2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கேபி' என்ன அரசின் 'கை பாவை'யா?

A.P.Mathan   / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசுவதற்கு முன்னாள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் 'கேபி' என அறியப்படும் குமரன் பத்மநாதனின் உதவியை பெறப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெலவின் இந்த அறிவிப்பு எத்தனை தூரம் சாத்தியமானது, எந்தவித பயன் அளிப்பது என்பது குறித்த சந்தேகங்கள் உடனுக்குடனேயே எழுந்து விட்டன. அதைவிட முக்கியமாக, 'கேபி' குறித்த அரசின் இந்த அறிவிப்பு திடீரென்று தோன்றியது போலவே காணாமலும் போய்விட்டதோ என்று ஒரு வார காலத்திற்குள்ளேயே எண்ணத் தோன்றுகிறது.

இனப் போர் உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இடைப்பட்ட ஆண்டுகளில் கிட்டத்தட்ட காணாமலே போயிருந்த கேபி - விடுதலை புலிகள் இயக்கத்தின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்பட்டதை அந்த இயக்கத்திலேயே பலரும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும், பாலசிங்கமும் பின்னர் தமிழ்செல்வனும் இறந்த பிறகு, அந்த இயக்கத்தில் சர்வதேச தொடர்புடைய நபர் என்ற அளவில் கேபி-யின் தேவை முக்கியமாக கருதப்பட்டது.

கேபி-யால் போர் நிறுத்தம் குறித்து முடிவாக எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், அவரது பயன்பாடு போரின் இறுதி நாட்களில் நிரூபணம் ஆனது. இன்னும் சொல்லப் போனால், 2009ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட போர் இடைநிறுத்தம் கூட இந்திய அரசின் அழுத்தத்தாலேயே ஏற்பட்டது. அந்த இடைக் காலத்தை பயன்படுத்தி, போர் குறித்து மட்டுமாவது நல்லவொரு தீர்வு எட்டப்படாமை துரதிர்ஷ்டமே. ஆனால், விடுதலை புலிகள் இயக்கத்தின் கடந்த காலத்தையும் போரின் இறுதி கட்டத்தில் அவர்கள் சிக்கிக் கொண்ட பொறியையும் வைத்து நோக்கும் போது, கேபி-யின் இடத்தில் வேறு யாருமே அதிகமாக எதையும் சாதித்து இருக்க முடியாது என்பதும் உண்மை.

அந்த விதத்தில், இனப்போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவராக கேபி, தன்னையே பிரகடனப்படுத்திக் கொண்டது பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்த்தெழும் என்ற எண்ணமோ, நம்பிக்கையோ தமிழ் மக்களிடையே இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலரும் புலம்பெயர்ந்தோரில் கணிசமான ஒரு பகுதியினரும் அவ்வாறு ஒரு நிலைமை உருவாவதை கூட விரும்பவில்லை.

அவர்களை பொறுத்தவரையில், விடுதலை புலிகள் இயக்கம் இல்லாத ஒரு சூழலில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கையில் தங்கிவிட்ட மிதவாத அரசியல் தலைமையே தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை பெற்று தர முடியும் என்று உறுதியாக நம்பினர். இன்றும், அரசின் செயற்பாட்டிற்கு அப்பாலும், அதுபோன்ற முறையையே தமிழ் சமுதாயம் விரும்புகிறது. அந்த விதத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே அவர்கள் அலாதியான எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்துள்ளனர். இலங்கை அரசு கூட்டமைப்புடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை முறிந்துள்ள நிலையிலும் கூட. அதற்கு அப்பால் சென்று எந்த ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போர் முடிந்த காலம் தொட்டே அரசு அவ்வப்போது கூறி வந்துள்ளது. அந்த விதத்தில், தற்போது அந்த முயற்சி குறித்து அரசு மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது வரவேற்க கூடியதே. அதுபோன்றே, இத்தகைய பேச்சுவார்த்தைகளில் அரசின் நம்பிக்கையை பெற்ற ஒரு தமிழர் இடையே செயல்பட வேண்டிய அவசியமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. ஆனால், புலம் பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவசியம் தற்போது உள்ளதா, அதில் கேபி-யின் பங்கு என்னவாக இருக்க முடியும் என்பது குறித்த கேள்விகள் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளாக எழுவதும் தவிர்க்க முடியாத விடயம்.

