2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தனி நாடு யாருக்கு?

A.P.Mathan   / 2012 ஜூலை 03 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி, இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) முன்னெடுப்பில் 'டெசோ' மாநாடு நடைபெற இருக்கிறது. கடந்த முறை மதுரை நகரில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, 'டெசோ' மாநாடு நடைபெற்ற போது, விடுதலை புலிகள் இயக்கம் அதனை புறக்கணித்திருந்தது. இன்று, விடுதலை புலிகள் இயக்கம் செயல்படும் நிலையில் இல்லை.

இந்தியாவில் இன்றும் அந்த இயக்கம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த நிலையில், திமுக-வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மாநாட்டில் பங்கு பெற்றால், அதனை நாட்டின் நீதித்துறை எவ்வாறாக ஏற்றுக்கொள்ளும் என்று தெரியவில்லை. இதற்கு மாற்று, விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அந்த மாநாட்டில் கருத்துக்களை முன் வைக்காமல் இருப்பது. அவ்வாறு இருந்தால், இலங்கையில் தனி நாடு என்ற பிடிப்புணர்வுடன் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் புலப்படவில்லை.

புலம்பெயர் தமிழர்களில்; பலரும் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவே தொடர்கிறார்கள் என்பதே உண்மை. அதற்கும் அப்பால் சென்று, தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடையே, 'இலங்கையில் தனி தமிழ் நாடு' என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பலரும் கூட விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும், பெறவேண்டும் என்றே நினைத்து செயல்படுகிறார்கள். அவர்களில் பலரும் பிரபாபரன் இன்னும் உயிருடனே இருப்பதாகவே நம்ப விழைகிறார்கள்.

இது இப்படி என்றால், இலங்கைக்குள் செயல்பட்டு வரும் அரசு சார்பில்லாத தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் 'தனி நாடு' என்ற கோரிக்கையை முன் வைத்து அரசியல் செய்வதாக எண்ண இடம் இல்லை. மாறாக, தமிழ் தேசிய கூட்டணி தலைவரான சம்மந்தன் - அண்மை காலத்தில் கொடுத்த பேட்டியில் கூட 'ஒன்று சேர்ந்த இலங்கை'-யின் உள்ளேயே, இன பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார். சில வாரங்களுக்கு முன், தான் தலைமை வகிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டகளப்பு மாநாட்டில் அவரது பேருரை ஏற்படுத்தியிருந்த கருத்து குழப்பத்தை தீர்ப்பதாக அமைந்துள்ளது, அவரது அண்மைகால பேட்டி.

இதனையே, அண்மையில் கொழும்பு சென்றிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் வலியுறுத்தியிருந்தார். அது மட்டுமல்ல. இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதனை, இன பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது என்று கொள்ளலாம். அதே சமயம், 'தனி நாடு' போன்ற கருத்துக்களை யார் முன் வைத்தாலும் அதனை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாது என்பதையும் உள்ளடக்கி அவர் கருத்துத் தெரிவித்ததாகவும் கொள்ளலாம்.

அது போன்றே, மேனனின் கூற்றிற்கு பிற அர்த்தங்களும் உள்ளன. 'ஐக்கிய இலங்கை' குறித்து அவர் தெரிவித்த கருத்து, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பொருந்தும். அவர்களுக்கு அப்பால் சென்று, சர்வதேச சமூகத்திற்கும் அந்த கருத்துகள் சென்றடையும். இதனால் மட்டுமே, புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் தமிழ் நாடு கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று இந்தியா எண்ணுவதாக முடிவு கட்ட தேவையில்லை. மாறாக, தற்போதைய கள நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகள் அவ்வாறான முடிவை தாமாகவே எடுக்கும். அத்தகைய சூழ்நிலைக்கு சர்வதேச சமூகத்தை புலம்பெயர் தமிழ் அமைப்பினர் தள்ளி விடுவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலை உருவாகி வருகிறது.

பேச்சுவார்த்தை மூலம் அதிகார பகிர்வு குறித்த அரசியல் சட்ட திருத்தங்களை முன்னெடுப்பது தான், இன பிரச்சினைக்கு இன்றும், என்றும் உள்ள ஒரே செயல்படும் தீர்வு. அதற்காக அரசு முஸ்தீபு எடுக்க வேண்டும். அதே சமயம், கூட்டமைப்பும் அரசியல் கள நிலையை புரிந்து செயல்பட வேண்டும். ஆதி காலம் தொடங்கிய அரசியல் விமர்சனம் செய்வதால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக, தமிழ் அரசியல் தலைமை, நிகழ்காலத்தை தனதாக்கிக் கொண்டு, தனது சமூகத்தின் எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதே சமயம், அரசின் மீதும் சிங்கள அரசியல் தலைமைகள் மீதும் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையின் உண்மை தன்மையை உலக சமுதாயம் ஒத்துக் கொண்டால் போதாது. அதனை இலங்கை அரசும் சிங்கள அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது போன்றே, விடுதலை புலிகள் இயக்கத்தின் சுவடுகளையும் அதன் நினைவுகளையும் இலங்கை அரசும் சிங்கள சமூகமும் அரசியல் தலைமையும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது என்பதையும் தமிழ் சமுதாயமும் தமிழ் அரசியல் தலைமையும் கூட ஏற்று செயல்பட வேண்டும்.

