2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இஸட் புள்ளியும் தரப்படுத்தலும் இனப்பிரச்சினையும்

Super User   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      

கல்விப் பொது தராதர (உயர் தர) பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களை தரப்படுத்தும் இஸட் புள்ளி முறை இப்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. அப் புள்ளி முறை மட்டுமன்றி உயர் தர பரீட்சையும் அதற்குத் தோற்றும் மாணவர்களும் அந்த நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இஸட் புள்ளி முறையை எவரும் தரப்படுத்தல் முறையாக வர்ணிப்பதில்லை. ஆனால் உண்மையிலேயே இது ஒரு வகையிலான தரப்படுத்தல் முறையே. மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றும் பாடங்களுக்கு அவர்கள் பெறும் புள்ளிகளையும் அவர்கள தோற்றிய பாடங்களுக்கு வழங்கப் படும் பெறுமதியையும் மொத்தமாக கவனத்தில் கொண்டு தான் இஸட் புள்ளி வழங்கப் படுகிறது. எனவே அது மாணவர்களை தரப்படுத்தும் முறை என்பதில் சந்தேகமே இல்லை.

இதற்கு முன்னர் தரப்படுத்தல் என்ற பெயரிலேயே நடைமுறையில் இருந்த புள்ளி முறை முப்பது ஆண்டு காலமாக நீடித்த கொடிய யுத்தததிற்கும் முக்கிய காரணமொன்றாகியது. இனப்பிரச்சினையைப் பற்றிப் பேசும் எவரும் 1973ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க பிரதமராகவும் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் கல்வி அமைச்சராவும் இருந்த காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறையைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் இருப்பதில்லை.

கடந்த வருடம் உயர் தரப் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களுக்கான இஸட் பள்ளி கணக்கிடப்பட்ட முறை பிழையென ஒரு சிலர் குற்றஞ்சாட்டியதிலிருந்து தான் இம்முறை பிரச்சினை ஆரம்பித்தது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்கவும் அதனை ஏற்கவோ குறைந்தபட்சம் அம்முறைப்பாட்டை பரிசீலிக்கவும் தயாராக இருக்கவில்லை.

இஸட் புள்ளி முறையை அறிமுகப்படு;துவதில் முக்கிய பங்கு வகித்த பேராசிசரியர் தட்டில்லும் இம்முறை இஸட் புள்ளி கணிப்பீடு பிழையானது என்றார். அமைச்சர்கள் அதனை ஏற்கவும் இல்லை. எனவே, பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத சில மாணவர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அவர்களின் வாதத்தை ஏற்று இஸட் புள்ளிகளை புதிதாக கணீப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவு பிரப்பித்தது.

அதிகாரிகள் அதற்கு இணங்க புதிதாக இஸட் புள்ளிகளை கணிப்பீடு செய்யவே அதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் பாதிக்கப்படாத சில மாணவர்கள் இப்போது புதிதாக வழக்கு தெடர்ந்துள்ளனர். இனவே இப்போது இஸட் புள்ளி முறையே பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதோடு அதன் மீதான நம்பிக்கையையும் மாணவர்கள் இழநநது வருகின்றனர்.

இஸட் புள்ளி முறைக்கும் 1973ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் முறைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள காரணம் பல்கலைகழகங்களில் சேர்ந்து கொள்ள தகைமை பெறும் சகல மாணவர்களையும் பல்கலைகழகங்களில் சேர்த்துக் கொள்ள அரசாங்கங்கள் நடவடிக்ககை எடுக்காமையே. எனவே பல்கலைகழகளில செர்ந்து கொள்வதற்கான உண்மையான தகைமையை விட்டு விட்டு அரசாங்கங்கள் வேறு செயற்கையான தகைமைகளை உருவாக்கினறன. 1973 ஆம் ஆண்டு தரப் படுத்தல் மற்றும் இஸட் புள்ளி முறை அவ்வாறான செயற்கை தகைமைகளாகும்.

1973ஆம் ஆண்டு தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் கீழ் பல்கலைகழகங்களில் மாணவர்களை சேர்த்தக் கொள்வதற்காக கோட்டா முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில இருந்து முன்னரை விட கூடுதலான எண்ணிக்கையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணி;க்கை குறைந்தது. ஏற்கெனவே 'தனிச் சிங்கள' சட்டத்தினால் எதிர்க்காலத்தைப் பற்றிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த தமிழ் இளைஞர்கள் கொதித்தெழ இது காரணமாகியது. தரப்படுத்தலினால் மொனரகலை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களைப் போலவே முல்லைத்தீவு போன்ற தமிழ் மாவட்டங்களும் நன்மை அடைந்த போதிலும் தமிழ் பிரதேசங்களில் படித்தவர்களின் பிரச்சினையே மேலோங்கி நின்றது.

அனேகமாக பல நாடுகளில் விடுதலைப் போராட்டஙகள், பிரிவினைப் போராட்டங்கள் மற்றும் புரட்சிகள் மாணவர் அல்லது இலைஞர் போராட்டங்களாகவே ஆரம்பித்துள்ளன. தென் பகுதியில் 1971ஆம் ஆண்டிலும் 1988-89 ஆண்டுகளிலும் இடம் பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிகளும் இளைஞர் மற்றும் மாணவர் போராட்டஙகளாகவே வெடித்தன. அதேபோல் வடக்கு கிழக்கு பகுதிகளில் தரப்படுத்தலினால் ஏற்பற்ற நிலைமை இனப்போருக்கு வெகுவாக பங்களிப்பு செய்தது.

