2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சப்ரகமுவ தேர்தல் சொல்லும் சேதி...

A.P.Mathan   / 2012 ஜூலை 16 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடும் என்ற செய்தி வரவேற்கதக்கது. இதுபோன்ற முயற்சி, ஏன் உரிமை குறித்துப் பேசும் 'இலங்கை தமிழ்' மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இதுவரை இதயசுத்தியுடன் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இதுவே, தமிழ் பேசும் முஸ்லிம் கட்சிகளுக்கும் பொருந்தும். இதற்கு எதிர்மறையாக நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்தால், அதன் வலிமை கூடும். அவற்றின் தற்போதைய தலைமைகளின் சிறுமைகள் வெளியேறும்.

அண்மை காலம் வரை எதிரும்புதிருமாக இருந்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று கட்சிகளும் சப்ரகமுவ தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளன. இதில் முக்கிய பகுதியாக தங்களில் மூத்த கட்சியான தொழிலாளர் காங்கிரஸின் 'சேவல்' சின்னத்தில் மூன்று கட்சிகளும் போட்டியிடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறுபான்மை இனமான மலையக தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறையாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் வெற்றி - தோல்வி, கள நிலை மற்றும் கட்சி தொண்டர்களின் ஒருமித்த பங்களிப்பு ஆகிய அடிப்படையிலேயே அமையும். அதிலும் குறிப்பாக புரையோடிவிட்ட தனி மனிதர் ஆசை மற்றும் அகங்காரம் எல்லா இனத்தவரையும் போலவே மலையக தமிழ் சமுதாயத்தையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக, தலைமைகளால் உணரப்பட்ட உண்மைகளை தொண்டர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

சப்ரகமுவ தேர்தலில் வெற்றியோ - தோல்வியோ, அதன் பாதிப்பு மலையக தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கும். அதனை உணர்ந்து இந்த மூன்று கட்சிகளின் தலைமைகள் தங்களது தொண்டர்களை தயார்படுத்த வேண்டும். மாறாக, தங்களது தனி நபர் ஆளுகையை மனதில் வைத்து அவர்கள் செயல்படுவார்களேயானால் அதனால் ஏற்படு;ம் அரசியல் நஷ்டங்கள் அவர்களையும் விட்டுவிடாது. இது கடந்த காலம் அளித்துள்ள படிப்பினை.

மலையக தமிழர் கட்சிகளில் குறிப்பாக தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயல்பட்டு, தங்களது மக்களுக்கு சில - பல பயன்களை பெற்றுத் தருவதை தனது அரசியல் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகவே கொண்டுள்ளது. இது அந்த கட்சியின் நிறுவனர், காலம் சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் இன்று ஆறுமுகன் தொண்டமான் வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட எழுதாத நியதி. அந்த கட்சியை ஆதரிக்கும் மக்களும் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்றே எண்ண தோன்றுகிறது.

இதற்கு மாறாக, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை எதிர்த்து எல்லாவிதமான போராட்டங்களிலும் பங்குவகிப்பதை ஒரு கடமையாகவே ஏற்று செயல்பட்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், போராட்ட குணம், பல்வேறு தருணங்களில் அந்த கட்சியின் தாரக மந்திரமாக இருந்து வந்துள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்றாவது கட்சியான மலையக மக்கள் காங்கிரஸ் கட்சி, பிரச்சினைக்கு ஒப்ப தனது முடிவுகளை எடுத்து வந்துள்ளது என்று கூறலாம். இந்த அணியில் அங்கம் வகிக்காத திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய காங்கிரஸ் தற்போதைய முயற்சிக்கு தனது தார்மீக ஆதரவை அளிக்கும் என்ற கருத்தை செய்திகள் தெரிவிக்கின்றன.

என்றாலும் கள நிலையை கணக்கில் எடுத்து, அரசு சார்ந்து மற்றும் எதிரணியில் செயல்படும் இந்த இரு கட்சிகளும் தங்களது மக்களின் எதிர்கால நலனுக்காக தற்போது கை கோர்க்க முன்வந்துள்ளது காலம் தாழ்ந்தாவது தோன்றியுள்ள வரவேற்கத் தக்க விடயம். இதுவே எதிர்காலத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஒரே கட்சியாக மீண்டும் உருவெடுக்கவில்லை என்றாலும் ஒரே அணியாக திரள்வதற்கு வழிவகுக்கும் என்றால் அதுவே தற்போதைய முயற்சிக்கு முதல் கட்ட வெற்றியாக அமையும். நாட்டின் பிற இன மக்கள் தங்களது உரிமை கோரி தொடர்ந்து போராடி வரும் வேளையில் மலையக தமிழர் மட்டும் தங்களது வாழ்வையே ஒரு போராட்டமாக இன்னமும் எதிர்கொள்ளும் அவல நிலை மாற தற்போதைய கூட்டணி முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

மலையக மக்களால் ஒன்று சேர முடியுமென்றால், நாட்டில் உள்ள தமிழ் பேசும் பிற மக்களால் ஏன் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை? காலம் சென்ற அஷ்ரஃபால் முஸ்லிம் இன மக்களை ஒரு சேர திரட்ட முடிந்தது. ஆனால் அவருக்கு பின்னால் வந்த அந்த இனத்தின் அரசியல் தலைமை ஏன் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது? பிரச்சினை பெரிதாக இல்லாத காலத்தில் ஒன்றாக செயல்பட்ட இலங்கை தமிழர்களின் அரசியல் தலைமை, மொழி பிரச்சினை உருவான காலகட்டத்தில் உடைந்தது அல்லவா உண்மை? இன்னும் சொல்லப் போனால் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலகட்டத்தில் மலையக தமிழர்களுக்கு இன்று என்றால், அதே பிரச்சினை வேறு வடிவில் தங்களையும் தாக்கும் என்று ஏன் அவர்களுக்கு புரியவில்லை.

இலங்கை தமிழர்களின் பிரிந்துபட்ட தலைமையிடம் மலையக மக்களின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது என்று பயந்து தானோ என்னவோ, காலம் சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், தனது மக்களை தனியே வழி நடத்தி செல்வேன் என்று முடிவு எடுத்தாரோ என்னவோ? இன்னும் சொல்லப் போனால் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவதே மேல் என்று கூட அவர் கருதியிருக்கலாம். காரணம், இன்று, மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விடவில்லை என்றாலும், செழிப்பாக வாழ்ந்த இலங்கை தமிழ் மக்களின் அவலநிலைக்கு அவர்கள் தள்ளிவிடப்பட்டு விடவில்லை என்பது தானே உண்மை?

உண்மை உறைக்கும், உறைக்க வேண்டும். அதனால் தானே அந்த உண்மையை நேரிட விரும்பாமல், விடுதலை புலிகள் இயக்கம் அத்தகைய உண்மையை பேசிய தமிழ் அறிவுஜீவிகளையும் காவு கொடுத்தது. அதனால், தமிழ் சமுதாயம் அடைந்துள்ள நன்மை என்ன? இன்று, இனப் போர் முடிந்து, விடுதலை புலிகள் இயக்கமும் இல்லாமல் ஆகிவிட்ட பிறகு, அடுத்த தலைமுறை தமிழினத்தை வழிநடத்த அந்த அறிவுஜீவிகளும் நடுநிலை வகிக்கும் மிதவாத அரசியல்வாதிகளும் இல்லாதே போய்விட்டனரே! இன்று இருப்பவர்களில் பலரும், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற அளவில் தானே அரசியல் செய்து வருகிறார்கள். இதிலிருந்து மாறுபட்டு அனைவரையும் அணைத்துச் சென்று அரசியல் செய்ய விழையும் தலைமையையும் ஒரம்கட்ட பார்ப்பது, கொள்கை காரணமாகவா, அல்லது தனிநபர் துதிபாடும் தங்களது அரசியல் பாரம்பரியத்தின் எதார்த்தமா?

இன்றும் காலம் கடந்துவிடவில்லை. கிழக்கு மாகாணசபை தேர்தலில் இல்லை என்றாலும், எப்போதாவது நடைபெறவிருக்கும் வடக்கு மாகாண சபை தேர்தலையாவது தமிழ் பேசும் அனைத்து மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இன்றும், வடக்கு மாகாணத்தில் இலங்கை தமிழ் இன வாக்காளர்கள் மட்டும் இல்லை. அதுபோன்றே அவர்களிடையேயும் அந்த மாகாணம் பட்டா போட்டு கொடுத்து விடப்படவில்லை. இன்று தொடங்கி, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நினைத்தால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் எப்போதுமே சுமார் 50 பேர் உள்ளனர். சிங்கள அரசியல் தலைமைகள் கொள்கை ரீதியாக எப்போதுமே பிளவுபட்டுள்ள காலகட்டத்தில், வறட்டு கௌரவத்தை மட்டுமே கொள்கையாக வைத்து அரசியல் செய்யும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமை நாடாளுமன்ற அரசியல் திட்டத்திற்கு ஒரு சேர தயார்படுத்திக் கொண்டால், அப்புறம் எதற்கு தேவை சர்வதேச சமூகம்? வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு, அயலார் உதவியை நாடி, வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவ்வாறு வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அதிலும் குறிப்பாக, அது நிலைபெறாத வெற்றியும் கூட.

You May Also Like

  Comments - 0

  • S.p.SHANMUGANATHAN Tuesday, 17 July 2012 03:49 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    KULENDRAN Thursday, 19 July 2012 08:12 AM

    நற்பணி தொடர்க........ வாழ்த்துக்கள்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X