2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் வலைக்குள் வீழ்கிறதா இந்தியா?

A.P.Mathan   / 2012 நவம்பர் 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை முழுமையாக காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் புதுடெல்லி இல்லை என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

இலங்கை – இந்தியக் கடற்படைகள் ஆண்டுதோறும் நடத்தும் கடற்போர்ப் பயிற்சிக்கு அண்மையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு காட்டிய பச்சைக்கொடி இதற்கான முதலாவது சமிக்ஞையாகும். அதையடுத்து, பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வருமாறு அழைத்தது இந்தியா.

அவருடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இந்தியா நடத்திய பேச்சுக்கள் இரண்டாவது சமிக்ஞை. இப்போது, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அடுத்தமாதம் கொழும்பு வந்து பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசப்போகிறார். இது மூன்றாவது சமிக்ஞை.

தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள், எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றைப் புறக்கணித்தே மத்திய அரசு இந்த மூன்று சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

டிசெம்பர் மூன்றாவது வாரத்தில் கொழும்பு வரவுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம்சிங் பயிற்சி, போர்த்தளபாடங்கள், கூட்டுப்பயிற்சிகள் தொடர்பான ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்திய அனுபவங்கள் குறித்தும் அவர் இங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய, இலங்கை இராணுவங்கள் இணைந்து அடுத்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளன.

இரு நாட்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தப்போவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், பல்வேறு பயிற்சிகள், ஒத்திகைகளில் இணைந்து செயற்பட்ட போதிலும், கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. அதேவேளை இருநாட்டுக் கடற்படையினர் மத்தியில் கூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. SLINEX என்ற பெயரில் முதலாவது கூட்டுப்பயிற்சி அந்தமான் கடலில் 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இரண்டாவது கூட்டுப் பயிற்சி கடந்த ஆண்டில், திருகோணமலைக் கடற்பரப்பில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் மீண்டும் இந்தியக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சியை நடத்த வேண்டும். இதற்கு மிகவும் தாமதமாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சு பச்சைக்கொடியை காட்டியது. இதனால், அடுத்த ஆண்டிலேயே இந்தக் கூட்டுப் பயிற்சி நடக்கும் என்று தெரிகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, இலங்கைக் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிகளை தென்மாநிலங்களுக்கு வெளியே வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சிகளையோ, விமானப்படையினருக்கான பயிற்சிகளையோ, தென்மாநிலங்களுக்கு வெளியே வைத்துக்கொள்ளுமாறு இதுவரை இந்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ஆனால், இலங்கைக் கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை மட்டும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுக்கு அப்பால் வைத்துக் கொள்ளுமாறு இந்தியப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இதற்கும் காரணம் உள்ளது.

இலங்கைப் படையினருக்குத் பயிற்சி அளிக்கப்படுவதற்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்ப இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அந்தப் பயிற்சி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்ற உணர்வு. இரண்டாவது, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கும் போது, இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி கொடுப்பது முறையானதா  என்பது. தமிழர்களுக்கு எதிரான உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இலங்கைப் படையினருக்கு, இந்தியா பயிற்சிகளை உதவிகளை வழங்கக் கூடாது என்ற கருத்து தமிழ்நாட்டில் வலுவாகவே உள்ளது.

அதேவேளை, தமிழக மீனவர்களைத் தாக்கும், இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது முறையா என்ற கேள்வி அதைவிட தீவிரமாக எழுந்துள்ளது. இலங்கைக் கடற்படைக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சினை தொடர்கதையாக உள்ளது.

மீனவர்களைத் தாம் தாக்குவதில்லை என்று இலங்கைக் கடற்படை கூறினாலும், அதை இந்தியா ஏற்கவில்லை. அதேவேளை, தாம் எல்லை தாண்டவில்லை என்று தமிழக மீனவர்கள் கூறுவதையும் இந்தியாவோ இலங்கையோ நம்பவில்லை.

