2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'துரோகம்' எனும் அரசியலும் அரசியல் துரோகங்களும்!

A.P.Mathan   / 2012 ஜூலை 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தமிழ் அரசியல் மற்றும் போராட்ட வரலாறுகள் முழுக்க 'துரோகம்' எனும் சொல்லையும் 'துரோகி' என்கிற அடைமொழியினையும் மிகத் தாராளமாக நீங்கள் காண முடியும்.

தமது அரசியல் மற்றும் இயக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும், தடையாகவும் இருந்தவர்கள் மீதும், இருந்து விடுவார்களோ எனக் கருதப்பட்டவர்கள் மீதும் எழுந்தமானமாக இந்தத் துரோக முத்திரைகள் குத்தப்பட்டே வந்திருக்கின்றன!

பல தமிழ் புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் மற்றும் சமூகத்துக்காகப் போராட வந்திருந்த ஏராளமான இளைஞர்களும் துரோகிகளாக்கப்பட்டுப் பரிதாபமாகக் கொன்று குவிக்கப்பட்ட காலங்களை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது!

'துரோகம்' என்கிற சொல் மிகவும் பாரதுரமானதாகும். ஆனாலும், சிலர் - தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தச் சொல்லினை கறையாக மாற்றி அடுத்தவன் மீது விசிறி விடுகின்றனர் அல்லது முத்திரையாகப் பதித்து விடுகின்றார்கள்.

---------


'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது, தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்' என்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இது – ஆபத்தானதொரு அறிக்கையாகும்!

அரசியல் ரீதியாக தமிழ் - முஸ்லிம் சமூக உறவினை வளர்த்தெடுக்க வேண்டியதொரு தருணத்தில், சம்பந்தன் என்கிற மூத்த தமிழ்த் தலைவரொருவர் இவ்வாறு தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது.

அரசியல் கட்சிகள் தமக்கென இலக்குகளை வைத்திருக்கின்றன. அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பல்வேறுபட்ட கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. அந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் வௌ;வேறான கொள்கைகளும் போக்குகளும் இருக்கின்றன.

ஆனால், 'கிழக்குத் தேர்தல்' எனும் விவகாரத்தில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறதோ, அதையே மு.கா.வும் பின்பற்ற வேண்டுமென்று சம்பந்தன் கூறுவது சட்டாம்பிள்ளைத் தனமானதாகும்!

'தமது விருப்பு, வெறுப்புகளுக்கிணங்கவே மற்றவர்களும் நடந்துகொள்ள வேண்டும்' என்று சிந்திப்பதும் பேசுவதும் - ஜனநாயக விரோத எத்தனங்களாகும்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூத்த அரசியல் தலைவரான சம்பந்தனே - இவ்வாறு நடந்து கொள்கின்றார் என்பது கவலையளிக்கிறது!

கிழக்குத் தேர்தலில் தங்களோடு இணைந்து போட்டியிடுமாறு மு.காங்கிரஸை அழைப்பதற்கான ஜனநாயக உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், தேர்தலில் யாருடனெல்லாம் மு.காங்கிரஸ் - கூட்டு வைக்கலாம் அல்லது வைக்கக் கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ, மேலாண்மை செய்யவோ முடியாது!

------

'அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது – தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்' என்று சம்பந்தர் கூறும் கோணத்தில் நின்று பார்த்தால்ளூ அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்குவது சிங்கள மக்களுக்குச் செய்யும் துரோகமாகப் பார்க்கப்படும். சிலவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து போட்டியிட்டால், முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினரே ரவூப் ஹக்கீமை துரோகியாகப் பார்க்கவும் கூடும்!

நமது விருப்புகளுக்கு மாறான - சக மனிதர்களின் நடத்தைகள் அனைத்தையும் 'துரோகம்' என்கிற சொல்லுக்குள் கொண்டு வந்து நிறுத்துவதன் விளைவு ஆபத்தானது. கடைசியில், யாரோ ஒருவர் - நம்மையே துரோகியாக்கி விட்டுப் போய்விடுவார்கள் என்பதே இதிலுள்ள உச்சகட்டப் பயங்கரமாகும்!

'கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகமாகும்' என்று சம்பந்தன் சிலவேளை சொல்லியிருந்தால் - அதைக் கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால், 'தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகம்' என்று அவர் கூறியதனூடாக, தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் எஞ்சியுள்ள உறவுக்கும் குழி தோண்ட முயன்றுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது!

--------

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லையல்லவா? அதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் என்ன? 'வடக்கு – கிழக்கு ஒரே நிலப்பகுதி. வடக்கையும் கிழக்கையும் தனித்தனியாகப் பிரித்தமையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், கிழக்குத் தேர்தலில் நாம் போட்டியிட்டால், வடக்கு – கிழக்கு பிரிப்பை ஏற்றுக் கொண்டதாகி விடும். எனவே – கிழக்குத் தேர்தலை நாம் பகிஷ்கரிக்கின்றோம். மேலும், கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருந்தது.

இதில் பகிடி என்னவென்றால், 'கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தொண்டை கிழியப் பேசிய அதே தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இம்முறை இடம்பெறும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கச்சை கட்டிக் கொண்டு களம் இறங்குகின்றது.

அதாவது, கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த முறை துரோகம், இம்முறை – சாணக்கியம்!

அப்படியென்றால், 'அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை' இந்தத் தேர்தலின்போது துரோகம் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அடுத்த தேர்தலில் சாணக்கியமாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு என்னதான் உத்தரவாதம்?!!

--------

'துரோகம்' என்கிற சொல்லுக்கு அத்தனை எளிதில் நாம் வரைவிலக்கணம் கூறி விடமுடியாது. ஆனாலும், 'ஒருவர் நம்மீது வைக்கும் நம்பிக்கைக்கும், அடுத்தவருக்கு நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கும் மாறு செய்வதை' துரோகம் என்கிற சொல்லுக்கான எளிய உதாரணமாகக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் - அதன் ஆரவாளர்களின் விருப்பங்களுக்கு மாறாக நடந்து கொள்வதைத்தான் துரோகமாகக் கருத முடியுமே தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கு மாறாக மு.கா. நடந்து கொள்வதை எவ்வாறு துரோகம் என்று அழைக்க முடியும்?!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் - அனுபவம் மிக்க அரசியல் தலைவராவார். துரோகம், துரோகி என்பவற்றின் பாரதூரங்கள் பற்றியும், அவற்றினைச் சுமந்தவர்களின் வலிகள் குறித்தும் இவர் மிக நன்றாகவே அறிவார்.

சம்பந்தன் - தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தபோது, அவருடைய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் - புலிகளால் 'துரோகி'யாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமையினையும், ஒரு கட்டத்தில் சம்பந்தன் மீதே – புலிகளின் துரோகம் எனும் பழி சுமத்தப்பட்டமையினால் - அவர் எதிர்கொண்ட அவஷ்தைகளையும் அத்தனை எளிதில் சம்பந்தன் எப்படி மறந்தார் என்றுதான் தெரியவில்லை!

அடுத்தவர் மீது துரோக முத்திரையைக் குத்துவது – மிகவும் எளிதானது. ஆனால், அதைச் சுமப்பது மிகவும் அவஷ்தையானது – ஆபத்தானது! அவற்றினை அனுபவித்த – சம்பந்தனே, அடுத்தவர் மீது துரோக முத்திரையைக் குத்துவதை நினைக்க ஆச்சரியமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது!

----------

தமிழ் தேசியக் கூட்டமைப்மையும், மு.காங்கிரஸையும் நாம் ஒரே தராசில் வைத்தே பார்க்கின்றோம். இவை - தமது நலன்களை முன்னிறுத்திச் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளாகும். இவர்களுக்கிடையில் இடம்பெறும் 'தெருச் சண்டைகள்' குறித்து நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஆனால், இவர்களின் 'வம்புகளில்' சமூகங்களை வலிந்து இழுப்பதையும், தமிழ் - முஸ்லிம் மக்களைச் சீண்டி விடுவதையும் நாம் மௌனிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது!

---------

இந்தக் கட்டுரைக்காக சம்பந்தன், துரோகம், துரோகி என்கிற சொற்களை கூகிள் இணையத்தின் தேடு பொறியில் டைப் செய்து பார்த்தேன்!

'மே தினக் கூட்டத்தில் சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன் ஒரு துரோகி' என்று நூற்றுக் கணக்கான இணையத்தளங்கள் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மீது துரோகம் என்கிற முத்திரையினைக் குத்தி வைத்திருந்தன!

You May Also Like

  Comments - 0

  • hazeer Saturday, 14 July 2012 05:58 PM

    சம்பந்தன் அய்யா இந்த கட்டுரையயை கட்டாயம் வாசிக்க வேண்டும் .

    Reply : 0       0

    mcafareed Sunday, 15 July 2012 12:28 AM

    பாவம் வயசான காலம், தூரம் என்ற சொல்லுக்கு பதிலாக சொல்லியிருக்கக்கூடும்,பெரிசாக அலட்டிக்கொள்ளாமல் விடலாம்தான், இருந்தும்,......

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 15 July 2012 03:16 AM

    அப்பாடா நீண்ட காலத்தின் பின் நல்லதொரு கட்டுரையை எழுதி உள்ளீர்கள். இதகாக உங்களை பாராட்டுகிறோம். இதே போன்ற ஒரு தெளிவை தமிழ் எழுதாளர்களிடம் இருந்தே எதிர்பார்தோம். ஆனால் தாங்கள் முந்தி கொண்டீர்கள். கருத்தை மட்டும் மிக தெளிவாக சிந்திக்க தூண்டுவகையில் அமைத்து எல்லோருமே இதனை ஏற்று கொண்டே ஆக வேண்டும் என்ற பாணியில் எழுதபட்டிருக்கும் இந்த கட்டுரைக்காக நன்றிகள்.

    Reply : 0       0

    தனியன் Sunday, 15 July 2012 07:57 AM

    துரோகிகள்..............

    Reply : 0       0

    AJ Sunday, 15 July 2012 09:04 AM

    இதே துரோக அரசியல் முஸ்லிம் கட்சிகளுக்கும் மிக பொருத்தும் . நிறைய பார்த்தும் இருக்கிறோம் .
    ஐயா சம்பந்தன் கூறியது மிக சரியான கருத்தே.

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 15 July 2012 09:31 AM

    ''இந்தக் கட்டுரைக்காக சம்பந்தன், துரோகம், துரோகி என்கிற சொற்களை கூகிள் இணையத்தின் தேடு பொறியில் டைப் செய்து பார்த்தேன்!

    'மே தினக் கூட்டத்தில் சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன் ஒரு துரோகி' என்று நூற்றுக் கணக்கான இணையத்தளங்கள் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மீது துரோகம் என்கிற முத்திரையினைக் குத்தி வைத்திருந்தன!''


    இதில் பகிடி என்னவென்றால், 'கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தொண்டை கிழியப் பேசிய அதே தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இம்முறை இடம்பெறும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கச்சை கட்டிக் கொண்டு களம் இறங்குகின்றது.

    Reply : 0       0

    leuk Sunday, 15 July 2012 10:24 AM

    துரோகங்கள் பற்றி கட்டுரை எழுதுவதற்கு ஒரு தகுதி வேண்டும். இந்தக்கட்டுரை ரவூப் ஹக்கீமை நியாயப்படுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது எதிர்காலத்தில் எப்பிடியான பின்விளைவுகளைத் தரும் என்பதை அறிவீனமாக சிந்திப்பவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். துரோகம் காலம்காலமாக எல்லார் மனதிலும் விதைக்கப்பட்ட விதை. அதன் அர்த்தம் அதன் பாதிப்பு உண்மையில் பாதிக்கபட்ட இனத்தைதான் சாரும். அரசியலை வணிகமாக பார்க்கும் தலைவர்களுக்கோ இனத்துக்கோ சாராது.

    Reply : 0       0

    AJ Sunday, 15 July 2012 12:45 PM

    சம்பந்தன் சிங்க கொடி பிடித்தது, கடந்த முறை தேர்தலில் போட்டி போடாதது இந்த முறை போடுவது என்பதுக்கு காரணம் இருக்கிறது. அது சம்பந்தன் ஐயா மற்றும் ஏனைய தமிழ் சனத்துக்கும் தெரியும். எதோ எழுத வேண்டும் என்று எழுதப்பட்ட கட்டுரையே இது.

    Reply : 0       0

    Minwar Sunday, 15 July 2012 03:46 PM

    AJ அவர்களே....சம்பந்தனின் செய்கைக்கெல்லாம் காரணம் இருக்கியதாச் சொல்றீங்களே, அப்போ ரஊப் ஹக்கீம் கடந்த கிழக்குத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதுக்கும், இந்தத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதற்கும் ஒரு காரணம் இல்லாமலா இருக்கும். த.தே.கூட்டமைப்புக்குள்ள இருக்கிற கட்சிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யும் பிரச்சினையே சம்பந்தருக்கு இன்னும் தீரல. அதுக்குள்ள மு.காங்கிரசை சேர்த்து முதலமைச்சர் கொடுக்கப் போராம் என்பது நல்ல ஜோக்தான். அவங்கவங்க மாங்காய அவங்கவங்க சோத்துல போட்டு பிசையுங்கோ. மத்தவனின் சோத்துத் தட்டில் உங்க மாங்காயை பிசைவது சரியில்லப்பா!

    Reply : 0       0

    S.p.SHANMUGANATHAN Tuesday, 17 July 2012 04:01 AM

    யார் சாணக்கீயண்

    Reply : 0       0

    Srilankan Thursday, 19 July 2012 11:56 AM

    ஐயா , இத்தனை சரியாக கருத்து பதிவு செய்திருந்தும் இன்னும் சில இனவாத ரிதியான கருத்துக்கள் வருகிறதே .... அதுதான் இன்றும் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்த உதவுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X