2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாண மே தினமும் ஐ.தே.க.வின் எதிர்க்காலமும்

Super User   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தற்தோதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அக்கட்சியின் சில தலைவர்களின் நடவடிக்கைகளை நினைக்கும் போது ஏன் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் இருக்கிறது.

தற்போது ஐ.தே.க. தலைவர்கள் எதிர் வரும் மே தினத்தன்று என்ன செய்ய வேண்டும் என்பதில் பெரும் சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை பார்க்கும்போது இது இவர்களுக்கு வேண்டுமா என்று தான் கேட்க வேண்டியுள்ளது.

கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சில எதிர்க் கட்சிகளுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தினத்தை கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார். அதற்கான ஆயத்தங்களையும் செய்து வருகிறார். அதேவேளை கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச, அன்றைய தினத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐ.தே.க. தலைவருமாக இருந்த காலஞ்சென்ற தமது தந்தையாரான ரணசிங்க பிரேமதாசவின் ஞாபகார்த்தமாக கொழும்பில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.

தமது நிலைப்பாட்டை கைவிட்டால் ஏதோ வானம் கவிழ்ந்து விடும் என்பதைப் போல் இரு சாராரும் இந்த விடயங்களை வைத்துக் கொண்டு வாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சர்ச்சை ஏற்கெனவே சில இடங்களில் கட்சிக் குழுக்களிடையே கைகலப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. ஐ.தே.க. தலைமைத்துவ சர்ச்சையில் நேரடியாக தலையிட்டுள்ள சில ஊடகங்களும் இல்லாத பிரச்சினையொன்றை ஊதி பெருப்பித்துக் கொண்டு இருக்கின்றன.

உண்மையில் பார்க்கப் போனால் பிரேமதாச ஞாபகார்த்தத்திற்கும் மே தினத்திற்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லை. அவ்வாறு சம்பந்தம் இருந்தால் அவ்விரண்டும் மே மாதம் முதலாம் திகதி வருவது மட்டுமே. இந்த இரண்டையும் வேண்டும் என்றால் தனித்தனியாகவும் நடத்தலாம், வௌ;வேறாகவும் நடத்தலாம். கட்சித் தலைமை கூடி இதைப் பற்றி முடிவொன்றை எடுப்பது மட்டுமே தேவை.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இறந்ததன் பின்னர் வரும் அவரது முதலாவது ஞாபகார்த்த தினம் இதுவல்ல. இதற்கு முன்னர் ஐ.தே.க. 18 முறை அவரது பெயரில் ஞாபகார்த்த கூட்டங்களையும் நடத்தி மே தினத்ததையும் நடத்தியிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த விடயத்தில் பிரச்சினையே எழுந்ததில்ல. இந்த முறை இந்த சர்ச்சையின் காரணமாக கட்சித் தலைவர் விக்கிரமசிங்க பிரேமதாச ஞபகார்த்தத்தை கைவிட்டுள்ளார், சஜித் பிரேமதாச மே தினத்தை கைவிட்டுள்ளார்.

மே தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதனால் பிரேமதாச ஞாபகார்தத்திற்கு எவ்வித தடையும் ஏற்படக் போவதில்லை. அதனை வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம். அதே போல் இரண்டு நிகழ்ச்சிகளையும் வேண்டும் என்றால் இரண்டு இடங்களிலும் நடத்தலாம். அனால் இங்கே தலைமைத்துவ போராட்டத்தின் காரணமாக இதுவும் இன்று பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 

சித்தாந்த ரீதியில் பார்ப்பதாயின் ஐ.தே.கவுக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கோ மே தினத்தை கொண்டாடுவதற்கான தார்மிக உரிமை இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் மே தினமானது தொழிலாளர் வர்க்கத்pன் தினமாகவே கருதப்படுகிறது. தொழிலாளர் வர்க்கம் தமது விமோசனத்திறகான பயணத்தின் போது வருடா வருடம் தமது பலத்தை ஒன்று திரட்டிக் காட்டி வர்க்க உணர்வை வலுப்பெறச் செய்வதற்காக மே தினம் உபயோகிக்கப்பட வேண்டும் என்றே இடதுசாரி சித்தாந்தம் கூறுகிறது.

தனியார் உடைமை முறையை ஒழித்து சோஷலிச பொருளாதார முறையை அறிமுகப் படுத்துவதே தொழிலாளர் வர்கத்தின் விமோசனமாக கருதப் படுகிறது. எனவே மே தினமானது சோஷலிசத்தை வலியுறுத்தும் தினமாகவே ஆரம்பத்தில் கருதப்பட்டு வந்தது. ஐ.தே.கவினதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் உண்மையான நோக்கம் சோஸலிசம் அல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையும் அல்ல. அவ் விரு கட்சிகளும் சுரண்டல் பொருளாதார முறையையே ஆதரிக்கின்றன. எனவே அவ்விரு கட்சிகளை உள்ளடக்கிய முதலாளித்துவ கட்சிகளுக்கு மே தினத்தை கொண்டாடுவதற்கான தார்மிக உரிமையே இல்லை.

