2025 மே 19, திங்கட்கிழமை

கூட்டமைப்புடன் இந்தியா பேசியது என்ன?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சஞ்சயன்


மீண்டும் ஏமாற்ற மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வாக்குறுதி அளிப்பாரேயானால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் செல்லத் தயாராக இருப்பதாக புதுடெல்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தில் இருந்து மீண்டும் ஏமாறத் தயாரில்லை என்ற கருத்து உறுதியாக வெளிப்பட்டுள்ளது.

அதேவேளை, தெளிவான உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இருந்து பெற்றுக்கொள்ளாமல், தெரிவுக்குழுவுக்குச் சென்று தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னர் தான் அவர் இவ்வாறு கூறியிருந்தார். இது இலங்கை அரசுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்றே கருதலாம். ஏனென்றால், இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்று அரசாங்கம் நம்பியிருந்தது. அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றோர் அந்த நம்பிக்கையை வெளிப்படையாகவே கூறியும் இருந்தனர். அந்த நம்பிக்கை இப்போது உடைந்து போயிருக்கும் என்றே கருதலாம்.

கடந்த மாதம் 20ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சந்தித்துப் பேசிய சில நாட்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு புதுடெல்லி வருமாறு அழைப்பு விடுத்தது.

அப்போது இந்த அழைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கானதாக இருக்கலாம் என்றே பரவலாகக் கருதப்பட்டது. அதிலும் குறிப்பாக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாக, அரசாங்கம் கூறிவரும் நிலையில், தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு இந்தியா அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா விடுத்த அழைப்பை இலங்கை அரசு விரும்பாது போனாலும், தெரிவுக்குழுவுக்கான அழுத்தம் அவர்கள் மீது கொடுக்கப்படும் என்ற வகையில், பலத்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது.

ஆனால், இந்தியா அத்தகைய அழுத்தங்கள் எதையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. கொழும்பு திரும்பிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரமான சூழலிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதைவிட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிறேமச்சந்திரன் போன்றோர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளிலும், தெரிவுக்குழு தொடர்பாக இந்தியத் தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை என்றே கூறியுள்ளனர்.

இந்தியப் பயணத்துக்கு முன்னதாகவே, கூட்டமைப்புத் தலைவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார், ஆனால், தீர்வுக்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இத்தகைய சூழலில், மீண்டும் ஏமாற்றமாட்டோம், தெரிவுக்குழுவின் ஊடாக நியாயமான தீர்வு ஒன்றை வழங்குவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உறுதியளித்தால் மட்டுமே தெரிவுக்குழுவுக்கு செல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது முக்கியமானதாகிறது.

இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவை நிராகரித்து விட்டு, திடீரென இந்தியப் பயணத்தின் பின்னர், அதில் இணையத் தயார் என்று அறிவிக்க முடியாது. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இந்தநிலையில், இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் தெரிவுக்குழுவில் இணைவதற்கு முடிவு செய்வதானால் கூட, அதை அவர்களால் உடனடியாக செய்ய முடியாது. ஆனால் அவ்வாறான அழுத்தங்களின் பேரில், கூட்டமைப்பு அந்த முடிவுக்கு வருவதென்றால், ஜனாதிபதியின் உத்தரவாதத்தை ஒரு நிபந்தனையாக வெளிப்படுத்தியிருக்க முடியாது.

புதுடெல்லிப் பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாகவே தோன்றுகிறது.

இலங்கை அரசு தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விடயத்தில் இந்தியாவுக்கு அதிருப்தி உள்ளது என்பது வெளிப்படை. அதை கூட்டமைப்பினரிடம் இந்தியத்தரப்பு வெளிப்படையாகக் கூறாது போனாலும் அந்த அதிருப்தியை குறிப்புணர முடிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கத்தில், இந்தியாவின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக இரா.சம்பந்தன் தகவல் வெளியிட்டிருந்தார். இவையெல்லாம், கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்.

கூட்டமைப்புத் தலைவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட முன்னர், இந்தியாவின் அழைப்பாணையின் பேரில் தான் அவர்கள் புதுடெல்லி வருவதாக ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது இந்திய அதிகாரிகள் அந்தக் கருத்தை நிராகரித்திருந்தனர். அழைப்பாணை என்ற சொல்லைப் பயன்படுத்த அவர்கள் விரும்பவில்லை. புதுடெல்லி வந்து பேசுவதற்கு தமிழ்க்கட்சி தலைவர்கள் விரும்பினர். எனினும், ஜெனிவா தீர்மானத்தை அடுத்து அவர்களை அழைப்பது சரியில்லை என்பதால் தான், இப்போது அழைத்தோம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதுடெல்லியில் உரிய மதிப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதைவிட, தமிழர்கள் சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு என்றும் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலமானதொரு நிலையை உருவாக்கியுள்ளதாகவே தெரிகிறது.

