2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவிற்கு விடுதலை!

A.P.Mathan   / 2012 மே 22 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இதோ, அதோ என்று எதிர்பார்க்கப்பட்ட - முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடைசியாக சிறையில் இருந்து விடுதலை ஆகிவிட்டார். கடந்தவார கடைசியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரபு நாட்டு நகரங்களில் ஒன்றான டோஹாவிற்கு அரசு பயணம் மேற்கொள்வதற்குமுன் பொன்சேகாவிற்கு சிறையில் இருந்து விடுதலை அளித்து உத்தரவிட்டார். பொன்சேகாவும் தனது பங்கிற்கு தனக்கு வழங்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை எதிர்த்து நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். அதைவிட முக்கியமாக நாட்டில் இருந்தே தனக்கு எதிரான வழக்குகளை சந்திப்பதாக உறுதி அளித்துள்ளார். அவருக்கு எதிரான வழக்குகள் சூடு பிடிக்கின்றனவோ இல்லையோ, அவர் வெளிநாடு சென்று இலங்கை அரசையும் ராஜபக்ஷ தலைமையையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதே இதன் சாராம்சம்.

சிறையில் இருந்து வெளியான பொன்சேகா - அரசிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவார் என்று பல்வேறு அரசியல் தரப்புகளில் எதிர்பார்ப்பும் அச்சமும் கூட உள்ளது. அத்தகைய எதிர்பார்ப்பு, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தொடங்கி பல்வேறு முகாம்களில், ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிராக வலுவான அரசியல் தலைமை தேவை என்ற அடிப்படையில் எழுந்துள்ளது. அதுபோன்றே, அதுகுறித்த அச்சமும் எதிர்ப்பும் கூட அரசு தலைமையை விட, அந்த எதிர்க்கட்சிகளின் மத்தியிலேயே உள்ளது. எங்கே, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திடீரென்று முளைத்து அனைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக உருவெடுத்த பொன்சேகா மறுபடியும் அதேவகையில் உருவாகிவிடுவாரோ என்ற சொல்ல முடியாத கவலை, எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் உண்டு.

அப்பொழுது, 'இனப் போர்' முடிந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. எனவே, அத்தகைய தேர்தலில் பொன்சேகா பலிகடா ஆக்கப்பட்டார் என்று கூட கருதப்பட்டது. ஆனால், பொன்சேகா போட்டி இட்டதால் மட்டுமே, எதிர்க்கட்சி வேட்பாளரான அவர், மானத்தோடு நாற்பது சதவீத வாக்குகளை பெறமுடிந்தது என்று கருதுவோரும் உள்ளனர். எது எப்படியோ, தற்போது பொன்சேகா சிறையில் இருந்து வெளியே வந்திருந்தாலும், தேர்தலில் நிற்பதற்கான உரிமையை அவர் மீண்டும் பெற்றால் மட்டுமே அவரை ஒரு பொருட்டாக கருதி ராஜபக்ஷ தலைமை கவலை கொள்ளவேண்டியிருக்கும். அந்த காலகட்டம் வரையிலாவது, பொன்சேகா அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பொன்சேகாவின் விடுதலைக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பிரீஸின் அமெரிக்க பயணத்திற்கும் முடிச்சுப் போடப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளன. எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பொன்சேகாவின் விடுதலைக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக, எங்கே அவர் வெளியே வந்து அமெரிக்கா எதிர் கருத்துக்களை அள்ளித் தெளிப்பாரோ என்ற எண்ணமும் பலரிடையே இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட காலகட்டத்தில் அவரை அமெரிக்கா ஆட்டிப்படைக்கிறது என்று ஆளும் கூட்டணி கட்சிகளில் சில அரசியல் செய்தது. அதனையே அவர்கள் தற்போதும் தொடர்ந்து வருகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா போட்டியிட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. அப்போது மட்டுமாகிலும் இனப்போர் முடிந்த பின்னரும் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சிற்கே இடமில்லை என்ற தொனியில் அவர் பேசிவந்தார். இந்தப் பிரச்சினையில் அவருடைய தற்போதைய நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை. எது எப்படியோ, தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் வேளையில், பொன்சேகாவின் விடுதலை - கூட்டமைப்பிற்கு தார்மீக சங்கடங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிரச்சினை இத்தோடு நின்றுவிடவில்லை. கடந்தவார முடிவில் இனப் போரில் இலங்கை அரசின் வெற்றியை குறிக்கும் மூன்றாவது ஆண்டுவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த, தமிழ் பகுதிகளில் அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை மூடுவதற்கு தற்போது எந்த எண்ணமும் இல்லை என்று கூறினார். அதே சூட்டோடு, பொன்சேகா விடுதலை ஆணையிலும் அவர் கையெழுத்திட்டார். வாரத்தில் முன்னதாக'கோட்டாவின் போர்' ('புழவய'ள றுயச') என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

'இனப்போர்'; காலத்தில் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தாலும் அந்தப் போரில் இராணுவ வெற்றிக்கு காரணம், இராணுவ அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவே என்றவகையில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. என்றாலும் அந்த புத்தக வெளியீட்டிற்கும் பொன்சேகா விடுதலைக்கும் சம்மந்தம் இல்லை என்றே கொள்ளவேண்டும். அதுபோன்றே அந்த புத்தகத்திற்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூற வேண்டும்!

