2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எதிர்கால தேர்தல்களின் நிலைமையை எடுத்துக்காட்டும் ஜே.வி.பி மீதான தாக்குதல்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாட்டில் பகிரங்க அரசியல் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை, கட்டுவனையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 'இனந்தெரியாதோர்களினால்' சுடப்பட்டு ஒரு பெண்ணும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டனர்.

அண்மைக் காலத்தில் 'இனந்தெரியாதோரினால்' கடத்தப்பட்டு காணாமல் போன அரசியல் பின்னணி உள்ளவர்களும் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்றே பொதுவாக நம்பப்படுகின்றது. எனவே தான் இதனை நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற 'பகிரங்க' அரசியல் கொலைச் சம்பவம் எனக் கூறினோம்.

தேர்தல் போன்ற சூடான அரசியல் சூழ்நிலைமையும் இல்லாமல், தேர்தல்களின்போது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகிவிடக்கூடிய பலமும் இல்லாத மக்கள் விடுதலை முன்னணியின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது நாட்டில் நடைபெறவிருக்கும் எதிர்கால தேர்தல்கள் எவ்வளவு பயங்கரமானதாக அமையப் போகின்றன என்பதற்கு சிறந்த அறிகுறி என்றே கருத வேண்டியிருக்கிறது.

குறிப்பாக இராணுவச் செயற்பாடுகள் அதிகமாகவிருக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிவாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைமை சிலவேளைகளில் மிக மோசமாக அமையலாம்.  ஏனெனில் அந்தப் பகுதிகளில் இராணுவ செயற்பாடுகளின் காரணமாக எவரும் எதனையும் செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

கட்டுவனை தாக்குதலின் அரசியல் தாக்கமும் அந்தத் தாக்குதல் தரும் செய்தியும் என்ன என்பதை ஆராய்வதை விட அதனை யார் செய்தார்கள், அதன் மூலம் என்ன அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முடியும் என்பவற்றைப் பற்றியே இப்போது குறிப்பாக அரசியல் கட்சிகளினதும் பொதுவாக நாட்டு மக்களினதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

யார் இதனை செய்திருப்பார்கள் என்று நினைப்பது இயல்பானது தான். ஆனால் யார் இதனை செய்தார்கள் என்று நடுநிலையாக ஆராய்வதை விட இதைப் பற்றி தமது அரசியல் எதிரிகள் மீது குற்றம் சுமத்த முடியும் என்றால் அதனையே எல்லா கட்சிகளினதும் தலைவர்கள் விரும்புவர்.

தமது கூட்டத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்களே தாக்குதல் நடத்தினர் என மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களிடம் கூறினார்.

ஆனால் அரசாங்கம் வேறு காரணங்களை கூறுகிறது. சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன, மக்கள் விடுதலை முன்னணியின் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிணக்கு ஒன்றின் காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்கள் விடுதலை முன்னணிக்கும் அதிலிருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிஷக் கட்சிக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர் தமது உறுப்பினர்களை தாக்குவதாக அண்மையில் முன்னணி சோசலிஷக் கட்சி, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

குறிப்பிட்ட ஒரு நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியபோதிலும், மேற்படி கட்சி மோதலைப் பற்றி எடுத்துக் கூறுவதில் அவர் கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாக தெரிந்தது. எனவே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தக் கொலைச் சம்பவத்தைப் பற்றி ஏற்கெனவே தீர்ப்பையும் வழங்கிவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் கூறினார்.

சனிக்கிழமை வேறு பல கட்சிகளின் தலைவர்களும் இந்தச் சம்பவத்தைப் பற்றி கருத்து தெரிவித்து இருந்தனர். முன்னணி சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியபோதிலும்,  நாட்டில் எந்த ஒரு கட்சியும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளும் கட்சியைத் தவிர ஏனைய எல்லா கட்சிகளும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

ஒரு கட்சி பிரிந்தால் அந்த இரு பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு மற்றப் பிரிவே நாட்டில் மிகவும் மோசமான எதிரிகள் ஆகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி இதற்கு முன்னர் பிரிந்த சந்தர்ப்பங்களிலும் புலிகளிடமிருந்து கருணா குழு பிரிந்தபோதும் ஏற்பட்ட நிலைமைகள் இதற்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம். அப்படியிருந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை.

முன்னணி சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற கருத்தை ரில்வின் சில்வா நிராகரித்தார். முன்னணி சோஷலிசக் கட்சிக்கு இவ்வாறானதோர் செயலைச் செய்ய பலமில்லை என அவர் கூறினார். தம்மிடமிருந்து பிரிந்து சென்ற குழுவினருக்கு அவ்வாறானதோர் செயலைச் செய்ய தேவை இல்லை என்று அவர் கூறவில்லை.

இது தான் இலங்கையின் அரசியல் நாகரீகத்தின் இலட்சணம். முன்னணி சோஷலிசக்  கட்சி உறுப்பினர்கள் இந்தக் கொலையை செய்திருக்கமாட்டார்கள் தான். ஆனால் தேவை இருந்தால் அவர்களாலும் இதனை செய்திருக்க முடியும். அதற்கு பாரிய படை தேவை இல்லை. ஆனால் தம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தமது உறுப்பினர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும்போதும் அவர்களை ஏளனம் செய்வதற்கு இந்த சந்தர்ப்பத்தையும் சில்வா பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் பலமானதோர் கட்சி அல்ல. அதன் தொழிற்சங்க நடவடிக்கைகளும் பிரசார பலமும் சிலவேளைகளில் அரசாங்கத்திற்கு தலையிடியாக இருக்கலாம். ஆனால் தேர்தல் என்று வரும்போது அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு எந்த வகையிலும் பிரச்சினையாக அமையவில்லை. அவ்வாறு இருக்க அரசாங்கம் ஏன் இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியினர் கேட்கின்றனர்.

இது பலமானதோர் வாதமாக தோற்றமளித்தாலும் அரசாங்கம் இதை விட அநாவசியமான அரசியல் சாகசங்களில் இதற்கு முன்னரும் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த வாதம் எடுபடப் போவதில்லை. பிரேம்குமார் குணரத்தினம் கடத்தப்பட்ட விவகாரமும் இது போன்றதோர் சர்ச்சைக்குரிய சம்பவமாகும்.

முன்னணி சோஷலிசக்  கட்சியின் முக்கிய தலைவர்களில் இருவரான குணரத்தினம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் சில வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டபோதும் அரசாங்கத்திற்கு சவாலாக இல்லாத இது போன்றதோர் சிறிய குழுவின் தலைவர்களை அரசாங்கம் ஏன் கடத்த வேண்டும் என்ற வாதம் எழுப்பப்பட்டது. ஆனால் அரசாங்கம் தவிர்ந்த மற்றைய எல்லோரும் இந்தக் கடத்தல் விடயமாகவும் அரசாங்கத்தை தான் குற்றஞ்சாட்டினர்.

அந்த நிலையிலும் குணரத்தினம் கொழும்பு குற்றப்பிரிவுக்கு திடீரென வந்தபோது சம்பவத்தைப் பற்றி விசாரணைகளை நடத்த அவரை நாட்டில் தடுத்து வைத்துக்கொள்ளாமல் பொலிஸ் உடனடியாக அவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் அவசரப்பட்டது. சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டபோதிலும் ஏதோ நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும் என்பதைப் போல் இப்போது அதைப் பற்றி எவரும் அலட்டிக்கொள்வதில்லை.

முன்னணி சோஷலிசக்  கட்சியின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் வடக்கில்  காணாமல் போனார்கள். அவர்களைப் பற்றி இன்னமும் எந்தவித தகவலும் இல்லை. அது விடயமாகவும் அரசாங்கத்தின் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. தாம்  குற்றஞ்சாட்டப்படும் சம்பவங்களைப் பற்றி கூடுதல் கவனம் செலுத்தி விசாரணை செய்து அரசாங்கம் தமது பெயரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறான சம்பவங்களைப் பற்றிய விசாரணைகளுக்கு அந்த முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

அரசியல் என்பது வெறுமனே பணம் சம்பாதிக்கும் வழியாகியுள்ளது. அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாகனங்களுக்காகவும் வெளிநாட்டு பயணங்களுக்காகவும் வெளிநாடுகளில் சொத்துக்களுக்காகவும் வழக்குகளுக்காகவும் செலவழிக்கும் பணத்தின் அளவை நாட்டில் மத்திய வர்க்கத்தவர்கள் என அழைக்கப்படுபவர்களாலும் கூட ஊகித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

இருபத்தியிரண்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்களினால் நாடு 16,000 கோடி ரூபாவை இழந்ததாக சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) அறிக்கை ஒன்றில் கூறியது. மேலும் சில நிறுவனங்களில் 15,000 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் கணக்குக் குழு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அவற்றைப் பற்றி எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.

அரசியலானது கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கருவியாகிவிட்ட நிலையில் அரசியல் எதிரிகளை உலகிலிருந்தே அகற்றும் தேவை அரசியல் துறையில் உருவாகியுள்ளது. அந்த நிலை தொடரும் வரை அரசியல் கொலைகளும் தொடரும் என்றே சிந்திக்க வேண்டியிருக்கிறது.     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X