2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தீவிரமடைந்துள்ள தமிழக - இலங்கை பனிப்போர்

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (கே.சஞ்சயன்)

புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமுகமான நிலையில் இல்லாத கட்டத்தில், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் வெளிப்படையானதொரு பனிப்போர் வெடித்துள்ளது.

இந்தப் பனிப்போர் ஒரு மோதல் போலவே உருவெடுத்து விட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்குச் சென்ற கால்பந்தாட்ட அணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கலைச் சுற்றுலா சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தல யாத்திரை சென்றவர்களையும் சிறப்பு விமானத்தில் திருப்பி அழைக்க நேர்ந்தது.

அதேவேளை, கொழும்பும் இதற்குப் பதிலடியாக, தமிழ்நாட்டுக்குச் செல்வது கறித்து பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் தோன்றியுள்ள இந்த மோதலை புதுடெல்லி கண்டும் காணாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

புதுடெல்லி இந்த விவகாரத்தைச் சரிவரக் கையாளத் தவறியதே, இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தே வந்தன. முன்னர், ஒரு சில புலிகள் ஆதரவு அமைப்புகள், கட்சிகளால் நடத்தப்பட்டு வந்த இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளாலும் நடத்தப்படுகின்ற நிலைக்கு மாறியுள்ளது.

இதற்கு இரண்டு தரப்புகள்கள் மீது காரணம் கூறப்படுகிறது. ஒன்று இந்திய மத்திய அரசு. இரண்டாவது இலங்கை அரசு. போரில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க இந்திய மத்திய அரசு தவறிவிட்டதுஇ தமிழர்களின் படுகொலைகளுக்கு அது துணை நின்றது என்ற கருத்து தமிழ்நாட்டில் வலுப் பெற்றுள்ளது.

போர் முடிந்த பின்னரும் இந்திய அரசு தமிழர்களைப் பாதுகாக்க, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த  உறுதியான நடவடிக்கையை  எடுக்கவில்லை என்பதும்இ தமிழக மீனவர்களின்  பாதுகாப்பில் அக்கறையற்று இருக்கிறது, இலங்கையுடன் நட்புறவு கொண்டிருக்கிறது என்றும் இந்திய அரசு  மீது தமிழக மக்களுக்கு விசனங்கள் உள்ளன.

அதேவேளை, இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களுக்கு நிரந்தரமான நியாயமான தீர்வு ஒன்றை வழங்கத் தவறியது தமிழ்நாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகள் தீவிரம் பெறுவதற்கு முக்கிய காரணமாகியது.

போர்க்குற்றங்கள் போன்ற விடயங்கள் தமிழக மக்களின் உணர்வுகளில் காயங்களை ஏற்படுத்தியிருந்தாலும், போருக்குப் பின்னர் தமிழர்கள் நன்றாக நடத்தப்பட்டிருந்தால், நிம்மதியான வாழக் கூடிய சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டில் இந்தளவுக்கு இலங்கை எதிர்ப்புணர்வு வலுப் பெற்றிருக்காது.

இந்திய மத்திய அரசும், இலங்கை அரசும் போருக்குப் பிந்திய சூழ்நிலையைக் கையாள்வதில் காட்டிய அலட்சியம், தமிழ்நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரமுகர்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே அச்சுறுத்தல்கள் இருந்தபோதும், அது அவ்வளவாகத் தீவிரம் பெறாமல் அடங்கிப் போனது.

ஆனால் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவரை, வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சினை தான் இப்போதைய பனிப்போரின் அடிப்படை.

இலங்கைப் படையினரை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்பதே, தமிழ்நாட்டின்  ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே, தாம்பரம் விமான தளத்திலும்,  குன்னூரிலும் பயிற்சிக்காக வந்த இலங்கைப் படை அதிகாரிகளுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது. இந்திய மத்திய அரசு அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது.

ஆனால் இம்முறை மத்திய அரசு மசிந்து கொடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியும் அதற்குப் பதில் இல்லை.

தமிழக கட்சிகள் அனைத்தும் வலியுறுத்திய போதும், மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக இல்லை.

கடந்த மே மாதம் தொடக்கம் வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் இரு இலங்கை படை அதிகாரிகளையும், கொழும்புக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே தமிழக கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

கொழும்புக்கே திருப்பி அனுப்புவது சிக்கலானது என்ற நிலையில்இ குறைந்தபட்சம் வேறு மாநிலத்துக்கு அவர்களை அனுப்பி இந்தப் பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருந்திருக்கலாம். ஆனால் அந்த முடிவைக் கூட எடுப்பதற்கு இந்திய மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாவது கடிதம் அனுப்பப்பட்ட பின்னர், 'யார் நிர்ப்பந்தம் கொடுத்தாலும் இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் நிறுத்தப்படாது' என்று கூறி எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தார் இந்திய பாதுகாப்பு இணையமைச்சர் பல்லம் ராஜு.

