2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முறையான அதிகார பரவலாக்கலை எந்தளவிற்கு தட்டிக்கழிக்கலாம்?

Super User   / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறது.

பிரேரணையிலுள்ள விடயங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் கவனமாக பார்த்துக் கொண்டு இருப்பதைப் போலவே அதிகார பரவாக்கல் தொடர்பாக இந்தியா உன்னிப்பாக கவனித்து வரும் என்பதை ஊகிக்க முடிகிறது.

அதிகார பரவலாக்கல் என்ற விடயம் பிரேரணையின் முக்கிய மூன்று வாசகங்களில் இல்லாத போதிலும் அதன் முன்னுரையில் அது வருகிறது. எனவே, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் அதிகார பரவலாக்கலை சீர்படுத்த வேண்டும் என்றும் கூறும் சிபார்சுகள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான சிபார்சுகளை நிரைவேற்ற வேண்டும் என்றே மொத்தத்தில் பிரேரணை இலங்கையை வலியுறுத்துகிறது.

இவற்றில் மனித உரிமை மீறல்களை விட அதிகார பரவலாக்கல் விடயத்தில் இந்தியா கூடுதல் அக்கறை செலுத்துவதை அவதானிக்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த விடயம் தொடர்பாக தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது கொடுத்து வரும் நெருக்குவாரம் மட்டுமல்ல. அதிகார பரவலாக்கமானது ஒரு வகையில் இந்தியாவுக்கு இலங்கையை கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது.

அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும் பாவிக்க முடியும்.

ஆனால், மனித உரிமை பேரவையின் பிரேரணையின் படி இலங்கை அதிகார பரவலாக்கலை சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. நாட்டில் அதிகார பரவலாக்கலை சீர்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே தாம் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இரசாங்கம் கூறி வருகிறது.

ஆனால் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அடையிலான கயிறிழுப்பின் காரணமாக அந்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவும் எப்போதாவது நியமிக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது. தமக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்ததைகளின் போது எட்டப்படும் முடிவை நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக கொள்ளப்படும் என ஏற்கெனவே இரு சாராருக்கும் இடையே இணக்கப்பாடொன்று இருப்பதாகவும் எனவே அவ்வாறான முடிவை காணாமல் தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை நியமிக்க முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறி வருகிறது.

ஆனால் அரசாங்கமோ 'முதலில் தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமியுங்கள் பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தலாம்' என்கிறது. அதற்கு பிறகு இதுவா, இதற்கு பிறகு அதுவா என்ற இந்த இழுபறி; கோழிக்கு பின் முட்டையா, முட்டைக்கு பின் கோழியா என்ற சர்ச்சையை நினைவுட்டுகிறது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படும் முடிவை நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக கொள்ளப்படும் என ஏற்கெனவே இரு சாராருக்கும் இடையே இணக்கப்பாடொன்று இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவதை அரசாங்கம் இதுவரை மறுக்கவில்லை. ஆனால், அவ்வாறான முடிவொன்று இருந்தாலும் அது நடைமுறை சாத்தியமானதா என்பது சந்தேகமே.

ஏனெனில் இவ்விரு சாராரின் இணக்கப்பாட்டை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகளை தொடர நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் இதர கட்சிகள் விரும்ப மாட்டா. தமது முடிவை ஏனைய கட்சிகள் மீது திணிக்க அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முடியாது.

மறுபுறத்தில் இரு சாராருக்கும் இடையே அவ்வாறானதோர் இணக்கப்பாடு இருந்தால் அதனை மதித்து நடவடிக்ககை எடுப்பதற்கு பதிலாக அவ் இணக்கப்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசாங்கம் செயற்படுவது அரசியல் நாகரிகமாகாது.  அவ் விணக்கப்பாடு நடைமுறை சாத்தியமாகாததால் இரு சாராரும் கூடி அதைப் பற்றி முடிவொன்றை எடுப்பதே இந்த சிக்கலில் இருந்து விடுபட்டு தீர்வொன்றை தேடுவதற்கு உள்ள ஒரே வழியாகும்.

