2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்திய பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தவிக்கும் கட்சிகள்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

"2-ஜி அலைக்கற்றை" ஊழலைத் தொடர்ந்து புதிதாக முளைத்திருக்கிறது "கோல்கேட்" முறைகேடு. ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று இந்திய தலைமை கணக்காயர் கொடுத்துள்ள ஒடிட் அறிக்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான "பிரசார அஜெண்டா" இப்போதே எதிர்க்கட்சிகளுக்கு "நிலக்கரி வடிவில்" கிடைத்தாகி விட்டது. பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கி விட்டாலும், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாமல் ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே அல்லல்படுகின்றன. ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு மாற்றாக வர விரும்பும் பா.ஜ.க.விற்குமே இப்போதைக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்பது தெரியவில்லை. இரு கட்சிகளுமே தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு போடப்பட்டுள்ள "மர்ம முடிச்சுகளை" அவிழ்க்க முடியாமல் தவிக்கின்றன. இந்த இரு அகில இந்தியக் கட்சிகளுக்கும் மாற்றாக வர நினைக்கும் மூன்றாவது அணியோ தலைமையேற்று நடத்துவதற்கு சரியான தலைமை கிடைக்காமல் தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்காங்கே உள்ள மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமே இதற்கு காரணமா? என்றால் அது மட்டும் அல்ல காரணம். காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மூன்றாவது அணி ஆகியவற்றிற்குள் நடக்கும் "உள்குத்து அரசியல்" போன்றவைதான் முக்கிய காரணம்!

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் பொருளாதார சீர்திருத்த மேதையான டாக்டர் மன்மோகன் சிங்கை கடந்த எட்டு வருடங்களாக நம்பியிருந்து விட்டது. அரசாங்கத்தை இவரும், கட்சியை சோனியா காந்தியும் வழிநடத்துகிறார்கள். தேர்தலில் கட்சிக்கு வெற்றி தேடித் தர வேண்டிய பொறுப்பில் உள்ள தலைவரிடம் பிரதமர் பதவி இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டரிடமும், நிர்வாகிகளிடமும் தொடர்பில் இல்லாத ஒருவரை எட்டு வருடங்கள் பிரதமராக வைத்து விட்டதால், கட்சியின் தேர்தல் செயல்திட்டங்களுக்கு ஏற்றபடி பிரதமர் மன்மோகன்சிங்கை சோனியாவால் செயல்பட வைக்க முடியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ரவுண்ட் (அதாவது 2004 முதல் 2009 வரை) அரசு ரீதியாக சோனியாவின் முழுக் கட்டுப்பாட்டில் பிரதமர் இருப்பது போல் தோற்றம் கிடைத்தது. அதற்கு அப்போது ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள். அமெரிக்காவுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதை விலக்கிக் கொண்ட பிறகு, முழுக்க முழுக்க "பிரதமரின் அஜெண்டா" படி முதல் ரவுண்டில் வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே செயல்பட்டது. ஆனால் இரண்டாவது முறையாக வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (2009 முதல் இன்றைய தினம் வரை) காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே இருக்கிறது. ஆட்சி அமைக்கும் போதே தி.மு.க. சுட்டிக்காட்டியவர்களை அமைச்சராக்க மன்மோகன்சிங் பிடிவாதமாக மறுத்ததே இதற்கு சரியான உதாரணம். அந்த நேரத்தில் ராகுல் காந்தியே ஒரு முறை மீனவர்களுக்கு தனி இலாகா மத்திய அமைச்சரவையில் உருவாக்கப்படும் என்று தமிழகத்தில் பேசிய போது, உடனடியாக "அப்படியேதும் உத்தேசக் கருத்துக்கள் மத்திய அரசிடம் இல்லை" என்று பிரதமர் அலுவலகமே பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இப்படி கடந்த காலத்தில் நடைபெற்ற அடுத்தடுத்த விடயங்களை அசைபோட்டால், சோனியா சொல்லைத் தட்டாத பிரதமர் என்ற ஸ்தானத்திலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் சற்று விலகி நிற்கிறார் என்பதைக் காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளிடம் பிரதமர் நடந்து கொள்ளும் விதத்தில் கூட இது பிரதிபலிக்கிறது. காங்கிரஸை நான்கு முக்கிய கட்சிகள் ஆதரிக்கின்றன. மேற்குவங்கத்தில் ஆட்சி புரியும் மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ். உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சி செலுக்கும் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி. இன்னொன்று கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம். நான்காவதாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி. இந்த நாலு கட்சிகளில் தி.மு.க. தவிர மற்ற அனைத்தும் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸை நம்பர் ஒன் எதிரியாக பாவிக்கும் கட்சிகள். மம்தா பாணர்ஜி, முலயாம் சிங் யாதவ், சரத்பவார் ஆகிய மூவருமே வெவ்வேறு காலகட்டத்தில் சோனியா காந்தி பிரதமராகி விட்டால், காங்கிரஸ் கட்சி தங்கள் மாநிலங்களில் வலுப்பெற்று விடும் என்று வியூகம் வகுத்துச் செயல்பட்டவர்கள். இப்போதும் செயல்படுபவர்கள். ஆனால் சோனியாவை முன்னிறுத்தினால் மட்டுமே தமிழகத்தில் தன் கட்சிக்கு வாக்கு வங்கி ரீதியாக லாபம் என்று நினைத்து 2004 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே கூட்டணி வைத்திருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அந்தவகையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நம்புவதை விட, கருணாநிதி சோனியாவையே அதிகம் நம்புவார். ஆனால் மற்ற மூவரைப் பொறுத்தமட்டில் (முலயாம் சிங் யாதவ், சரத்பவார், மம்தா பாணர்ஜி) "டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருக்கட்டும். அதுவே எங்களுக்கும் எங்கள் கட்சிகளுக்கும் நல்லது" என்ற சிந்தனையில் செயல்படுபவர்கள். அதனால்தான் சரத்பவார், முலயாம் சிங் யாதவ், மம்தா பாணர்ஜி போன்றோர் எத்தனை போர்க்கொடி தூக்கினாலும், அவர்களுடன் அன்பாகப் பேசுகிறார் பிரதமர். திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். ஆனால் தி.மு.க.வுடன் அந்த நெருக்கம் இல்லை. குறிப்பாக சி.பி.ஐ. அமைப்போ, அமலாக்கப் பிரிவோ தி.மு.க.வை பார்த்துக் கொள்ளும் என்ற சிந்தனையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் கூட, "கலைஞர் டி.வி கடன் வாங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சில கம்பெனிகள் போலியானவை" என்று அமலாக்கப்பிரிவு இயக்குநர் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பு பேசியது பத்திரிகைகளுக்கு "லீக்" செய்யப்பட்டது இந்த வகை அரசியலே! காங்கிரஸ் என்ற கட்சியும், அக்கட்சி நம்பியிருக்கும் பிரதமரும் வெவ்வேறு திசையில் பயணிக்கும் காட்சிகள் சோனியாவிற்கும் தெரிகிறது. ஆனால் "நாம் நினைத்தாலும், இந்த நேரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வதில், பிரதமருக்கு ஆதரவான கூட்டணிக் கட்சிகள் நம்முடன் நிற்காது" என்ற உண்மை நிலையும் சோனியாவிற்குப் புரிகிறது.

