2025 மே 19, திங்கட்கிழமை

கிங் - ஜோக்கரான கதை!

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடைசியில் கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழப் பகிடி மாதிரிப் போயிற்று, கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானம்! 'முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முதலமைச்சர்' ஒருவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களித்தனர். ஆனால், நஜீப் ஏ. மஜீத் - கிழக்கின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மு.கா. ஆதரவாளர்களுக்கு கடுமையான ஏமாற்றத்தினையும் கொதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்பட்ட 'மு.காங்கிரஸ் முதலமைச்சர்' எங்கே என்று மு.கா. வாக்காளர்கள் கேட்கிறார்கள். 'அவர்தான் இவர்' என்று நஜீப் ஏ. மஜீத்தைக் காட்டுகிறார் அமைச்சர் ஹக்கீம்!

கிழக்கு மாகாணசபையில் அரசுடன் மு.கா. இணையும் என்று பலராலும் அனுமானிக்கப்பட்ட ஒரு முடிவினைத்தான் மு.காங்கிரஸ் எடுத்திருக்கிறது. இவ்வாறானதொரு முடிவினை எடுப்பதற்கு அந்தக் கட்சி இத்தனை நாட்களை இழுத்தடித்திருக்கத் தேவையில்லை. 'ஆட்சியமைப்பது தொடர்பில் தலைவர் ஹக்கீம் நிதானமாக யோசிக்கிறார், பேரம் பேசுகிறார், அதனால்தான் இப்படி இழுத்தடிக்கப்படுகிறது' என்று மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக சிலவேளை, இந்த இழுத்தடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம்.

பேரம் பேசும் சக்தியினை வைத்துக் கொண்டு, கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில், அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்ற மு.கா. தலைவர் - கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். இந்த இரண்டு மாகாணசபை அமைச்சுக்களையும் பெற்றுக்கொள்வதுதான் மு.கா.வின் இலக்கு என்றால், அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டிருக்கத் தேவையில்லை. வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட்டிருந்தால் கூட இதைப் பெற்றிருக்கலாம்.

'மு.காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியினை வழங்குவதற்கு மு.கா. தலைவர் ஹக்கீம் விரும்பமாட்டார். அவ்வாறு வழங்குவது அவருடைய தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என ஹக்கீம் அச்சப்படுகிறார்' என்று தேர்தல் காலங்களில் பரவலாகக் பேசப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளை ஏற்கனவே நமது கட்டுரைகளில் பதிவு செய்திருந்தோம். அந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்படியே உண்மையாகி உள்ளன.

இதேவேளை, முதலமைச்சர் பதவியானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டுள்ளதாக மு.கா. தலைவர் ஹக்கீம் கூறிவருகின்றார். அதாவது, ஐந்து வருடங்களைக் கொண்ட முதலமைச்சர் பதவியின் முதல் இரண்டரை வருடத்துக்கு நஜீப் ஏ. மஜீத் ஆட்சி செலுத்துவார். அடுத்த அரைவாசிக் காலத்துக்கு முதலமைச்சராக மு.காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்பது ஹக்கீம் கூறுவதன் பொருளாகும். ஆனால், இவ் விடயத்தினை ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார். தமிழ் நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த மறுப்பினை அவர் தெரிவித்துள்ளார். 'மு.காங்கிரஸ்காரர்கள் அப்படிச் சொல்லக் கூடும். நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை' என்று சுழற்சி முறை முதலமைச்சர் பதவி என்கிற விவகாரம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பஸீல் பதிலளித்துள்ளார். இது தவிர, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நஜீப் ஏ. மஜீத்திடம் இந்த 'சுழற்சி முறை' பற்றி ஊடகங்கள் கேட்டபோது, 'இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்று கூறியுள்ளார்.

மேலும், முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் தொடர்பில், அரசாங்கத்துடன் மு.காங்கிரஸ் ஒப்பந்தமொன்றினைச் செய்துள்ளதாகவும், அவற்றினை அரசு விரைவில் நிறைவேற்றும் எனவும் மு.காங்கிரஸ் தலைமை கூறுகிறது. ஆனால், என்னென்ன விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பேசப்பட்டுள்ளன என்பது பற்றி மு.கா. இதுவரை மூச்சு விடவில்லை. இது மு.கா. ஆதரவாளர்களிடையே பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கில் த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் இணைந்து ஆட்சியொன்றினை அமைப்பதற்கான ஏதுநிலைகள் இல்லை என்பது உண்மையாகும். சிலவேளை, அவ்வாறானதொரு ஆட்சியினை மு.காங்கிரஸ் அமைத்திருந்தால், அது – முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பாரிய பிரச்சினைகளையும், பிளவுகளையும் தோற்றுவித்திருக்கும் என்பதும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களின் கருத்தாகும்.

