2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எட்டாவது ஆண்டில் தே.மு.தி.க: விஜயகாந்திற்கு தூதுவிட்ட கருணாநிதி?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தே.மு.தி.க) எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அ.தி.மு.க.வின் சிந்தனைத் தோட்டத்தில் பூத்த மலர்களில் ஒன்றான பன்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவராக இருந்து விஜயகாந்திற்கு வழி காட்டி வருகிறார். பன்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்தவர். ராஜீவ் காந்தி இந்திய பிரதமராகவும், எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த நேரத்தில் உருவான இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்காக முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் இந்த பன்ருட்டி ராமச்சந்திரன். இந்த இரட்டையர்களின் தலைமையில்தான் தே.மு.தி.க. இவ்வளவு காலமும் அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வாக்கு வங்குவதற்கு விஜயகாந்த் என்றால், வியூகத்திற்கு பன்ருட்டி ராமச்சந்திரன்- இதுதான் தே.மு.தி.க.வின் பொலிட்டிக்கல் அஜெண்டா.

தே.மு.தி.க. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்று சக்தியாகவே உருவெடுக்க விரும்பியது. அதனால் 2006 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இடையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் அப்படியே போட்டியிட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. 29 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று விஜயகாந்த் தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவரானார். மூன்றாவது சக்தியாக உருவாக முயற்சி செய்த பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), ம.தி.மு.க. (வைகோ) தமிழ் மாநில காங்கிரஸ் (மறைந்த மூப்பனார்) ஆகிய மூன்று கட்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மட்டும்தான் ஒருமுறை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. வைகோவிற்கும், டாக்டர் ராமதாஸ் கட்சிக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. இந்த சூழ்நிலையில் இப்போது மூன்றாவது சக்தியாக வளர நினைக்கும் விஜயகாந்திற்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்தது. ஆனாலும் அவருக்கும் அ.தி.மு.க.விற்கும் ஏற்பட்ட பனிப்போரால் வழமையாக சட்டமன்றத்திற்கு செல்வதை தவிர்த்தார் விஜயகாந்த். குறிப்பாக சமீபத்தில் தகவல் ஆணையர்கள் நியமனம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தேர்வு குழுவில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அதேபோல் சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா செய்த பிறகு புதிய சபாநாயகராக தனபால் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற மரபின் படி ஆளுங்கட்சி தலைவரும், எதிர்கட்சித் தலைவரும் சபாநாயகரை அழைத்துக் கொண்டு போய் சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அந்த நிகழ்ச்சிக்குக்கூட விஜயகாந்த் போகவில்லை. அவர் கட்சியின் சார்பில் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக இருக்கும் பன்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பி விட்டார். இந்த அளவில் மூன்றாவது சக்தியாக வர நினைக்கும் விஜயகாந்த், முதல் சக்தியாக இன்றைய தேதியில் திகழும் அ.தி.மு.க.வுடன் முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

அ.தி.மு.க.விற்கு போட்டியாக இருப்பது தி.மு.க. அடுத்த பலமுள்ள கட்சி தமிழகத்தில் அந்தக் கட்சிதான். முதல் கட்சியுடன் முரண்டு பிடித்து மூன்றாவது சக்தியாக வரத்துடிக்கும் கட்சிகள் இதுவரை அடுத்த இரண்டாவது பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அளவுகோலின் படி பார்த்தால் இனி திராவிட முன்னேற்றக் கழகத்துடன்தான் விஜயகாந்த் கூட்டணி வைக்க வேண்டும். அதற்காக தூது விடும் வேலையை தி.மு.க.வும் ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறது. அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஒருமுறை விஜயகாந்துடன் மதுரையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தார். அப்போது இது பற்றி பேசியதாக தகவல் உண்டு. பிறகு மத்திய அமைச்சராக இருக்கும் மு.க.அழகிரிக்கும் விஜயகாந்திற்கும் ஏற்கனவே நட்பு உண்டு. ஏனென்றால் இருவரும் மதுரைவாசிகள் என்பதுதான். அவரும் தி.மு.க- தே.மு.தி.க. கூட்டணிக்காக பேசிக் கொண்டிருக்கிறார் என்று தகவல் பரவியது. அந்த காலகட்டத்தில் எல்லாம் அ.தி.மு.க.வுடன் ஓரளவும் தே.மு.தி.க. உறவு ஒட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த உறவு வெட்டிக் கொண்டு நிற்கிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட திருவரங்கம் பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா "கறுப்பு வியாபாரி" கதை சொல்லி மறைமுகமாக விஜயகாந்தை விமர்சித்தார். அதன் பிறகு இரண்டு மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரையிலான மின் வெட்டால் மக்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்று தனி ப்ரோக்ராமே செய்து தே.மு.தி.க. வின் தொலைக்காட்சியான "கேப்டன்" தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரத்தின் போது தமிழகத்தில் தொடரும் மின்வெட்டால் "மக்கள் புரட்சி போன்ற போராட்டங்கள்", "மின் வெட்டை மூன்றே மாதத்தில் சமாளிக்கிறேன் என்று கூறி பொய் வாக்குறுதி கொடுத்தது", "ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் அ.தி.மு.க. தலைமை" என்றெல்லாம் சகட்டு மேனிக்கு "கேப்டன்" டி.வி.யில் அ.தி.மு.க. ஆட்சி பற்றிய விமர்சனம் தலை தூக்கியிருக்கிறது.

