2025 மே 19, திங்கட்கிழமை

கூட்டமைப்பு குழப்பங்கள் எங்கே செல்கின்றன?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருமித்த பிரச்சினையோ, அல்லது பலம் வாய்ந்த எதிரணியோ இல்லாதபட்சத்தில் உள்கட்சி பூசல்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும். இது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைமையில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட அரசியல் இலக்கணம் அல்ல. பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய அரசியல் நெறிமுறை. இன்றைய நிலையில் கூட்டமைப்பிற்கும் பலவாறாக பொருந்துகிறது. அவ்வளவுதான்.

இனப்போர் முடிவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை இல்லாதநிலையில், இலங்கை தமிழ் சமுதாயத்தின் உள்ளே புரையோடி கிடக்கும் பிரச்சினைகள் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கும் என்பது உணரப்பட்டு இருந்தது. இது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழ் அரசியல் தலைமையின் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகாது. அன்றையதினம் தமிழ் அரசியலில் விடுதலைப் புலிகளின் அடாவடி ஆதிக்கத்தை குறிப்பதாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அண்டை நாடான இந்தியாவில் எழுபதுகளில் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்போதைய இந்திய பத்திரிகை துறையின் செயல்பாடு குறித்து விவரித்த பின்னாள் மத்திய அமைச்சர் அத்வானி, 'அரசானது பத்திரிகை துறை குனிந்து நிற்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. அவர்களோ, (தன்மானத்தை இழந்து), தரையை தொட்டு, தவழந்து செல்லவும் தாயரானர்கள்' என்று கூறினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆளுமையின் கீழ், அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கூட்டமைப்பின் நிலைமையும் அவ்வாறாகவே இருந்தது.

இலங்கை தமிழ் சமுதாயத்தை இந்தியாவின் அவசரகால நிலையோடு ஒப்பிடுவது இதோடு நின்றுவிடவில்லை. இந்தியாவில் அவசரகால நிலைக்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமுதாய குழப்பங்களின் பின்னணியில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறை ஆட்சியின் கீழ், மௌனம் சாதிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய மக்கள் தங்களது சுதந்திர எண்ணங்களை வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கே இப்படியென்றால், இருபத்தைந்து ஆண்டுகள் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் அடைபட்டுக் கிடந்த தமிழ் அரசியல் தலைமைகளின் 'சுதந்திர வேட்கை' கூட, நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அரசியல் சித்தாந்தம் தான்.

ஆனால், இதுவெல்லாம் தானா இன்று கூட்டமைப்பை குழப்பும் பிரச்சினைகள், அல்லது காரணங்கள்? இரண்டு கேள்விகளுக்குமே பதில் 'இல்லை' என்பதுதான். இவை இரண்டும் தமிழ் அரசியல் தலைமையின் போக்கிற்கான விளக்கமாக வேண்டுமானால் அமையலாம்.  ஆனால், தர்க்கரீதியாக அத்தகைய போக்கை நியாயப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை. மாறாக. இத்தகைய உட்கட்சி பூசல்களின் பின்னால் 'தனிமனிதர்'ஆசைகளும், தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் கணக்குகளுமே காரணமாகும்.

பல்வேறு காலகட்டங்களில், பிரச்சினை அடிப்படையில் பல்வேறு தரப்பினர் ஒரு குடையின் கீழ் ஒத்துழைப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிடும். ஆனால், அந்த பிரச்சினைகள் முடிந்த முடிவை எட்டும் போதே, அந்தக் குடையில் ஒட்டைவிழுந்து, உறுப்பு குழுக்கள் கட்சிகளாக வடிவம் பெற்று ஒன்றொன்றாக பிரிந்து செல்வதும் இயற்கையாகவே நிகழ்ந்துவிடும். இந்தியாவில், காங்கிரஸ் கட்சியின் உதயமும் பலமும் சுதந்திரம் அடைந்த பின்னர் அந்தக்கட்சி அடுத்தடுத்து உடைந்ததும் பின்னர் பலமிழந்ததும் எல்லாமே கடவுள் விதிப்படி என்பதைவிட, அரசியல் விதிப்படியே அரங்கேறியது.

