2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'காணாமல் போகும்' தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பத்திலிருந்து ஆறாக குறைக்கப்பட்டது. ஆக மொத்தம், இலங்கை தமிழ் இனம் அதிகமாக காணப்படும் வடக்கு பிராந்தியத்தின் தேசிய அளவிலான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஐந்து குறைந்துள்ளது.

அதே சமயம் மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக மொனராகலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்றே கடந்த வருடம் மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தலா ஒன்றினால் அதிகரிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் சேர்ந்து தமிழ் பகுதியில் குறைந்துள்ள ஐந்து இடங்கள் சிங்களவர் பகுதிகளில் அதிகரித்து இருக்கிறது என்று கூட கூறலாம். இதில், சிங்கள பேரினவாதம் என்ற பேச்சிற்கே இடமில்லை. மாறாக, இனப்போருக்கு பிந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வடக்கு பிராந்தியத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, போர் காரணமாக கடந்த நாற்பது ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நடைபெறாததால் இடைக்கால மாற்றங்கள் தெரியவரப்படவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில் உண்மை நிலை விளங்கியுள்ளது.

வடக்கு பிராந்தியத்தில், மக்கள் தொகை வெகுவாக குறைவதற்கு காரணம் என்ன? அதிலும் குறிப்பாக, யாழ்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகவே குறைந்து, எட்டு இலட்சத்திற்கும் அதிகமாக இருந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தை மட்டுமே தாண்டி உள்ளது. சாதாரணமாக, உலகின் எந்த பகுதியிலும் மக்கள் தொகை அதிகரிக்கவே செய்யும். குடும்ப கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்தப்பட்டால் கூட மக்கள்தொகை அதிகரிக்கும் விகிதம் குறையுமே தவிர, அதுவே மொத்த எண்ணிக்கையை குறைத்துவிடாது.

வடக்கு பிராந்தியத்தில் வாக்காளர் எண்ணிக்கை குறைவதற்கு இனப்போர் முக்கியமான காரணமாகும். இறந்துபோன தமிழர்கள் மற்றும் இனப்போர் காரணமாக இடம் மாறிய தமிழர்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல்கள் இல்லை. அதற்கு முன்பே, இனப்பிரச்சினையை காரணம் காட்டி, ஐம்பதுகளிலும் எண்பதுகளிலும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தோரின் எண்ணிக்கையும் குறைவானது அல்ல. 'சிங்களம் மட்டும்' மற்றும் எழுபதுகளில் 'தரவரிசை படுத்தல்'  முறையினால் பல்கலை கழக படிப்பினை காரணம் காட்டி வெளிநாடு சென்றவர்களும் உள்ளனர்.

இவர்களுடைய சந்ததியினர் அங்கேயே பிறந்து, அங்கேயே படித்து, அங்குள்ள வாழ்க்கை முறையினை தனதாக்கி கொண்டுவிட்டனர். இது இயற்கையே. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமும் கூட. கடந்த காலங்களை வைத்து ஒப்பிட்டு நோக்கும் போது, வார கடனாகிவிட்ட இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய சந்ததியினர், தாங்கள் தற்போது சார்ந்து வாழும் நாட்டின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் வேண்டுமென்றால் வாக்காளர்களாக பங்களிப்பார்கள். ஆனால், இலங்கை தேர்தல்களில் அவர்கள் இல்லாதவர்களாகி விட்டனர் என்தே உண்மை.

இலங்கை தமிழ் சமூத்தை பொறுத்த வரை, இனப்போருக்கு முன்னமேயே தரவரிசைப்படுத்தல் முறையினால் பாதிப்பை சந்தித்து விட்டு, வெளிநாடு பெயரத் தொடங்கி விட்டார்கள். அவ்வாறு இல்லாதிருந்திருந்தாலும், வேலைவாய்பை காரணம் காட்டி அவர்கள் இதனை செய்தே இருப்பார்கள். இனப்பிரச்சினை, இனப்போராக மாறி இராதிருந்தாலும், அவர்களது வெளிநாட்டுப் பயணம் தொடர்ந்தே இருக்கும். எண்ணிக்கையில் வேண்டுமென்றால் மாற்றம் இருந்திருக்கலாம்.

இரண்டு உலக போர்களுக்கு பின்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி காரணமாக அங்கெல்லாம் அதிக அளவில் அறிவுசார்ந்த பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்பட்டார்கள். அதே சமயம், புதிதாக சுதந்திரம் அடைந்திருந்த இந்தியா, இலங்கை மற்றும் பல்வேறு ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இனம், மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் விடுபட்டுப் போன பல்வேறு பிரிவினருக்கும் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முதலிடம் தரும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன.