எனவே தற்போதைய இஸட் புள்ளி விவகாரமும் பாரதூரமான பிரச்சினையாகும். இதனால் இனப் போர் போன்றதோர் நிலைமை ஏற்படுவதில்லைதான். ஆனால் இந்தப் பிரச்சினையினால் மாணவர் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய விரக்தி ஏற்படுகின்றது என்பதை அந்த வரலாறு எடுத்துக் காட்டுகிறது. பரீட்சை முறையை பற்றி மாணவர்கள் நம்பிக்ககையை இழப்பதானது தமக்கு எதிர்காலம் இல்லை என்ற பயங்கர உணர்வை அவர்களுக்கு வழங்குகிறது. அது அவர்களை தவறான வழிகளில் இட்டுச் செய்யலாம்.

இஸட் புள்ளி கணீப்பீடு முறையினால் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தலையிட்டு இருந்தார். தகைமையுள்ள சகல மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என அவர் கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு தகுதியுள்ள சகல மாணவர்களையும் உள்ளீர்த்துக் கொள்ள பல்கலைக்கழகங்களில் போதிய வளங்களும் வசதிகளும் இல்லை என அதற்குப் பின்னர் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

வளங்களும் வசதிகளும் இல்லாமை மட்டுமே பிரச்சினையல்ல. வளங்களும் வசதிகளும் இருந்தாலும் தகுதியுள்ள சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை வழங்கினால் அவர்களுக்கு அக் கல்விக்கேற்ற தொழில் வழங்கும் பிரச்சினையும் எழப் போகிறது. ஆதற்கான பொருளாதார திட்டம் எதுவும் அரசாங்கங்களிடம் இல்லை. அதேவேளை அரசியல்வாதிகள் பதவிக்கு வருவது ஏற்கெனவே இருக்கும் பொருளாதார திட்டத்துக்குள் தமக்கும் தமது குடும்பத்தினருக்குமாக பணம் சந்பாதிக்கவேயன்றி இவ்வாறு புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்துக் கொண்டு அவதிப்படுவதற்கல்ல.

சர்வதேச நிலைமைகளும் அவ்வாறான புதிய பொருளாதார திட்டங்களை தயாரிக்கக்கூடிதாக அமையவில்லை. பலம் வாய்ந்த நாடுகளுக்கு இலங்கை, இந்தியா, வங்காள தேசம் போன்ற நாடுகளை தமது சந்தையாக பாவிக்கும் அவசியம் இருப்பதால்; அப்பலம் வாய்ந்த நாடுகளும் 'அபிவிருத்தி அடைந்து வரும்' நாடுகளை கைத்தொழில் நாடுகளாக மாற்றி அந்நாடுகளில் தொழில் பிரச்சினையை தீர்க்க உதவி வழங்கப் போவதில்லை.

எனவே 'அபிவிருத்தி அடைந்து வரும்' நாடுகளின் ஆட்சியாளர்கள் கல்விப் பிரச்சினையையோ அல்லது தொழில் பிரச்சினையையோ தீர்க்க சிரமப்படுவதில்லை. அவர்கள் கல்விப் பிரச்சினை என்று வரும் போது இஸட் புள்ளி அல்லது தரப்படுத்தல் போன்ற தீர்வுகளை வழங்குகிறார்கள். தொழில் பிரச்சினை என்று வரும் போது ஒரு காலத்தில் தனிச் சிங்கள சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கு பின்னர் இப்போது தாராள பொருளாதார முறையின் கீழ் பெருகிய தனியார் துறையினர் மீது தங்கியிருக்கிறார்கள்.

போருக்காக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக அரசாங்கங்கள் செலவிட்ட பெருந்தொகை பணத்தை தூர நோக்கோடு 1970 களில் இருந்து கல்விக்காகவும் கைத்தொழில்களை உருவாக்குவதற்காகவும் செலவிட்டு இருந்தால் தரப்படுத்தல் முறையையோ இஸட் புள்ளி முறையையோ தனிச் சிங்கள சட்டத்தையோ கொண்டு வரத்தேவையில்லை.

அவ்வாறு செய்திருந்தால் பிரச்சினைகளும் ஓரளவுக்காவது தீர்ந்திருக்கும், போரும் நடந்திருக்காது. இப்போதும் தாமதம் என்றில்லை. ஊழல் மோசடிகளினால் தற்போது நாடு இழக்கும் சாதாரண மக்களால் எண்ணியும் பார்க்க முடியாத பாரிய நிதித் தொகையை கல்விக்காகவும் கைத்தொழில்களை உருவாக்குவதற்காகவும் பெற்றுக் கொள்ள முடியுமென்றால் எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.           
 


You May Also Like

  Comments - 0

  • kiyas Monday, 27 August 2012 12:32 PM

    நல்ல பிரயோசனமான கட்டுரை

    Reply : 0       0

    kiyas Monday, 27 August 2012 12:36 PM

    நல்ல ஆக்க பூர்வமான கட்டுரை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X