2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சம்பந்தன் உரையும் சலசலப்பும்

A.P.Mathan   / 2012 ஜூன் 07 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின், அண்மை காலத்திய மட்டகளப்பு பேருரை பிரச்சினைக்குரியதாக கருதப்படுகிறது. அவரது கூற்றுகள் தமிழ் சமுதாயத்தின் குரலாக கருதப்பட்டால், அது தமிழர் ஆதரவு என கருதப்படும் சிங்கள அறிவு ஜீவிகளிடம் எதிர்மறை கருத்துகளை உருவாக்கி உள்ளது. சம்பந்தனது பேச்சு அவர் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவராக செயல்படும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திட்டமும் தீர்மானமுமாக இருக்குமேயானால், அவரது கருத்தை, அவரது தலைமையிலேயே இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்த சுரேஷ் பிரேமசந்திரன் மறுத்துள்ளார்.

சம்பந்தனின் உரையில் சில முக்கிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், ஒன்றை விட மற்றொன்று மிகவும் பிரச்சினைக்குரியதாகவே அந்த கருத்துக்கள் அமைந்துள்ளன. இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒரே சாரியாக அரசியலில் அணி திரள வேண்டும் என்பது தான் அவரது கூற்றில் பிரச்சினையற்ற கருத்து என்று கொள்ள வேண்டும். ஆனால், அதுவே பிரச்சினைக்குரியது.

அரசியலுக்கு அப்பால் தொடர்ந்து வரும் இலங்கை தமிழ் மக்களிடையே ஊடுருவி உள்ள வடக்கு, கிழக்கு என்ற சமூக அலகுகள் ஒரு புறம். அதனுள்ளே இன்னமும் பற்றி, பரவி நிலைபெற்றுள்ள ஜாதி, மதம் குறித்த பிரிவினைகள் மறு புறம். இவற்றிற்கு அப்பால், நகர்புறம் மற்றும் கிராமிய சமுதாயங்களுக்கு இடையே இன்றும் களையப்படாத வேறுபாடுகள் மற்றொரு புறம். இலங்கை சூழலில் இந்த ஒரு வேறுபாடு, வளைகுடாவில், தீவு பகுதி மக்களையும் வேற்று மனிதர்களாகவே பார்த்து வருகிறது என்ற உண்மை கூட கசக்கும்.

இது சமுதாய மாற்றம் குறித்த விடயம். அரசியல் ரீதியாக, போர் முடிந்த காலகட்டம் தொடர்ந்து சில வாரங்களுக்கு கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த முஸ்தீபு செய்தது. ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் எனப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட்ட அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும், சந்திரஹாசன் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கத் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, ஆட்சியின் உள்ளும் புறமுமாக இயங்கி, இந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் இனப் பிரச்சினை குறித்து அரசின் மீது தொடர்ந்து ஒரே ரீதியாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே அப்போதைய அணுகுமுறையாக இருந்தது. ஆனால், அந்த அணுகுமுறை - ஏன், எப்போது மாறியது என்பது குறித்து யாரும் இன்றளவும் பேசவில்லை.

இது இப்படி என்றால், சம்பந்தன் கூறியது போல் தமிழ் - முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளிடையே எந்தவிதமாக நீக்குபோக்குகள் சாத்தியம் என்பது குறித்தும் எந்த அளவிலும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தெரியவில்லை. இல்லை என்று சொல்லாமல், கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் அவ்வப்போது சந்தித்து பேசிவருகின்றனர். அதுவே, இந்த இரு அமைப்புகள் மட்டுமாவது சேர்ந்து செயல்படுவதற்கு அச்சாரமாக ஆகி விடாது.

கடந்த பெப்ரவரி மாதம் 27 – 28ஆம் திகதிகளில் நடைபெற்ற நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுள் தெரிந்த பின்னரே, தமிழ் - முஸ்லிம் இனத்தவரிடையேயான சமூக - அரசியல் உறவுகள் குறித்த உண்மை நிலைக்கான சூசகங்கள் வெளிப்படும். அதே சமயம், இந்த இரு பாலரோடு, மலையக தமிழ் மக்கள் எவ்வாறு எல்லாம் சேர்ந்து செயல்பட முடியும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவில்லை. முன்னவர்கள் போராடுவது வாழ்வுரிமை குறித்த விடயம். மலையக தமிழர்களோ இன்னமும் வாழ்வுக்கான உரிமையையே முழுமையாக பெறவில்லை.

சம்பந்தனின் பேச்சில் இருந்த பிரச்சினைக்குரிய விடயங்களில் ஒன்று, தமிழ் அரசு கட்சியே கூட்டமைப்பின் முதன்மை கட்சி என்பது. என்னவோ, தமிழ் அரசு கட்சியின் வருடாந்த மாநாட்டில் அதன் தலைவர் என்ற முறையில் சம்பந்தன் அவ்வாறு பேசியிருந்தார் என்றும் அதனை கொள்ளலாம். ஆனால், ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் தலைவரான சுரேஷ் அதனை உடனுக்குடன் மறுத்திருப்பது, கூட்டமைப்பினுள் புரையோடிவரும் உள்கட்சி பூசல்களை மேலும் புடம் போட்டு காட்டுகிறது.

முன்னதாக, ஜெனிவா வாக்களிப்பிற்கு முன்னர் கூட்டமைப்பு தலைவர்கள் அங்கு பயணிப்பது மற்றும் யாழ்பாணத்தில் மே தின கொண்டாட்டங்களில் சம்பந்தன் தேசிய கொடியை கையில் ஏந்தியது போன்ற சம்பவங்களின் போது, சுரேஷ் மற்றும் மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் உடன் தானே அவரது கூற்றிற்கு முரணாக அறிக்கை விட்டனர். சம்பந்தனை கூட்டமைப்பு தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது என்று தொடர்ந்து கூறி வரும்; சுரேஷ், அதன் உறுப்பினர்களாக மட்டுமே நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சில உறுப்பினர்களை, தமிழ் அரசு கட்சி தனது அங்கத்தவர்களாக தத்து எடுத்துக் கொண்டுள்ளதையும் குறை கூறியுள்ளார்.

தனது மட்டு உரையில், சம்மந்தன் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் செய்தி ஒன்றை கூறியுள்ளார். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை பிரச்சினைகளுக்கு இடையில் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களிடம் வி;ட்டுவிடுமாறு அவர் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கூறியுள்ளார். அதே தொனியில், இனப் பிரச்சினையில் இன்னமும் தமிழர்கள் உயிரை இழந்துவிடா வண்ணம், முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது கூற்றின் படி, புலம்பெயர்ந்த தமிழர் குழுக்கள் வழிக்குதவாத வன்முறை பாதையை இன்னமும் ஆதரித்து வருகிறது என்றே கொள்ள வேண்டும்.

இந்த விதத்தில் சம்மந்தனின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. ஆனால், அதையொட்டி, இலங்கை தமிழ் மக்கள் தங்களது முந்தைய இலக்கான 'தனி நாடு' கோரிக்கையை கை விட்டுவிடவில்லை என்ற தொனியிலும் அவர் பேசியுள்ளது பெருத்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, இனப் பிரச்சினையில் தமிழர் ஆதரவு நிலை எடுத்து வந்துள்ள பல சிங்கள அரசியல் தலைவர்களும் அறிவு ஜீவிகளாலும் கூட சம்மந்தனின் இந்த நிலைப்பாட்டை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

அதே சமயம், அண்மையில் உள்ள தமிழ் நாட்டில் இனப் பிரச்சினை குறித்த விவாதங்களில் அதிரடியாக பேசி வரும் அரசியல் தலைவர்கள் கூட தொடர்ந்து கூட்டமைப்பையும் சம்மந்தனையும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களில் பலரும், கூட்டமைப்பு ஆதரவு நிலை எடுக்க, யாரோ ஒருவரது சமிக்ஞைக்காக காத்திருப்பதாகவே கருத இடம் உள்ளது. அந்த சமிக்ஞை கூட புலம் பெயர்ந்த தமிழர் குழு ஏதோ ஒன்றில் இருந்தே வர வேண்டி உள்ளது என்றே கருதவும் இடம் உள்ளது.

'காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை'யாக, சம்மந்தனின் உரைக்கு முற்பட்ட வாரங்களில் தான் முன்னைநாள் தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் தனி நாடு குறித்து குரல் எழுப்பி இருந்தார். அது குறித்து தொடர்ந்து அறிக்கைகளும் விட்ட வண்ணம் உள்ளார். என்றாலும், இனப் பிரச்சினை குறித்து தொடர்ந்து தமிழர் ஆதரவு நிலை எடுத்து வந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா எதிர்மறையாக கருத்து கூறியுள்ளார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கோருவது வரை தனி நாடு குறித்து யாரும் பேச வேண்டியதில்லை என்று அவர் கூறியுள்ளார். இது, கருணாநிதியை சாடுவது மட்டுமல்ல, தனி நாடு குறித்த அவரது கட்சியின் நிலைபாட்டையும் வெளிப்படுத்துகிறது.

'தனி நாடு' கோரிக்கை என்று எங்கும் தெளிவு படுத்தாமல் சம்மந்தன் அது குறித்து பேசிய கருத்துகளில் சர்வதேச சமூகத்தையும் உட்படுத்தி உள்ளார். ஜெனிவா வாக்களிப்பை மனதில் வைத்து, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவு தற்போது கிடைத்துள்ள நிலையில் இரத்தம் சிந்தாமலே தமிழ் மக்கள் தங்களது குறிக்கோளை எட்டிவிட முடியும் என்ற வகையில் அவர் பேசியுள்ளார். இது, சர்வதேச சமூகத்தை சிந்திக்க வைத்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் எண்ணவோட்டம் குறித்து சம்மந்தன் எவ்வாறு பேச முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

எது எப்படியோ, சம்மந்தனின் மட்டகளப்பு பேரூரை, தமிழ் கட்சிகளையும் சர்வதேச சமூகத்தையும் சிந்திக்க வைத்துள்ளது. அதே சமயம், அவரது உரையின் போக்கும், அவர் கூறிய மற்றும் கூறாமல் விட்ட கருத்துகளும் இலங்கை அரசிற்கு சம்மந்தன் தலைமை மீது மட்டுமல்லாது, தமிழ் மக்கள் மீதும் மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், நாடாளுமன்ற குழுவின் மூலமே அது சாத்தியம் என்று அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்தது.

ஆனால் சம்மந்தனின் பேருரையில் இந்த இரு கருத்துகளுமே இடம் பெறாதாது புரியாத புதிராகவே பலருக்கும் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல, அவர் கூறி விட்டது ஒரு புறமிருக்க, அவர் கூறிய கருத்துக்கள், மிதவாதி என்று கருதப்பட்ட அவரும் இன பிரச்சினைக்கான தீர்வு குறித்து தீவிரமான கருத்துகள் கொண்டுள்ளாரோ என்ற சந்தேகத்தை அரசு தரப்பில் ஏற்படுத்தி இருக்கலாம்.

இனப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்திலும் கூட்டமைப்பு மேல் இத்தகைய சந்தேகம் இருந்ததாலேயே, அரசு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு காலம் தாழ்தியது என்று எண்ண இடம் இருக்கிறது. அந்த எண்ணம் சிறிதுசிறிதாக மாற, கூட்டமைப்பின் அணுகுமுறையும் அறிக்கைளும் வழியமைத்தன என்றும் கூறலாம். ஆனால், மட்டகளப்பு மாநாட்டிற்கு பின்னால், போருக்கு முந்திய நிலைபாட்டை, கூட்டமைப்பின் பிற கட்சிகளை போலவே தமிழ் அரசு கட்சியும் மாற்றிக் கொள்ளவில்லை என்ற எண்ணமே எதிரொலிக்கிறது.

இதற்கு மாறாக, இது அரசியல் வியூகம் குறித்த மிதவாத போக்கு மட்டுமே என்று இருந்தால், அத்தகைய சமிக்ஞைகள் மட்டுவிலிருந்து கிளம்பவில்லை. இன்னும் சொல்லப் போனால், தனி நாடு குறித்த கொள்கை மாறிவிடவில்லை, அதனை அடைவதற்கான வியூகமே மாற்றப்பட்டுள்ளது என்ற எண்ணத்தையே இது அரசியல் நோக்கர்களிடையே எழுப்பி உள்ளது. இது தான் உண்மை நிலையா? என்று சம்பந்தனோ அவரது கட்சியின் பிற தலைவர்களோ இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை.

சம்மந்தனுடன் பேச்சுவார்த்தை மூலம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை எட்டலாம் என்று அரசு உண்மையிலேயே எண்ணியிருந்தால், அந்த எண்ணத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. அதைப்போன்றே, சர்வதேச சமூகத்தின் அனுமதி இல்லாமலே, அவர்களின் பெயர்களையும் அனாவசியமாக இழுத்துள்ளது, அவர்கள் மீதான இலங்கை அரசு தரப்பில் சிலருக்கு இருக்கும் நியாயமற்ற சந்தேகத்திற்கு எண்ணெய் வார்த்தது போலவே சம்மந்தனின் அறிவிப்பு அமைந்துள்ளது.

சர்வதேச சமூகத்தில் உள்ள நாடுகளின் புதிய தலைமுறை தலைமைகளிடமும் இலங்கை தமிழ் கட்சிகளின் மீதான நம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக, அவநம்பிக்கையை வளர்ப்பதற்கே இது போன்ற தன்னிச்சையான நிலைப்பாடுகள் விதை விதைக்கும். இடத்தை கொடுத்தால், இலங்கை தமிழ் கட்சிகள் மடத்தை பிடிக்கின்றன என்று போருக்கு முன்பாக பல ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வந்த கருத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதற்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் விதமாக இந்த பேருரை அமைந்து விட்டது.

இவற்றில் எதுவுமே இனப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்கான வழி அல்ல! மாறாக, 'பிள்ளையார் பிடிக்க...' என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X