ஆனால் கட்சிக்குள் "பிரதமர் மன்மோகன்சிங்கை முன்னிறுத்தி" இன்னொரு முறை வாக்குப் பெற முடியாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதை சமன்செய்ய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மாற்றாக ராகுல்காந்தியை முன்னிறுத்தும் எண்ணம் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கிறது. ஆனால் அவர் உத்தரபிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், தமிழகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கடைப்பிடித்த "தேர்தல் வியூகங்கள்" கைகொடுக்காததால், ராகுல் காந்தியை கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் "தோற்றுப் போன கிரிக்கெட் கப்டனை"ப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். ஆந்திராவில் கூட சொந்தக் கட்சிக்குள் பெரும் பிரச்சினை. ஆகவே "ராகுல் மேஜிக்" வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கை காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் "பசுமையாக" இல்லை. அது தெரிந்துதான், "ராகுல் காந்தி அமைச்சரவையில் சேர வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன்" என்று பிரதமர் மன்மோகன்சிங் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஆனால் அதிலும் சிக்கல் காத்திருக்கிறது. ராகுலை அமைச்சராக்கினால், மன்மோகன்சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்டுள்ள சுமையையும், அவருடைய நிர்வாக பிரச்சினைகளையும் ராகுலே தூக்கிச் சுமக்க வேண்டிய கட்டாயம் எழும். அதுவே, ராகுல் காந்தியை 2014இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கும் சங்கடமாக அமையும் என்ற அச்சத்தில் தவிக்கிறது காங்கிரஸ் கட்சியின் தலைமை. ஆகவே கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக கட்சியின் உள்கட்டமைப்புடன் தொடர்பில்லாத ஒருவரை பிரதமராக்கிய பலனை காங்கிரஸ் கட்சி இன்று "ஜோராக" அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் மன்மோகன்சிங்கா, ராகுல் காந்தியா என்ற முடிவை எடுக்க முடியாமல் திரிசங்க சொர்க்கத்தில் நிற்கிறது.

பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளர்களுக்கான போட்டிக்குப் பஞ்சமில்லை. அத்வானி, நரேந்திரமோடி, சுஸ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி என்று இப்போதே அரை டஜன் தலைவர்கள் இருக்கிறார்கள். அக்கட்சிக்குள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது ஆர்.எஸ்.எஸ். இயக்கமாக இருந்தாலும், அது தேர்தலுக்குப் பிறதே சாத்தியமாகும் நிலைமை. தனியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலையில் உள்ள பா.ஜ.க., காங்கிரஸை விட அதிகமாகவே கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கிறது. ஏனென்றால் தென் மாநிலங்களில் செல்வாக்காக இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் "எடியூரப்பா" வடிவில் அக்கட்சி சோதனையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு, அக்கட்சியுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளே பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவை எடுக்கும் சக்தி படைத்தவை. இதற்கிடையில் திடீரென்று "குஜராத்தை (நரேந்திரமோடி ஆளும் மாநிலம்) விட பீஹாரில் (நிதிஷ்குமார் ஆளும் மாநிலம்) சிறந்த நிர்வாகம் நடக்கிறது" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியிருப்பது பலரது விழிகளை உயர்த்தியிருக்கிறது. ஏனென்றால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த க்ரீன் சிக்னலை சில மாதங்களுக்கு முன்புதான் பா.ஜ.க. போட்டு வைத்ததும், அதற்கு பா.ஜ.க.வின் முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரான பீஹாக் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்ததே. நிதிஷ்குமார் "நான் அந்தப் பதவிக்கான போட்டியில் இல்லை" என்று அவர் பேட்டி கொடுத்திருந்தாலும், நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக்கக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறார். ஆகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளரை பா.ஜ.க.வே முடிவு செய்து விட முடியாது என்ற சிக்கல் முளைத்து விட்டது. அதையும் மீறி "எங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியே" என்று பா.ஜ.க. அறிவித்தால், தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருக்கும் பல கூட்டணிக் கட்சிகள் வெளியேறும் அபாயம் உருவாகும். அதை மனதில் வைத்துத்தான் சமீபத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி, "2014இல் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வை சாராத ஒருவர் பிரதமராக வர வாய்ப்பு இருக்கிறது" என்று ஆருடம் கூறினார். "ஆட்சியிலிருக்கும் கட்சியான காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்" என்று அரசியல் செய்து வரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் இப்படிச் சொன்னது அக்கட்சியினரையே அதிர வைத்து விட்டது. ஆகவே பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தன் விருப்பத்திற்கு ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போகிறதா அல்லது கூட்டணிக் கட்சிகளின் கருத்தையும் எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் அறிவிக்கப்படுகின்ற பிரதமர் வேட்பாளர் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக இருக்கப் போகிறாரா என்பது இன்னும் பிடிபடவில்லை. இந்த நிலைமையைப் பார்த்தால், பா.ஜ.க.வும் யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்ற முடிவுக்கு வர முடியாமல் திண்டாடுகிறது.