எப்போதெல்லாம், ஒரு தலைமைக்கு அதுவும் குறிப்பாக அரசியல் தலைமைக்கு வெளியில் இருந்துள்ள எதிர்ப்புகள் அல்லது எதிர்பார்ப்புகள் குறைகிறதோ, அப்போதெல்லாம் அங்கே உட்கட்சி விரிசல்களும் பிளவுகளும் தவிர்க்க முடியாததாகிவிடும். அதுபோன்றே, கொள்கை ரீதியான வெற்றிகள் அல்லது அலைக்கழிக்கப்படல் ஆகியவையும் அவ்வாறாகவே முடியும். நோர்வேயின் உதவியுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உருவானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வடக்கு - கிழக்கு அலகுகள் பிளவுபட்டது, அரசியல் அகராதியில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

அதுபோன்றே, தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) ஆடசியில் அமர்ந்து தனது அரசியல் கொள்கைகளுக்கு வெற்றிகரமாக செயல் வடிவம் கொடுத்த பின்னர், அந்த கட்சி உடைந்து, எம்.ஜி.ஆர். தலைமையில் அஇஅதிமுக உருவானதும் காலத்தின் கட்டாயம் ஆகும். இனப்போருக்கு முன்னர் இலங்கை தமிழ் அரசியல் தலைமை சிதைவுபட்டதும் தற்போது போர் முடிவிற்கு வந்த பின்னர் உள்கட்சி விவகாரங்கள் அடிக்கடி தலைதூக்குவதும் இந்த நியதிப்படிதான். உட்கட்சி பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், உட்கட்சி பிளவுகள் வெளிப்படுவது தவிர்க்க முடியாத விடயம்.

கூட்டமைப்பின் இன்றைய நிலையும் இது தான். இனப் போருக்கு பின்னர் அடுத்தடுத்து எதிர்கொள்ளப்பட வேண்டிய தேர்தல்கள், கூட்டமைப்பு தலைமைக்கும் அவர்களை சார்ந்து நிற்கும் தமிழ் சமூகத்தினருக்கும் ஒருவித அலுப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக, அவர்கள் அனைவருமே அதீதமாக எதிர்பார்த்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல், 'கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத' நிலையாக முடிவடைந்ததில் அந்த சோர்வு, விரக்தியாக மாறியதும் எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே. இத்தகைய சூழலை எதிர்பார்த்து, தேர்தலுக்கு முன்னர் தனது பிரசாரங்களை கூட்டமைப்பு தலைமை அடக்கி வாசித்திருந்தால், அவர்களும் சரி, அவர்களை ஆதரிக்கும் தமிழ் சமூக பகுதியினரும் சரி, விரக்தியின் விளிம்பிற்கு செல்லவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இனப்போருக்கு பின்னர் அரசுடனான பேச்சுவார்த்தைகளும் இழுபறிநிலையிலேயே இன்னமும் இருப்பதும் கூட்டமைப்பு தலைமையையும், அவர்களை நம்பி இருக்கும் தமிழ் சமூக அங்கங்களையும் மலைப்பில் ஆழ்த்தி உள்ளது. இனப்போருக்கு பின்னர், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அரசு அதிகார பகிர்வு குறித்த முடிவுகளை எடுக்கும், அல்லது எடுக்கவேண்டும் என்று கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்தால், அந்தமுடிவுகள் தவறானது என்று தற்போது ஏற்றுக் கொள்வதில் சிரமம் உள்ளது. காரணம், அரசும் சரி, கூட்டமைப்பும் சரி, 'நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, பின்னர் ஊதி, ஊதி சாப்பிடலாம்' என்றவகையிலேயே பேச்சுவார்த்தைகளை அணுகிவந்துள்ளது. அதன் பலனையே இரு தரப்பினரும் தற்போது பலவாறாக எதிர்நோக்கிவருகிறார்கள்.

கூட்டமைப்பின் தற்போதைய குழப்பங்கள், நான் - நீ என்ற தனிநபர் போட்டா-போட்டிக்கு, கட்சி மற்றும் கொள்கை வடிவம் கொடுக்க முயல்கிறது என்றே சொல்லவேண்டும். 'கூட்டமைப்பை அழிப்பதற்கு தமிழ் சமுதாயம் யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை' என்று சம்பந்தன் கூறியுள்ளார். அதற்கு பதிலடிகொடுப்பது போலவோ என்னவோ, அவர் தலைமை ஏற்றுள்ள தமிழ் அரசு கட்சி அல்லாத, நான்கு உறுப்பு -கட்சிகளும், கூட்டமைப்பை தனி அரசியல் கட்சியாக அடிப்படையில் இருந்து உருவாக்கி, அதற்கென்று தனியான ஒரு தேர்தல் சின்னத்தை பெறவேண்டும் என்ற பழைய பிரச்சினையை கடித வடிவில், பொது பிரச்சினையாக ஆக்கியுள்ளனர்.

