2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடக்கில் பொருந்தாத நியாயங்கள்

Super User   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              -கே. சஞ்சயன்

"பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர் ௭ன்பதற்காக, வடக்கு மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்திவிட முடியாது.  வடக்கில் முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாக வேண்டியது அவசியம். அதற்கான சூழலை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் அரசாங்கம் ஏற்படுத்தி விடும்.

அதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பார்"  என்று கூறியிருந்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ.

வடக்கின் நிர்வாகம் இவரது கண்காணிப்பில் தான் நடந்து வருகிறது. அவரது இந்தக் கருத்து, வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை என்ற அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.

வடக்கில் தேர்தலை நடத்துவதற்காக சூழல் என்பது என்ன என்ற கேள்வி இத்தகைய தருணத்தில் எழுகிறது.

ஏனென்றால், வடக்கில் இன்னமும் மீள்குடியமர்வு முடியவில்லை என்பதையே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் தாமதிக்கப்படுவதற்குக் காரணமாக முன்னர் அரசாங்கம்  கூறிவந்தது.

ஆனால், கடந்த 24 ஆம் திகதியுடன் மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாம் மூடப்பட்டு விட்டது. அத்துடன், இடம்பெயர்ந்தோர் பிரச்சினையில் இருந்து விடுபட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டும் விட்டது.

இத்தகைய சூழலில் மீள்குடியமர்வைக் காரணம் காட்டி, இனிமேல் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலைப் பிற்போட முடியாதநிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்கு, அரசாங்கம் புதிய காரணத்தைத் தேடிப்பிடிக்க வேண்டும்.

இனிமேல் அரசாங்கம் என்ன காரணத்தை முன்வைக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் பார்த்திருந்த போது தான் அமைச்சர் பசில் ராஜபக்ஷ யார் என்ன சொன்னாலும் இப்போதைக்குத் தேர்தலை நடத்த முடியாது அதற்கான சூழல் அங்கு உருவாகவில்லை எனக் கூறியுள்ளர்.

அவ்வாறாயின், வடக்கை புலிகளின் பிடியில் இருந்து மீட்டு, அங்கு இயல்புநிலையை ஏற்படுத்தி விட்டதாகவும், மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதாகவும் அரசாங்கம் கூறுவது பொய்யா என்ற கேள்வி எழுகிறது,

வடக்கில் உள்ள நிலைமை குறித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கருத்து அரசாங்கத்தின் முன்னைய உரிமை கோரல்களையெல்லாம் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.

வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை என்ற அவரது கருத்தின் சரியான அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான ஜனநாயக சூழல் அங்கு இல்லையா?, தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நிலை அங்கு இல்லையா?, தேர்தலில் வாக்களிக்கின்ற மனோநிலை அங்குள்ள மக்களுக்கு இல்லையா?, அல்லது இவை தவிர்ந்த வேறேதும் காரணம் உள்ளதா? இப்படி நீள்கிறது கேள்விகள்.

இவற்றில் எந்தக் காரணத்தை அரசாங்கம் தனது பக்க நியாயமாக முன்வைத்தாலும், அது போருக்குப் பிந்திய, மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் கேள்விக்குட்படுத்தி விடும்.

அது, இந்த மூன்றாண்டுகளில், அரசாங்கம் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளையும் மலினப்படுத்தி விடும்.

வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தலாம் என்பதே அரசாங்கத்தின் இலக்கு.  இதற்கான உண்மைக் காரணம், வடக்கில் அரசசார்பு நிலை ஒன்றை உருவாக்கி விட்டே தேர்தலை நடத்த வேண்டும் என்பதேயாகும்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் வடக்கு மாகாணசபையின் அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக, அரச ஆதரவுத் தளம் ஒன்றை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

கிழக்கு மாகாணசபை நிர்வாகம் எதிர்க்கட்சிகளின் கைக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அரசாங்கம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது.

அதைப்போலத்தான், வடக்கிலும் தமது அதிகாரத்தை நிலைத்திருக்க வைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

அரசாங்கம் தனது நலனை முன்னிறுத்தியே வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிற்போடப்படுகிறது.  இது ஒன்றும் எவருக்கும் புரியாத இரகசியமில்லை.

வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றினால், அது தமிழர்களின் உரிமைக்கான குரலை இன்னும் உயர்த்தி விடும்.

மாகாண அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக மத்திய அரசுடன் ஒரு  இழுபறி யுத்தம்  உருவாகும்.
அத்தகைய நிலை ஏற்படுவதை அரசாங்கம் இப்போதைக்கு விரும்பவில்லை.

அதேவேளை, இதுவரை தேர்தலைப் பிற்போட்டு வந்த அரசாங்கத்துக்கு, காரணம் சொல்வதற்கு மீள்குடியமர்வு ஒரு வசதியாக இருந்தது.

ஆனால் இப்போது மீள்குடியமர்வு முற்றுப்பெற்று விட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட இன்னமும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகவில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளது விந்தையானது.

இது அரசாங்கம் இன்னமும் வடக்கை இராணுவ மயப்படுத்தி வைத்துள்ளது, இயல்புவாழ்வு மீளத்திரும்பிவில்லை,  ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வடக்கிலுள்ள மக்கள் வாழ்கிறார்கள் என்ற கருத்தையே வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதேவேளை போர் முடிந்த பின்னர், இதுவரை நான்கு தேர்தல்களை வடக்கு மாகாணம் சந்தித்துள்ளது. முதலில் யாழ்.மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. அதையடுத்துஇ நாடாளுமன்றத் தேர்தலும், உள்ளூராட்சித் தேர்தலும் நடத்தப்பட்டன.

இவற்றையெல்லாம் நடத்திய போது, வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லையென்று அரசாங்கத்துக்குத் தெரியாமல் போனது எப்படி?

அவ்வறாயின் இந்த நான்கு தேர்தல்களின் மூலமும்,  வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு தவறானது என்று அரசாங்கம் சொல்ல வருகிறதா?

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முழுதாக நிறைவடைந்துள்ள நிலையில்கூட வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் வரவில்லை என்று அரசாங்கம் கூறும் நியாயத்தை ஏற்கின்ற நிலையில் சர்வதேச சமூகம் இல்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் இதை பலமுறை வலியுறுத்தி விட்டன. ஆனால், அரசாங்கமோ அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் என்பது இனிவரும் நாட்களில் அரசின் மீதான கடுமையான அழுத்தமாக இறங்கக்கூடும். காரணம், மீள்குடியமர்வு முற்றுப்பெற்று விட்டதான அறிவிப்புத் தான்.

உள்நாட்டில் அரசாங்கம் கூறுகின்ற நியாயங்கள் பெரிதாக கணக்கில் எடுக்கப்படாது போனாலும், சர்வதேச சமூகம் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளை ஒருபோதும் இலேசான விடயமாக எடுத்துக் கொள்ளாது.

கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தமிழர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் ஜனநாயக ரீதியாக தமக்கென ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த முடியாமல் இருப்பது தமிழரைப் பொறுத்தவரையில்  அவர்களைப் பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளாக்கும்.

தமக்கு எதிரான போக்கில் இருந்து அரசாங்கம் மாறிவிடவில்லை என்ற கருத்து அவர்களிடத்தில் உருவாகும். அது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கும். அரசாங்கத்துக்கு இது ஒன்றும் தெரியாத விடயமாக இருக்க முடியாது.

இது போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் இருந்து அரசாங்கம் பின்நோக்கி நகரத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போக்கு, போர் முடிவுக்கு வந்த பின்னர், இனமுரண்பாடுகள் களையப்படுவதற்குப் பதிலாக, அது இன்னமும் கூர்மைப்படுத்தப்படுவதற்கே வழிவகுக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X