2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இனவாரி அரசியல் வேறு, இனவாத அரசியல் வேறு

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காவியுடை பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவும் புலிகளின் பயங்கரவாதத்தை அடக்கிய அரசாங்கம் இந்த காவியுடை பயங்கரவாதத்தையும் அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருந்த கருத்தொன்று சுமார் ஒரு வாரமாக அரசியல் அரங்கில் சற்று சலசலப்பை எற்படுத்தி இருந்தது.

அமைச்சர் தமது கூற்று தொடர்பாக பௌத்தர்களிடமும் பௌத்த பிக்குகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டதை அடுத்து அந்த சலசலப்பு - மழை ஓய்ந்ததைப் போல் ஓய்ந்து விட்டது.

அமைச்சரின் கூற்று தவறானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் சில பிக்குகள் - முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்ட போதிலும் பிக்குகள் எல்லோரும் மோசமானவர்கள் என்று பொதுமைப்படுத்த முடியாது. நீண்ட காலமாக சிறுபான்மை மக்களுக்காக பரிந்து பேசும் பிக்குகளும் நாட்டில் இருக்கிறார்கள்.

அதேவேளை இந்தக் கூற்று பொதுவாக பௌத்தர்களை நோவினை செய்யக்கூடியது என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது. இந்தக் கூற்றானது முஸ்லிம் பயங்கரவாதம் என்று மேற்குலக ஊடகங்கள் பாவிக்கும் பதத்தைப் போன்ற பொதுமைப்படுத்தும் பதமாகும். நல்லிணக்கத்தை தேடி நாடு ஏங்கிக் கொண்டு இருக்கம் ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கூற்று எவ்வகையிலும் பொருத்தமற்ற கூற்றாகும்.

எல்லாவற்றையும் விட இந்தக் கூற்று பயங்கரமானது என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது. ஏனெனில் எந்தவொரு நாட்டிலும் பேரினவாதமானது வெறி கொண்டால் நிலைமை மிகவும் மோசமானதாகும். அதிர்ஷ்டவசமாக தற்போது நாட்டில் நிலவும் பல காரணிகளின் விளைவாக அவ்வாறானதோர் மோசமான நிலைமை ஏற்படவில்லை.

எவ்வாறாயினும் இந்த தவறான கருத்தை வெளியிட்டதை அடுத்து அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட சகலரும் நடந்து கொண்ட முறை பாராட்டுக்குரியது என்றே கூற வேண்டும். பிரச்சினையை நீடிக்க விடாமல், மழுப்பிக் கொண்டு இருக்காமல் அமைச்சர் - பௌத்தர்களிடம் மன்னிப்பு கேட்க முன் வந்தமை பொருத்தமான செயலாகவே தெரிகிறது.

அவ்வாறு மன்னிப்பு கேட்பது முஸ்லிம்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்தும் செயலாக பலர் கருதலாம். அதில் நியாயம் இருக்கிறது தான். ஆனால் முதலாவதாக அவர் பௌத்தர்களை நோவினை செய்யாதிருக்க வேண்டும், ஆத்திரமூட்டாதிருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் அவ்வாறு செய்தால் அதற்கு அடுத்து செய்ய வேண்டியது பௌத்தர்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பது அல்லது அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகும்.

ஓர் அரசியல்வாதி இவ்வாறு மன்னிப்பு கேட்பதானது பெரும் தைரித்தை வரவழைத்துக் கொண்டு செய்ய வேண்டியதொன்றாகும். ஏனெனில் இதனால் ஏற்படும் தலைகுனிவை பாவித்து மு.கா.விற்கு எதிரான ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் அவரை தாக்கலாம். அவர்களும் இதுபோன்றவற்றைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை இவ்வாறு மன்னிப்பு கேட்பதற்கு ஒருவரிடம் பெருந்தன்மையும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை விடுங்கள், பொதுவாக எவருமே தாம் செய்த தவறை ஏற்கவோ அல்லது அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ முன்வருவதில்லை. வழமையாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் தமது உரையை திரிபுபடுத்தியதாக ஊடகங்களைத் தான் குறை கூறுவார்கள்.

அமைச்சர் ஹக்கீம் மன்னிப்புக் கேட்பதற்கு நிர்ப்பந்தமே பிரதான காரணமாகும். ஆனால் பௌத்தர்கள் மோசமாக நடந்து கொள்ளாத நிலைமையில் மன்னிப்புக் கேட்பதற்கு ஓரளவு தைரியமும் பெருந்தன்மையும் இருக்கத் தான் வேண்டும்.

இந்த விடயத்தில் பௌத்தமக்களும் பிக்குகளும் நடந்து கொண்ட முறையையும் பாராட்டியே ஆக வேண்டும். தாம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றுவதனால் அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கலாம். பிற சமூகத்தவர்கள் இல்லாத இடங்களில் உரையாற்றும் போது ஏனைய சமூகத் தலைவர்களும் இவ்வாறு பேசுவதுண்டு.

கல்முனையில் நிகழ்த்திய தமது உரை சர்ச்சைக்குரியதாகிவிடும் என்றோ பௌத்தர்களிடம் சென்றுவிடும் என்றோ அமைச்சர் ஹக்கீம் நினைத்திருக்க மாட்டார். ஆனால் அது சிங்கள தலைவர்களிடம் சென்றடைந்தது. அரசியல்வாதிகள் உரையாற்றும் போது இதுபோன்றவற்றை எதிர்ப்பார்க்க வேண்டும்.

ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களே இந்த உரைக்கு முதன் முதலில் பதிலளித்தார்கள். ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் - அமைச்சருக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் தமது சமயத்தையே பின்பற்றுவதில்லை என்றார். அமைச்சர் ஹக்கீம் வாக்குகளுக்காக கிழக்கில் வைத்து இவ்வாறு உரையாற்றினாலும் நாட்டில் ஏனைய பகுதிகளில் பேசும்போது இன ஐக்கியத்தை வலியுறுத்துவதாக அக் கட்சியைச் சேர்ந்தவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கூறியிருந்தார்.

கடந்த வாரம் கொழும்பில் மாளிகாகந்தை விகாரையில் இப்தார் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அங்கு உரையாற்றிய கம்மன்பில - முஸ்லிம் நாடுகளே இலங்கையின் பலம் என்றும் இந்த முஸ்லிம் நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை சிதைக்கும் வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் செயற்படுவதாகவும் கூறினார்.

இவர்களுடைய கருத்துக்களில் சிலவற்றை சிலர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவ் உரைகளில் காணக்கூடிய சிறப்பம்சமாக அவை பலர் அஞ்சியதைப் போல் பௌத்தர்களை தூண்டிவிடும் வகையில் அமையவில்லை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

இது தேர்தல் காலமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று சிலர் கூறலாம். மாகாண அமைச்சர் கம்மன்பில கூறியதைப் போல் முஸ்லிம் நாடுகள் இலங்கையின் பலமாக இருப்பதே காரணம் என்று மற்றொருவர் கூறலாம். அவை காரணமல்ல, நல்லிணக்கத்தின் தேவையே காரணம் என வேறொருவர் கூறலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் குழப்பக்காரர்களாக நடந்து கொள்ளாமை வரவேற்கத்தக்கதே.

முஸ்லிம்களில் மூன்று சாரார் அமைச்சர் ஹக்கீமின் உரையை கேட்டு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அவர்கள் ஹெல உருமய தலைவர்களின் உரைகளை கேட்டு கவலையும் அடைந்திருப்பார்கள்.

அவர்களில் ஒருசாரார் தம்புல்லை போன்ற இடங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் ஆத்திரமடைந்து பௌத்தர்களையும் நோவினை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். மற்றொரு சாரார் ஹக்கீம் - சிங்களவர்களிடம் 'வாங்கிக் கட்டிக் கொள்ள' போகிறார், அவ்வாறு வாங்கிக் கட்டிக் கொள்ளத் தான் வேண்டும் என்று நினைக்கும் அவரது எதிரிகளும் போட்டியாளர்களுமே. மூன்றாவது சாரார் இதை பாவித்து மொத்தத்தில் மு.கா. அரசியலே இனவாதமாக சிங்கள மக்கள் முன் எடுத்துக் காட்டி அவர்களின் ஆதரவை பெற நினைக்கும் அரசியல்வாதிகள்.

ஏனைய சமூகங்களை நோவினை செய்யும் வகையில் நடந்து கொள்வது இனவாதம் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் அமைச்சர் ஹக்கீம் காவி உடை பயங்கரவாதம் என்று பொதுமைப் படுத்தி பேசியமை இனவாதமே. ஆனால் சிலர் கூறுவதைப் போல் மொத்தத்தில் மு.கா. அரசியல் இனவாத அரசியல் என்று கூறுவது முறையல்ல.

மு.கா. அரசியலும் ஹெல உருமய அரசியலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலும் அடிப்படையில் இனவாரி அரசியலேயன்றி இனவாத அரசியலல்ல. ஆனால் இனவாத அரசியலுக்கும் இனவாரி அரசியலுக்கும் இடையில் மயிரிழைப் போன்ற வித்தியாசமே உள்ளது. எனவே இம் மூன்று கட்சிகளிலும் பலர் பல சந்தர்ப்பங்களில் வரம்பை மீறி இனவாதம் பேசுவதுண்டு.

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Tuesday, 14 August 2012 03:13 AM

    என்னமோ பேசவந்து என்னமோ எழுதி ஹக்கீமுக்கு வக்காளத்து வாங்கிறது நன்றாக புரிகிறது ஆனா உங்க வக்காளத்தால புலச்சிகிற நிலையில ஹக்கீம் இல்லை.

    Reply : 0       0

    vaasahan Wednesday, 15 August 2012 05:37 AM

    விடுங்க சார். ஹகீம் மட்டுமல்ல நீங்களும் கவனமாக எழுதியுள்ளீர்கள். ஹகீம் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல. பள்ளிவாசல்கள் ஒன்று இரண்டு அல்ல இன்றுவரை ஏழு பள்ளஜகளின் உள்ளே பன ஓதப் போனனவர்களை மட்டுமாகுதல் என்ன பெயர் கொன்டு அழைப்பதாம்?

    Reply : 0       0

    jawa Wednesday, 15 August 2012 07:12 AM

    என்னதான் சொல்றீங்க. குழப்புகிறார் மைலாட்

    Reply : 0       0

    dean Wednesday, 15 August 2012 11:05 PM

    However your message was very clear for everybody. Please go ahead with more messages and appreciate your support for the community.
    I believe his apologized has been preventing some disaster. Thank god and I love the way you wrote the message. Please keep on move.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X