ஆனால், இரு சாராரும் தமது நிலைப்பாடடிலிருந்து விலக தயாராக இல்லை. இது அரசாங்கத்திற்கும் நாடடுக்கும் நல்லதாக அமையாது. அதேவேளை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் மீது பழியை சுமத்திவிட்டு அதிகார பரவலாக்கலை சீராக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஜெனீவா பிரேரணையின் பின்னர் அரசாங்கம் இது தொடர்பாக சர்வதேச ரீதியில் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.

அதேவேளை இவ்விடயத்தில் இந்தியாவின் பிடி இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே தெரிகிறது. இதற்கு தமிழ் நாட்டு நெருக்குதல் மட்டும் தான் காரணம் என்று கூற முடியாது. ஒரு வகையில் தமிழ் நாட்டு நெருக்குதலை இந்திய மத்திய அரசாங்கம் அவ்வளவாக மதிக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இதைவிட இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது போல் தான் தெரிகிறது.

ஏனெனில் இலங்கையின் பிரச்சினைகள் மேற்குலக நாடுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தலையீடு செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றன என்று இந்தியா கருதுவதாக சில அவதானிகள் கருத்து வெளியிடுகிறார்கள்.

மறுபுறத்தில் சீனாவிற்கு இலங்கை வழங்கும் வாய்ப்புக்கள் தமது நலன்களை பாதிக்கக் கூடாது என்றும் இந்தியா கருதுகிறது. குறிப்பாக மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் சீனாவின் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பங்களிப்பை இந்தியா விரும்பவில்லை என்றே சில இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

எல்லாவற்றையும்விட அண்மையில் இடம் பெற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தை அடுத்து இலங்கை விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறது போலும். அந்த விஜயத்தின் போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்முடன் கூறியதாக இந்திய அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் கிருஷ்ணா நாடு திரும்பியவுடன் தாம் அவ்வாறு இந்தியாவுக்கு வாக்குறுதியளிக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறினார்.

இதன் காரணமாகவோ என்னவோ ஜெனிவா பிரேரணையின் போது இலங்கைக்கு எச்சரிக்கையாகும் வகையில் இந்தியா முடிவொன்றை எடுத்ததாக இந்திய உள்துறை அமைச்சர் பீ. சிதம்பரம் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். அது மட்டுமன்றி ஜெனிவா பிரேரணையோடு தொடர்புள்ள எதிர்கால நடவடிக்கைகளின் போது இம்முறை பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் தம் பக்கம் இழுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன் படி மேற்குலக நாடுகள் இலங்கை வியத்தில் தலையீடு செய்யக்கூடிய சர்வதேச விசாரணைகளை தவிர்க்கும் வகையிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மேற்பார்வையின் கீழ் உள்நாட்டு விசாரணையொன்றுக்கும் அதிகார பரவலாக்கலுக்கும் வழி வகுக்கும் வகையிலும் இந்தியா ஜெனிவா பிரேரணையின் போது நடந்து கொண்டது என்றே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

எனவேதான் அதிகார பரவலாக்கல் விடயத்திலும்; இந்தியாவின் பிடி எதிர்காலத்தில் இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது.            
                


You May Also Like

  Comments - 0

  • jeyrajah Tuesday, 17 April 2012 12:08 PM

    Mr Iyub,நன்றி. my wife press me not to write any political comments ,So my last one.
    1."முறையான அதிகாரப் பரவலாக்கம்" என்று குறிப்பிட்டதற்கு நன்றி.
    2.எவ்வாறு தட்டிக்கழிக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது என்பது உலகுக்குத் தெரியும். அதனால்
    3.எவ்வாறு இதை அமுல்படுத்தலாம் என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கின்றது.
    4.இது இப்போது ஆசிய ஆதிக்கம் சம்பந்தமான விடயமாகி விட்டது.
    5.சர்வதேசம் சம்பந்தமான விடயங்களில் நாம் நினைத்தபடி முடியாது.
    6. egg already laid , so ie first.

    2.எவ்வாறு த...')">Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X