அதைவிட தமிழர்கள் இதுவரை ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர் என்ற செய்தி வெளியுலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பது அடுத்த கேள்வி. ஏனென்றால், மீண்டும் ஏமாற்றிவிட மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உறுதியளித்தால் தான், தெரிவுக்குழுவில் இணைவோம் என்று இரா.சம்பந்தன் கூறியுள்ள நிலையில், அத்தகைய உத்தரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கொடுப்பாரா என்ற கேள்வி உள்ளது.

இதில் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், அப்படியான உத்தரவாதத்தை எந்தவகையில் பெறுவது என்பதே அது. வெறும் வாய்மொழியான உத்தரவாதமா? அல்லது எழுத்து மூலமான உத்தரவாதமா? மூன்றாம் தரப்பின் முன்னிலையில் கொடுக்கும் உத்தரவாதமா? இதில் முதலாவதான வாய்மொழி உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றே கருதலாம். ஏனென்றால், வாய்மொழி உத்தரவாதங்களால் தமிழ்த் தலைமைகள் ஏமாற்றப்பட்டதே வரலாறாக உள்ளது.

எழுத்து மூலமான உடன்பாடுகளையே கிழித்தெறிவதில் விண்ணர்களான சிங்கள அரசியல் தலைமைகளிடம் வெறும் வாய்மொழி உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு தெரிவுக்குழுவுக்குப் போக கூட்டமைப்பு தயாராகும் என்று நம்பமுடியாது.

அதேவேளை, சாதாரணமான ஒரு எழுத்து மூல உடன்பாட்டின் நம்பகத்தன்மையையும் கூட்டமைப்பு சந்தேகிக்கலாம். இந்தகைய சூழலில் இந்தியாவின் முன்னிலையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதையே கூட்டமைப்பு விரும்புவதாகத் தெரிகிறது.

இறுதித்தீர்வுக்கு இந்தியா உத்தரவாதம் அளிக்குமேயானால், தெரிவுக்குழுவுக்குச் செல்லத் தயாராகவே உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் புதுடெல்லி செல்வதற்கு முன்னதாகவே கூறியிருந்தார். எனவே இந்தியாவினதும் உத்தரவாதத்தையே அவர்கள் விரும்புவர்.

இத்தகையதொரு இணக்கத்தை ஏற்படுத்துவதில் இந்தியாவுக்கும் சிக்கல் உள்ளது. அதற்கு இணங்குவதில் இலங்கைக்கும் சிக்கல் உள்ளது. அதாவது, இத்தகையதொரு உறுதிப்பாட்டை வழங்குவது அதாவது மீண்டும் ஏமாற்ற மாட்டோம் என்று உறுதியளிக்குமாறு இந்திய எப்படி கேட்கமுடியும்? அப்படி ஒரு வாக்குறுதியை கொடுத்தால், இதுவரை அரசாங்கம் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டது போலாகி விடும். இப்படிப்பட்ட நிலையில் இந்தச் சிக்கல் எப்படித் தீரப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0

  • குமார் Wednesday, 17 October 2012 07:18 AM

    சிங்கள தலைமைகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன் எந்தவிதமான நல்ல தீர்வையும் வழங்கப்போவது இல்லை. சர்வதேசத்தை ஏமாற்ற தீர்வு வழங்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டே சிறுபான்மையினருக்கு இப்போது இருக்கும் உரிமைகளை எப்படி பறிப்பது என்றே எந்நேரமும் சிந்தித்துகொண்டிருக்கிறார்கள். திவிநகும, சமீபத்தில் கோத்தபாய ,13வது திருத்த சட்டத்தை நீக்கவேண்டும் என கூறியது மற்றும் எல்லே குணவன்ச, மாகான சபைகளை நீக்கவேண்டும் என கூறியது என்பது இதற்கு உதாரணங்களாகும்.

    Reply : 0       0

    RAZA Thursday, 18 October 2012 05:12 AM

    இந்தியாவின் நாடகம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X