இலங்கையில் 'சிங்களம் மட்டும்' என்ற சட்டத்தையும் இந்த வகையிலேயே பார்க்க வேண்டும். எழுபதுகளில் 'தரவிசை படுத்தல்' முறையும் இந்த வகையில் பட்டதே. ஆனால், தரவரிசை படுத்தல் முறையினால், சிங்களவர்கள் மட்டுமல்ல, கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தமிழர்களும் பயன் அடைந்தார்கள் என்பதே உண்மை. அதுபோன்றே குறைந்த விகிதத்திலாவது மலையக தமிழர்களுக்கும் இதுபோன்ற திட்டங்கள் பயனளித்தது என்பதும் உண்மை.

ஆனால், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அறிந்திருந்த பிறகும் அவர்கள் கல்வி அறிவு, வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் இன்னமும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கும் விடயம். அதற்கு, இலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு, அவர்களது பிரஜா உரிமை பறிக்கப்பட்டது மட்டுமல்ல காரணம். பிரஜா உரிமை மீண்டும் கொடுக்கப்பட்ட பின்னரும் கூட, அந்த பகுதியினரும் வாழ்க்கையில் பின் தங்கி இருக்கும் நிலையை மாற்ற அவர்களது அரசியல் கட்சிகள் ஒன்று இணைந்து இன்னமும் செய்வதற்கு பல விடயங்கள் உள்ளன. அதுவே காரணம்.

எது எப்படியோ, உள்நாட்டில் கிடைக்காத உயர் கல்வி, சிறப்பான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாகவும் அதே சமயம் தரவரிசை படுத்துதல் போன்ற பல்வேறு முறைகளினால் உள்நாட்டில் தலைமுறைகளாக அனுபவித்து வந்த முன்னுரிமை ஆகியவற்றை இழந்ததன் காரணமாகவும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து மேல்நாடுகளில் இடம்பெயர்தல் முன்னமே தொடங்கிவிட்டது. இதற்கு இனம், ஜாதிபோன்ற அரசியல் மற்றும் அரசியல் சட்டத்தோடு ஒட்டிய சாயம் பூசுதல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதுவே, பின்னர் 'வாக்கு வங்கி' அரசியலாக இந்தியாவிலும், இனப் பிரச்சினையாக இலங்கையிலும் தோன்றியது.

அதே நேரத்தில், பிற ஆசிய - ஆபிரிக்கா நாடுகளிலும் ஏதோ ஒருவகையில் இத்தகைய மாற்றங்கள் நேர்ந்த வண்ணம் தான் இருந்தன. பர்மாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்றியது, இடி அமீனின் உகண்டா நாட்டில் இந்தியா உட்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை வெளியேற்றியது, கடந்த தசாப்தங்களில் ஃபிஜீ தீவுகளில் இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை இந்த வகைப்பட்டதே. ஆனால் மேலை நாடுகளிலோ, அதிக வருமானம் ஈட்டும் வகையில், அதிக வாழ்க்கை வசதிகளோடு இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சென்ற இளைய தலைமுறையினரை பட்டுக்கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்றனர். தங்களது பொருளாதார வளர்ச்சிகளின் தேவைக்கேற்ற உயர்கல்வி நிலையங்களிலும் இந்த தலைமுறையினருக்கு அதிக அளவில் அனுமதி அளித்தனர்.

இந்த பின்னணியில் தொடங்கிய மேலை நாட்டு மோகமும் வேலை வாய்ப்புகளும் இன்று, பரவலாகி, தமிழ் நாட்டில் மட்டும் 2,50,000 இஞ்ஜினியரிங் படிப்புகளுக்கான பல்கலைகழக இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பலவும், இந்திய முச்சூட்டும் ஆள் கிடைக்காமல் வருடாவருடம் அனாமத்தாக போகின்றன. இது தவிர, பிற இந்திய மாநிலங்களில் உள்ள இஞ்ஜினியரிங் கல்லூரிகள் வேறு. இன்றைய நிலைமையில் தமிழ் நாட்டில் மட்டுமாவது உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவராவது மேலை நாடகளில் சிறப்பான வேலை வாய்ப்பு பெற்ற நல்ல நிலைமையில் உள்ளனர். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அந்த மேலை நாட்டு தொழில் நிறுவனங்களின் இந்திய கிளைகளில் அதுபோன்றே பணியாற்றுகிறார்கள்.

