2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திராவிடக் கட்சிகளுக்கே நஷ்டம்!

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து 12 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்ற குழு, இலங்கை சென்று திரும்பியுள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள், இரு நாடுகளில் இருந்தும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர் குழுக்களிடம் இருந்தும் வரும் நாட்களில் எழும் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெரும் திராவிட கட்சிகளும் கடைசி நிமிடத்தில், அந்த நாடாளுமன்ற குழுவில் இருந்து விலகியபிறகு, இரு அரசுகளின் இந்த முயற்சியே பிசுபிசுத்து போய்விடும் என்று எண்ணியவர்களும் உண்டு. அதுபோன்றே, ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த பிறகு. இந்தக் குழுவிற்கு அங்குள்ள 'சிங்கள-பௌத்த பேரினவாதிகள்' கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களும் உண்டு. ஆனால், அவர்கள் அனைவரது எதிர்பார்ப்புகளிலும் மண்ணைப்போட்டுவிட்டு, அந்த குழு வெற்றிகரமாக இந்தியா திரும்பியுள்ளது.

இரு நாட்டு அரசுகளையும் பொறுத்தவரையில், இந்த விஜயம் அவர்களது தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி. ஜெனிவா வாக்களிப்பு என்ற ஒரே பிரச்சினையில் இரு நாட்டு உறவுகளை கட்டிப்போட்டுவிடாமல், அதற்கும் அப்பால் சென்று, பன்முகத் தன்மையிலான அந்த உறவை நிலைநிறுத்த இந்த விஜயம் வகை செய்துள்ளது. ஜெனிவா வாக்கெடுப்பு என்னவோ இனப் பிரச்சினை குறித்த விடயம் தான். என்றாலும், அதுகுறித்து இரு தரப்பினரும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகாமல் இனப் பிரச்சினை குறித்த அடிப்படைக் கொள்கைகளை விவாதிக்க முடிந்தமையானது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவின் ஆழத்தை உணர்த்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்குரிய உரிமைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுத் தருவதே இந்தியாவின் நோக்கம். ஒருவிதத்தில் கடமையும் கூட.

இந்தப் பின்னணியில், இனப் போர் மற்றும் தீவிரவாதம் ஆகிய இரட்டை குழல் துப்பாக்கி மூலம் தனிநாடு பெறவேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் முடிவு தவறான முன்னுதாரணம். அதுபோன்றே, இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கமே ஒரே ஒரு பிரதிநிதித்துவ அமைப்பு என்ற எண்ணமும் இலங்கை அரசாலும் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத முஸ்தீபு. தற்போது, இனப் போருக்கு பிந்திய காலகட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுபோன்ற பிரதிநிதித்துவ ஏகாதிபத்தியத்தை எதிர்பார்ப்பதுவும் கூட பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்பதே உண்மை. 

இலங்கை அரசுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டிருந்தாலும், அதனை அரசின் முடிவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தால் மட்டுமே அதனை விவாதத்திற்கு கூட பிறதமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கூட ஏற்றுக் கொண்டிருக்கும். அதேசமயம், அரசின் முயற்சியாக முன்வைக்கப்படும் எந்தவொரு முடிவுக்கும் முன்னதாகவே கூட்டமைப்பின் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது என்றால், அதுவே அந்த முயற்சி தோல்வியில் முடிவதற்கான அத்தாட்சி. கடந்தகாலம் கூறும் உண்மையும் இதுதான். அனுபவபூர்வமாக இதனை உணர்ந்துகொண்ட காரணத்தினால் தான் இந்தியா, இலங்கை அரசின் நாடாளுமன்ற குழு மூலமாக தீர்வுபெறப்படவேண்டும் என்ற முடிவை வரவேற்றுள்ளது. இந்தியாவில் இருந்துவந்த நாடாளுமன்றக் குழுவும் இந்த முடிவையே வலியுறுத்தியது.

