Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. சஞ்சயன்)
ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக - அதன் பின்னரான விவகாரங்களை மையப்படுத்தியே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரசில் கடந்த 5ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்த மார்ச் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படுவதாகவே இருந்தது.
ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இருந்ததால், இந்த அறிக்கை கையளிப்பு ஒருமாதம் தாமதமாகியது.
ஸ்டீபன் ராப் சமர்ப்பித்த அறிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் ஒப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, நல்லிணக்க ஆணைக்குழு பதிலளிக்கத் தவறிய விடயங்கள் குறித்து இந்த அறிக்கை விலாவாரியாக ஆராய்ந்துள்ளது.
இந்த அறிக்கையின் பிரதான அம்சம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள- நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக, சுதந்திரமான – வெளிப்படையான - நடுநிலையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டது, போர் தவிர்ப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டது, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், மனிதாபிமான உதவி வழங்கல், கட்டாயமாக காணாமற்போன சம்பவங்கள், கைது மற்றும் தடுத்து வைத்தல் கொள்கைகள் உள்ளிட்ட- நல்லிணக்க ஆணைக்குழு பதிலளிக்கத் தவறிய, நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவ வேண்டும்.
விசாரணைகள் அனைத்தும் சுதந்திரமானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கும் விதத்திலும், முக்கியமாக அரச தலையீடற்ற வகையிலும் இடம்பெற வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் தனியொரு தரப்பின் மீறல்கள் பற்றி விசாரிக்க அழுத்தம் கொடுக்கப்படவேயில்லை.
இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கலும் நல்லிணக்கத்துக்கு மிகவும் முக்கியமானவை என்றே இந்த அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய எந்தக் குறிப்புமே இடம்பெறவில்லை.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும், அவ்வப்போது ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடும் அறிக்கையிலும் தான் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் அளவுக்கு இன்னும் போகவில்லை.
நம்பகமான- நடுநிலையான - சுதந்திரமான விசாரணையைத் தான் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதையிட்டு அரசாங்கம் ஆறுதல் கொள்ளலாம்.
அதேவேளை, ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பது தெளிவாகவே தெரிகிறது.
முன்னதாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும் அமெரிக்கா இதை அடிக்கடி வலியுறுத்தி வந்தது.
ஆனால், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் பல குற்றசாட்டுகளை நல்லிணக்க ஆணைக்குழு தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
அதில் முக்கியமான ஒன்று தான் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்.
அதுபற்றியும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஸ்டீபன் ராப்பின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சங்கடமானதொரு விடயமாகவே இருக்கும்.
இதுபோல, விடுபட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணையையும் அதன் மீதான நடவடிக்கையையும் அமெரிக்கா எதிர்பார்ப்பது தெளிவாகவே தெரிகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்த அறிக்கை, சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தாமல் போனது தமிழர் தரப்பில் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஏனென்றால் உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் நம்பகமான விசாரணைகளுக்கோ சுதந்திரமான விசாரணைகளுக்கோ வாய்ப்பில்லை என்று அவர்கள் வலுவாக நம்புகிறார்கள்.
இது காலம் காலமாக ஏமாற்றப்பட்டதால், தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனம் என்பதில் சந்தேகமில்லை.
எல்லா விதங்களிலும் ஏமாற்றப்பட்டதாலேயே தமிழர்கள் இன்று உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இது அமெரிக்காவுக்குத் தெரியாத விடயமில்லை.
அதேவேளை அரச தலையீடு இல்லாத, நம்பகமான, சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்கின்ற சூழல் தற்போது இலங்கையில் இல்லை என்பதை அமெரிக்கா அறியாதிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் காலத்தின் கட்டாயம் காரணமாக அடுத்த கட்டத்துக்கு அமெரிக்கா இன்னும் போகவில்லை. அதாவது சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்று இப்போது இறங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.
அது தனது முயற்சிகளை தோல்விக்குள்ளாகி விடக் கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உள்ளது. ஏனென்றால், ஐ.நா பாதுகாப்புச் சபையின் மூலம் மட்டும் தான் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க முடியும். அதற்கு இப்போது வழியில்லை.
காரணம் இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் சீனாவும் ரஷ்யாவும் தயாராக உள்ளன.
இவற்றின் வீட்டோ அதிகாரத்தில் இருந்து தப்பி ஒரு சுதந்திரப் பொறிமுறையை உருவாக்க முடியாது.
அத்தகையதொரு முயற்சியில் இறங்கினால், அது பல்வேறுபட்ட நெருக்கடியை அமெரிக்காவுக்குக் கொடுக்கும்.
இப்போதும் அமெரிக்கா சிரியா விவகாரத்தில் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
எனவே பாதுகாப்புச் சபையின் ஒப்புதலுடன், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் முயற்சிகளில் இறங்குவதற்கு அமெரிக்கா இப்போது தயாராக இல்லை.
நோர்வே நாடாளுமன்றத்தில் ஜெனிவா தீர்மானத்தை அடிப்படையாக வைத்து, இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான றோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல முடியாது. என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஐ.நா பாதுகாப்புச்சபையின் அனுமதியின்றி சர்வதேச விசாரணைக் குழுவை நியமிக்கவும் முடியாத நிலை உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அவர் கூற வந்த முக்கிய விடயம், இப்போதைய சூழ்நிலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை சாத்தியமில்லை என்பதையேயாகும்.
