2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு எதிரான ஆயுதமாகும் கொமன்வெல்த் உச்சி மாநாடு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாடு அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாநாடு எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்விக்கு இப்போதே விடை கூறமுடியாத நிலை ஒன்று உருவாகி வருகிறது.

இதற்குக் காரணம், இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு நாடுகளில் வலியுறுத்தப்பட்டு வருவதேயாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர், ட்ரினிடாட் இன் டுபாகோ நாட்டின் தலைநகர் போட் ஒவ் ஸ்பெய்னில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், 2013இல் ஹம்பாந்தோட்டையில் 23ஆவது உச்சி மாநாட்டை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அந்த முடிவுக்கு இலங்கை எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கவில்லை. ஏனென்றால், பெரும் உயிர்ப்பலிகளுடன் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர், சிறப்பாகச் செயற்படும் என்ற நம்பிக்கை தான்.

போரின் காயங்களை ஆற்றி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கண்டு, நல்லிணக்கச் சூழலையும் நீடித்த அமைதியையும் அரசாங்கம் உருவாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உலகின் பல்வேறு நாடுகளிடம் இருந்தது.

அதனால், தான், போர் முடிவுக்கு வந்த அடுத்த சில வாரங்களில் ஜெனிவாவில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சி பிசுபிசுத்துப் போனது.

அதுமட்டுமன்றி, போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்ததற்காக அதேகூட்டத்திலேயே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அதே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்தன. இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள், இலங்கை அரசாங்கம் நம்புதற்குரிய வகையில் செயற்படத் தவறியதே இந்த மாற்றத்துக்குக் காரணம்.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுமல்ல, இதேநிலை கொமன்வெல்த் உச்சி மாநாட்டிலும் எதிரொலித்தது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிட வேண்டியிருந்தது. அப்போது இலங்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றும் கனடா போன்ற நாடுகள் வலியுறுத்தின.

இந்த முன்னேற்றத்தை எட்டத் தவறினால், அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் கொமன்வெல்த் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் எச்சரித்திருந்தார். இன்று வரை அவரது இந்த நிலைப்பாடு மாறவில்லை.

கடந்த ஞாயிறன்று வெளியான, ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்ரியன் றோய் அளித்திருந்த பேட்டியில், ஸ்டீபன் ஹாப்பரின் முடிவில் மாற்றமில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்கு தொடர்ந்து நியாயம் வழங்கத் தவறி வருவதாகவே கனடா உணர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அரசியல் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாவிட்டால், அடுத்த ஆண்டில் இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஹாப்பர் மிகவும் தெளிவாகவே கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கனேடியப் பிரதமரின் இந்த இறுக்கமான போக்கு ஒரு பக்கத்தில் இருக்க, இன்னொரு பக்கத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனுக்கும், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அழுத்தம் வெளியக அழுத்தமல்ல. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குள் இருந்து கொடுக்கப்பட்டுள்ள, புறமொதுக்கித் தள்ளமுடியாத அழுத்தம். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் செயற்படும் வெளிவிவகாரக் குழுவே இந்த அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

கனேடியப் பிரதமரின் முடிவை பிரிட்டிஷ் பிரதமரும் பின்பற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இன்னமும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் பதிலளிக்கவில்லை. ஆனால், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்ற ஒருநாடாக – மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற ஒரு நாடாக பிரிட்டன் இருந்து வரும் நிலையில், வெளிவிவகாரக் குழுவின் இந்தக் கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே உதாசீனப்படுத்தி விடமுடியாது.

அதேவேளை, பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளின் கூட்டமைப்பான இந்த கொமன்வெல்த் அமைப்பின் கூட்டத்தில், தாம் பங்கேற்காது போனால், குழுப்பம் விளைவித்ததான பழியைச் சுமக்க வேண்டியிருக்குமே என்று பிரிட்டிஷ் பிரதமர் கருதக் கூடும்.

எனவே அவர் இந்த விடயத்தில் நிதானமாகவே முடிவுகளை எடுப்பதற்கு வாயப்புகள் உள்ளன.

ஆனால், அடுத்த கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள இலங்கை அரசாங்கத்தினால் இதையிட்டு நிம்மதியோடு இருந்த விடமுடியாத நிலையே காணப்படுகிறது. கொமன்வெல்த் உச்சி மாநாட்டை வைத்து, இலங்கையிடம் இருந்து சாதகமான பதிலைப் பெறுவதற்காக மனித உரிமைகள் என்ற ஆயுதத்தை கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் பயன்படுத்த முனைகின்றன.