இந்திய குழுவை சந்தித்த கூட்டமைப்பு தலைமை, தாங்கள் ஒன்றுபட்ட இலங்கையினுள் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வை பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர். அதேசமயம், தமிழ் நாட்டில் முன்னாள் திமுக முதலமைச்சர் இலங்கையில் 'தனித் தமிழ் நாடு' அமைக்க ஐ.நா. சபை மூலம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது, அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணத்தை எதிரொலிப்பதாக மட்டுமே அமைந்தது. கூட்டமைப்பு அளவிற்கு களநிலை அறியாத புலம் பெயர்ந்த தமிழர்களைப் போன்றே தமிழ் நாட்டின் திராவிட அரசியல் தலைமையும் செயல்படுவதையே இது வெளிப்படுத்தியது.


இந்தியாவில் இருந்துசென்ற எம்.பி.-க்கள் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நான்கு காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். அதுபோன்றே, மாநிலத்தை சேர்ந்த இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரான டி.கேரங்கராஜனும் குழுவில் இடம் பெற்றிருந்தனர். என்றுமில்லாத அளவிற்கு. குழுவிற்கு மக்களவையில் பாரதீய ஜனதா கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் தலைமை ஏற்றிருந்தார். அதுமட்டுமல்ல, இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் இனப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சுஷ்மா சுவராஜே வழங்கியது, இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியாவில் தேசிய அளவில் நிலவும் ஒருமித்த கருத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.

அதுமட்டுமல்ல... இதுவே இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையவேண்டும் என்ற நல்லண்ணெத்தையும் இந்த முயற்சி அந்நாட்டு மக்களிடையே பரப்பியது. இதனால் தான் என்னவோ, வழக்கமாக இந்தியா எதிர்ப்பு அரசியல் செய்யும் கட்சிகள் கூட குழப்பம் அடைந்தன. அதேசமயம், இந்த கூட்டுமுயற்சி, நாளை இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்குபின், மத்தியில் மாற்றுகட்சி அரசு அமைந்தாலும், இனப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளிலும் எதிர்பார்ப்புகளிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என்று இலங்கை அரசிற்கும் சிங்கள அரசியல் தலைமைக்கும் கோடிட்டுக் காட்டியது. அதேசமயம், கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகளுக்கும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற இந்திய அரசின் கொள்கையையும், அதனை அடைவதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவே சரியான வழி என்ற எதார்த்தத்தையும் இந்திய குழு வலியுறுத்தியது. இந்த பின்னணியில், இந்திய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இலங்கை பிரஜை என்று தான் பெருமையுறுவதாகவும், ஒன்றுபட்ட இலங்கையில் சமஉரிமை என்ற கோட்பாட்டுடனே தனது கட்சி இருப்பதாகவும் கூறியது, தமிழ் நாட்டிலும் புலம் பெயர்ந்தோர் மத்தியிலும் மீண்டும் துளிர்விடும் 'தனிநாடு' கோரிக்கைக்கு பதில் கூறுவதுபோலவும் அமைந்தது.

வட இலங்கையில் பயணம் செய்த இந்திய எம்.பி.-க்களிடம் அங்குள்ள மக்கள் இராணுவத்தை தங்கள் மத்தியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை இந்தியக் குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளின் போது முன் வைத்தனர். பத்திரிகை செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, இராணுவத்தை நாட்டின் எந்தப்பகுதியில் இருந்தும் பின் வாங்கும் எண்ணம் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். அதேசமயம், மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். இது இந்திய அரசிற்கு பல்வேறு காலகட்டங்களில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளைப்போல் இருந்தாலும், அனைத்துக் கட்சிக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி என்ற அளவில், நாளை இனப் பிரச்சினை குறித்து, இந்திய அரசியல் கட்சிகளினிடையே ஒருவித இணக்கப்பாடை இத்தகைய உறுதிமொழிகள் ஏற்படுத்திவிடும் என்பதையும் இலங்கை அரசு புரிந்துகொண்டு இருக்கும்.

