2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கல்லில் நாருரித்தல்!

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டாயிற்று. இனி – சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்கும். வெட்டுக் குத்துகளும் குழி பறித்தல்களும் மின்னல் வேகத்தில் நடக்கும். தங்கள் கனவுகளையும், கதிரைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு 'சாக்கடை'யில் இறங்கி நாட்டியமாடுவார்கள் நமது அரசியல்வாதிகள்! மகா ஜனங்களும் உள்ளுக்குள் ஒரு விருப்பத்தினை வைத்துக் கொண்டு அது நிறைவேற - வாக்குச் சீட்டுகளில் கோடு கிழிப்பார்கள். ஆயினும், வாக்காளர்களின் பெரும்பான்மை விருப்புகளுக்கு மாறாகவே சில விடயங்கள் நடந்து முடியும்!

முந்தைய மாகாணசபைத் தேர்தல்களிலும் இதுதானே நடந்தது. குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது – ஹிஸ்புல்லாதான் முதலமைச்சர் என்று கூறிக் கோஷமிட்டு, அரசின் ஐ.ம.சுமு. சார்பில் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச பிரதிநிதித்துவங்களை வென்றெடுத்துக் கொண்டு போன முஸ்லிம் அமைச்சர்மாருக்கு – கடைசியில் கிடைத்தது வெறும் 'அல்வா'தானே!

இந்த நிலையில், இம்முறையும் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டும் மாகாணங்களில் முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியென்றால் இந்த தடவையும் இது விடயத்தில் 'அல்வா' தயார் என்றுதானே அர்த்தமாகிறது!

சரியான நடைமுறையொன்று பின்பற்றப்படுமாயின், தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் முதலமைச்சர் தெரிவு எவ்வாறு இடம்பெறும் என்பதை ஒவ்வொரு பிரதான கட்சியும் மக்களுக்குத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

உதாரணமாக, ஐ.ம.சு.முன்னணியில் பல கட்சிகள் உள்ளன. அப்படியாயின் அவற்றுள் அதிக பிரதிநிதிகளைப் பெறும் கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? அல்லது அந்தக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிக அதிகமான விருப்பு வாக்குகளைப் பெறுபவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? அல்லது எந்த சமூகத்திலிருந்து அதிக உறுப்பினர்கள் ஐ.ம.சு.முன்னணி சார்பாகத் தெரிவாகின்றார்களோ – அந்த சமூகம் சார்ந்த ஒருவருக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்று - ஏதோவொரு வகையில் அந்தப் பதவி வழங்கப்படவுள்ள விதம் குறித்து வெளிப்படுத்துதல் அவசியமாகும்.

ஆனால், நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களில் வாக்காளர்களில் நிலைமையோ, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகியுள்ளது. தாம் விரும்பிய ஒருவரை முதலமைச்சராகப் பெறுவதற்குரிய எந்தவிதமான தெரிவுகளும் வாக்காளர்களுக்கு இல்லை. அப்படியென்றால், எப்படி இதை - ஜனநாயகத் தேர்தல் என்றழைப்பது?!

இவ்வாறானதொரு நிலையில், கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான ஐ.ம.சு.முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளர்களாக, குறித்த மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களையே நிறுத்தப் போவதாக ஐ.ம.சு.முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஆனால், இங்கும் ஒரு கேள்வி உள்ளது. முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றவர்களை விடவும், அந்தக் கூட்டணியின் மற்றொரு வேட்பாளர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வாராயின் - எவ்வாறு நடந்து கொள்வது? மக்களின் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவருக்கா முதலமைச்சர் பதவியினை வழங்குவது? அல்லது, முதலமைச்சர் வேட்பாளராகப் பிரகடனம் செய்யப்பட்டவருக்கே அந்தப் பதவியினை வழங்குவதா? இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர்களையே - ஆளும் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளோம் என அமைச்சர் சுசில் தெரிவித்துள்ளபோதும், ஆளுந்தரப்புக்குள் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக அறிய முடிகிறது. குறிப்பாக, வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இம்முறை தனது பொலநறுவை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரையே நிறுத்த வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கலைக்கப்பட்ட வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்த பேர்டி பிரேமலால் திஸாநாயக்க – அனுராதபுரம் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

இதுபோலவே, கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்திலும் சர்ச்சைகள் எழுவதற்கு நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன. சுசில் பிரேமஜெயந்தவின் அறிவிப்பின்படி கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சிவநேசத்துரை சுந்திரகாந்தன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், ஏதோவொரு நிலையில் இதுவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறும்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் - கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து, அரசாங்கம் இதுவரை ஆழமான பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இருந்தபோதும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் மு.காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது குறித்து, ஆளுந்தரப்பினருடன் மு.கா. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் வேண்டும் என்று அந்தக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் ஆளுந்தரப்பினருடன் பேசி - முடிவொன்றைக் காணாமல், கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மாற்று வழியொன்று குறித்து யோசிப்பதற்கு மு.கா.விலுள்ள சில முக்கிய புள்ளிகள் விரும்பவில்லை!

அரசாங்கத்துடன் இணைந்து மு.கா. போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையொன்றின் போது, முதலமைச்சர் பதவியினை தமது கட்சிக்கே வழங்க வேண்டுமென்று மு.காங்கிரஸ் நிபந்தனையொன்றினை முன்வைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோரிக்கை சில வேளைகளில் தட்டிக் கழிக்கப்படுமானால், மு.கா. - மாற்று வழி நோக்கித் திரும்பும்!

'கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிட்டால் ஆட்சியினைக் கைப்பற்றுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றனவல்லவா... அப்படியான கூட்டணியொன்றை அமைப்பது குறித்த யோசனைகள் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?' என்று மு.கா.வின் மூத்த தலைவரொருவரிடம் கேட்டோம்! 'இன்னும் அவ்வாறானதொரு கூட்டுக் குறித்து நாம் யோசிக்கவில்லை. முதலில் அரசாங்கத்துடன் பேச வேண்டும். ஆளும் தரப்புடன் மு.கா. நட்பாக இருப்பதால் - எடுத்த எடுப்பில் அந்த நட்பை முறித்துக் கொள்ளும் வகையில் செயற்பட முடியாது. எனவே, கிழக்குத் தேர்தல் குறித்து முதலில் அரசுடன் போசுவோம். சிலவேளை, அரசுடனான கூட்டணி சாத்தியப்படாத நிலை உருவாகி, நீங்கள் கேட்டது போல் எதிரணிக் கட்சிகளுடன் கூட்டு வைக்கும் சந்தர்ப்பமொன்று ஏற்படுமாயின், தற்போது மத்திய அரசாங்கத்தில் மு.காங்கிரஸ் வகிக்கும் அனைத்து விதமான பதவிகளையும் துறந்து விட்டுத்தான், அவ்வாறானதொரு கூட்டணியை அமைப்போம்' என்றார் அந்த மூத்த தலைவர்.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, கிழக்குத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்துதான் மு.கா. போட்டியிடும். அதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. மேலும், என்னென்ன அமைச்சுப் பதவிகள் மு.கா.வுக்கு வழங்குவது என்பது வரை அந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டு விட்டது. மட்டுமன்றி, மு.கா. தலைவரிடம் சொல்லி விட்டுத்தான் கிழக்கு மாகாணசபையையே ஜனாதிபதி கலைத்தார் – என்றெல்லாம் ஏராளமான கதைகள் கசிந்து வருகின்றன. குறித்த பேச்சுவார்த்தையானது, மு.கா. தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நிகழ்ந்ததாக ஊடகமொன்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மு.காங்கிரஸோடு அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் முயற்சியொன்றை மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார். இந்த முயற்சியின் ஒரு கட்டமாக பஷீர் - றிசாத் சந்தித்தும் பேசியுள்ளனர். கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரை முஸ்லிம் தரப்பில் வென்றெடுப்பதே இந்த இணைவின் நோக்கம் என்று தெரியவருகிறது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு. முன்னணியுடன் இணைந்தே மு.காங்கிரஸ் போட்டியிடுவதென மு.கா. தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏலவே, உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மு.காங்கிரஸுடன் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு கிழக்குத் தேர்தலில் களமிறங்கும் பேச்சுவார்த்தையில் மு.கா.வின் தவிசாளர் பஷீர் ஈடுபட்டும் வருகின்றார். அப்படியாயின் இங்கு இரண்டு கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
1.    மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமும், கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் கிழக்குத் தேர்தல் எனும் விவகாரத்தில் முரண்பட்ட இரண்டு பாதைகளில் பயணிக்கின்றனரா?
அல்லது
2.    மு.கா. தலைவருக்கும் - ஜனாதிபதிக்கும் கிழக்குத் தேர்தல் விடயத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மைகள் இல்லையா?
தர்க்க ரீதியாக, இந்த இரண்டு கேள்விகளில் ஏதோவொன்றுக்கான பதில் ஆம் என்றே வருதல் வேண்டும்.

மு.கா.வுடன் ஏனைய முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு கிழக்குத் தேர்தலில் குதிக்கும் பஷீரின் முயற்சியானது – கல்லில் நாருரித்தலுக்கு ஒப்பானதாகும். இந்த முயற்சி வெற்றியடைவதற்கான சாத்தியங்களை எப்படித் தேடிப்பார்த்த போதும் கண்டு கொள்ள முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டணி உருவானாலும், அதனூடாக அதிகபட்ச அனுகூலங்களை தமது அணிதான் அனுபவிக்க வேண்டுமென ஒவ்வொரு கட்சியும் உள்ளுக்குள் விரும்பும். அல்லது, தம்மைப் பயன்படுத்தி - கூட்டணியிலுள்ள ஏனைய கட்சிகள் அதிக நலன்களை அனுபவித்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். இந்த மனப்பாங்கு - கடைசியில் கூட்டு முயற்சிக்கு ஆப்பு வைக்கும்!

இன்னொரு புறம், றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கடந்த கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை அனுபவித்தவை. எனவே, மு.கா.வோடு இணைந்து தற்போதைய கிழக்குத் தேர்தலில் இந்தக் கட்சிகள் குதிப்பதாயின், தாம் கடந்த முறை பெற்றுக் கொண்டவற்றை விடவும் அதிகமான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என நிபந்தனைகளை விதிக்கக் கூடும். ஆனால், அதை ஏற்பதற்கு மு.கா.வின் பெரும்பான்மை ஒருபோதும் விரும்பாது!

இவை அனைத்துக்கும் அப்பால், ஜனாதிபதியின் விருப்புக்கு மாறு செய்து விட்டு, அமைச்சர்களான றிசாத்தோ, அதாவுல்லாவோ – கிழக்குத் தேர்தலில் மு.கா.வோடு கூட்டு வைத்துக் கொள்வார்களாயின், அது – அவர்களின் தனிப்பட்ட அரசியலை மிகக் கடுமையாகப் பாதிக்கும். ஆளும் ஐ.ம.சு. முன்னணியிலிருந்து விலகி நின்று இவர்களால் அரசியலில் வெற்றிபெற முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, வழமைபோல் கிழக்குத் தேர்தலிலும் ஜனாதிபதி விரல் நீட்டும் திசை நோக்கியே இந்த இருவரும் இறுதியில் பயணப்படத் தொடங்குவர்.

ஆக, மேற்சொன்னவை சொல்லாமல் விட்டவை போன்ற பல்வேறு காரணங்களால், முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு கிழக்குத் தேர்தலில் குதிக்கும் மு.கா. தவிசாளர் பஷீரின் கனவானது – மெய்ப்படாமல் போகலாம்!

இதேவேளை, ஆளுந்தரப்பு இந்தனை அவசரப்பட்டு கிழக்கு மாகாணசபையை கலைத்தது அதில் தோற்றுப் போவதற்கல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றுதலே அரசின் இலக்காகும். அதுவும், த.தே.கூட்டமைப்பு களமிறங்கும் இந்தத் தேர்தலில் - ஆளுந்தரப்புக்குக் கிடைக்கும் வெற்றியானது, அரசுக்குப் பல வகைகளிலும் அனுகூலமாக அமையும்!

மு.காங்கிரஸுக்கு இம்முறை நல்லதொரு பெறுமானம் கிடைத்திருக்கிறது. அரசு மற்றும் த.தே.கூட்டணி ஆகியவற்றுக்கிடையில் இருக்கும் மு.காங்கிரஸ் - சாயும் பக்கம் வெல்வதற்கு சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது.

ஆனால், கிழக்குத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் நிலைவரமொன்று உருவாகுவதை அரசு ஒபோதும் விரும்பாது. எனவே, மு.கா.வை தனது கூட்டணிக்குள் வைத்துக் கொள்ளவே அரசு முயற்சிக்கும். இதற்காக, தன்னிடமுள்ள சில பெரிய்ய 'வடை'களையே மு.கா.வுக்குத் தருவதாக ஆளுந்தரப்பு கூறும்!

தேர்தலுக்குப் பிறகு 'வடை'க்குப் பதிலாக அல்வா கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது – மு.கா.வின் நிஜ வெற்றி!!

You May Also Like

  Comments - 0

  • mansoorcader Thursday, 05 July 2012 04:08 AM

    இப்படி எழுத மப்றூக் அவர்களால் மட்டுமே முடியும்.

    Reply : 0       0

    aj Thursday, 05 July 2012 09:17 AM

    என்னை பொறுத்தவரை. கிழக்கு தமிழர் தாயகம். அதில் 95 % தமிழர்கள் தமிழ் தேசியத்துக்கு வாக்களித்து நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்
    இலங்கை தீவில் எங்கள் பலம் தேர்தல் காலத்திலும் சரி வெளிநாட்டு தொடர்பாடல் மற்றும் ராஜதந்திரம் மற்றும் அனைத்து துறைகளிலும்
    கூட்டமைப்பு பலம் மிக்க சக்தி என்பது பல முறை நிருபிக்கப்பட்டு விட்டது. இன்று கிழக்கில் கூட்டமைப்பு போட்டி போடா போவது அரசு உட்பட பலருக்கு வைற்றில் புளியை கரைகிறது. எங்களுக்கு தெரியும் எல்லா தில்லு முள்ளு அடக்கு முறை . அச்சுறுத்தல் (அது இப்போதே ஆரம்பித்து விட்டது ) பல ஆயுத பலம் மற்றும் பண பலம் எண்டு இருக்கும் அனைத்தும் இங்கு எங்களுக்கு எதிராக பயன்படுத்தபடும். அனைத்து அரச ஆமா (தமிழ் சிங்களம் முஸ்லிம் ) கட்சிகளும் எங்களுக்கு எதிராக வேலைகள் பண்ணும். ஆனால் எங்கள் மக்கள் எங்களோட இருக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக அவர்கள் சொல்லுவார்கள். கிழக்கிலும் நாங்கள் .அங்கு வசிப்பது நாங்கள் . எங்கள் சொந்தங்கள் தான் தான் வசிக்கிறார்கள்.

    Reply : 0       0

    meenavan Thursday, 05 July 2012 11:05 AM

    நல்ல அலசல் ஆனால் நடப்பது என்னோவோ நாணய தாள்களின் ஊடாக முற்றாகும்.

    Reply : 0       0

    prahasakkavi anwer Friday, 06 July 2012 04:11 AM

    thalamaikalai vida vakkalarkal viliththukkondal nallathu. onaykalum pachchonthikalum nam veedu thedivarum kalam ithu

    Reply : 0       0

    Mohamed Rismy Saturday, 07 July 2012 03:38 AM

    முஸ்லிம்கள் ஒன்றுபட கடைசி சந்தர்ப்பம். முஸ்லிம்களுக்கு தனிநபரை விட சமூகமே முக்கியம். யா அல்லாஹ் இவர்களை ஒற்றுமைபடுத்தி இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பாயாக. ஆமீன்.. ஆமீன் ..ஆமீன்

    Reply : 0       0

    jesmin Sunday, 08 July 2012 04:32 AM

    முஸ்லிம்கள் ஒன்றுபட கட்சித்தலைவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் பிழைப்பு நடத்த முஸ்லிம்கள் பிரிந்துதானே இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    jesmin Sunday, 08 July 2012 06:17 AM

    இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X