கொமன்வெல்த் மாநாட்டில் மட்டுமன்றி, மனித உரிமைகள் விவகாரம் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் நெருக்கடியாகவே மாறிவருகிறது.

டிசெம்பர் 4 தொடக்கம் 6 வரை மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தபோதும், அதில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

காரணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய வருகைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பும், இதையே சாட்டாக வைத்துக் கொண்டு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு மலேசிய அரசாங்கம் போட்ட திட்டமும் தான்.

இதனால், அவர் தனது பயணத்தை ரத்துச்செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.

மலேசிய அரசாங்கம், இலங்கைக்கு மனித உரிமைகள் விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதை தவிர்த்துக்கொள்வதற்காக அங்கு செல்வதையே கைவிடும் நிலை ஏற்பட்டது. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கமைய, போருக்குப் பிந்திய நிலைமைகளை கையாளத் தவறியதன் விளைவை அரசாங்கம் இப்போது அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதியின் மலேசியப் பயணத்தில் ஏற்பட்டுள்ள தடையும் அதில் ஒன்று. கொமன்வெல்த் மாநாட்டுக்கு விடுக்கப்படுகின்ற புறக்கணிப்பு எச்சரிக்கைகள் இன்னொன்று.

இவ்வாறு பல்வேறு அழுத்தங்களை அரசாங்கம் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போரில் ஈட்டிய வெற்றியை, அரசியல் வெற்றியாக்கிக் கொள்வதில் வெற்றி பெற்ற அரசாங்கம், அதை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு தவறிவிட்டதென்றே சொல்லலாம்.

மனித உரிமைகள், அரசியல்தீர்வு விவகாரங்களில் மட்டுமன்றி, நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகள், தலைமை நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை, நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரமோதல் என்பன எல்லாமே, அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கைகளுக்கே இட்டுச்சென்றுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் இந்த வெறுப்புணர்வைச் சமாளிப்பதில் அரசாங்கம் தோல்விடைந்து வருகிறது என்பதையே, கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

மேற்கு நாடுகளின் கருத்துகளைப் புறக்கணித்து நெடுந்தொலைவுப் பயணத்தை அரசாங்கத்தினால் மேற்கொண்டு விடமுடியாது. வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மேற்குலகின் தயவை நம்பியே ஆக வேண்டிய நிலை இலங்கைக்கு உள்ளது.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளால் தமது உற்பத்திகளை இலங்கை மீது திணிக்க மட்டுமே முடியுமே தவிர, மேற்கு நாடுகளைப் போன்று, இலங்கையின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புக் கொடுக்க முடியாது.

இத்தகைய சூழலில், அடுத்த மார்ச் மாதம் நடக்கப் போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு பின்னர், இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான எதிர்ப்புகள் வலுவடையலாம்.

அது வேறும் பல நாடுகளின் தலைவர்களையும் கனேடியப் பிரதமரைப் போல, முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Thursday, 06 December 2012 03:30 AM

    மேட்கதேயந்தான் தங்களை புறகணித்து ஸ்ரீலங்கா வாழமுடியாது என்ற கட்பனையில் மிதந்துகொண்டிருக்கிறது. ஆனால் கடந்த பத்து வருடத்தில் மேட்கதேயதை புறகணித்தே ஸ்ரீலங்கா வாழ்ந்துகொண்டிருப்பதால் அதன் பத்து வருட அனுபவம் எதிர்காலத்தில் நன்கு கைகொடுக்கும். மக்கள் கருத்துகணிப்பை கொண்டு சகலதையுமே முறியடிக்கும் சக்தி மிக இலகுவான தெரிவாக மக்கள் செல்வாக்கு உள்ள அரசுக்கு என்றும் உண்டு.

    Reply : 0       0

    San Thursday, 06 December 2012 11:03 AM

    அந்த மகா நாடு, இந்த மகா நாடு என வரும், போகும். ஒன்றும் நடக்காது. சும்மா எல்லா நாடுகளும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை விட்டுக்ககொண்டே இருக்கும். இவை மறுத்துக் கொண்டே இருப்பினம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X