இலங்கையில் பயணம் செய்தபோது, வழக்கமாக இந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்று, இந்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியது இலங்கை அரசிற்கும் அங்குள்ள அரசியல் கட்சித் தலைமைகளுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் புதிய ஓர் அனுபவமாக அமைந்தது. எல்லா விடயங்களிலும் இந்தியாவை முன்னுதாரணமாக்கும் இலங்கையில் உள்ள அறிவு ஜீவிகளுக்கு, இந்திய அரசு மற்றும் அரசியல் தலைமையின் இந்த செயற்பாடு, அவர்களுக்கு இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் உள்ள மரியாதையை மேலும் உயர்த்திக் காட்டியது. அந்தவிதத்தில், திராவிடக் கட்சிகளின் புறக்கணிப்பு, இந்தியாமீதுள்ள இலங்கை மக்களின் மதிப்பை ஓரளவிற்கேனும் பாதிக்கத் தான் செய்தது.

ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பின்னர் அரங்கேறிய இந்த விஜயம், இந்திய - இலங்கை இடையேயான உறவின் பன்முகத் தன்மையை பிரதிபலித்தது. இது இனப் பிரச்சினையோடு நின்றுவிடவில்லை. 'சீனாவின் அச்சுறுத்தல்' என்ற படலத்திலும், ஓரளவிற்குமேல் இலங்கை அரசு இந்தியாவை அச்சுறுத்தி, இனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை எவ்வப்போதும் ஆதரித்துவரும் என்ற எண்ணத்தை உடைத்தது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை வாழ் தமிழ் மக்களின் துயர்துடைப்பதற்கு இந்திய அரசு எந்தவித தியாகத்திற்கும் தயார் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இதனை அங்குள்ள தமிழர்கள் புரிந்துகொண்டுள்ளார்களோ என்னவோ, இலங்கை அரசு, ஜெனிவா வாக்கெடுப்பு காலத்திலேயே புரிந்துகொண்டுள்ளது.

அதேசமயம், ஜெனிவா வாக்கெடுப்பு காலகட்டத்தில், அமெரிக்காவை அண்டி, அரசியல் செய்த புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களும், அவ்வாறே செய்ய நினைத்த கூட்டமைப்பு தலைமைக்கும் தற்போது சில உண்மைகள் புலப்படத் தொடங்கியிருக்கும். அதன் அரசியல் ஆதாயத்தை அனுபவிப்பதை விடுத்து எதிர்மறை அரசியல் செய்துவரும் தமிழ் நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகள், இனப் பிரச்சினை குறித்த தேர்தல் அரசியல்  தங்களுக்குள்ளேயே இருந்தாலும், மத்திய அரசின் கொள்கைப் போக்கினை தேசிய கட்சிகள் முன்னெடுத்து முடிவெடுக்கும் நிலைமை தற்போது ஏற்பட தாங்களே காரணம் ஆகிவிட்டோம் என்று புரிந்துகொண்டுள்ளார்களா என்பது தெளிவாவதற்கு சிலகாலம் ஆகும். எது எப்படியோ, அதனாலான நஷ்டம் திராவிட கட்சிகளுக்குதான்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் சரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் சரி, ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பிந்திய காலத்தில் அரசோடு பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெறமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று இலங்கை மக்களும் அரசியல் கட்சிகளும் மட்டுமே பேசி ஒருமித்த கருத்துக்கு வரமுடியும். ஆனால், அதற்கான சூழல் உருவாவதற்கு, இந்திய எம்.பி-க்கள் குழுவின் தற்போதைய இலங்கை விஜயம் வழிவகை செய்துள்ளது. அவர்களது விஜயம் மட்டுமே இனப் பிரச்சினைக்கு ஒரேயடியாக தீர்வு ஒன்றை கொடுத்துவிடாது என்பது மற்றபடி அனைவரும் உணர்ந்த ஒன்றே!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X