2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழினத் தலைவர் யார்; முதல்வர் ஜெயலலிதா வகுத்த அதிரடி வியூகம்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் "யார் தமிழின தலைவர்" என்ற போட்டி கடுமையாக நடக்கிறது. ஒவ்வொரு முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதும், "இது தமிழர்களுக்கு எதிரான ஆட்சி" என்று தி.மு.க. தலைவர் பிரசாரம் மேற்கொள்வார். இதை "தமிழுக்காக பணிகளை மேற்கொண்டது நான்தான்" என்று முதல்வர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா அறிவிப்பார். அதுவும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வரின் நடவடிக்கையில் அதிரடியான மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அத்தமிழருக்காக ஆதரவு கொடுக்கும் தமிழக அமைப்புகளே முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி போஸ்டர் போடுகின்றன. இந்நிலையில் இப்போது தமிழர்களின் புத்தாண்டு சித்திரையா? தை மாதமா? என்ற பட்டிமன்றத்தில் தமிழகத்தில் உள்ள இரு அணிகளின் பட்டிமன்றத் தலைவர்களாக இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் வாதம் செய்து வருகிறார்கள்.

சித்திரைதான் தமிழர்களின் புத்தாண்டு என்பதை அறிவித்த தமிழக முதல்வர் அந்த விழாவில் பல தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். குறிப்பாக மதுரை தமிழ் சங்கத்திற்கு தமிழ்தாய் விருதை வழங்கி சிறப்பித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "அரசியலில் தந்திரம் செய்பவர்கள் தமிழுக்கு தொண்டு செய்வது போல் காட்டிக் கொள்கிறார்கள்" என்று குட்டிக்கதை ஒன்று சொல்லி விளாசித் தள்ளினார். இது இப்போதல்ல! ஆட்சியில் அமரும் முன்பு இலங்கை பிரச்சினையின் உச்சத்திலேயே தி.மு.க. தலைவர் கருணாநிதியை "தமிழினத்திற்கு எதிராக செயல்படுபவர்" என்பதை பல கட்டங்களில் அடித்துச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமின்றி ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை பிரச்சினையில் அவ்வப்போது அவர் எடுத்த நடவடிக்கைகள் அத்தமிழருக்காக ஆதரவு தெரிவித்து வரும் அமைப்புகளின் பாராட்டுதலைப் பெற்றது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா - ஐ.நா.வில் கொண்டு வந்த மனித உரிமைகள் மீறல் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறி இருமுறை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். இப்போது இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. சார்பில் வில்லியம் ரபி பெர்னாட் என்ற ராஜ்ய சபை எம்.பி. கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அக்குழுவிலிருந்து இப்போது "வோர்க் அவுட்" செய்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை. தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்பது, தமிழக மீனவர்களை தாக்குவது போன்ற செயல்களில் இலங்கை அதிபர் ராஜபக்ஷ செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி அவர் தொடர்ந்து "தமிழர் விரோதமாக" செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த காரணத்தைக் கூறிதான் இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பதை தவிர்த்துள்ளது அ.தி.மு.க. இப்படி தமிழர்களின் புத்தாண்டு சித்திரைதான் என்றும், இலங்கை தமிழர் விடயத்தில் பெயரளவிற்கு அனுப்பப்படும் குழுவில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் கூறி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா "தமிழர் வியூகத்தை" கையிலெடுத்துள்ளார். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் மத்திய அரசில் பங்கேற்கும் தி.மு.க.விற்கு "செக்" வைத்திருக்கிறார்.

