2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையைச் சூழும் கருமேகங்கள்

Super User   / 2012 மே 06 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            
                                                                                            கே. சஞ்சயன்

ல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் வெளியாரின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

ஆனால் சர்வதேச அரசியல் சூழமைவுகள், அரசாங்கத்தின் இந்த இறுக்கமான போக்கிற்கு நெகிழ்ந்து கொடுக்கும் போலத் தெரியவில்லை.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அரசாங்கத்துக்கு சாதகமானவையாகத் அமையவில்லை. குறிப்பாக இந்தமாதம் அரசுக்கு மற்றொரு நெருக்கடிமிக்க மாதமாகவே அமையப் போகிறது.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து இந்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இந்தப் போரின் வெற்றியைக் கொண்டாடும் விழாக்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.  வரும் 18ம் திகதி மிகப் பெரியளவிலான பேரணி, அணிவகுப்பு என்பன இடம்பெறவுள்ளன.

அதே நாள் வோஷிங்டனில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீசுக்கு மிகவும் சோதனையான நேரமாக இருக்கப் போகிறது.

ஏனென்றால் போருக்குப் பிந்திய நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், அரசியல்தீர்வு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பது பற்றி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியிடம் விபரிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.

மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து இவை பற்றி விளக்கமளிக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம், வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கு கடிதம் எழுதியியிருந்தார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி.

அந்த அழைப்புக்கு முதலில் அரசாங்கம் பதில் அனுப்பவில்லை.    ஜெனிவா தீர்மானம் நிறைவேறுகின்ற கட்டத்தில் தான் இந்த அழைப்பு ஏற்கப்பட்டது. அதன்பின்னர் தான் மே 18ம் திகதி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சந்திப்பின் முக்கியமான நோக்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது பற்றி விளக்கமளிப்பது தான்.  இது குறித்து அரசாங்கம் ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசனை செய்திருந்தது.

அதற்கமைய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையை தயார் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் இந்த அறிக்கையை அமெரிக்காவிடம் கையளிக்க முன்னதாக, கொழும்பில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை  நடைமுறைப்படுத்துவோம் என்று அரசின் வாயாலேயே சொல்ல வைக்க – அதாவது அரசின்  பொறுப்பை வெளிப்படுத்த வைக்க முனைகிறது அமெரிக்கா.

மேற்குலக அழுத்தம், சதிகள் என்றெல்லாம் அரசாங்கம் பிரசாரம் செய்து வரும் நிலையில்,  இந்த விடயத்தில் அமெரிக்கா இறுக்கமான போக்கைக் காட்டுவதாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கத்தில், மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதையும், இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் கூறும் நீண்ட அறிக்கை ஒன்றை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்திலும் பிரித்தானியா முக்கிய பங்காற்றவுள்ளதாகவும் கூறியுள்ளது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா பதில் கொடுத்துள்ளார்.

இவ்வாறான எந்தப் பதிலை அரசாங்கம் கொடுத்தாலும் கூட, மேற்கு நாடுகள் சும்மாயிருந்து விடப் போவதில்லை. ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், இலங்கை தன்பாட்டில் இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட மேற்குலகம் தயாராக இல்லை என்பதையே, அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முனைகிறதா- அடுத்து என்ன செய்யப் போகிறது என்று மேற்குலகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கொடுக்கும் அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளவும் மேற்குலகம் தயாராக இல்லை.

இந்தநிலையில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம்  நாள் நடைபெறப் போகும் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்திலும் சிக்கல்கள் அதிகமாகவே இருக்கும் போலத் தெரிகிறது.
ஏனென்றால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்த முக்கியமான 5 நாடுகள் வரும் ஜுன் மாதத்துடன் விலகிச் செல்லப் போகின்றன.

இதில் சீனாவின் இழப்பும் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. அதைவிட ரஷ்யா, கியூபா ஆகியன வெளியேறுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்தும் சவூதி அரேபியா இலங்கைக்கு ஆதரவாக நின்றது.
அதுவும் வேளியே போகப் போகிறது. அடுத்து பங்களாதேசும் வெளியேறுகிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்த ஐந்து நாடுகளினதும் ஆதரவு இல்லாது போவது  இலங்கைக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.

இவற்றுக்குப் பதிலாக உள்வரப் போகும் நாடுகள் இலங்கைக்கு சார்பாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
அப்படி ஆதரவு வழங்கினாலும் கூட, அது சீனா, ரஸ்யா, கியூபா ஆகியவற்றின் இடத்தை நிரப்புகின்ற அளவுக்கு இருக்க முடியாது.

அங்கு தான் இந்தப்  பிரச்சினை என்றில்லை. இப்போது இந்தியாவிலும் கூட இலங்கைக்கு சாதகமான நிலை உள்ளதென்று கூறமுடியாதுள்ளது.

இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம், இரு நாடுகளுக்குமே புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இதுவரை எல்லா விவகாரங்களிலும் இலங்கை அரசுக்குச் சார்பாக நின்ற இந்தியா, இனிமேல் அவ்வாறிருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

அதுவும் புதுடெல்லியை மையமாகக் கொண்ட பிரதான கட்சிகளை இந்தப் பயணம் ஒரே நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.

இந்தியக் குழுவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்தச் சொல்கிறது.  வடக்கில் இராணுவத் தலையீடுகளை அகற்றச் சொல்கிறது. இப்படியாக அரசாங்கம் விரும்பாத பல அழுத்தங்கள் இந்தியாவின் தரப்பில் இருந்து வருகிறது.

இதுவரை இந்திய அரசை சமாளித்தால் போதும் என்ற நிலை தான் இருந்து வந்தது. அந்தச் சூழலும் இப்போது மாறிவிட்டது.
அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் பயணத்தை அடுத்து, இப்போது எல்லாத் தரப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டிய நிலை அரசுக்கு உருவாகியுள்ளது. இது கல்லில் நார் உரிக்கின்ற செயல்.

இந்தச் சூழலில், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இலங்கை விவகாரம் பற்றிப் பேசிவிட்டுத் தான் போயிருக்கிறார்.

அவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவர் இப்படிப் பலமுறை கூறிவிட்டார். ஆனால் அரசாங்கம் இதையெல்லாம் கருதிலோ கணக்கிலோ எடுத்துக் கொண்டதில்லை.

இம்முறை அவர் இறுதிப் போரில் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளதை அரசாங்கத்தினால் ஏற்க முடியவில்லை.

அதுமட்டுமன்றி இந்த விவகாரம் குறித்து, மன்மோகன்சிங்குடன் அவர் பேசியுள்ளதும், இருவருமே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தப் பரிந்துரைகள் தொடர்பான பொதுநிலைப்பாடு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

ஐ.நா நிபுணர்குழுவை பான் கீ மூன் நியமித்த போது, அந்தக் குழியில் விழுந்து விடாமல் தப்பிக்கவே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது.

ஆனால் இப்போது அதுவே அரசாங்கத்துக்கு  ஒரு குழிபோல அமைந்து விட்டது. இதிலிருந்து இனி வெளியே வரமுடியாது.
இல்லையேல் சர்வதேச தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை எப்போதோ உருவாகலாம். இப்போதைய சர்வதேச அரசியல் சூழல், அரசாங்கத்துக்கு சார்பானதொரு நிலையில் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் தப்பிக்கும் ஒரு வழியை அரசாங்கம் இனித் தேடவும் முடியாது - தேடிக் கண்டுபிடிக்கவும் முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X