"காங்கிரஸும் வேண்டாம். பா.ஜ.க.வும் வேண்டாம்" என்று மூன்றாவது அணி இந்திய தேர்தல் களத்தில் எப்போதுமே வலுவாக இருக்கும். அது ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் உயிருடன் இருந்த போதும், ஜோதிபாசு போன்றவர்கள் "ஆக்டீவ்" அரசியலில் இருந்த போதும் நடந்தது. ஆனால் இப்போது கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கம் மாநிலத்திலேயே தோற்று, தங்களின் ஆட்சியை மம்தா பாணர்ஜியிடம் கொடுத்துவிட்ட பிறகு "மூன்றாவது அணிக்கு தலைமையேற்கும்" முக்கியத்துவத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் இழந்து விட்டன. அதிலும் குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் காரத் தலைமையில் செயல்படத் தொடங்கிய பிறகு, "காங்கிரஸ், பா.ஜ.க. வேண்டாம். அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளும் வேண்டாம்" என்ற ஒரு கொள்கை முடிவை எடுத்து அறிவித்தார். குறிப்பாக அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு பிறகு இப்படியொரு முடிவை வெளிப்படுத்தினார். முன்பெல்லாம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தமிழகத்தில் உள்ள நாகர்கோயில் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவார். அருகில் இருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் பேசுவார். ஏனென்றால் அந்த மாநிலத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநிலக் கட்சியுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணியைத் தொடருவார்கள். ஆனால் பிரகாஷ் காரத் எடுத்துள்ள இந்த "கொள்கை முடிவு" காங்கிரஸுடன் நட்பாகவோ கூட்டணியாகவோ இருக்கும் முலயாம் சிங் யாதவ், மாயாவதி, சரத்பவார், கருணாநிதி, பரூக் அப்துல்லா, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை அரவணைத்து ஓரணியில் அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் முன்பொருமுறை "நாங்களும் மூன்றாவது அணி அமைக்கிறோம்" என்று அறிவித்து, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் இணைந்து அரசியல் செயல்திட்டங்களை முன்னிறுத்தினார் பிரகாஷ் காரத். ஆனால் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிறுத்திய சங்மாவையே பிரகாஷ் காரத் ஆதரிக்கவில்லை. அதனால் அவர் முன்னெடுத்துச் சென்ற அந்த மூன்றாவது அணித் திட்டமும் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்குறியுடன் திணறி நிற்கிறது. இதற்கு முன்பு சொன்னது போல் "காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத ஒருவரை பிரதமராகக் கொண்டு வருவோம்" என்று பிரகாஷ் காரத்தால் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அறிவிக்க முடியவில்லை. மேற்கு வங்க மாநிலத்திலேயே பலம் இழந்த கம்யூனிஸ்டுகள் தலைமையில் மூன்றாவது அணிக்கு வர ஜெயலலிதா, நவீன் பட்நாயக், முலயாம் சிங் யாதவ், மாயாவதி, கருணாநிதி, சரத்பவார், பரூக் அப்துல்லா, லாலு பிரசாத் போன்றவர்கள் எல்லாமே தயக்கம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. இதனால் மூன்றாவது அணியும் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் மூச்சு முட்டி நிற்கிறது.

இந்நிலையில் வருகின்ற 2014 நாடாளுமன்ற தேர்தல் "யாரிடமுமே பிரதமர் வேட்பாளர் இல்லை" என்ற இலக்கை மனதில் வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள "செல்வாக்குப் பெற்ற மாநிலக் கட்சிகளை" ரொம்பவும் அதிகமாக நம்ப வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கின்றன. ஆகவே 1996 முதல் 1998 வரை அடிக்கடி தேர்தலைச் சந்தித்த அரசியல் காலகட்டத்தை நோக்கி இந்திய அரசியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா எதிர்கொண்டுள்ள இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பிரதமராக வருபவர் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் வரும். இப்படி மாநிலக் கட்சிகளின் அதிகபட்ச தயவில் ஒரு மத்திய அரசு நடப்பது அப்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X