"தமிழர் வியூகத்தை" முதல்வர் ஜெயலலிதா கையிலெடுத்து "தமிழினத் தலைவர்" நான்தான் என்ற ரீதியில் முன்னகர்த்துவதால், அதை எதிர்கொள்வதற்கு முனைகிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் ஒரு கட்டமாக தி.மு.க.வும் இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவிலிருந்து விலகிக் கொள்ளுகிறது என்று அவர் அறிவித்துள்ளார். "இப்படி குழுக்கள் செல்வதால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்த பயணத்தை தி.மு.க.வின் சார்பில் யாரும் மேற்கொள்ளவில்லை" என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து போடப்பட்ட சென்னை மாங்கொல்லை கூட்டத்தில் மாலையில் அவர் பேசினார். அதில், "தமிழ் மீது தனக்கு பற்று உள்ளதைப் போல பேசிக் கொண்டு, தமிழகத்தை ஆளுகின்ற அரசினர் தமிழையே அழித்துக் கொண்டிருக்கின்ற காட்சியை பார்க்கிறோம். கேட்டால் தமிழை அழிப்பவன் கருணாநிதிதான் என்று கூட சொல்லுவார்கள். ஆனால் இந்த கருணாநிதிதான் கல்லக்குடி என்ற பெயர் வைக்க தண்டவாளத்தில் தலை வைத்து போராடியவன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவன். உலகத் தமிழ் மாநாட்டில் தமிழை வளர்த்ததற்காக பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அஸ்கோ பர்ப்போலாவிற்கு பத்துலட்சம் ரூபாய் சொந்தப் பணத்திலிருந்து நிதியளித்தவன்" என்றெல்லாம் பேசிவிட்டு, "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு. அது மீண்டும் வரும்" என்று பேசினார். அந்த பொதுக்கூட்டத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் தவிர மற்ற ஏறக்குறைய முக்கால் மணி நேரம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தான் செய்த காரியங்களை பட்டியலிட்டு பேசினார். தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு என்பதற்கு பல்வேறு தமிழறிஞர்கள், புலவர்கள் எழுதிய கட்டுரைகளை மேற்கோள் காட்டி பேசினார். முதல்வர் ஜெயலலிதாவின் "தமிழர் வியூகத்தை" முறியடிக்க அ.தி.மு.க. தலைமை மீது தாக்குதல் நடத்த இந்த பொதுக்கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

முதல்வரின் "தமிழர் வியூகம்" என்பது தி.மு.க.விற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர் விடயத்தில் உருப்படியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிலவி வந்த கோபத்தை மேலும் அதிகமாக்கி, அதற்கு துணை போகும் தி.மு.க.வின் நன்மதிப்பை "நாசம்" பண்ண வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி எந்த விதத்திலும் தொடரக்கூடாது என்று வியூகம் வகுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் - அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியுள்ள நிலையில், காங்கிரஸ் - தி.மு.க.வுடன் கூட்டணியாக இருப்பது தனது நாடாளுமன்ற வெற்றியை பாதிக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளார். அதனால்தான் "தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யாத காங்கிரஸ் கட்சியுடன்" தி.மு.க.வின் கூட்டணி தொடர்ந்து விடக்கூடாது என்று கருதுகிறார். அவரைப் பொறுத்தமட்டில் தே.மு.தி.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தனித்துவிட்டு, தி.மு.க.வை நாடாளுமன்றத்தேர்தலில் எதிர்கொள்ள விரும்புகிறார். அது கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போல், நாடாளுமன்றத்திலும் வெற்றியைக் கொடுக்கும் என்றே கருதுகிறார் முதல்வர் ஜெயலலிதா. அதை மனதில் வைத்துத்தான் "தமிழர் வியூகம்" வகுத்து தி.மு.க.வை குறி வைக்கிறது அ.தி.மு.க. தலைமை. இதை உணர்ந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அதே பாணியில் காய் நகர்த்துகிறார். "இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் நாங்களும் பங்கேற்கவில்லை" என்று அறிவித்திருக்கிறார். அவரும் காங்கிரஸின் மீது கோபத்தில் இருக்கிறேன் என்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். "தமிழை அழிக்கிற அரசு" என்று அ.தி.மு.க.வை குறை கூறி, "நான்தான் தமிழர்களுக்கும், தமிழுக்கும் உழைக்கிறேன்" என்று காரசாரமாக பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி "இந்த ஆட்சி (அ.தி.மு.க.) தொடரவேண்டுமா என்று சிந்தியுங்கள். அதை செயலில் காட்டுங்கள்" என்று ஏறக்குறைய 2014இல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை ஆவேசமாக தொடக்கி வைத்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

தமிழகத்தில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்த "தமிழினத் தலைவர்" யார் என்ற யுத்தம் பரபரப்பான அடுத்தடுத்த காட்சிகளை உருவாக்கக்கூடியது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. நீடிக்கும் வரை "இலங்கை தமிழர் பிரச்சினையை" முன் வைத்து அ.தி.மு.க. இந்த வியூகத்தை மேலும் மேலும் உற்சாகமாக எடுத்துச் செல்லும் என்பதே இன்றைய நிலைமை. ஏனென்றால் காங்கிரஸுடன் இருந்து கொண்டு தமிழர்களுக்காக பாடுபடுகிறேன் என்று கூறுவது "மடியில் பூனையை கட்டிக் கொண்டு சகுணம் பார்ப்பது போன்றதே" என்றே தமிழறிஞர்கள் பலரும் கருத்து கூறுகிறார்கள். ஆகவே அ.தி.மு.க. வகுத்துள்ள "தமிழர் வியூகம்" என்ற சக்கர வியூகத்தில் சிக்காமல் தி.மு.க. எப்படி தப்பிக்கப் போகிறது என்பதே அக்கட்சிக்கு இப்போது சிம்மசொப்பனமாக இருக்கப் போகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X