இது நோர்வேக்கு தெரிந்தளவுக்கு அமெரிக்காவுக்குத் தெரியாதது அல்ல. அதனால் தற்போதைக்கு போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்லும் நகர்வுகளில் அது இறங்கவில்லை.
அதற்காக, போர்குற்றங்களை விசாரிக்கும் சர்வதேசப் பொறிமுறையை ஒரு தெரிவாக அமெரிக்கா எடுத்துக் கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
இப்போதைக்கு அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு அல்லது ஒரு நம்பகமான - நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்கே இந்த அறிக்கை. இதை அமெரிக்காவின் ஒரு முன்னெச்சரிக்கை என்றும் சொல்லலாம்.
ஜெனிவா தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளதும் முக்கியமானது.
இந்தநிலையில், அமெரிக்காவின நிலைப்பாடு நல்லிணக்க ஆணைக்குழு பதிளிக்காத விடயங்கள் குறித்தும், அதன் பரிந்துரைகள் குறித்தும் விசாரிக்கும் உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதாகவே உள்ளது.
அதுவும், முக்கியமான சிக்கல் என்னவெனில், அரச தலையீடு இல்லாத - நம்பகமானதாக- சுதந்திரமானதாக இருக்க வேண்டும்.
இதுவெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது சந்தேகம் தான்.
ஜெனிவா தீர்மானத்தையே நிராகரித்த அரசாங்கம் அமெரிக்காவின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு இன்னொரு உள்ளகப் பொறிமுறையை அமைத்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்க முடியவில்லை.
அதேவேளை, அமெரிக்காவின் இந்த உள்ளகப் பொறிமுறை பற்றிய கோரிக்கையை அரசாங்கம் புறமொதுக்கி விட முடியாது.
இந்தநிலையில், நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, அரச தலைவர்களையும் மற்றும் இராணுவ அதிகாரிகளையும், சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல அமெரிக்கா முனைவதாக அரசாங்கம் கூறிவந்த குற்றச்சாட்டு பொய்யாகியுள்ளது.
அரசதரப்பிலுள்ள அமைச்சர்களும் ஜனாதிபதியும் கூட இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமுறை கூறியிருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் அறிக்கையில், சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிய அழுத்தம் கொடுக்கப்படாதது, அரசின் இந்தப் பிரசாரங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சொல்வவதைப் போன்ற உள்ளகப் பொறிமுறையையும் அரசாங்கம் ஏற்கத் தயாரில்லை, அதேவேளை, சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கும் இணங்கப் போவதில்லை.
இந்நிலையில்தான் தான் அமெரிக்கா மெல்ல மெல்ல வியூகங்களை வகுக்கிறது. இதற்குள் அரசாங்கத்தின் பிரசார வியூகம் உடைந்து போகிறது. இனி அரசாங்க தரப்பு சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல முனைவதாக குற்றம்சாட்ட முடியாது.
அமெரிக்காவை அடிக்க அரசாங்கம் இனி புதிய ஆயுதம் ஒன்றை கையில் எடுக்க வேண்டும்.
jeyarajah Tuesday, 10 April 2012 11:51 AM
@சஞ்ஜயன், சீனாவையும், ரஸ்யாவையும் மஹிந்த துணைக்கு பிடித்ததே எமது வெற்றியின் ஆரம்பம். எமது விடயத்தில் உலகம் இரண்டுபடுகின்றது. மஹிந்த இங்கிருக்கும் கட்சிகளை மட்டும் இல்லை உலகையே இரண்டாக பிரித்து விட்டார். இனி ஆசியாக் கண்டம் அமெரிக்கன் கண்களில். வாழ்க மஹிந்த.
Reply : 0 0
neethan Tuesday, 10 April 2012 04:27 PM
அமெரிக்காவின் இலங்கை மீதான நீண்ட கால திட்டத்தின் செயல்ப்பாட்டினை, அமுல்நடாத்த கிடைத்த துரும்பாக ஜெனீவா தீர்மானம் அமைந்துள்ளது. அரசின் மாற்று வழிக்கு காலம் பதில் கூறும்.
Reply : 0 0
sinnan Wednesday, 11 April 2012 12:35 AM
காலம்தான் பதிலளிக்க முடியும் .
யார் ஒருவர் நினைத்த படியும் எதுவும் நடப்பதில்லை.
எல்லோரும் வாழ நினைப்போம்.
Reply : 0 0
jeyarajah Wednesday, 11 April 2012 12:38 PM
Hi Mr Sinnan, நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வதே நன்று. நாம் குளியாமல் இருந்தால் காலம் எமக்கு ஊத்தை உருட்டுமா?
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?
சின்னான் அவர்களே விதியை மறந்து மதியை வளர்த்து ஞானம் அடைவதே வாழ்வின் நோக்கம்.
Reply : 0 0
ashraff Saturday, 14 April 2012 09:04 PM
ஊரும் (உலகும்) இரண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசந்தானே.
Reply : 0 0
ashraff Saturday, 14 April 2012 09:20 PM
மிஸ்டர் ஜெயராஜா! விதியை மதியால் வெல்லமுடியும் என்றால், மரண விதியை உம்மால் வெல்ல முடியுமா? கையால் விதியை வெல்ல நினைப்பது சாதுர்யம் என்றால் வரலாற்றுப் பாடங்களை என்னவென்பது.?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago