2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையையும் இந்தியாவையும் அதிரவைத்த ஜெயலலிதாவின் குண்டு

Super User   / 2012 ஜூலை 08 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                           -கே.சஞ்சயன்

இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளுக்கு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறி விட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில், சிறைக்காவலர்களை மீட்கின்ற நடவடிக்கையின் போதும் அதன் பின்னரும் தாக்குதலுக்குள்ளாகிய, அரசியல் கைதி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் பரவிய நிலையில் தான், தாம்பரத்தில் இலங்கை விமானப்படையினர் பயிற்சி பெறும் தகவல் பரவியது.

சிறை நிரப்பும் போராட்டத்தை பெரியளவில் நடத்தி, திமுக தனது பலத்தைக் காட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார்.

தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்கு இலங்கை விமானப்படையினர் வந்துள்ளதாக அறிவதாகவும், அது உண்மையாக இருந்தால் தமிழர்களுக்கு நெஞ்சில் வேலைப் பாய்ச்சும் செயல் என்று கருணாநிதியின் பாணியிலேயே கண்டித்தார் அவர்.

இலங்கை விமானப்படையினரை வெளியேற்றக் கோரி அவர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் அனுப்பி விட்டே அதை வெளியே கசிய விட்டார்.

இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விழுந்தடித்துக் கொண்டு இலங்கைப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைக் கண்டித்தனர்.

இலங்கை விமானப்படையினரை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றனர்.

ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை அரசுக்கு விரோதமான உணர்வும், போக்கும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு பல நாட்களான போதும், மத்திய அரசு அதை வெளியே கசிய விடவில்லை.

இதை எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சரியான நேரம் பார்த்து தனது அரசியல் எதிரிகளை நோக்கியும், இலங்கை அரசை நோக்கியும் ஒரே நேரத்தில் கணைகளை வீசினார்.

ஏற்கனவே, ஊட்டியில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெறச் சென்ற இலங்கை இராணுவ அதிகாரிகள் 25 பேர் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து கர்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதைவிட இலங்கை அமைச்சர்கள், அரச பிரமுகர்கள் பலரும் தமிழகத்தில் கால் வைத்ததும் வைக்காததுமாக- எதிர்ப்புப் போராட்டங்களினால் போன காரியம் நிறைவேற்றாமலேயே திரும்பி வர நேர்ந்தது.

இந்தச் சம்பவங்களை அடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தமிழகத்துக்கு வரும் இலங்கைப் பிரமுகர்கள் பற்றிய தகவல்களை மாநில அரசுக்கு  முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

அப்படித் தகவல் தெரிவித்தால் தான் அவர்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க முடியும் என்பது அவரது வாதமாக இருந்தது. அதற்கு மத்திய அரசு சாதகமான பதிலையே அனுப்பியது.

எவ்வாறாயினும் தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இலங்கை விமானப்படைக்கு பயிற்சி அளிக்கின்ற தகவலை மாநில அரசுக்குத் தெரியப்படுத்தாமல் மத்திய அரசு மறைத்து விட்டது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்பாட்டுக்கு அமைய வழங்கப்படும் வழக்கமான பயிற்சியே என்றும் இதுபற்றி தமிழ்நாடு அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறினர்.

ஆனால் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, இதுபற்றி முறைப்படி தமிழக அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியது. இந்தியாவின் குடிவரவுச் சட்டங்களின் படி, கல்வி,  தொழிற்பயிற்சி போன்ற காரணங்களுக்காக உள்வரும் வெளிநாட்டவர்கள் அவர்கள் தங்கவுள்ள பகுதி காவல்நிலையத்தில் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
அதுபற்றிய அறிவுறுத்தல் வீசாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதன்படிஇ தாம்பரத்தில் பயிற்சி பெறும் இலங்கை விமானப்படையினர் சேலையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால் அவ்வாறான பதிவுகள் ஏதும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ்நாடு காவல்துறை கூறியது.

இவ்வாறு பதிவு செய்யாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்யவும் முடியும். நாட்டைவிட்டு வெளியேற்றவும் முடியும்.

வீசா பெற்று வந்த போதும் பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்களை ஜெயலலிதா அரசாங்கம் வெளியேற்றிய வரலாறு உள்ளது.

இது மத்திய அரசுக்குத் தெரியாத விடயமல்ல.  ஒன்றில், தமிழக அரசுக்கு விடயம் தெரியாத வகையில், இலங்கை விமானப்படையினருக்கு வீசா வழங்கும் போதே அதில் காவல் நிலையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு துணை போயிருக்கலாம். அல்லது பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை  மீறப்பட்டிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் எல்லா விபரங்களும் தமிழக அரசுக்கு மறைக்கப்பட்டே, தாம்பரத்தில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால், இலங்கை விமானப்படையினரின் நிலை கேள்விக்குள்ளானது.

தொடர்ந்தும் அவர்கள் தாம்பரத்தில் பயிற்சி பெறுவதானால், உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்தாக வேண்டும். இனிமேல் அங்கு பதிவுக்குச் சென்றால் அது சிக்கலான விவகாரமாக மாறும்.

பதிவு செய்யாமல் இருந்தால் கூட, இந்த விவகாரம் முற்றிவிட்ட நிலையில், விமானப்படையினர் அங்கிருந்து வெளியேற முடியாதநிலை ஏற்படும்.

இந்தநிலையில் மத்திய அரசுக்கு இரண்டே இரண்டு வழிகள் தான் இருந்தன. ஒன்றில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும்.

இலங்கை விமானப்படையினரை இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா விரும்பவில்லை. அவ்வாறு செய்தால், ஏற்கனவே, கெட்டுப் போயிருக்கும் இருநாட்டு உறவுகளில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

இதனால் இலங்கை விமானப்படையினர் ஒன்பது பேரும் பெங்களூர் யலஹண்டா விமானப்படைத் தளத்துக்கு அனுப்பப்பட்டனர். இதனை இந்திய அரசு செய்யாது போனால், தமிழ்நாட்டில் போராட்டங்கள் தீவிரம் பெறும்.

ஏனையவர்களைப் போல, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஜெயலலிதா அடிக்கடி அறிக்கைகள் வெளியிடும் பழக்கமுடையவர் அல்ல.

ஆனால் அவர் அவ்வப்போது, பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு, அடிக்கடி அறிக்கை விடும் தமிழக  அரசியல் தலைவர்களைத் தூக்கித் தின்று விடுகிறார்.

கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தும் முனைப்பில் இருப்பதால், அவரை முந்திக் கொள்ள ஜெயலலிதா இந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

அவர் இந்த விவகாரத்தை வெளியே விடாமல் இருந்திருந்தால், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தை கசிய விடாமல் இருந்திருந்தால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது.

சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பி இலங்கை அரசைத் தன்பக்கம் இழுத்துப் போட புதுடெல்லி முனைந்து கொண்டிருக்க, அதற்கு கொழும்பு அவ்வளவாக வளைந்து கொடுக்க மறுத்த நிலையில் தான், தமிழ்நாட்டில் இந்தப் புதிய புயலைக் கிளப்பி விட்டுள்ளார் ஜெயலலிதா.

இது ஜெயலிதா கிளப்பிய புயலாக இருந்தாலும்- தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலாக மாறியது.  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ஜி.கே.வாசன் போன்றவர்கள் கூட இலங்கை விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர்.

இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசு இலங்கை விமானப்படையினருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளித்தால், அது தமிழ்நாட்டின் கருத்தை மதிக்கவில்லை என்று ஆகிவிடும்.

தமிழ்நாட்டின் அழுத்தங்கள் குறித்து சிவ்சங்கர் மேனன் கொழும்பிலேயே குறிப்பிட்ட நிலையில் இந்திய அரசு தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.

எவ்வாறாயினும், தாம்பரத்தில் முதற்கட்டப் பயிற்சியை முடித்துக் கொண்டே, விமானப்படையினர் பெங்களூர் சென்றனர் என்கிறது இலங்கை வெளிவிவகார அமைச்சு.

தாம்பரத்தில் முதற்கட்டப் பயிற்சி முடிந்த நேரமும்,  தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பிய நேரமும் எப்படி ஒன்றாக இருந்தது என்பது தான் பெரும் குழப்பம் தரும் கேள்வியாக உள்ளது.

You May Also Like

  Comments - 0

  • shan Monday, 09 July 2012 10:02 PM

    இது எல்லாம் சும்மா அரசியல் பூச்சாண்டி ?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X