அரசை பொறுத்தவரையில், இன பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டினுள் பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயம் என்பதில் தெளிவாக இருக்கிறது. அதுவே உண்மையும் கூட. ஆனால், கடந்த தசாப்தங்களில் தங்களது அனுபவத்தை வைத்துப் பார்க்கும் கூட்டமைப்பு உட்பட்ட தமிழ் தலைமைகள் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இருந்தால் மட்டுமே அரசு நியாயமான தீர்விற்கு வழிவகுக்கும் என்று வெகுவாக நம்பி வந்துள்ளன. இந்த பின்னணியில், புலம் பெயர்ந்தோரை தமிழ் சமுதாயத்தின் ஓர் அங்கமாக அரசு பார்க்கிறதா, அல்லது சர்வதேச சமூகத்தின் கை பாவையாக கருதுகிறதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆனால், கேபி-யை பொறுத்தவரை, அவரை அரசின் கை பாவையாக மட்டுமே தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையினர் கருதுகிறார்கள். அது துரதிர்ஷ்டமான தவறான எண்ணமாக கூட இருக்கலாம். ஆனால், எப்படி புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசின் நம்பிக்கைகுரிய தமிழர் ஒருவர் தேவைப்படுகிறாரோ, அந்த நபர் புலம்பெயர்ந்தோரின் மரியாதையையும் தொடர்ந்து பெற்றவராக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது. இனப் போர் முடிந்த சில வாரங்களிலேயே தென் கிழக்கு ஆசியாவில், கேபி அதிரடியாக கைது செய்யப்பட்டது விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னர் அவர் அரசின் பக்கத்தில் சாய்ந்து விட்டார் என்ற எண்ணம், அவர் மீதான நம்பிக்கையை தொலைத்துவிட்டது. இந்த பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கேபி-யால் சாதிக்க முடிவது எதுவுமே இல்லை.

விடுதலை புலிகள் இயக்கம் சார்ந்த உள்நாட்டு தமிழ் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் குழுக்களை பொறுத்த வரையில் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அதாவது, இயக்க தலைமை 'எதிரி' என்றோ, அல்லது 'துரோகி' என்றோ பச்சை குத்தியவர்களை எந்த எதிர் கேள்வியும் அவ்வாறே ஏற்றுக்கொள்ள தங்களை பல ஆண்டுகளாகவே பழக்கப் படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களைப் பொறுத்த வரையில், கேபி ஒரு 'துரோகி'. கேபி-யின் கூற்றிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையும் அந்த அளவிலேயே இருக்கும். கேபி-யை முன் வைத்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அரசு உண்மையிலேயே கருதினால், அது மலையை கிள்ளி எலியை பிடிக்கும் முயற்சியாகவே முடியும்.

கேபி-க்கு முன்னரும் விடுதலை புலிகள் இயக்கம் 'துரோகி' என்று முத்திரை பதித்த சிலர் இருந்துள்ளனர். மாத்தையா உட்பட்ட அவர்களில் பலரையும் விடுதலை புலிகள் தலைமையே காவு கொடுத்துள்ளது. பிற்காலத்தில் கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் அந்த லிஸ்டில் சேர்ந்தார்கள். அவர்களது பிரிவு விடுதலை புலிகள் இயக்கத்திற்கு பேரிழப்பு என்பதை பின்னர் அரங்கேறிய நிகழ்சிகள் தெளிவுபடுத்தின. என்றாலும், அவர்கள் பிர்pந்து செல்லும் போது, விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரன் தலைமையின் செல்வாக்கும் அதன் மேலான நம்பிக்கையும் சற்றும் குறைந்திருக்கவில்லை.

பின்னர் கிழக்கு பிராந்திய போரில் விடுதலை புலிகள் இயக்கம் தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கிய பின்னரே அவர்களுக்கு கட்டப்பட்டிருந்த 'துரோகி' பட்டத்தின் அழுத்தத்தை அதன் ஆதரவாளர்களே புரிந்து கொண்டார்கள். ஆனால், கேபி-யின் நிலைமை அப்படி இல்லை. இனப் போரில் விடுதலை புலிகள் இயக்கம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்ற நிலைமை தோன்றிய பின்னரே, பிரபாகரனுக்கு பின்னர் அதன் தலைமையை ஏற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புடனேயே கேபி, சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்பட்டார். அவர் சிறைப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களின் அந்த அதிர்ச்சி மாறுவதற்கு முன்னரே அவர் அரசின் 'கை பாவையாக' மாறிவிட்டார் என்ற 'துரோக செயலை' ஜீரணிக்க முடியாதவர்களாகவே இன்னமும் இருக்கிறார்கள்.