ஆனால் காலப் போக்கில் தொழிலாளர்களை திசை திருப்புவதற்காகவும் குழப்புவதற்காகவும் முதலாளித்துவ கட்சிகளும் மே தினத்தை கொண்டாட ஆரம்பித்தன. அக் கட்சிகளிடம் கூடுதல் பண வசதி இருப்பதன் காரணமாகவும் ஊடக ஆதரவு இருப்பதன் காரணமாகவும் தொழிலாளர் வர்க்க மே தினக் கொண்டாட்டங்களை விட அக் கட்சிகளின் மெ தினக்  கொணடாட்டங்கள் பொது மக்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் மே தின நிகழ்ச்சிகள் இதற்கு விதி விலக்காகும்.

முதலாளித்துவ கட்சியாக இருப்பினும் ஏதாவது ஒரு கட்சி மே தினத்தை நல்ல நோக்கத்திற்காக பாவிப்பதாக இருந்தால் அதனை வரவேற்கத் தான் வேண்டும். சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரதான எதிர்க்கட்சி குறிப்பிட்டதோர் வட்டத்திற்குள்ளாவது பிரதான தமிழ் கட்சியோடு இணைந்து செயற்பட மே தினத்தை பாவிப்பதை அந்த அர்த்தத்தில் பாராட்டலாம். குறிப்பாக 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் இது போன்றதோர் நடவடிக்கை தேவையாகவும் இருக்கிறது. எனவே ஐ.தே.க. இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்போடிணைந்து மே தினத்தை கொண்டாடுவதை நல்ல விடயமாக கருதலாம்.

அதேவேளை, தேசிய கட்சிகளான ஏனைய சிறு கட்சிகளுக்கு வட பகுதியில் தமிழ் மக்களிடையே அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் பிரதான எதிர்க் கட்சியென்ற அந்தஸ்த்தை பாவித்து ஐ.தே.க அந்த தடைகளை சிறிதளவிலாவது உடைத்தெறிய நடவடிக்கை எடுப்பதும் நல்ல விடயமே. 

ஆனால் உட்கட்சி; பூசலின் காரணமாக தெற்கே பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நினைத்து மே தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாட வேண்டும் என ஐ.தே.க. தலைமை சிந்தித்து இருந்தால் இந்த வடக்கு தெற்கு கூட்டு மேதினமும் வெறும் ஏமாற்று வித்தையே.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து மே தினத்தை கொண்டாடும் அளவிற்கு ஐ.தே.க.  தாழ்ந்து போய் விட்டது என அமைச்சர் டலஸ் அலஹப்பெரும கூறியதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதன் மூலம் அவர் என்ன கூறுகிறார் என்பது மிகவும் முக்கியமாகும். பெயர் பலகையையும் ஓரிரு உறுப்பினர்களையும மட்டுமே வைத்திருக்கும் சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து மே தினத்தை நடத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தாழ்ந்து போகாவிட்டால், ஐ.தே.க. பிரதான தமிழ் கட்சியுடன் மே தினத்தை நடத்துவதன் மூலம் தாழ்ந்ந்து விடக் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் என்பதனாலா?

எவ்வாறாக இருப்பினும் ஐ.தே.க.விற்குள் வளர்நது வரும் இந்த முறுகல் நிலை நாட்டுக்கு நல்லதல்ல. குறிப்பாக நாட்டுக்கு பலமானதோர் எதிர்க் கட்சி அவசியமாக இருக்கும் நிலையில் இந்தப் பிணக்கு முழு நாட்டையே பாதிக்கிறது. பலமான எதிர்க்கட்சி இல்லாமை நாட்டுக்கு உகந்ததல்ல என்று ஜனாதிபதியே பல முறை கூறியிருக்கிறார். அது நேர்மையான கூற்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது உண்மையே.

மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பலத்தின் காரணமாகவும் 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு 18ஆவது அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப் படுத்தப்பட்டதன் மூலமும் நாட்டில் மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் மேலும் சுருங்கிவிட்டது. தொடரும் ஆட் கடத்தல்களுக்கும் தீர்வில்லை. தொழிலாளர்களினதும் மாணவர்களினதும் போராட்டங்கள் பல அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன. இன சௌஜன்யம் மென்மேலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியா வற்புறுத்தினாலும் ஐ.நா. வற்புறுத்தினாலும் இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற சாயலாவது தென்படுவதில்லை.

ஐ.தே.க. பதவிக்கு வந்தாலும் அக் கட்சியும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை கைவிடப் போவதில்லை. அதற்கு வரலாறு சான்றாக இருக்கிறது. ஆனால் பலமான எதிர்க் கட்சியொன்று இருந்தால் அக் கட்சி அரசியல் இலாபம் தேடுவதற்காக இந்தப் பிரச்சினைகளை கையிலெடுக்கும். அது ஆளும் கட்சிக்கு ஒரு நெருக்குதலாக அமையும். ஆதனால் நிலைமை சீரடையாவிட்டாலும் மோசமடையும் வேகமாவது குறையும். ஆதனால் தான் ஐ.தே.க. விற்குள் இருக்கும் தற்போதைய தலைமைத்துவ சண்டை நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்காக அமைந்துள்ளது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X