இத்தனை ஆண்டுகளாக தமிழ் வித்தியாலயம் என்றே பேரில் இருந்து வந்ததே பெரிய விடயம்.
உரிய அதிகாரிகள் தயவு செய்து கவனமெடுத்து சிங்கள வித்தியாலயமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவும்.
Reply : 0 0
meenavan Monday, 05 September 2011 10:23 PM
இந்த பாடசாலையை சூழ வாழ்ந்த மக்களை மீள குடியமர்த்தி, பாடசாலையை இயங்க வைக்க முயற்சி செய்யலாமே? பேரினவாதிகளின் ஒத்துழைப்பு எந்தளவு சாத்தியப்படும்? இவற்றை உரியவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
Reply : 0 0
ROSHAN Tuesday, 06 September 2011 06:18 PM
கியலா வேடாக்ன பேசாமல் சிங்கள பாடசாலையாக மாற்றி விடுங்கள் ..இதுதான் சிங்களத்தின் ஆசை.....
Reply : 0 0
Prabha Thursday, 08 September 2011 08:52 AM
அதிபரையும் ஆசிரியர்களையும் பேசாமல் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்...... கொஞ்ச நாளில் நல்ல "மாட்டுக் கொட்டகையாக" தன்னால் மாறி விடும்!
Reply : 0 0
mansoorcader Thursday, 08 September 2011 09:41 PM
நன்றி மப்ரூக். இப்படி ஓர் பாடசாலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததற்கு. எனது முதலாவது நியமனமும் 1982 இல் இப்படசாலையே. அப்போது அதிகமான ஆசிரியர்களும் மாணவர்களும் காணப்பட்டனர். கலோய திட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் பிள்ளைகள் இந்தப் இப்பாடசாலையில் கற்றனர். அப்போதுகூட சி ஈ பீ முதலிய நிறுவனங்களுக்கான தேவைகள் என்ற போர்வையில் இப்பாடசாலையின் நிலத்துண்டுகள் சுவீகரிக்கப்பட்டன. 1983 இனக்கலவரத்தின் பின்னர் தீவிர புறக்கணிப்பும் அபகரிப்பும்.
Reply : 0 0
reshpi Tuesday, 13 September 2011 06:20 AM
ithukum oru makintha sithanai?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago