2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு தமிழர்களுக்கு சம்பந்தன் விடுத்த செய்தி அலட்சியப்படுத்தப்பட்டதா?

Suganthini Ratnam   / 2012 ஜூன் 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவரும் அனைத்து சம்பவங்களும் இலங்கையில் சமூகங்களுக்கிடையே ஏற்பட வேண்டிய நல்லிணக்கத்திற்கு முரணாகவே நடைபெற்றுவருகின்றன. நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவோரும் இதற்கு விதிவிலக்காக நடந்துகொண்டதாக தெரியவில்லை.

தமிழரசுக் கட்சியின் 14ஆவது சம்மேளனத்தின்போது அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை அவற்றில் முக்கிய நிகழ்வாகும். அவ்வுரை சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள புத்திஜீவிகளும் ஒருவித ஏமாற்றத்துடனேயே அவ்வுரையை நோக்குகிறார்கள்.

மற்றொரு சம்பவம் லண்டன் நகரில் இடம்பெற்றது. எலிசபெத் மகாராணியாரின் வைர விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பொதுநலவாய வர்த்தக பேரவையில் ஆற்றவிருந்த உரை லண்டனிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இரத்துச் செய்ய வேண்டிய நிலையேற்பட்டது. எனவே நிகழ்வின் அமைப்பாளர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக அவ்வுரை மட்டுமன்றி அன்றைய காலை அமர்வையே இரத்துச் செய்தனர்.

உத்தியோகபூர்வ அழைப்பொன்றின் பேரில் இரண்டொரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் என்ற முறையில் அங்கு சென்ற அமைச்சர் ரெஜினோல்ட் குறேக்கு தமிழ்நாட்டிலுள்ள புலி இயக்க ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று முறை கேட்டுக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தேசியக் கொடியை உயர்த்த மறுத்ததாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இவை அனைத்தையும் நியாயப்படுத்த எவ்வளவோ காரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆனால் ஒன்றை மட்டும் எவராலும் மறுக்க முடியாது. இவை அனைத்தும் நல்லிணக்கத்திற்கு சாதகமானவையல்ல, பாதகமானவை என்பதே அந்த விடயமாகும்.

தமிழ்நாட்டிலும் லண்டனிலும் இடம்பெற்ற சம்பவங்கள் முதன் முறையாக அவ்விடங்களில் இடம்பெற்றவையல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்விரண்டு இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி லண்டனில் ஓக்ஸ்பர்ட் யூனியனில் விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு சென்று அதற்தாக தயாராகவிருந்த நிலையில் ஒக்ஸ்பர்ட் யூனியன் அதிகாரிகள் திடீரென அவரது உரையை இரத்துச் செய்தனர். இதற்கும் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் லண்டனில் நடத்திய ஆர்ப்பாட்டங்களே காரணமாகியது.

இது நிச்சயமாக ஜனாதிபதியை பெரும் அசௌகரியத்திற்குள்ளாக்கியிருக்கும். ஜனாதிபதியை மட்டுமன்றி ஒக்ஸ்பர்ட் யூனியனில் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். அந்த நிகழ்வு ஜனாதிபதியின் மனதில் பெரும் ஆத்திரத்தையும் ஊட்டியிருக்கும்.

இந்த நிலையில் தான் மகாராணியாரின் வைர விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்ற ஜனாதிபதிக்கு பொதுநலவாய வர்த்தக பேரவையின் பிரதான உரையை நிகழ்த்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அவ்வாறானதோர் உரையை இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கக் கூடிய சூழ்நிலை லண்டனில் இருக்கிறதா என்பதை அதன் அமைப்பாளர்கள் முன்கூட்டியே ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களும் இதேபோல் தவிர்த்திருக்கக் கூடியவையே. அமைச்சர் ரெஜினோல்ட் குறே திருப்பி அனுப்பப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் எதிர்ப்புக்குள்ளனார். ஜனாதிபதியின் உறவினரான பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவும் அவரது கணவரும் வழிபாட்டுக்காக தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தபோது நையப்புடைக்கப்பட்டனர்.

இத்தனையும் நடந்து இருக்கையில் தமிழ்நாட்டவர்களே இலங்கை பிரமுகர்களை பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அழைக்கின்றனர். இவ்வாறான நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர்கள் அவ்வாறு இந்த பிரமுகர்களை அழைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்ப்புகள் வந்தாலும் தமது அழைப்பை ஏற்று வந்த பிரமுகர்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

ஏனெனெனில் ஒரு சிலருக்கு இதுபோன்ற சம்பவங்கள் திருப்தியை அளித்தாலும் இவை உள்நாட்டில் தமிழர்களின் நிம்மதியை கெடுக்கக்கூடும். அமைச்சர் குறே திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினரான ஜோன் அமரதுங்க நிலைமை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இருந்து வருவோரை நாமும் இவ்வாறே உபசரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இது பாரதூரமான கூற்றாகும். மறுபுறத்தில் இவ்வாறு கூறியிருப்பது இனவாத கட்சியொன்றின் உறுப்பினர் ஒருவர் அல்ல. ஐ.தே.க.வை சேர்ந்த கத்தோலிக்க உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கூறியிருக்கிறார். அதனை எதிர்த்து எவரும் கருத்து வெளியிட்டதாகவும் தெரியவில்லை. தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அதனை எதிர்த்து கருத்து வெளியிடுவது கஷ்டமாக இருந்திருக்கும்.

அவர் கூறியதைப் போல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டவர்களுக்கு இலங்கையில் வைத்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு அதன் மூலம் மோசமான நிலைமை நாட்டில் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாட்டவர்கள் அல்ல. தமிழ்நாட்டு தலைவர்களுக்கு தமிழ் உணர்வுகளை தூண்டி அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வாக்கு வேட்டையில் ஈடுபட அவ்வாறான நிலைமைகள் உதவுமேயல்லாமல் வேறு பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை.

லண்டனில் இடம்பெற்ற சம்பவங்கள் ஒரு வகையில் இதை விட பாரதூரமாகும். இதே புலம்பெயர் தமிழர்கள் தான் மஹிந்த ராஜபக்ஷவை இன வெறியர் என்றும் இனச் சங்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறுகிறார்கள். தாம் கூறுவதை அவர்களே நம்புவதாக இருந்தால் அதே ராஜபக்ஷவை ஆத்திரமூட்டுவதால் இலங்கையில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உத்தரவாதம் என்ன? அவ்வாறான பதற்ற நிலைமை ஏற்பட்டால் அது ஏனைய சிறுபான்மை மக்களையும் பாதிக்காது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

அப்படியென்றால் இலங்கைத் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கூடாதா என ஒருவர் கேட்கலாம். அது நியாயமான கேள்வியே. போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளுக்கு சர்வதேச சமூகம் அரச படைகளையும் புலிகளையும் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்களைப் போலவே இலங்கையில் அரச தலைவர்களும் போரின் அந்நிகழ்வுகளுக்கு பொறுப்புக் கூற தாயாராக இருப்பதாக தெரியவில்லை. போர் முடிவடைந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் அரச தலைவர்கள் உருப்படியான எதனையும் செய்வதாக தெரியவில்லை.

எனவே தமிழர்களும் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் நியாயம் கோரி அரசாங்கத்தை வற்புறுத்தத் தான் வேண்டும். ஆனால் எந்த மக்கள் சார்பில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அதே மக்களை அந்நடவடிக்ககைள் பாதிக்கக் கூடாது என்பதில் சர்ச்சை இருக்க முடியாது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுத்த செய்தி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவரது உரையில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இருந்தபோதிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அவர் விடுத்த அச்செய்தி விவேகமும் முதிர்ச்சியும் கொண்டதாகவே தெரிகிறது.

"இலங்கைத் தீவிற்கு வெளியில் வாழும் தமிழர்கள், தீவிற்கு உள்ளே வாழும் தமிழர்களுக்காக எடுக்கும் அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களும் பகிரங்கமாக வெளியிடும் கருத்துக்களும் இங்குள்ள களநிலைக்குப் பாதகத்தை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும். இங்கு நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறுகளை விளைவிக்காதவையாக அமைய வேண்டும்.