இப்போது நடப்பது என்ன? இரு தரப்பாருமே அடுத்தவர் மீதுள்ள அவநம்பிக்கையை மட்டுமே அச்சாரமாக வைத்து அரசியல் செய்சிறார்கள். அதில், அடுத்த தரப்பினரின் அரசியல் பிரச்சினைகளுக்கு இடம் இல்லை. உண்மை என்னவோ, இரு தரப்பினருமே உள்கட்சி விவகாரங்களினாலும் தங்களது சமுதாயம் சார்ந்த அரசியலினாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது இந்த பிரச்சினையை எதிர் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று இரு பாலாரும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. மற்ற தரப்பினரும் தங்களை போன்றே சமுதாயம் சார்ந்த உள்கட்சி விவகாரங்களில் சிக்கி தவிக்கிறார்கள் என்ற உண்மையையும் அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் இல்லை. ஆனால், தாங்கள் உணர்ந்து கொண்ட விதத்திலேயே சிந்தித்து செயல்படும் விடயத்தில், இரு சாராருமே தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். அதன் பின்னால் பொதிந்திருக்கும் உண்மை நிலைமையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

இலங்கையில் வாடும் தமிழ் மக்களை சார்ந்த கூட்டமைப்பின் தலைமை, தனி நாடு கேட்கவில்லை. வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தனி நாடு கோரி, இலங்கையில் வந்து போராட்டம் நடத்தபோவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் போருக்கு பின் இலங்கையில் வாழ்வாதாரம் இன்றி அல்லலுறும் அப்பாவி தமிழ் மக்களின் அன்றாட தேவைகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னமும் அவர்களுடைய கருத்தோட்டம், செயல்பாடு அனைத்துமே உரிமை சார்ந்ததாகவே உள்ளது, வறுமை சாhந்ததாக இல்லை. இது கூட்டமைப்பின் தலைமைக்கும் பொருந்தும்.

உரிமை குறித்து புலம்பெயர் தமிழர்களுடைய மனத்தோன்றல்களை கருத்தில்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூட்டமைப்பு தலைமை கருதுகிறது. இதில் அர்த்தமும் உள்ளது. ஆனால், இலங்கையில் விடுபட்டுப் போன அப்பாவி தமிழ் மக்களின் அன்றாட கவலைகளை நீக்குமுகமாக அனைவரும் இணைந்து செயல்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை வைக்கவில்லை. இது புலம்பெயர் தமிழர்களின் பின்புலம் சார்ந்த பிரச்சினையா, அல்லது இலங்கையில் தங்கிவிட்ட அப்பாவி மக்களின் தொடரும் சாபக்கேடா என்பது தெரியவில்லை.

முதலில் கிழக்கு மாகாணத்திலும் பின்னர் வடக்கு மாகாணத்திலும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசியல் ரீதியாக இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால், வடக்கு மாகாண தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறுதியிட்டு கூற அரசு தலைமை தயாராக இல்லை. தற்போதைய பின்னடைவிற்கு அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாகவும் இல்லை. ஆனால், அரசின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்து, வட மாகாண தேர்தலையும் உடனடடியாக நடத்த வேண்டும் என்று கூட்டமைப்பு தலைமை தொடர்ந்து கோரிக்கை விடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

போர் நடந்த சமயத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே இராணுவத்தை பின்வாங்கி விட்டு, வட மாகாணத்தில் அரசு அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளிடம் ஒப்படைக்க முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை நினைத்தால், அதில் தவறு இல்லை. அது போன்றே, போருக்கு பின்னாலான புனர்வாழ்வு திட்டங்கள் முழுமையாகவும் அசுர வேகத்திலும் நடந்தேறவும் கட்டுக்கோப்பான இராணுவம் தேவை என்றும் அரசு கருதலாம். ஆனால், இவை இரண்டுமே பிரச்சினை என்று ஆன பின்னர், அதனை கூட்டமைப்பு தலைமையுடன் விவாதித்து முடிவு எடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்ற மூன்று கட்ட தேர்தல்கள் போர் முடிந்த காலகட்டத்திற்கு பின்னர் வடக்கு மாகாணத்திலும் பிரச்சினை இன்றி நடந்தேறியுள்ளதே, கூட்டமைப்பின் தற்போதைய சந்தேகங்களுக்கு காரணம். அவர்களை பொறுத்தவரையில், மக்கள் ஆதரவு பெற்ற தாங்கள் ஆட்சிக்கு வருவதை அரசு தரப்பு விரும்பவில்லை என்ற எண்ணம் உருவாகி உள்ளது. அவர்களில் சிலர், இதனை தமிழ் மக்களையே அரசு இன்னமும் நம்பவில்லை என்பது போன்ற கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ஆனால், ஆட்சி அமைத்து, அரசு பொறுப்பில் அமர கூட்டமைப்பு தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளதா? கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள் வராதிருக்குமா? அவ்வாறு வந்தாலும், அதற்கு பின்னர் அதனால் ஏற்படும் பிளவுகள் சரி செய்யப்படுமா? கூட்டமைப்பின் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் சென்று, ஆட்சி அமைப்பு மற்றும் மாகாண அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் தங்களுக்கு எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை என்பதை கூட்டமைப்பு தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு உயர் அதிகாரிகளாக செயல்பட்டு அனுபவம் வாய்ந்த தமிழர்களை பயன்படுத்தி தனது அரசியல் தலைவர்களுக்கு உரிய கருத்துரைகளை வழங்க வேண்டும்.

இந்த விடயங்களில் கூட்டமைப்பு தலைமை தற்போதே பின் தங்கி உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் இத்தகைய முன் முயற்சிகளை அவர்கள் இப்போதாவது எடுக்க வேண்டும். இல்லை என்றால், நாளை மாகாண அரசில் பதவி ஏற்று கூட்டமைப்பு தலைமை செயல்படும் காலகட்டத்தில், அவர்களது அனுபவமின்மை காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமலே போய்விடும். அதற்கான அரசியல் சார்ந்த குற்றச்சாட்டை தற்போதைய நிலைமையில் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். மாறாக, அதிகார பகிர்வு என்று வந்து விட்டால், அதற்கும் இடம் இல்லாமல் போய்விடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X