இவை எல்லாமே, கூட்டமைப்பை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்பவை. முன்னர் கூறியதுபோல், கூட்டமைப்பு தற்போதைய உருவில் இருந்தாலும், புதிதாக ஒரு கட்சியாக உருவெடுத்தாலும், அதில் அங்கம் வகிக்கப் போகிறவர்கள் இதே தலைவர்களும் அவர்களை தனித்தனியே சார்ந்திருக்கும் தொண்டர்களும் தான். அதுபோன்றே அரசியல் பாரம்பரியத்தையும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழ் அரசு கட்சிக்கே கூட்டமைப்பில் அதிக எண்ணிக்கை இருக்கிறது என்பதும் உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது.

தற்போதைய உருவிலோ அல்லது புதிய கட்சி வடிவிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பு 'ஒருகுடைகீழ்' திரளும் பல்வேறு அமைப்புகளின் கூட்டணியே. நாளை, ஒரே கட்சி என்று வந்து, அதன் உள்ளே பல்வேறு கட்டங்களில் கட்சித் தலைமைப் பொறுப்பிற்கு தேர்தல்கள் நடைபெற்றாலும் இந்த உண்மையே வெளிப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். மாறாக, தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக பிற கூட்டமைப்பு கட்சிகள் அணிதிரண்டால், அது அந்த புதிய கட்சிக்கு உள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்தி, பிரிவுகளுக்கு வழி வகுக்கும். பின்னர் அந்தக் கட்சியும் உடைவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

கூட்டமைப்பை அடிமட்டத்தில் இருந்து மேம்படுத்த வேண்டும், புதிய தொண்டர்களை சேர்க்கவேண்டும். அடுத்த தலைமுறை தலைவர்களை அனைத்து பகுதிகளிலும் நிலைகளிலும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு தலைமைப் பயிற்சியும் வாய்ப்பும் வழங்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், இதற்கு கூட்டமைப்பில் தற்போது உள்ள எந்தக் கட்சியினருமே தயாராயில்லை. மாறாக, கூட்டுத் தவறுகளுக்கு பிறரைமட்டுமே குறை கூறும் பாங்கில் இருந்து ஒருவருமே மாறிவிடவில்லை. இதற்கு, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் கூட விதிவிலக்கல்ல.

நாடு சுதந்திரம் அடைந்த காலத்திற்கு முன்பிருந்தே, கொழும்பில் இருந்து கொண்டு தமிழர் பகுதிகளில் அரசியல் அசைவுகள் ஒவ்வொன்றையும் தாங்களே வழிநடத்த வேண்டும் என்ற தலைவர்களின் அதீத ஆசையும் அதனால் அவர்கள் மேற்கொண்ட யுக்திமுறைகளும் தமிழ் சமூகத்தை தற்போதைய நிலைக்குதள்ளியுள்ளது. அதனை மாற்றவேண்டும் என்று தற்போதைய தலைவர்கள் யாருமே கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதுகுறித்து தமிழ் சமூகமும், அது போற்றிப் பாராட்டும் அறிவுஜீவிகளும் கூட வெளிப்படையாக பேசத்தயாராக இல்லை.

இனப்போருக்கு பின்னான 'சுய பரிசோதனை' மீண்டும் அவர்கள் அனைவரையுமே முறையே இலங்கை அரசு, சிங்கள அரசியல் தலைமைகள், கூட்டமைப்பு அல்லாத தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் ஆகியவற்றையே தொடர்ந்து குறை கூறிவரும் வகையிலேயே தயாராக்கி உள்ளது. அதுவும் அலுத்துப் போகும் போது, தங்களுக்குள்ளேயே புகை விட்டுக் கொண்டிருந்த பிரச்சினைகளை பேசித் தீர்க்காமல், ஊதி, ஊதி பெரிதாக்கிவிட்டு, அதிலும் குளிர்காயத் தொடங்கி உள்ளனர். இது வேதனைக்குரிய விடயம்.

தற்போதைய கூட்டமைப்பின் உட்கட்சி போர்கள் - அதன் தலைமை, தலைநகர் டெல்லியில் இந்திய அரசு மற்றும் அரசியல் கட்சி தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக தொடங்கியுள்ளது. இதேநிலை, ஜெனிவா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை பிரச்சினை அடுத்தமாதம் அலசப்படும் போதும் தொடரலாம். அவ்வாறானால், கூட்டமைப்பை, அது நம்பி இருக்கும் சர்வதேச சமூகம் முழுவதுமாக நம்பி செயல்படமுடியாத சூழ்நிலை உருவாகலாம். அதனைத் தொடர்ந்து பழகிப் போன பழம் பல்லவியான, 'உலகில் யாரையும் நம்பமுடியாது' என்ற வரிகளை கூட்டமைப்பு தலைவர்களே தங்கள் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எடுத்துக் கொடுக்கலாம்.

இதுதானா அவர்கள் விரும்புவது? இதுதானா இலங்கை தமிழ் சமூகம் எதிர்பார்ப்பது?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X