அச்சுறுத்தல்கள் தீரும் வரை இராணுவ முகாம்கள் மூடப்படமாட்டாது என்று 'வெற்றிவிழாவில்' ஜனாதிபதி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் போன்ற இராணுவ இயக்கங்களின் அச்சுறுத்தல்கள் முழுவதுமாக இல்லாமல் போவதற்கு ஆண்டுகள் பல ஆகலாம். இதுபோன்ற சூழல் நிலவிவந்துள்ள இந்தியா போன்ற பிறநாடுகளில் பலபோதும் இது போன்ற அச்சுறுத்தல்கள் அண்டை நாடுகளின் உதவியுடனும் ஊக்கத்துடனுமே பெரும்பாலும் அரங்கேறிவந்துள்ளன. அந்தவெளிநாடுகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இயக்கங்களும் பெரும்பாலும் வலுவிழந்து, செயலிழந்துபோய் உள்ளன.

இலங்கையின் நிலைமையே வேறு. இனப் போர் முடிந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் நாடுகடந்தே இத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும், பிறநாட்டு அரசுகள் இதன் பின்னர் இல்லை. மாறாக, இலங்கையை சார்ந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களே இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதாக அரசு சந்தேகப்படுகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. இனப் போர் முடிந்த கடந்த மூன்று ஆண்டுகளில் 'ஜெனிவா வாக்கெடுப்பு வெற்றி' உட்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசிற்கு எதிரான பல்வேறு நீக்கங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் இனம் பங்குபெற்றுள்ளது. அதுமட்டுமல்ல. இத்தகைய முயற்சிகள் வெற்றி அடையும் போது அதனை ஊரறிய கொண்டாடியும் வருகிறது.

அதாவது, மனித உரிமை மீறல்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் குறிவைத்தபோது, அதனை நீதிக்கும் மனித நேயத்திற்கும் கிடைத்த தார்மீக வெற்றியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் காணவில்லை. அதற்குமாறாக, இனப் போர் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கிடைத்த அரசியல் வெற்றியின் தொடர்ச்சியாகவே அவற்றை கொண்டாடி வருகிறார்கள். இதனை, அரசு தனக்கு அரசியல் தோல்வியாக மட்டும் கருதவில்லை. மாறாக, விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ள 'விற்றமின்' என்றவகையில் அவற்றை கண்டுவருகிறது. உண்மை நிலையும் இது தான்.

வடக்கு மாகாணத்தின் அன்றாட வாழ்கையில் இராணுவத்தின் குறுக்கீடு இருக்க கூடாது என்று மக்கள் நினைப்பதில் எந்தவித இரு கருத்துகளுக்கும் இடம் இருக்க முடியாது. அதேசமயம், அங்குள்ள இராணுவ முகாம்களை முற்றிலுமாக மூட வேண்டும் என்றும் எதிர்பார்க்கமுடியாது. எண்பதுகளில் தென் இலங்கையில் தோன்றி, பரவிய ஜே.வி.பி. அச்சுறுத்தல்கள் போன்ற நிலைமை மீண்டும் அதைவிட மோசாமாக தோன்றாதவரையில், அங்கு அதிக பொருட்செலவில் புதிதாக முகாம்களை அமைத்து, வடக்கில் உள்ள பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்களை அங்கு குடியமர்த்துவது என்பது இயலாத செயல் இல்லை என்றாலும், நடவாத செயல் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த பின்னணியில், 'போர்க் குற்றங்கள்' குறித்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்கையில் அவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் நின்றதாக கருதப்படும் பொன்சேகாவை விட்டுவிட்டு அவர்களால் பிறரை மட்டும் கூண்டில் நிறுத்த முடியுமா என்ற கேள்வி எழும். இவை குறித்த பொன்சேகாவின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என்றாலும் அதுவே அடுத்த சர்வதேச சர்ச்சைகளுக்கு வித்திடலாம். அதிலும் அவர் சர்வதேச சமூகத்தை பல்வேறாக குற்றம் சாட்டி, அதே கையோடு ஜனாதிபதி தேர்தலில் அவர்களால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகளையும் முன் வைப்பாரானால், அதுவே போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச அரசியலில் புதிய ஓர் அத்தியாயத்தை திறக்கலாம். அதுவும் கூட, கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அதனை வழிநடத்தியதாக கருதப்படும் புலம்பெயர் தமிழர் குழுவினர் சிலருக்கும் தார்மீக ரீதியான அரசியல் பிரச்சினைகளுக்கு வித்திடலாம்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X