அதனால் தான், எல்லை தாண்டினாலும், தமது மீனவர்களை கருணையுடன் நடத்தும்படி, அண்மையில் புதுடெல்லி சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கேட்டிருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். எல்லை தாண்டலும் நடக்கிறது அதேவேளை தாக்குதலும் நடக்கிறது என்பது தான் அதன் சாரம், யதார்த்தம்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கும்போது, அவர்களுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப் பயிற்சியை நடத்தக் கூடாது என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டின் நியாயத் தன்மை அதிகமானது. அதை இந்திய அரசினால் புறக்கணிக்க முடியாது. அதனால் தான், இலங்கைக் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிகளை தென்மாநிலங்களுக்கு வெளியே வைத்துக் கொள்ளும்படி, உத்தரவிட்டுள்ளது இந்திய பாதுகாப்பு அமைச்சு.

அதேவேளை, சீன இராணுவத்துடன் கூட இணைந்து கூட்டுப் பயிற்சிகளை நடத்திய இந்தியா இதுவரை இலங்கை இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிகள் எதையும் நடத்தவில்லை. இதற்கும் தமிழ்நாட்டின் உணர்வுகளே காரணம்.

போரில் முக்கிய பங்கு வகித்த இலங்கை இராணுவம் மீதே தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பரவலான குற்றசாட்டுகள் உள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை இராணுவமே விசாரித்து வரும் நிலையில், இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இந்தியா நடத்துவதை தமிழகம் சுலபமாக எடுத்துக் கொள்ளாது. இதனால், இந்தியா அதில் ஆர்வம் காட்டவில்லை.

அண்மையில், வாகரையில் நடத்தப்பட்ட நீர்க்காகம் போர் ஒத்திகையில் கூட இந்திய இராணுவத்தின் 8 பேர் கொண்ட அணி பங்கேற்பதாக இருந்தது. தமிழகத்தில் பயிற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், இந்தியா தமது படையினரை இந்த ஒத்திகைக்கு அனுப்பவில்லை. வெறும் பார்வையாளர் நிலையில் இருந்து கொண்டது.

ஆனால், அடுத்த ஆண்டில், இலங்கை இராணுவத்துடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இலங்கை இராணுவம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதுகுறித்து அண்மையில் புதுடெல்லி சென்ற கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இந்த திடீர் மாற்றத்துக்கு புறக்காரணங்கள் சில இருப்பதாகத் தெரிகிறது.

அதாவது, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதும், பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு அழைத்துப் பேசியதற்கும் அடிப்படை அதுதான்.

அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் பாகிஸ்தானை முறியடிப்பதே அந்தப் புறக்காரணி. கடந்தவாரம் ஒரு தகவல் வெளியானது பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

இலங்கை, மியான்மார் உள்ளிட்ட இந்தியாவைச் சுற்றிய நாடுகளில் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவான ஐஎஸ்ஐ வியூகம் வகுத்து வருகிறது என்று இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோ ஓர் அறிக்கையை கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் குறித்து றோ அண்மைக்காலமாகவே பல அறிக்கைகளை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கொழும்பில் இருந்து ஐஎஸ்ஐ உளவாளிகள் இந்தியாவைக் குறிவைப்பதாகவும், இந்திய நீர்மூழ்கிகளின் தகவல் தொடர்பை இடைமறிக்கும் நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாகவும், றோ இரகசிய அறிக்கைகளை கொடுத்துள்ளது. ஆனால் இவை ஊடகங்களில் பரபரப்பாகி விட்டன.

சீன அச்சுறுத்தலை விட பாகிஸ்தானின் அச்சுறுத்தலை இந்தியா வேறுவிதமாகப் பார்க்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ, இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தநிலையில், பிராந்திய நலன், இலங்கைத் தமிழர் நலன் என்பவற்றுக்கு அப்பால், இந்தியா முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கே முன்னுரிமை கொடுக்கிறது. எந்தவொரு நாடும் அதையே செய்யும்.

