2025 மே 20, செவ்வாய்க்கிழமை

டெசோ மாநாடு சுருதி குறைந்து விட்டதா?

A.P.Mathan   / 2012 ஜூலை 17 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருகின்ற ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு திசை திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு" என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் வடசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கின்ற ஆண்டுகளில் தமிழ் ஈழத்திற்கான உரத்தை- அதற்கான பலத்தை-அதற்கான எழுச்சியை உருவாக்கி விட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல- இந்த உலகத்தை விட்டே நான் விடைபெற விரும்புகிறேன்" என்று உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு, அந்தக் கூட்டத்தில்தான் டெசோவை மீண்டும் புதுப்பிக்கும் ஆசையை வெளியிட்டார். அந்த உரையின் இறுதியில் கூட, "தமிழ் ஈழம் பெறுவதற்கு இலங்கையிலே உள்ளவர்கள் தங்களுடைய ஒப்புதலைத் தருவதற்கேற்ற வகையில் நாம் நம்முடைய சக்தியை திரட்ட வேண்டும். அதற்கு நம்முடைய மத்திய அரசும் (இந்தியா) ஆதரவை வழங்க வேண்டும். தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ் இனத்திற்கு தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்" என்றார்.

இக்கூட்டம் முடிந்த ஐந்து நாட்கள் கழித்து தி.மு.க.வின் தலைமைக்கழகமான "அண்ணா அறிவாலயத்தில்" தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் "டெசோ"வின் கலந்தாலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதாவது ஏப்ரல் 30ஆம் திகதி நடந்த அந்தக்கூட்டத்தில் "ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையொட்டி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனிநாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன. அந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி ஐக்கிய நாடுகள் மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்தினால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்" என்று உரையாற்றினார். பிறகு டெசோ அமைப்பு ஒரு தீர்மானத்தை போட்டது. அதில், "தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திடவேண்டுமென்றும், அதற்கு நமது இந்திய பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள "தமிழ் ஈழ ஆதரவாளர்கள்" அமைப்பு இந்த தீர்மானம் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று கூறப்பட்டது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், "டெசோ அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன" என்று கேள்வி எழுப்பிய போது, "தமிழ் ஈழத்தைப் பெறுவதற்கு ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடிப்பது, அந்த வழிமுறைகளுக்கு தடையில்லாமல், மத்திய அரசும் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற வலியுறுத்துவது- இவைதான் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை" என்றார் ஆணித்தரமாக. பிறகு டெசோ அமைப்பில் அங்கம் வகிக்கும் சுப. வீரபாண்டியன் நூல்கள் வெளியீட்டு விழா மே 15ஆம் திகதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "டெசோ இயக்கம் தொடர்ந்து பாடுபட, தொடர்ந்து பணியாற்ற, ஈழத்தமிழகத்தைப் பெறுவதென்றால் ஆயுதப்போராட்டம் அல்ல- அமைதியால், அறவழியால், அன்றைக்கு தந்தை செல்வா வழியில் எங்களை நாங்களே பலிகொடுத்துக் கொண்டாலும் கவலையில்லை, ஈழம் பெற்று அங்குள்ள தமிழர்களுக்கு, சகோதரர்களுக்கு, அங்குள்ள சகோதரிகளுக்கு, தாய்மார்களுக்கு அண்ணன், தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவோம்" என்று உணர்ச்சிகரமான உரைய நிகழ்த்தினார். இவ்வளவு தீவிரமாக "டெசோ" மாநாடு நடத்தப்படுவதே, தனித் தமிழ் ஈழம் பெறுவதற்குத்தான் என்று ஆவேசமாகவே பேசி வந்தார். அந்த அமைப்பில் இருந்தவர்களும் பேசி வந்தார்கள்.

முதலில் விழுப்புரத்தில்தான் டெசோ மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளையும் கூட அந்த மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி கவனிக்க தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டது. அதற்கு ஒரு காரணம் டெசோ மாநாட்டுப் பணிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதியே நேரடியாகப் பார்வையிட்டு, அவ்வப்போது அறிவுரைகளை வழங்க விரும்புகிறார் என்று சொல்லப்பட்டது. விழுப்புரத்தில் மாநாடு வைத்தால் அடிக்கடி போய் வருவதற்கு சிரமமாக இருக்கும் என்ற சிந்தனையில் சென்னைக்கு மாற்றினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரவேற்பு குழுவும் அமைக்கப்பட்டது. 

இதுவரை டெசோ பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி சொல்லி வந்த கருத்துக்கள் மற்ற கட்சியினரைக் கூட மிரள வைத்தது. சென்னையில் நடைபெறும் மாநாடு தமிழகத்தில் ஈழப்பிரச்சினையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தனி ஈழம் என்ற கோரிக்கையை தி.மு.க. போன்ற பெரிய கட்சியே முன்வைத்து அதற்காக தனியாக மாநாடு நடத்துவது ஈழத்தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து தமிழகத்தில் அரசியல் பண்ணி வரும் வைகோ, திருமாவளவன், டொக்டர் ராமதாஸ், சீமான், பழ நெடுமாறன் போன்றவர்களுக்கு சிக்கல் உருவாகும் என்றே கருதப்பட்டது. குறிப்பாக வைகோவிற்கு பெரும் பிரச்சினை. அவரது கட்சிக்கு இருக்கின்ற ஒரே அடிப்படை வாக்கு வங்கி ஈழத்தமிழர் பிரச்சினையைப் பற்றி பேசுவதால் உள்ள தமிழர் ஆதரவு மனப்பான்மையில் உள்ள வாக்காளர்கள்தான். டெசோ மாநாட்டில் பங்கேற்று, அந்த அடிப்படை வாக்கு வங்கியையும் தி.மு.க.விற்கு தாரை வார்க்கத் தயாராக இல்லை. ஆனாலும் டெசோ மாநாட்டால் எங்கே தங்கள் வாக்கு வங்கிக்கு சேதாரம் வந்து விடுமோ என்று அஞ்சினார். "நாம் தமிழர் கட்சி" தலைவர் சீமான் கூட இனி இப்பிரச்சினையில் தி.மு.க.வை விட என்ன பேசி விடப் போகிறோம் என்று யோசிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் டெசோவின் மாநாட்டு திகதியை அறிவித்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. உடனே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரை வந்து சந்தித்தார். அதன் பிறகு டெசோ மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் பற்றிய 16 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது ஏறக்குறைய டெசோ மாநாட்டின் "வெள்ளை அறிக்கை" போன்று இருக்கிறது. இலங்கை தமிழர்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கிறார்கள், அவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி போதவில்லை, வேலை வாய்ப்பு இல்லை, தமிழர் பகுதியில் முடி திருத்தகத்தைக் கூட இராணுவமே நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது. தமிழர் பகுதிகள் சிங்களர்மயமாக்கப்படுகின்றன- என்பது உள்ளிட்ட ஏழு முக்கிய அம்சங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில் "தனி ஈழம்" என்று நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், "இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ள இரண்டாவது பரிந்துரையும், "ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை அரசின் மீது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்ற எட்டாவது பரிந்துரையும், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரும் நாடுகளின் குழுவினை இந்தியா வழி நடத்த வேண்டும்" என்ற 9ஆவது பரிந்துரையும் டெசோ மாநாட்டின் முன்பு வைக்கப்படுகிறது.

டெசோ கூடுவதே தனி ஈழம் பெறுவதற்குத்தான் என்று கடந்த மூன்றரை மாதங்களாக பிரசாரம் செய்து வந்த தி.மு.க. தலைமை இப்போது திடீரென்று அந்த வார்த்தையை தவிர்த்து விட்டு, மறைமுகமாக தமிழர்களுக்கு அதிகாரம் வேண்டும், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், பொருளாதார தடை விதிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் டெசோ மாநாட்டில் விவாதிக்கப் போகிறது. நேரடியாக தனி ஈழம் என்று கூறாமல், இப்படி சுற்றி வளைத்து தி.மு.க. தலைமை பேசுவதை பார்த்து வைகோ உள்ளிட்ட தமிழ் ஈழ ஆதரவு தலைவர்கள் சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வீறு கொண்டு புறப்பட்ட டெசோ மாநாடு இப்போது தி.மு.க. தலைவரின் அறிவிப்பிற்கு பிறகு சற்று சுருதி குறைந்து காணப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் டெசோ மாநாடு பற்றிய பணிகள் முழுவேகத்தில் தொடங்கிவிடும் என்பதே தி.மு.க. வட்டாரப் பேச்சு. "தனி ஈழமோ" அல்லது, அதே கோரிக்கையை வேறு விதமாக முன் வைப்பதோ, ஈழப்பிரச்சினையை தி.மு.க.வே கையிலெடுப்பதால், தமிழக அரசியல் களம்  சூடுபிடிக்கும். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபிறகு, நேரடியாக தமிழ் ஈழம் என்று கூறுவதை தவிர்த்துள்ளார். அதே நேரத்தில் "ஓகஸ்ட் 12ஆம் திகதி நடக்கும் டெசோ மாநாட்டின் வாயிலாக சொல்லப்படும் தீர்வுகள், ஆலோசனைகளுக்குப் பிறகும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் மாறாமல் தமிழர்கள் அதே கஷ்டத்திற்கு உள்ளானால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க மீண்டும் டெசோ மாநாடு நடத்தப்படும்" என்று ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த "டெசோ" மாநாட்டின் சுருதி குறைந்தாலும், போகப் போக காரம் கூடும் என்பதே தமிழக அரசியலில் இன்றைய நிலவரமாக இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X