2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை பிரச்சினை, இந்தியாவின் தேசிய பிரச்சினையா?

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா விஜயம் செய்தபோது, அவரது வருகைக்கு எதிரான போராட்டங்களும் கூறப்பட்ட கருத்துக்களும், 'இனப் பிரச்சினைக்கு' புதியதொரு வடிவம் கொடுத்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இடைப்பட்ட காலத்தில் இதனை இமாலய வெற்றியாக கருதும் இலங்கை தமிழர் தலைமைகள் எதிர்காலத்தில் இதனால் குழப்பமே மிஞ்சும் என்பதனையும் உணர்ந்திருத்தல் அவசியம்.

ஜனாதிபதி ராஜபக்ஷ விஜயத்தின் போது, அவரது வருகையை எதிர்த்தும் அவரது அரசை எதிர்த்தும் தமிழ் நாட்டில் அரசியல் போராட்டங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. இதுவே பல்வேறு காலகட்டங்களில், தேசிய தலைநகரான புது டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அண்மை காலத்தில், இனப் பிரச்சினையின் மற்றொரு அலகாக உருவகப்படுத்தப்படும் தமிழ் நாட்டு அகதிகள் முகாம்களில் உள்ளோர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக பயணப்பட்டு கைது ஆவதும், கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களை விட்டுவைக்கவில்லை.

ஆனால், இந்தமுறை ஜனாதிபதி ராஜபக்ஷ விஜயத்தை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்தியது ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை ஒட்டி, மத்திய பிரதேச மாநிலத்தின் பாரதீய ஜனதா கட்சி முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், இலங்கை இனப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்திருப்பதும் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் குறித்த உள்நாட்டு அரசியல் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை இனப்பிரச்சினை குறித்து தமிழக முதல்வர்களே மத்திய அரசின் செயல்பாடு குறித்து நேரடியாகவும் எதிர்மறையாகவும் கருத்து கூறி வந்துள்ளனர். இந்திய அரசியல்சாசன கோட்பாடுகளின் படி, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகார பங்கீடு முறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டு உறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த அதிகாரங்கள் முற்றிலுமாக மத்திய அரசை மட்டுமே சார்ந்தது. இது குறித்து, மாநில அரசுகள் கருத்து கூறுவதை மத்திய அரசு வரவேற்றதில்லை.

அதே சமயம், இலங்கை இனப்பிரச்சினை குறித்து தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் அதன் காரணமாக மாநில அரசும் கருத்து கூறுவதை மத்திய அரசு வரவேற்று வந்துள்ளது. காரணம், இனப்பிரச்சினை, இனத்தாக்குதலாக இலங்கையில் உருவெடுத்த எண்பதுகளில், தமிழ் நாட்டில் இருந்து செயல்பட தொடங்கிய தமிழர் தலைமைகளோடு கலந்தாலோசித்து கருத்து கூறும் நிலையில் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் முக்கிய பங்கு வகித்தன. இதுவே, இனப்பிரச்சினை குறித்து பிற்காலத்தில் மத்திய அரசு முழுவதுமாக புரிந்துகொள்ள வழி செய்தது.

என்றாலும், அன்றும் சரி, அடுத்த காலங்களிலும் சரி, இனப்பிரச்சினையை உள்நாட்டு அரசியல் மற்றும் தேர்தல் வியுகங்களின் ஒரு பகுதியாகவே தமிழ் நாட்டில் உள்ள திராவிட பாரம்பரிய கட்சிகள் மாற்றிவிட்டது என்பதே உண்மை. அதுவே இன்றளவும் தொடருகிறது. அவர்களது 'போட்டி மனப்பான்மை' பல்வேறாக உருவெடுத்து, அவர்களின் சாதனையாக இலங்கை தமிழ் மக்களையும், அவர்களது புலம்பெயர் தலைமைகளையும் எண்ண வைத்துள்ளது. இனப்போரின் உச்சகட்டத்தில், விடுதலை புலிகள் இயக்கம், இந்தியாவை மையப்படுத்தி தவறான சில அரசியல்ரீதியான முடிவுகளை எடுத்ததில் களநிலைமை குறித்த அவர்களது அறியாமையும் அதனை ஒட்டி பிறந்த தவறான எண்ணவோட்டமும் கூட முக்கிய காரணமாகும்.

தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் பின்புலம் உணர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட இலங்கையிலிருந்து செயல்பட்டுவரும் அரசியல் தலைமைகள் அவர்களுடனான உறவை அடக்கியே வாசித்து வந்துள்ளது. கடந்த காலத்தில், திமுக - அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் உள்நாட்டு அரசியல் களத்தில் இனப்பிரச்சினை மற்றுமோர் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறது என்ற எண்ணமே இதற்கு காரணம். எம்ஜிஆர் காலத்திற்கு பின்னால், இந்த போட்டியில் பல குட்டி கட்சிகளும் சேர்ந்து கொண்டதால் தமிழ் நாட்டில் இது குறித்த அரசியல் பிரச்சினை பெரிதானதே தவிர, இலங்கை தமிழ் மக்களுக்கு அதனால் பயன்படும் முடிவுகள் கிடைக்கவில்லை.

அன்றும், இன்றும், ஏன், என்றுமே, இலங்கை தமிழ் சமுதாயம் இன்னமும் இந்தியாவில் மத்திய அரசை நம்பியே அரசியல் செய்ய வேண்டியுள்ளது என்பதே சர்வதேச நிலைமையின் சாத்திய கூறுகள். இதில் தமிழ் நாட்டு அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு மாறுபட்ட முடிவுகளை எடுக்கும் என்று தவறுதலாக இன்னமும் கணக்கிட்டு விடக்கூடாது. அவ்வாறு கணக்கிட்டு தவறியதாலேயே கடந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் சமுதாயமே இந்தியாவை பகைநாடாக கருதும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டம் யாருக்கு என்பதை தமிழ் சமுதாயமும் அவர்களது சூத்திரதாரிகளாக தங்களை வரிந்து கொண்டுள்ள புலம்பெயர் தமிழ் குழுக்களும் சிந்தித்து செயல்பட வேண்டும். 

இன்று, ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்தியா விஜயத்தின் போது போராட்டம் நடத்தினோம் என்று தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் மார்தட்டிக் கொள்ளலாம். வைகோ போன்ற தலைவர்களும் மத்திய பிரதேச எல்லையில் இனப்பிரச்சினைக்கு குரல் கொடுத்து அதனை அகில இந்திய பிரச்சினையாக மாற்றிக் காட்டியதாக கருதி பெருமிதம் அடையலாம். அவர்களது இந்த முயற்சிகளை புலம்பெயர் தமிழர் குழாம் பலவும் தங்களது எதிர்கால முயற்சிகளுக்குக்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக நினைத்து கூட திட்டமிடலாம்.

ஆனால், இவை எல்லாம் ஒரு மாயையான தோற்றத்தையே மீண்டும், மீண்டும் உருவாக்குவதற்கு உதவும். இத்தகைய மாயையில் சிக்கி தான் விடுதலை புலிகள் இயக்கம் தனது திட்டமிடல் முதல் செயல்பாடுகள் வரை அடுத்தடுத்து தவறிழைக்க தொடங்கியது. இந்தியா என்று மட்டும் அல்ல, தமிழ் தலைமையின்; அப்போதைய பிற சர்வதேச முனைப்புகளும் இதுபோன்ற வெளிப்பூச்சுகளை மட்டுமே உண்மை என நம்பி எடுக்கப் பட்டவையே. அதே நிலைக்கு மீண்டும் அவர்கள் தங்களை தாங்களே தள்ளி விட்டுக்கொண்டுள்ளனரோ என்று நினைக்க, நினைத்து கவலைப்பட மட்டுமே தற்போதைய போராட்டங்கள் மீண்டும், மீண்டும் வழிவகுத்து வருகின்றன.

தமிழ் நாடு தொடங்கி அனைத்து இந்திய மாநிலங்களிலும் இனப்பிரச்சினை குறித்த அறிவும் எண்ணவோட்டமும் முழுமையானதல்ல. இது கடந்த காலங்களிலும் தெளிவான விடயம். தற்போதும் அந்த நிலையே தொடருகிறது. இனப்பிரச்சினையில் பொத்தாம் பொதுவாக இலங்கை தமிழர் ஆதரவு நிலை எடுத்து, அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து, அதனையும் அரசியல் ஆக்கிக் கொள்வது ஒரு விதம். அதில் நேரடியாக செயல்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தங்களாலான முயற்சியை செய்வது இரண்டாவது ரகம்.