அதையடுத்து சினம் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாஇ இன்னொரு காட்டமான கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பினார். அப்போது அவர் ஈரான் சென்று விட்டார்.

இந்தநிலையில், மன்மோகன்சிங் ஈரானில் இருந்து திரும்பியதும் இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதியளித்தார்.

மன்மோகன்சிங் நாடு திரும்பி பல நாட்களாகியும் – இந்தப் பத்தி எழுதப்படும் வரை- வெலிங்டனில் பயிற்சி பெறும் இலங்கைப் படையினரை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தனது இரண்டு கடிதங்களையும் மத்திய அரசு அலட்சியம் செய்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியிருக்கும். தனது பலத்தையும் கோபத்தையும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் பார்த்திருந்த அவருக்கு ஒரு சில நாட்களிலேயே வாய்ப்புக் கிட்டியது ஆச்சரியம் தான்.

றோயல் கல்லூரி மற்றும் இரத்தினபுரி சர்வதேசப் பாடசாலை ஆகியவற்றின் கால்பந்தாட்ட அணிகள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணமே அது.

இரு கால்பந்தாட்ட அணிகளையும் உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது நியாயமற்றதொரு நடவடிக்கை என்பதை அவரால் உணராமல் இருந்திருக்க முடியாது. ஆனால், சந்தர்ப்பம் அவரை அத்தகையதொரு முடிவை எடுக்கத் தூண்டியது.

அதாவது, தன்னையும் தமிழ்நாட்டின் உணர்வுகளையும் அலட்சிப்படுத்தும் மத்திய அரசுக்கு கடுமையானதொரு செய்தியை சொல்ல அவர் முற்பட்டார்.

இந்திய சமஸ்டி அரசியலமைப்பின்படி, ஒரு மாநில முதல்வரான அவரால் அதைத் தான் செய்ய முடிந்தது.அதாவது இலங்கைப் படையினருக்குப் பதிலாக விளையாட்டு வீரர்களை வெளியேற்றினார்.

இலங்கைப் படையினரை வெலிங்டனில் இருந்து வேறு இடத்துக்கு அனுப்பியிருந்தால், இத்தகைய முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு போதும் எடுத்திருக்கமாட்டார்.

இந்தக் கட்டத்தில், ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தவர்களுக்கு, இன்னும் வசதியாகிப் போனது.

ஜெயலலிதா கொடுத்த ஊக்கம், வேளாங்கண்ணிக்கு தல யாத்திரை சென்ற சுற்றுலாப் பயணிகள் மீதான கோபமாகத் திரும்பியது. இந்த நிலையில் தான், இலங்கை அரசு பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

இதன் விளைவாக, மிகின் லங்கா விமானத்தை இரவோடு இரவாக அனுப்பி அத்தனை பேரையும் அழைத்து வரவேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.

இதன் பின்னர், இலங்கை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு கூறிய போதிலும்இ அது நிரந்தரப் பாதுகாப்புக்கான நடவடிக்கையாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்தப் பனிப்போரை தணிக்காமல், கொதி நிலையில் வைத்திருக்க மத்திய அரசு ஏன் விரும்புகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஏற்கனவே கொழும்புடன் சுமுக உறவு இல்லாத நிலையில், கொழும்பை மடக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்த புதுடெல்லி முனைகிறதா என்ற சந்தேகமும் சிலரிடம் உள்ளது.

இந்தப் பனிப்போர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இலங்கைக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதனால் எப்படியாவது தமிழ்நாட்டுடனான உறவுகள் மேலும் சீரழியாமல் பாதுகாக்கவே, அரசாங்கம் முனையும். ஆனால் இந்தக் கட்டத்தில், பிரச்சினையை தணிக்க இலங்கையால் ஆகக் கூடிய காரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், அதற்கான கடிவாளம் இப்போது இருப்பது இந்திய மத்திய அரசிடம்.

You May Also Like

  Comments - 0

  • குமார் Thursday, 06 September 2012 01:14 PM

    விளையாட்டு/கலாச்சார குழுக்களை திருப்பி அனுப்புவதோ யார்திரிகர்கள் மீது தாக்குதல் நடாத்துவதோ எந்த நன்மையையும் பயக்காது. அதை விடுத்து விசாரணைகளை துரிதப்படுத்த சர்வதேச மட்டத்தில் முயற்சி எடுக்கலாம்.

    Reply : 0       0

    வசந்தகுமார். Friday, 07 September 2012 09:25 AM

    இந்திய ஒரு சில அரசியல்வாதிகள் இலங்கை விடயத்தில் இரட்டைவேடம் போடுவதும் தேசபிதாவாக விளங்கும் மாகாத்மா காந்தியின் கொள்கைகளை அலட்சியம் செய்வதிலும் குறியாக செயல்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் சமூகமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X