இலங்கையிலும், இனப்பிரச்சினை, இனப்போராக மாறியிராவிட்டாலும், இந்த நிலைமையே தொடர்ந்திருக்கும். அதாவது, அதிக கல்வியறிவு மூலம் சிறந்த வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருந்திருக்குமே தவிர குறைந்திருக்காது. இதனை இனப்பிரச்சினையோடு சேர்ந்து இணைத்துப் பார்த்தால் தவறான முடிவுகளே கிடைக்கும். ஏன், இனப்போர் முடிந்த காலகட்டத்தில், அதனை இன்னமும் காரணம் காட்டி, ஓட்டை உடைசல் படகுகளிலும் வாரம் தோறும் வெளிநாடு செல்ல முயலும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் கருதி மட்டுமே அவ்வாறான முயற்சிகளில் தங்களது உடமைகளையும் உயிரையும் பயணம் வைத்து செல்கிறார்கள்? இலங்கை என்று அல்ல, இந்தியாவில் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் இந்த மோகம் கொல்வது வருந்த தக்கது. இது குறித்து தமிழ் சமூக-அரசியல் தலைமைகள் வாளாவிருப்பது, தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை பாதிக்கவில்லையா, என்ன?

மக்கள் தொகை சார்ந்த தெரிந்தெடுப்பு பிரச்சினை தமிழ் நாடு உட்பட்ட நான்கு தென்னிந்திய மாநிலங்களையும் கூட பாதித்துள்ளது. கடந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மக்கள் தொகை விகிதாசார கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ் நாட்டில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தெரிந்தெடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை முப்பத்தொன்பதில் இருந்து முப்பத்திநான்காக குறையும் சூழ்நிலை உருவானது. அண்டை மாநிலமான கேரளத்தில், இந்த உறுப்பினர் எண்ணிக்கை இருபதில் இருந்து பதிமூன்றாக குறையவிருந்தது. ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரா போன்ற சமூக - பொருளாதார முன்னேற்றமடைந்த மாநிலங்களின் நிலைமையும் இதுவே.

அதே சமயம், பின் தங்கிய மாநிலங்களான உத்திர பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருந்தது. ஏற்கனவே, வட-மத்திய மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சரித்திரம் மற்றும் மக்கள் தொகை காரணங்களால் அதிக அளவிலேயே இருந்து வந்திருக்கிறது. இந்த பின்னணியில், தென் மாநிலங்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மக்கள் தொகை உயர்வு விகிதாசாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரு போன்ற எண்ணிக்கை தோன்றும் வரை, மாநிலங்களுக்கான மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தது. இது குறித்த அரசியல் சட்ட திருத்தத்திற்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன.

இன்று இலங்கையில் தமிழர்கள் பிரதிநிதித்துவத்திற்கு தேவையானது இப்படியான மாற்றமே. இன்னும் சொல்லப் போனால், பிராந்தியங்களுக்கு பொலிஸ், காணி ஆகிய அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை விட இத்தகைய கோரிக்கையே முதலிடம் பெற வேண்டும். பொலிஸ் அதிகாரம் போன்றவற்றை பின்னால் கூட கோரி பெற முடியும். அதற்கு சிங்கள பிரந்தியங்களும் கூட ஆதரவு அளிக்கும், அளிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை பிரச்சினை தமிழ் பேசும் மக்களை மட்டுமே பாதிக்கும் விடயமாகும்.

அதுபோன்றே, நாடாளுமன்ற தொகுதி எல்லைகளை மாற்றி அமைத்தலும் தமிழ் பேசும் மக்களையே அதிகமாக பாதிக்கும். அதிலும் குறிப்பாக மலையக தமிழ் சமூகத்தின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கும் அப்பாற்பட்டு, அவர்களது பிரதிநிதித்துவத்தை குறைக்கும். இன்று, இவை குறித்து மட்டுமே தமிழ் பேசும் சமூகங்களில் அரசியல் தலைவர்கள் பேச வேண்டும், சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். இல்லையென்றால். இல்லாமல்போன மக்களின் காணாமல் போன பிரதிநிதிகளாக அவர்கள் மாறிவிடுவார்கள், மாற்றப்பட்டு விடுவார்கள்.

செய்வார்களா, அதனை?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X