இதில், எம்ஜிஆர் மட்டுமே தீர்வு திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து, அதற்கு செயல்வடிவம் கொடுப்பதில் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து பணியாற்றினார். இனப்பிரச்சினையில் தமிழர்களின் நலம் காக்க இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த அதே சமயம், மத்திய அரசு தீர்வு திட்டங்களை முன் வைத்த போதெல்லாம், அவை குறித்து அந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வசித்து வந்த அரசியல் தலைமைகள் மற்றும் போராளி குழுக்களுடன் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தன்னால் ஆன முயற்சிகளை செய்து வந்தார்.

இது பிற தமிழ் நாட்டு கட்சிகளுக்கோ, எம்ஜிஆருக்கு பின்னர் வந்த தலைவர்களுக்கோ, மாநில அரசு தலைமைகளுக்கோ பொருந்தாது என்பதே வேதனைப்பட வேண்டிய விடயம். இதற்காக, இனப்பிரச்சினையில் எம்ஜிஆர் திராவிட போட்டி அரசியலை கலக்கவில்லை என்று அல்ல அர்த்தம். அரசியல் செய்யும் போதும் அதன் முடிவு இனப்பிரச்சினைக்கு சரியான முடிவுகளை முன் வைக்க வேணடும் என்பதில் அவர் கவனமாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் தமிழ் நாடு அல்லாத இந்தியாவின் பிற மாநிலங்களில் இனப்பிரச்சினை குறித்து தவறான எண்ணங்கள் உருவாக தமிழ் நாட்டு கட்சி தலைமைகளே காரணம். உதாரணத்திற்கு ஒன்று, இரண்டு விடயங்களை கூறலாம். இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் போதே வைகோ சட்டத்திற்கு புறம்பாக கடல்வழியில் இலங்கை சென்று விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்ததை பிற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளால் ரசிக்க முடியவில்லை. அப்போது அவரது நிலைப்பாட்டை வைகோ அன்று சார்ந்திருந்த திமுக தலைமையும் மாநில முதலமைச்சருமான கருணாநிதி ஏற்றுக் கொண்டதும் வரவேற்க தக்க விடயமாக தேசிய கட்சிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

அதுபோன்றே இந்திய அமைதி படை இலங்கையில் இருந்து திரும்பி வந்த போது, அவர்களுக்கு சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பை முதலமைச்சர் கருணாநிதி புறக்கணித்தார். இதனை தேசிய அவமதிப்பு என்று இந்தியா முழுவதுமாக பல அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் விமர்சர்களும் கருதினார்கள். பின்னர், தமிழ் நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த போது, 'அப்போதே சொன்னேன், கேட்டியா?' என்ற தொனியிலேயே அவர்களது கருத்துக்கள் அமைந்தன. அதன் அடிப்படையில் தமிழ் நாடு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராகவே அனைத்து மக்களின் கருத்தும் அமைந்தது என்பதே உண்மை. சுமார் இருபது ஆண்டுகள் சென்ற பின்னரும், 2009ஆம் ஆண்டு இனப்போரின் கடைசி கட்டங்களில் தமிழ்நாடு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் இலங்கை பிரச்சினையை இந்திய தேர்தல் பிரச்சினையாக மாற்றமுடியாததற்கு இதுவே மிக முக்கிய காரணம். ஏன், வைகோ-வே தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைவதற்கும் மக்கள் மத்தியில் நிலவி வந்த நிழலுக்கும்-நிஜத்திற்கும் இடையே இருந்த வேற்றுமையே காரணம்.

தற்போது, மத்திய பிரதேசத்தில் சென்று வைகோ போராட்டம் நடத்தி வந்துள்ளதை அங்குள்ள மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இன்றும் அவர்களுக்கு இனப்பிரச்சினை குறித்து பரவலான செய்தியோ கருத்துக்களோ இல்லை. அவற்றை அறிந்து கொள்ள அவர்களுக்கு ஆவல் இருப்பதாகவும் கருத முடியாது. அதே சமயம், பின்னொரு காலத்தில் இனப்பிரச்சினையால் இந்தியாவிற்கு வேறு ஏதாவது பிரச்சினை தோன்றுமேயானால், அப்போது அவர்கள் எல்லாம் இப்போதைய வைகோ போராட்டத்தை தவறான கண்ணோட்டத்துடன் காண்பார்கள். இதுவே இயற்கையும் கூட.

இது தான் சரித்திரம் உணர்த்தும் பாடம். இதனை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உணர்ந்து செயல்படுகிறார்களோ இல்லையோ. இலங்கையில் உள்ள தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பு தலைமை போலவே, புலம்பெயர் தமிழர் தலைமையும் தமிழ் நாட்டு அரசியலில் மூக்கை நுழைக்காமல் அரசியல் செய்ய வேண்டியதன் நிர்பந்தத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஏன், இலங்கையின் உள்ளே இனப்பிரச்சினை குறித்த அரசியலை கையாளும் கூட்டமைப்பு தலைமை, தமிழ்நாட்டு அரசியலையும் சரியாக கையாள தெரிந்தவர்களே.

இன்னும் சொல்லப் போனால், 'இந்த பழம் புளிக்கும்' என்று உணர்ந்து, கூட்டமைப்பு உதாசீனப்படுத்தும் தமிழ்நாடு அரசியல் தலைமைகளை புலம்பெயர் தமிழர்கள் ஆதரித்து, பயன்படுத்த முயல்வதால் மட்டும் எந்தவிதத்திலும் இனப்பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டுவிடப் போவதில்லை. மாறாக, வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி உடைந்த கதையாகவே அவை மாறிவிடும் நிலைமையே மீண்டும் மீண்டும் எற்பட்டு வந்துள்ளது. அவ்வாறே, இலங்கையில் இருந்து சென்ற சிங்கள - பௌத்த புனித யாத்திரிகர்கள் மற்றும் பள்ளிக்கூட குழந்தைகள் மீது தமிழ் நாட்டில் நிகழ்ந்த தாக்குதல்கள், மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களிலும், ஏன் இலங்கையில் கூட்டமைப்பு தலைமையிடமிருந்தும் எதிர்மறையான கருத்துக்களையே உருவாக்கியது.

அது போன்றே, இது வரையிலும் இலங்கை இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பது குறித்து தமிழ்நாட்டு அரசு மற்றும் அரசியல் தலைமைகளின் உணர்விற்கு மதிப்பளித்து வந்த மத்திய அரசு, இந்தமுறை முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை (அல்லது எச்சரிக்கையை?) கண்டுகொள்ளவே இல்லை. காரணம், இந்திய அரசியல் சட்டத்தின் அதிகார பகிர்வு முறையின் படி பாதுகாப்பு, இராணுவம் மற்றும் அயல்நாட்டு உறவு போன்றவை குறித்த அனைத்து விடயங்களும் மத்திய அரசின் கீழ் வரும். சட்டப்படியும், வழக்கப்படியும் மாநில அரசுகள் அவற்றில் எந்தவித கருத்தும் தொவிக்காது. அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்தும் ரகசியமாகவே இருக்கும். பத்திரிகை செய்தி குறிப்பாக வெளியாகாது.

ஏதாவது மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை இதுபோன்ற விடயங்களில் சீண்டி பார்த்தால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஜெயலலிதாவும் உணர்ந்தே இருந்திருக்கிறார். வேறொன்றும் இல்லை என்றாலும், இருபது ஆண்டுகளில் இரண்டு முறை கருணாநிதி அரசு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டதை அவர் மறந்திருக்க முடியாது. எது எப்படியோ, இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விடயத்தில் மத்திய அரசின் முடிந்த முடிவை, பாதுகாப்பு இணை அமைச்சர் பல்லம் ராஜீ தெரிவித்த பிறகு, தமிழ் நாட்டு அரசு தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் வெளியிடப்படவில்லை என்பதே உண்மை. அது போன்றே, மாநிலத்தில் உள்ள பிற கட்சிகளும் எந்தவித கருத்தும் இதுவரை கூறவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X