இதனால், பாகிஸ்தான் பக்கம் திரும்ப முனையும் இலங்கையை, தன்பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காகவே, உள்ளக எதிர்ப்புகளை காரணம் காட்டி, இலங்கை எந்தவொரு தேவைக்கும் பாகிஸ்தானிடம் போய்விடக் கூடாது என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

அதனால் தான், தமிழ்நாட்டில் எதிர்ப்புகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, இலங்கைப் படையினருடனான பயிற்சிகள், கூட்டுப் பயிற்சிகளுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆனால், இந்தியாவின் இந்த வலைக்குள் இலங்கை இலகுவாக வீழ்ந்து விடுமா என்பது சந்தேகம்.

ஏனென்றால், இந்தியாவின் நட்பு மற்றும் உதவிகளுக்கு அப்பால், அதனை வைத்து சர்வதேச அரங்கில் எதைக் சாதிக்க முடியும் என்றே இலங்கை கணக்குப் போடும். சர்வதேச அளவில் எழுந்துள்ள நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில் இலங்கை கண்டிப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம். இப்போது இலங்கைக்கு ஒரு விடயம் தெளிவாகியுள்ளது.

பாகிஸ்தான் என்ற துருப்புச்சீட்டை வைத்து, இந்தியாவைத் தன்பக்கம் இழுத்துப் போட்டுக்கொள்ளலாம் என்பதே அது. அதனால், இந்தியா காட்டும் பச்சைக் கொடிகளுக்கெல்லாம் அவ்வளவு இலகுவாக இலங்கை மசிந்து போய்விடாது.

இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை பாகிஸ்தானுக்கு மேற்கொண்டுள்ளதை இதற்காக உதாரணமாக கருதலாம்.

பொதுவாக இலங்கையில் அரசியல், இராணுவத் தலைமைகளுக்கு வருவோர் முதலில் இந்தியாவுக்கே செல்வது வழக்கம். அந்த மரபை மீறும் வகையில் கடற்படைத் தளபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இது இந்தியாவுக்கு பிடிக்குமா இல்லையா என்றெல்லாம் கொழும்பு கணக்குப் போட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கு இது பிடிக்காமல் போனாலும், அதன் நலன்கருதி இலங்கை மீது அதிக சலுகைகளை காட்டவேண்டிய நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது ஒரு வகையில், இலங்கைக்கு தெம்பைக் கொடுக்கக் கூடிய விடயம் தான் என்பதில் சந்தேகமில்லை.

இது குறித்தும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்தழைப்புத் தொடர்பாகவும் கடந்தமாதம் புதுடெல்லி சென்ற கோட்டாபய ராஜபக்ஷவுடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், இந்திய பாதுகாப்புச் செயலர் சசிகாந்த சர்மாவும் கலந்துரையாடியிருந்தனர்.

You May Also Like

  Comments - 0

  • வசந்தகுமார். Thursday, 08 November 2012 09:51 AM

    எந்த ஒரு நாடும் தனது குடிமக்களுக்கு ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு தவறுவதேயில்லை. இலங்கை அரசியலானது நாட்டில் பெளத்த மதத்திற்கும் சிங்கள கொள்கைக்கும் மகுடம் சூட்டியும் வாக்கு பலத்தையும் பாதுகாப்பையும் ஆயுதமாக பாவித்து நீதிக்கும் சனநாயகத்திற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்துவதே குறிக்கோள். ஆனால் தமிழர்களின் நிலைப்பாடு ஜனநாயக உரிமைகளை சாத்வீக நெறியில் அஹிம்சை பாதையில் வேண்டிநிற்பதே. ஒரு சிறிய நாட்டுக்கு ஏன் ஒரு வல்லரசு நாட்டின் பாதுகாப்புப் பலன். மக்களின் பலமே ஒரு சிறந்த பலம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X