'அதற்காக, அரச தரப்பினரிடம் மு.காங்கிரஸ் இப்படி எதுவுமில்லாமல் விலைபோயிருக்கத் தேவையில்லை. தாம் கேட்டவற்றினை அரச தரப்பு தர முடியாது என மறுத்திருந்தால், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி ஆசனத்தில் மு.கா. உறுப்பினர்கள் அமர்ந்திருக்கலாம். அது, சாதுரியமான முடிவாகவும் அமைந்திருக்கும்' என்கிறார் மு.காங்கிரஸின் ஓர் உயர்பீட உறுப்பினர். 

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பது மிகக் கவலைக்குரிய விடயம் என்று மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்படிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

இவை ஒருபுறமிருக்க, கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில், அரச தரப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதுளூ மு.காங்கிரஸ் சார்பாக அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே கலந்து கொண்டார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது, மு.காங்கிரஸைப் பொறுத்தவரை குறித்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத்தன்மை அற்றவையாகவே இருந்தன. இது விடயத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்வதை மட்டுமே நம்பித் தொலைக்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமை மு.காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இருக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அரச தரப்பில் மிக முக்கிய சிரேஷ்ட அமைச்சர்கள் நால்வர் கலந்து கொண்டனர்.

அரசோடு மு.காங்கிரஸ் இணைவதென எடுத்த தீர்மானத்தில் முஸ்லிம் சமூகத்துக்கோ, அல்லது அந்தக் கட்சிக்கோ நன்மைகள் எதுவுமில்லை என்துதான் கணிசமானோரின் கருத்தாக இருக்கிறது. கிழக்கில் முஸ்லிம் சமூகத்துக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் எதற்கும் அரசுடன் பேசித் தீர்வுகளைப் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதேபோல, மு.காங்கிரஸுக்கு எதிரான அரசியலை மேற்கொண்டு வரும் சுதந்திரக் கட்சி உறுப்பினரான நஜீப் ஏ. மஜீத்தை முதலமைச்சராக்கியதன் மூலம், மு.காங்கிரஸுக்கு எதிரான கைகள் கிழக்கில் பலம்பெறுவதற்குரிய சாத்தியங்களும் உருவாகியுள்ளன. குறிப்பாக, புதிய முதலமைச்சர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு சுதந்திரக் கட்சியும் ஐ.ம.சு.முன்னணியும் வளரும் நிலை ஏற்படும். இது மு.காங்கிரஸுக்கு பாரிய சவால்களை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்.

இன்னொரு புறம், கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பதை மு.காங்கிரஸின் அதிஉயர் பீடம் தீர்மானிக்காததொரு நிலையிலேயே, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தன்னிச்சையாக அரசாங்கத்தோடு இணையும் முடிவினை எடுத்ததாக, மு.கா.வின் அதியுயர் பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து பின்னர் அதிஉயர் பீடம் கூடியபோது, ஹக்கீமிடம் பலர் காரசாரமாக விவாதித்ததாகவும் அந்த உறுப்பினர் கூறினார்.

ஆக, தற்போது கிழக்கு மாகாண அரசியல் தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானது பாரிய கொதிநிலையை உண்டு பண்ணியுள்ளது. அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதென மு.கா. தீர்மானமொன்றினை எடுக்க முயற்சித்த போது, தனித்துவம் பற்றியும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், உரிமைகள் குறித்தும் உரத்துப் பேசி – மு.கா.வை தனித்துப் போட்டியிடும் நிலைக்குக் கொண்டு வந்ததாக கூறும் கட்சியின் செயலாளர் ஹசன் அலி போன்றோர் - தற்போது, மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானத்தினை நியாயப்படுத்திப் பேசுவது அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றது என்கிறார் - மு.காங்கிரஸின் முக்கியஸ்தரொருவர்.

இதேவேளை, அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவொன்றினை ஹக்கீம் எடுத்தமைக்கு மு.கா.வுக்குள் இருக்கும் சில சிக்கல்கள்தான் காரணம் என்று ஹக்கீமுக்கு விசுவாசமான தரப்பொன்று கூறி வருகின்றது. அதாவது, அரசாங்கத்துடன் மு.கா. இணையாது போனால், மு.காங்கிரஸின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களும் கட்சியை உடைத்துக் கொண்டு அரச தரப்போடு இணைந்து விடக்கூடிய நிலைவரமொன்று உள்ளதாம். அதனால்தான், தலைவர் இவ்வாறானதொரு முடிவினை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்கிறார்கள் - தலைவர் ஹக்கீமுடைய விசுவாசிகள்!