ஏனென்றால் - இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, இங்குள்ள சூழ்நிலையை அனுசரித்து, இங்கேயே வாழும் மக்களால், இங்கேயே எடுக்கப்படும் முயற்சிகள் தான் உருப்படியான இறுதி விளைவுகளை ஒட்டுமொத்தமான தமிழ் தேசிய இனத்தின் மீதும் ஏற்படுத்தும்" இவ்வாறு சம்பந்தன் கூறியிருக்கிறார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் எந்தெந்த செயற்பாடுகள் உள்நாட்டு மக்களை மோசமாக பாதிக்கும் என்பதை முன்கூட்டியே கூறுவது கடினமாகும். ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் தமது நடவடிக்கைகளை தீர்மானித்துக் கொள்வதற்கு முன்னர் இலங்கையில் வாழும் தமிழ் தலைவர்களோடு கலந்துரையாடினால் மோசமான நிலைமைகளை தவிர்த்துக்கொள்ள கூடுதலான வாய்ப்புக்கள் ஏற்படும்.

You May Also Like

  Comments - 0

  • aj Sunday, 10 June 2012 11:17 AM

    இப்படி ஒரு கட்டுரையை இவரின் பெயரில் வேறு ஒரு தலைப்பில் எதிர்பார்த்தேன் .அது வந்துவிட்டது. அரசின் தோல்வின் கதறலே அல்லது தமிழர்கள் மீது அந்த தோல்வியை திணிக்க முற்படுவதே இந்த உள்நாட்டு தமிழ் மக்கள் என்ற சொல். அப்படி தான் இருக்கிறது. எது செய்தாலும் ஓடி ஓடி வந்து உள்நாட்டு தமிழர்கள் உள்நாட்டு தமிழர்கள் என்று சொல்ல முன்னர் இன அழிப்பை பற்றியும் சொல்லுங்க ஐயா. நாட்டில் மக்கள் அடிமை படுத்தி அச்சுறுத்தி இருப்பதை எல்லோருக்கும் தெரியும்.
    உள்நாட்டு தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி சொல்லியே அடக்க முற்படும் சிலர்களின் கருத்து இது. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் .இங்க வாழும் தமிழர்கள் எங்கள் சொந்தங்கள். எங்களுக்கு இருக்கும் அக்கறையை விட யாருக்கும் இருக்க முடியாது. அதை நேரடியாக பார்த்தும் வருகிறோம்.

    Reply : 0       0

    S. Balachandran Sunday, 10 June 2012 07:59 PM

    இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில், அடுத்த பொழுதில் உயிருக்கான உத்தரவாதம் இல்லாத கொடுமைக்குள், முழுமையான அழுத்தங்களின்கீழ் வாய்திறந்து ஏன் என்று கேட்க முடியாத நிலையில் வாழும் தமிழர்கள் இதற்கும் மேல் எத்தகைய பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்று கட்டுரையாளர் கருதுகின்றார்?
    சிங்கள தேசத்தின் மாறாத இனவாதம் மட்டுமே தமிழீழத்தைப் பிரசவிக்கும். அந்த இனவாத சிந்தனைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சியும் விதிவிலக்கல்ல. கொடூரமான இன அழிப்பை நிகழ்த்தி முடித்த போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதிலிருந்தே இன நல்லிணக்கம் இலங்கைத் தீவில் ஆரம்பமாகும். அதுவரை நீதிக்கான தமிழர்களது போராட்டம் தொடரவே செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    ahamed khan Tuesday, 19 June 2012 07:55 AM

    அரசியலில் இலாபம் தேடியவர்கள், ஒரு நாளும் மக்களுக்காக, பேச மாட்டார்கள், அவர்கள் அவர்களுக்காக மட்டும் பேசுவார்கள் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றதான். தமிழ் நாட்டு அரசியலாள்ர்கள் இலன்கை இனப்பிரச்சினையை வைத்துதான், அரசியல் நாடகம் அரங்கேற்றம் செய்கின்றார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X