2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தா.பாண்டியனுக்கும் ஜி.ராமகிருஷ்ணனுக்கும் சண்டை; தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளில் நடக்கும் கலாட்டா

A.P.Mathan   / 2012 ஜூன் 18 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.ஐ) மாநிலச் செயலாளராக இருக்கும் தா.பாண்டியன் வழி நடத்தி வருகிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.எம்) அக்கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையேற்று நடத்துகிறார். மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து போராடுவதே இந்த இரு கட்சிகளின் வளர்ச்சியாக இதுவரை தமிழகத்தில் இருந்தது. ஆனால் தா.பாண்டியனைப் பொறுத்தமட்டில், ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. மீது கண்டனக் கணைகள் தொடுக்க தயாராக இல்லை என்பதால், தா.பாண்டியனும் ராமகிருஷ்ணனும் இணைந்து செல்லமுடியவில்லை. குறிப்பாக புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு வந்து விட்டது.

சி.பி.ஐ.யைப் பொறுத்தமட்டில் இலங்கை தமிழர் பிரச்சினையில் போர் நடக்கும் காலகட்டங்களில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. ஈழத் தமிழர்களை காப்பாற்ற இந்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தது. அதுவே முதலில் சி.பி.எம்.முடன் கருத்து வேறுபாடு வரக் காரணமாக அமைந்தது. இந்த மாதிரி தீவிர நிலைப்பாட்டை எடுக்க மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரவில்லை. இந்நிலையில் 2011 சட்டமன்ற தேர்தல் வந்த போதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதில் இரு கட்சிகளும் இணைந்தே செயல்படுவார்கள் என்று பேச்சு எழுந்தது. ஆனால் முடிவில் இருவருமே தனித்தனியாகவே அ.தி.மு.க. தலைமையிடம் பேசி, சி.பி.எம். தங்களுக்கு 12 தொகுதிகளைப் பெற்றது. சி.பி.ஐ. பத்து தொகுதிகளை பெற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது கூட இரு கட்சி தலைமையும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. சி.பி.ஐ. கட்சிக்கு கல்யாணசுந்தரம், நல்லக்கண்ணு, தா.பாண்டியன் போன்ற தலைவர்கள் தலைமேயற்ற போதும் சரி, சி.பி.எம்.மிற்கு ராமமூர்த்தி, சங்கரய்யா, வரதராஜன் உள்ளிட்டோர் தலைமையேற்ற காலகட்டத்திலும் சரி இரு கட்சிகளும் இப்படித்தான் ஆளுக்கொரு திசையில் பயணித்துக் கொண்டிருந்தன. 1952 வாக்கில் 131 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு, 62 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் திகழ்ந்தது. அப்போது 12.96 சதவீத வாக்குகளை பெற்ற தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாகவே சி.பி.ஐ. ஆதிக்கம் செலுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு சி.பி.எம். உருவான பிறகு முதலில் சந்தித்த 1967 தேர்தலில் சி.பி.ஐ. 1.80 சதவீத வாக்குகளையும், சி.பி.எம். 4.07 சதவீத வாக்குகளையும் மட்டும் பெற்ற எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது. அன்று இழந்ததை இன்று வரை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளாலும் தமிழகத்தில் மீட்க முடியவில்லை. அது மட்டுமின்றி, சி.பி.ஐ. குறைவான வாக்கு வங்கி உள்ள கட்சியாகவும், சி.பி.எம். கொஞ்சம் அதிகமான வாக்கு வங்கி உள்ள கட்சியாகவும் இன்னும் தொடர்கிறது.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் எப்படி பயன்படுத்துகிறார்களென்றால் தங்களுக்கு கூட்டணி அமைக்கும் போது "மதசார்பற்ற இமேஜ்" வர வேண்டும் என்பதற்காக இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சில சீட்டுகளை கொடுத்து தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே எப்படியாவது வெற்றி பெறும் கூட்டணியில் இடம்பிடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் அதையும் ஏற்றுக் கொள்வார்கள். இதற்கு விதிவிலக்கு 1996 சட்டமன்ற தேர்தல். சி.பி.எம். மாநிலச் செயலாளராக இருந்த சங்கரய்யா, தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டு ம.தி.மு.க.வை அமைத்த வைகோவுடன் கூட்டணி வைத்து தோற்றார். பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தோல்வியை சந்தித்தார்கள். இது தவிர பெரும்பாலும் வெற்றிக் கூட்டணியிலேயே இதுவரை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றிருந்தார்கள். இப்போது நடந்து முடிந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே அ.தி.மு.க. தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முதலில் இரு கட்சிகளும் விலகிச் சென்றன. சி.பி.எம். விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வை அங்கே ஆதரித்தது. ஆனால் சி.பி.ஐ.யோ தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. இது அ.தி.மு.க.விற்கு ஆதரவாக இருக்க தா.பாண்டியன் மேற்கொண்ட முயற்சி என்று பேசப்பட்டது. அடுத்து இப்போது நடைபெற்ற புதுக்கோட்டை இடை தேர்தல் தொகுதி சி.பி.ஐ.க்கு சொந்தமான தொகுதி. அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன்தான் விபத்தில் மரணமடைந்தார். ஆனால் அ.தி.மு.க. அந்த சீட்டை கொடுக்க மறுத்து புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்திலும் தா.பாண்டியன் அமைதி காத்தார் என்பதே தோழர்களின் கோபமாக இருக்கிறது. இந்த தேர்தலில் தா.பாண்டியன் வேட்பாளரை நிறுத்தினால், நாங்கள் ஆதரிக்கத் தயார் என்று ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார். ஆனால் அதற்கு தா.பாண்டியன் பதில் கூட சொல்லவில்லை. இதனால் தா.பாண்டியனுக்கும், ஜி.ராமகிருஷ்ணனுக்கும் இடையேயான பனிப்போர் வெட்டவெளிச்சமாக விரிந்து நிற்கிறது.

தே.மு.தி.க.வை ஆதரித்த சி.பி.எம்.மிற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. ஏனென்றால் புதுக்கோட்டை தொகுதியில் 2006 தேர்தலில் 6880 வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 6479 வாக்குகளைப் பெற்றது. ஆனால் இப்போது சி.பி.எம்.முடன் சேர்ந்து அதே தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க. 30500 வாக்குகளை பெற்றுள்ளது. அது மட்டுமின்றி அ.தி.மு.க. 1,01,998 வாக்குகளை பெற்று இந்த தொகுதியில் இப்போது வெற்றி பெற்றிருந்தாலும், தே.மு.தி.க. தன் கட்டுத் தொகையை காப்பாற்றிக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியாக (சட்டமன்றத்தில் அல்ல) இருக்கும் தி.மு.க.வே கட்டுத் தொகையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்திற்கு கட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ள புதுக்கோட்டை இடைத் தேர்தலில் சி.பி.எம். உதவியிருக்கிறது. ஏனென்றால் ஜி.ராமகிருஷ்ணனின் பிரசாரமும், அக்கட்சியினர் தேர்தல் சாவடிகளில் உழைத்ததும் விஜயகாந்த் கட்சிக்கு 5000 முதல் 6000 வாக்குகள் வரை வந்து சேருவதற்கு உதவியிருக்கும். அதுவே தே.மு.தி.க. கட்டுத் தொகையை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் உதவியிருக்கும் என்ற தெம்பில் இப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலம் வருகிறார். ஆனால் அ.தி.மு.க.வை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றாலும், அக்கட்சி பிரசாரம் தொடங்கிய நாளிலேயே மறைந்த எம்.எல்.ஏ. முத்துக்குமரனின் படத்திறப்பு விழாவை வைத்தார் தா.பாண்டியன். அதற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் வந்தார்கள். அடுத்து வாக்கு சேகரிக்கும் பணியில் அ.தி.மு.க. தீவிரமாக இருந்த நேரத்தில் அதுவும் வாக்குப் பதிவிற்கு சில நாளுக்கு முன்பு சி.பி.ஐ. தலைவர்கள் நல்லக்கண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்கள். முத்துக்குமரனின் குடும்பத்திற்கு உதவி கோரி அந்த சந்திப்பு நடந்தாலும், அடுத்து வரப்போகின்ற ராஜ்ய சபை தேர்தலில் தனக்கு எம்.பி. பதவி வழங்குமாறு கோரிக்கை வைக்கவே தா.பாண்டியன் போனார் என்ற பேச்சும் பரவி வருகிறது. ஆகவே, தொடர்ந்து சங்கரன்கோவில் இடைத் தேர்தல், புதுக்கோட்டை இடைத் தேர்தல் போன்றவற்றில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதால், சி.பி.ஐ. க்கு என்று இருக்கின்ற எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது என்று அக்கட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள். இதை காரணம் காட்டி சில மாவட்டங்களில் உள்ள சி.பி.ஐ. கிளைகள் கூட கலைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ராஜ்ய சபை பதவியை மனதில் வைத்து தா.பாண்டியன் அரசியல் செய்து கொண்டிருக்க, சி.பி.எம். ஜி.ராமகிருஷ்ணனோ அ.தி.மு.க. எதிர்ப்பை மையமாக வைத்து அரசியல் செய்கிறார். அவருக்கு அடுத்த வெற்றிக் கூட்டணி யாருடன் அமைப்பது என்ற கவலை. சமீபத்தில் அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை சட்டமன்றத்தில் பாராட்டிப் பேசிய சி.பி.எம். எம்.எல்.ஏ. சவுந்திரராஜனைக் கூட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களது செயற்குழு கூட்டத்தில் கண்டித்துள்ளார்கள். "கட்சியின் கொள்கை தெரியாமல் அ.தி.மு.க. ஆட்சியை வாழ்த்திப் பேசுவதா" என்று கேள்வி எழுப்ப, அப்படிப் பேசிய எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்ததாக செய்திகள் உண்டு. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக சி.பி.எம். காத்திருக்கிறது. அதனால்தான் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.விற்கு எதிராகவும், தே.மு.தி.க.விற்கு ஆதரவாகவும் சி.பி.எம். செயல்படுகிறது. எதிர்காலத்தில் தி.மு.க.- தே.மு.தி.க. தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும். அதில் சி.பி.எம். சேர வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் எண்ணம் என்கிறார்கள் சி.பி.எம். தோழர்கள். அதை மனதில் வைத்துதான் புதுக்கோட்டை இடைத் தேர்தல் வெற்றி "ஓராண்டு கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. எங்களுக்கு 71 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன" என்றெல்லாம் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட்டாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடிவு பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அதுவே தே.மு.தி.க, சி.பி.எம். போன்ற கட்சிகளை தி.மு.க. அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, இடைத் தேர்தல் முடிவு பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என்று தி.மு.க. முன்னணித் தலைவர் ஒருவரே கூறுகிறார்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் எதிர்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி காலத்தின் கோலத்தில் இப்படி "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக" வேகமாக மாறி வருகிறது. சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரு கட்சிகளும் மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஓரளவு ஒருங்கிணைந்து இருப்பது போல், தமிழ்நாட்டில் இல்லை. அதுவே அந்த இரு கட்சிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று புலம்புகிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள். நடுநிலைமையாக இருக்கும் தோழர்கள் சிலர், "தா.பாண்டியனுக்கும், ஜி.ராமகிருஷ்ணனுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளிடையே இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வேற்றுமை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு துளியும் உதவாது. அகில இந்திய தலைமை இது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரு கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்" என்று ஆதங்கத்துடன் கோரிக்கை வைக்கிறார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X