மற்றபடி, இனப் பிரச்சினை குறித்து அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமானால், அரசு அது குறித்த பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு உட்பட்ட உள்நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளுடன் மட்டும் மேற்கொண்டால் மட்டுமே உண்மையான பயன் கிடைக்கும். தனது பங்கிற்கு, கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை அரசுடனான தீர்வுக்கு தக்க நேரத்தில், தக்க விதத்தில் பெற்றுக் விடுவோம் என்று கூறி வந்துள்ளார்கள். இந்த பின்னணியில், அரசு இது குறித்து இரு வேறு நிலையில் பேச்சுவார்த்தை நிகழ்த்த முயல்வது பிரச்சினைக்குரியது மட்டுமல்ல, குழப்பம் விளைவிப்பதும் கூட.

இனப்போர் முடிந்த காலம் தொட்டே இனப் பிரச்சினை குறித்த விவாதங்களில் புலம்பெயர்ந்தோரின் நிலை குறித்து அடிக்கடி பேச்சு எழுந்தாலும், அவர்களில் எத்தனை குழுக்கள் என்றோ, அவர்களில் யார் உள்நாட்டில் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்றோ அதிகாரபூர்வமாக எந்தவிதத்திலும் எதுவும் கூற முடியாத நிலையே தொடர்கிறது. மாறாக, கூட்டமைப்பு போன்ற உள்நாட்டில் அரசியல் சாசனத்தின் கீழ் தேர்தல் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்புகளால் மட்டுமே தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களுக்காக எந்தவித முடிவையும் எடுக்க முடியம். அந்த முறையே சட்ட ரீதியாகவும் நடைமுறையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அது மட்டுமல்ல. அரசு தனக்கு ஏற்புடைய ஒரு புலம்பெயர்ந்த தமிழ் குழுவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் எந்த அரசியல் தீர்வையும் உள்நாட்டில் வாழ் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லி விடமுடியாது. அவ்வாறான சூழ்நிலை உருவானால், அதன் தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்றோ, பின் விளைவுகள் என்ன செய்யும் என்றோ யாரும் யோசனை செய்ததாக தெரியவில்லை. அதுபோன்றே, அரசும் தனது உறுதி மொழிகளை காப்பாற்றும் என்பதற்கும் எந்தவித அத்தாட்சியும் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் சென்று, முக்கியமான மற்றொரு விடயமும் இருக்கிறது. மிதவாத அரசியல் தலைமை என்று கருதப்படும் கூட்டமைப்பையே விடுதலை புலிகள் இயக்கத்தின் மறுபக்கம் என்பது போன்றெல்லாம் கருத்து தெரிவித்து வரும் அரசின் சில முக்கிய தலைவர்கள், அதே சாயத்தை அதிகமாகவே தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் புலம்பெயர் குழுக்களுக்கும் அடித்து அவர்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று பின்னொரு நாளில் கூற மாட்டர்கள் என்பதற்கு என்ன உறுதி மொழி கொடுப்பார்கள்? அவ்வாறு கொடுத்தாலும், அந்த உறுதிமொழியை ஏற்று நடப்பார்கள் என்பதற்கு என்ன உறுதிமொழி?

You May Also Like

  Comments - 0

  • Rahmath ali Monday, 05 November 2012 04:32 AM

    அரசாங்கம் புலிப்பயங்கரவாதத்தை ஒழித்ததாகக் கூறுகின்றது. ஆனால் அரசாங்க ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் அவர்களை 'விடுதலைப் புலிகள்' என்றே குறிப்பிடுகின்றன. நீங்களும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரியானது? அவர்கள் விடுதலைப் புலிகளாயின் அவர்கள் விடுதலைக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததையும் அவர்களைப் போல இன்னொரு சிறுபான்மை இனத்தை இன சம்ஹாரம் செய்ததையும் தவிர வேறு என்ன செய்தார்கள்? எனவே அவர்களை உண்மையான பெயர் கொண்டே அழையுங்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X