இது தொடர்பில் மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். அவர் இதை அடியோடு மறுத்தார். 'காலாகாலமாக தலைவர் செய்கின்ற பிழைகளுக்கு முதலில் பலிகொடுக்கப்படுவது - கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்! அதைத்தான் இப்போதும் செய்துள்ளார்கள். தலைவர் எடுத்துள்ள இந்த முடிவில் எனக்கு துளியளவு கூட விருப்பமில்லை. அதற்காக த.தே.கூட்டமைப்புடன் இணையுங்கள் என்றும் சொல்லவில்லை. எதிரணியில் போய் அமர்ந்திருக்கலாம். ஆனால், இப்போது அரசுக்கு ஆதரவு என்கிற முடிவொன்றினை எடுத்தாகி விட்டது. அதனால், கட்சிக்குள் இருக்கும் கூட்டுப் பொறுப்பினை மீறி, எனக்கும் இந்த முடிவுக்கும் தொடர்பில்லை என்று என்னால் கூற முடியாது' என்றார் - குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்.

இன்னொரு புறம், மு.கா.வுக்கு வழங்குவதாக அரச தரப்பு இணங்கின் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு மாகாண அமைச்சர் பதவிகளுக்கும் - எவ்வாறான அமைச்சுக்களை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பிலும் இழுபறிகள் எழுந்துள்ளதாகக் கதைகள் கசிகின்றன. மு.கா. தரப்பு கோருகின்ற அமைச்சுக்களை வழங்குவதற்கு அரச தரப்பு மறுப்பதாகவும், தாங்கள் தருவதைப் பெற்றுக் கொள்ளுமாறு மு.கா.வுக்கு அரச தரப்பு கூறுவதாகவும் தெரியவருகிறது.

இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது; கிழக்குத் தேர்தல் எனும் சூதாட்டத்தில் 'கிங்' ஆக இருந்த மு.காங்கிரஸை – அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடைசியில் 'ஜோக்கரா'க மாற்றி விட்டிருக்கின்றார்.

இன்னொரு விதத்தில் சொன்னால், அமைச்சர் ஹக்கீம், தனக்குக் கிடைத்த தங்கத் தட்டினை - பிச்சை எடுக்கப் பயன்படுத்தியிருக்கின்றார்!
•   

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Monday, 24 September 2012 03:34 AM

    யார் என்ன கூத்தாடினாலும் அடுத்த தேர்தலிலும் தலைவர் வருவார் பெரிய உணர்ச்சி கோஷங்களோடும் சிலாகிக்கும் பேச்சுகளோடும் மக்கள் அதனை நம்பி மீண்டும் ஒருமுறை வாக்கெனும் ஆசீர்வாததை வழங்கி தலைவர் புலைப்பு நடத்த உதவி செய்வர்?? ஆனால் ஒன்றுமட்டும் உண்மை தலைவர் இப்படியெல்லாம் செய்ததைவிட கூட்டமைபுடன் சேர்ந்து ஆட்சி அமைதிருந்தால் அடுத்தகனமே தலைவரை ஒதுக்கி தள்ளி இருப்பர்??? ஆக கூட்டமைபுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகதை சந்தேகத்துக்குரிய சமூகமாக பெரும்பான்மை மக்களிடம் காட்டி கொடுக்காத ஒரே ஒரு ஆருதல்????

    Reply : 0       0

    Mohamed Razmi Monday, 24 September 2012 09:35 AM

    இந்தப் பதிவில் உள்ளவை அனைத்தும் நிதர்சனம்.
    இனியாவது முஸ்லிம் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் பங்காளிகளாகக் கொண்ட ஒரு அரசியல் பாதையை மு.கா. தெரிவு செய்ய வேண்டும். ஒரு மக்கள் இயக்கத்தினை காண்பதற்கான் ஆதங்கம் தான் அனைவரினதும் கருத்துகளில் வெளிப்படுகிறது.

    Reply : 0       0

    ஏமாந்த சோனகன் Monday, 24 September 2012 11:30 AM

    ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவரும் இருக்கத்தான் செய்வர். இந்த ஆட்சியின் ஆயுள் எவ்வளவு காலத்துக்கு இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Reply : 0       0

    Cader Monday, 24 September 2012 01:08 PM

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை வலிமை பெற செய்யுங்கள்.

    Reply : 0       0

    Mohamed Monday, 24 September 2012 02:19 PM

    இந்த கருத்துக்க‌ளில் முஸ்லீம் காங்கிரசுக்கு எவ்வாறான சாவல்கள் இருந்தன‌ என்பது வெளிப்படையே. அரசுடன் இணைந்தால் ஏற்கனவே அங்கிருக்கும் எமது சமூகம் நீ பெரிதா நான் பெரிதா போட்டியில் உள்ளன. யூ பி ஏ யில் தான் முதலமைச்சர் என்று கட்சியின் சட்ட‌ப்பிரச்சினயாம். சமூகப்பிரச்சினைகளை வெளிப்படையாக பேசினால் நமது சகொதர‌ங்களே அவைகள் இவர்களால்தான் செய்யப்படவேன்டுமா என எதிர்ப்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே அவ்வாறான ஹகீம் அரசுடன் உடன்பட்ட ஒரு விடயத்துகெதிராக கூடி எவ்வாறு அதனை எதிர்ப்பதென்றெல்லாம் திட்டமிட்டு விட்டார்கள் என்றால் எவ்வாறு சில விடயங்களை வெளியே சொல்லுவது? உன்மையிலேயே பேரினவாதிகளிடமிருந்து மறைக்கத்தான் வேன்டும். அனால் நம்மவர்களே இப்படியென்றால் ....? அதைவிட, சம்பந்தன் ஐயாவுடன் சேர்ந்தால் அரசுடன் பாய இருப்பவர்களைவிட இவர்கள் என்ன சொல்வார்கள்? வட கிழக்கை இணைக்கப்போகிறார், புலியை கொன்டுவரப்பொகிறார் என்றெல்லவா கத்துவார்கள். அதை விட எத்தனை நாளைக்கு அந்த ஆட்சியை அரசு நடாத்தும்? சரி, இந்த ஜனநாயகம் பேசும் எத்தனை பேர் தற்போதைய சபைக்கு தமிழ் அமைச்சரைப்பற்றிப் பேசினார்கள்? ஏன் இதை அரசிடம் கேட்கமுடியவில்லை?‌

    Reply : 0       0

    Rohan Tuesday, 25 September 2012 06:47 AM

    அமைச்சர் ஹக்கீம், தனக்குக் கிடைத்த தங்கத் தட்டினை - பிச்சை எடுக்கப் பயன்படுத்தியிருக்கின்றார்!

    Reply : 0       0

    nawshad Wednesday, 26 September 2012 07:18 AM

    என்ன செய்திருக்க வேண்டும் என்டு சொல்லுங்கள்.

    Reply : 0       0

    rifa...... Wednesday, 26 September 2012 05:10 PM

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். எதையும் அவசரமாக எதிர்பார்க்கக் கூடாது. பொறுமையுடன் இருப்போம்.........

    Reply : 0       0

    zamroodh Thursday, 27 September 2012 08:00 AM

    சகோதரர்களே! யார் முதலமைச்சராக வந்தாலும் பரவாயில்லை முஸ்லிம் சமூகத்துக்கு ஏதாவது நல்லது நடக்குதா என்று பாருங்கள் , இங்கு இவர்தான் தலைவராக வரணும், அவர்தான் தலைவராக வரணும் என்ற தன்னிலை மோகத்தை விட்டுவிட்டு ஒரு பொதுவான கண்ணோட்டத்தோடு பாருங்கள், இப்படி தலைமைத்துவத்துக்கு போட்டியிடுபவர்களும் சிந்திக்க வேண்டும். அவரை ஆதரித்து வாக்களிப்பவரும் நினைக்கவேண்டும், விமர்சனங்களை ,கருத்துக்களை எழுதுபவர்களும் சிந்திக்க வேண்டும், நியாயமான தனக்கு விருப்பமுள்ள ஒருத்தருக்காக மட்டும் அல்லது பிடிக்காத ஒருவரை விமர்சித்து கருத்துக்களை பதியாதீர்கள் , அது முஸ்லிம் சமூகத்தின் நல்லெண்ணங்களுக்கு , பங்கம் விளைவிக்கக்கூடியதாக அமையும், எப்பவுமே சமூகம் எதைச்சொன்னாலும் செய்தாலும் அது சரியாக இருந்தாலும் வெறுப்போடு தப்பாகவே நோக்கும் ஒரு போக்கை கையாண்டு கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.

    Reply : 0       0

    rima Saturday, 20 October 2012 07:02 PM

    ரவூப் ஹக்கீம் கடைசியில் 'ஜோக்கரா'க மாற்றி விட்டிருக்கின்றார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X