இந்த பிரசார சூட்டில் இருக்கும் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி தரப்பிலிருந்தே சில தூதுவர்கள் இப்போது விஜயகாந்தை சந்தித்து திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விஜயகாந்திற்கு எட்டு எம்.பி. சீட்டுகள் கொடுக்க தி.மு.க. தலைமை முன் வந்திருப்பதாகவும், ஆனால் விஜயகாந்த் தரப்பிலோ 15 எம்.பி. சீட்டுகள் கேட்பதாகவும் அரசல் புரசலாக செய்திகள் அடிபடத் தொடங்கி விட்டன. இந்நிலையில் ஒரு பத்திரிகை பேட்டியில் "எனக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டுநடப்பேன்" என்றார் விஜயகாந்த். இந்த பேட்டி முடிந்த பிறகு "காங்கிரஸுடனும், மதவாத சக்திகளுடனும் கூட்டணி இல்லை" என்று ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். உடனே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க விஜயகாந்த் ரெடியாகிவிட்டார் விஜயகாந்த் என்று அனைத்து பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் செய்திகள் வெளியிட்டன. ஏற்கனவே சென்ற சட்டமன்ற தேர்தலில் கடைசி வரை தனித்துத்தான் போட்டியிடுவேன் என்று கூறி விட்டு தேர்தலுக்கு முன்பு நடந்த சேலம் பொதுக்கூட்டத்தில் "தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி வைப்பேன்" என்று கூறி கூட்டத்திலேயே வாக்கெடுப்பு நடத்தினார். அதில் கூட்டணிதான் வேண்டும் என்று தொண்டர்கள் கூற, அதே வழியைப் பின்பற்றி அ.தி.மு.க.வுடன் கூட்டணி கண்டார். இப்போது நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வரும் என்ற நிச்சயமான தன்மை இல்லை என்ற நிலையில், இப்போதே கூட்டணி வைக்கப் போகிறோம் என்று சொல்ல வேண்டியதில்லை என்பதை அவர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விஜயகாந்திற்கு கூறியிருக்கிறார்கள். அதே சமயத்தில் "இனி அ.தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைக்க முடியாது" என்பதையும் விளக்கியிருக்கிறார்கள். ஆகவே மூன்றாவது சக்தியாக வளர நினைக்கும் தே.மு.தி.க. கூட்டணிக்கு ரெடி. ஆனால் இப்போது அதை வெளிப்படையாக சொல்லத் தயாராக இல்லை.

இப்படியொரு பரபரப்பான சூழ்நிலையில் தே.மு.தி.க.வின் எட்டாவது ஆண்டு விழா தொடக்கக் கூட்டம் தமிழகத்தின் தென் கோடியில் உள்ள நாகர்கோயிலில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் மக்களை மாற்றி மாற்றி ஏமாற்றி விட்டார்கள். இவுங்க கூட சுட்டுப்போட்டாலும் கூட்டணி வைக்க மாட்டேன். 3 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருப்பவர் 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கிறது. ஆகவே மக்களே! ஒரு முறை சிந்தித்து முரசு சின்னத்திற்கு (தே.மு.தி.க.வின் சின்னம்) வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க.வும் வேண்டாம், அ.தி.மு.க.வும் வேண்டாம் என்று கருதி மூன்றாவது சக்தியை நம்பித் திரளும் வாக்காளர்களை இப்போதே கைவிட்டு விட வேண்டாம் என்ற கணக்குப் போட்டே இப்படி பேசியிருக்கிறார் எங்கள் கேப்டன் என்று கூறும் தே.மு.தி.க. இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர், "கூட்டணிக்கு நாங்கள் ரெடிதான். ஆனால் இப்போதே கூட்டணி போகிறோம் என்று கூறி எங்களது பார்கைனிங் பவரை இழக்கத் தயாராக இல்லை. எங்களுக்கு வேண்டிய எம்.பி. சீட்டுக்களை பெற வேண்டும் என்றால் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவிப்பதே சரியாக இருக்கும். ஆனால் எங்களால் வெற்றி பெற நினைக்கும் கட்சிகள் எங்களுக்குத் தேவையான எம்.பி. சீட்டுகளை கொடுக்க முன் வர வேண்டும். தே.மு.தி.க. இல்லாமல் தமிழக நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணியும் வெற்றி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X