A.P.Mathan / 2012 மே 07 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்த ஸ்வாமிகள். இவர் சைவ வேளாளர் சமயத்தைச் சேர்ந்தவர். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் நிருபராக பணியாற்றி, பிறகுதான் மதுரை ஆதீனம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 292ஆவது மடாதிபதியாக ஆன அருணகிரி ஞானசம்பந்த தேசிக ஸ்வாமிகள் (மதுரை ஆதீனம்) பொறுப்பேற்றவுடன், "இப்பணியின் புனிதத்தன்மைக்கு ஏற்ப ஆன்மீக பாரம்பரியத்தைக் காப்பாற்றுவேன்" என்று உறுதிமொழி எடுத்தார். ஆனால் இன்று அந்த உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு விட்டு, செக்ஸ் புகாரில் சிக்கிய நித்யானந்தா ஸ்வாமியை இளைய மடாதிபதியாக நியமித்துள்ளார். மதுரை ஆதீனம் ஓர் அரசியல்வாதி போல் செயல்பட்டு வந்தவர். சைவ வேளாள சமுதாய மாநாடுகள் எங்கு நடைபெற்றாலும் ஆஜராகி விடுவார். இவர் மடத்திற்கு என்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நிலங்கள் கிடக்கின்றன. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள இந்த மடத்தின் கட்டுப்பாட்டை "செக்ஸ்" குற்றச்சாட்டில் சிக்கிய நித்யானந்தா எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றும் மதுரையில் உள்ள நகைக்கடைகள் பல ஆதினத்திற்கு சொந்தமான இடங்களில்தான் இருக்கின்றன. இவரை "அரசியல் மடாதிபதி" என்றே அழைப்பார்கள். ஏனென்றால் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த ஆதீனம். அவர் நடத்தும் அரசியல் விழா, பொதுவான நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு அரசியல் பேசுவதை ஆதீனம் தனது வழக்கமாக வைத்திருந்தார். ஒருகாலத்தில் நடராஜன் ஏன் முதல்வராகக்கூடாது என்றெல்லாம் பேசியவர் மதுரை ஆதீனம். நவக்கிரக கோயில்கள் இருக்கும் தஞ்சை மண்டலத்தில் சுக்கிரன் கோவில் இருக்கும் காஞ்சணூர் இந்த மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில். அங்கு முக்கிய விழாக்கள் நடக்கும் போது ஆதீனத்தின் டிஜிட்டல் கட்அவுட்களை பார்க்க முடியும். அது மட்டுமின்றி திருக்கைச்சின்னம், திருப்புரம்பையம், திருமுகத்தலை போன்ற முக்கிய சிவாலயங்களும் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். இலங்கை தமிழர் பிரச்சினை வந்தாலும் அதற்காக போராடும் ஆதீனம் இவர். அப்பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு பிரசாரம் செய்தவர். அப்போது தன்னுடன் இருப்பவர்களிடம், "இலங்கையில் போராடுபவர்களும் எங்கள் சமுதாயத்தினரே" என்று பெருமிதமாகச் சொல்வார். இது தவிர, முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மதுரையில் முதலியார் சமுதாய மாநாட்டை நடத்தினார். அப்போது, "முதலியார்களும் பிள்ளை சமுதாயத்தினரே" என்று கூறி அந்த மாநாட்டில் பங்கேற்று பேசினார் ஆதீனம். இவரை எங்கு அழைத்தாலும், இவருக்கு என்று மடத்தில் உள்ள சிம்மாசனத்தை தூக்கி்க் கொண்டு போய் அதில்தான் அமர்ந்திருப்பார். "சன்னிதானம் வேறு எந்த நாற்காலியிலும் அமர மாட்டார்" என்று அதற்கு ஒரு விளக்கம் சொல்வார். இதற்காகவே மதுரை ஆதீனம் ஒரு காரில் செல்ல அவருடைய சிம்மாசனம் மட்டும் தனிக்காரில் விழா நடைபெறும் இடத்திற்கு போகும். அவரை யார் போய்ப் பார்த்தாலும், "இந்த மடம் மூத்த மடம். ஆகவே உங்களுக்கு ஞானப்பால் தருகிறேன்" என்று கூறி பால் கொண்டு வந்து கொடுப்பார். மதுரை ஆதீனத்தில் சாப்பிடும் பாலுக்கு "ஞானப்பால்" என்று பெயர் வைத்திருந்தார் மடாதிபதி.
இவரது உயிருக்கு ஆபத்து என்று கருதி மாநில அரசு இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த சைரன் காரை வைத்துக் கொண்டு போகுமிடமெல்லாம் ஆடம்பரமாக போகவே, அந்த பொலிஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெற்றது. இதனால் மிகவும் வெறுத்துப் போன மதுரை ஆதீனம் அவ்வப்போது, "ஏன் நான் அறநிலையைத்துறை அமைச்சராக ஆகக்கூடாதா" என்று அடிக்கடி ஆதங்கப்பட்டுக் கொள்வார். முன்பு முதல்வராக இருந்த கருணாநிதியிடம் "தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வாருங்கள்" என்று திருச்சியில் ஒருமுறை செய்தியாளர்களிடம் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக ஸ்வாமிநாதன் என்ற ஒரு சிறுவனை நியமித்தார். ஆனால் அவர் நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே அப்பதவியை விட்டு நீக்கினார். அப்படி காலியாக இருந்த இளைய சன்னிதானம் பதவிக்கு இப்போது "செக்ஸ் குற்றச்சாட்டில்" சிக்கி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் நித்யானந்தாவிற்கு பட்டாபிஷேகம் செய்து வைத்துள்ளார் மதுரை ஆதீனம். இதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக முதலில் குற்றச்சாட்டு கிளம்பியது. பிறகு மதுரை ஆதீனமே, "அந்த பணம் எனக்கு வழங்கப்பட்ட பாத காணிக்கை. குருவிற்கு இப்படிச் செய்வது மரபுதான்" என்று பதலளித்தார். நித்யானந்தா - நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகி கர்நாடகத்திலும், தமிழகத்திலும் சென்ற 2010 வாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2010ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2010ஆம் வருடம் ஜூன் 11ஆம் திகதிதான் ஜாமினில் வெளிவந்தார். அவர் மீதான கிரிமினல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 2 hours ago
6 hours ago
7 hours ago
Sooriyan Thursday, 17 May 2012 04:04 AM
நித்யானந்தாவிற்கு தலைவலி வரும் ஆனா வராது ..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago