2025 மே 19, திங்கட்கிழமை

குற்றப் பிரேரணையின் முடிவு சட்டபூர்வமானது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையின் முடிவு இப்போது தெட்டத் தெளிவாக தெரிகிறது. அவர் பதவி நீக்கம் செய்யப்படப்போகிறார். அது இப்போது மட்டுமல்ல அரசாங்கம் அப்பிரேரணையை சமர்ப்பிக்க நினைத்த நேரத்திலேயே அவரது தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.

குற்றப் பிரேரணையின் அடிப்படையில் பிரதம நீதியரசருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்றுக்கு அவர் குற்றவாளியென அவற்றை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழவின் அரசாங்க எம்.பீ.க்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அடுத்ததாக அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் அதுவும் நிறைவேறுவது திண்ணம். அதனை அடுத்து அந்தப் பிரேரணையின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கிவிடுவார். எல்லாமே நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலும் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் நிர்ணயிக்கப்படுவதால் அரசாங்கத்திற்கு நீதியரசர்களை நீக்குவது என்பது மிக இலகுவான காரியமாகவே இருக்கிறது.

பிரச்சினை அத்தோடு முடிவடையுமோ என்பது தெளிவாகவில்லை. பதவி நீக்கத்தின் பின்னரும் கலாநிதி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமோ என்பது இன்னமும் தெளிவாகவில்லை. குற்றப் பிரேரணையிலுள்ள 14 குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐந்து குற்றச்சாட்டுக்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே வேண்டும் என்றால் மிகுதி குற்றச்சாட்டுக்களை பாவித்து பதவி நீக்கத்தின் பின்னரும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

ஏனென்றால் தற்போதுள்ள எல்லா குற்றச்சாட்டுக்களையும் தெரிவுக் குழுவே விசாரித்தால் பின்னர் நடவடிக்கை எடுக்க வேறு குற்றச்சாட்டுக்களை தேடவேண்டியிருக்கும். ஏனெனில் ஒரே குற்றச்சாட்டுக்களுக்காக ஒருவரை இரண்டு முறை விசாரிக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. சிலவேளை அதற்குத் தான் அரசாங்கம் சில குற்றச்சாட்டுக்களை விசாரிக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறதோ தெரியாது.

பிரச்சினை வளர்ந்துவிட்டால், பிரதம நீதியரசர் தொடர்ந்தும் கடும் போக்கை காட்டினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு நடந்த கதி அவருக்கும் நடக்கக் கூடும். பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கைகளின் போது பிரதம நீதியரசரின் கீழான நீதித்துறையின் தீர்ப்புகளும் அரசாங்கத்திற்கு சாதகமாகவே அமைந்தன. இப்போது அதேபோன்று ஷிராணி பண்டாரநாயக்கவும் தண்டிக்கப்படப் போகிறார்.

நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள், மத குருக்கள், சிவில் சமூக குழுக்கள், சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சமூகம் இந்த குற்றப் பிரேரணையை விரும்பாவிட்டாலும் அதனை தடுக்க எவராலும் முடியாமல் போய்விட்டது. 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஜனாதிபதி முஷாரப் அந்நாட்டு பிரதம நீதியரசர் இப்திகார் முஹம்மத் சௌத்ரியை பதவியிலிருந்து இடைநிறுத்தியதை அடுத்து எழுந்த நிலைமை போன்றதோர் நிலைமை இலங்கையில் எழும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

குற்றப் பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தாலும் அப்பிரேரணைக்கான காரணம் வேறு என்று ஏற்கனவே பலர் ஊடகங்கள் மூலம் கூறியிருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் பிரதம நீதியரசருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்படாதிருந்தால் இந்தக் குற்றப் பிரேரணை வந்தே இருக்காது.

மறுபுறத்தில் குற்றப் பிரேரணைக்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அரசாங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது சட்ட விரோதமானதுமல்ல. அரசாங்கம் அந்த அடிப்படையில் தான் வாதிடுகிறது.

பிரச்சினை என்னவென்றால் குற்றமிழைத்ததனால் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்படப் போகிறார் அல்ல, மாறாக அரசாங்கத்திற்கு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டியதனாலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றே ஆளும் கட்சியினரை தவிர்ந்த ஏனையோரும் பல பலம்வாய்ந்த உலக நாடுகளும் நம்புகின்றன.

அதேவேளை பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் நீதியரசர்களை பதவி நீக்கம் செய்யக் கூடிய முறையே இலங்கையில் இருக்கிறது. அதேபோல் நீதியரசர்களுக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்களே அவை தொடர்பாக தீர்ப்பு வழங்கும் முறையே இங்கு இருக்கிறது.

சாதாரண மக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நீதிபதிகள் சட்டத்தை கற்று நீதிமன்றத்தில் வாதாடி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நீதிபதிகளில் மிகவும் உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சட்ட அறிவுள்ளவர்கள் இருக்க வேண்டும் என்று இலங்கையின் சட்டம் கூறவில்லை. சபாநாயகர்கள் விரும்பினால் அக்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்படும் தெரிவுக்குழுக்களுக்கு சட்ட அறிவுள்ளவர்களை நியமிக்கலாம். தற்போதைய தெரிவுக் குழவிலும் சில சட்டத்தரணிகள் இருக்கிறார்கள்.

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு தமது விசாரணையின் போது சுமார் 1000 பக்கங்களை கொண்ட குற்ற விவரங்களுக்கு ஒரு நாளில் பதிலளிக்க வேண்டும் என்று அவர் பணிக்கப்பட்டார் என்றும் தெரிவுக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பொருத்தமற்ற வார்த்தைகளால் அவரை விழித்து பேசியதாகவும் அதனால் அவர் தெரிவுக் குழு விசாரணையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவரது சட்டத்தரணிகள் கூறியிருக்கின்றனர்.

அவரது நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரான பலரது பாராட்டை பெற்றிருக்கிறது. தொடர்ந்தும் போராடுமாறு அவர்கள் பல்வேறு இணையத் தளங்களை பாவித்து கூறுகிறார்கள். ஆனால் அந்த போராட்டத்தின் விளைவுகளை அனுபவிக்கப் போவது கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே. பொன்சேகாவையும் பலர் பாராட்டினார்கள். ஆனால் பாராட்டியவர்கள் தேர்தல்களின் போது அவருக்கு வாக்களிக்க முன்வரவில்லை. இன்று அவர் தனிமையடைந்து இருக்கிறார்.

பிரதம நீதியரசர் வெளிநடப்பு செய்தாலும் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு தமது விசாரணையினை முடிவு செய்து மறுநாளே அறிக்கையையும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்தது. ஆனால் வெளிநடப்பின் மூலம் தெரிவுக்குழு விசாரணையின் நம்பகத்தன்மையை உலகத்தார் முன் கேள்விக்குறியாக்குவது அவரது நோக்கமாகியிருக்கலாம். அந்த நோக்கம் ஓரளவிற்கு நிறைவேறியும் இருக்கலாம். அதேவேளை தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளியேறியதால் அந்த நம்பகத்தன்மை சற்று கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், வழமையாக உலகம் என்ன நினைக்கிறது என்பதை அரசாங்கம் அவ்வளவு பொருட்படுத்துவதில்லை. அதனை முற்றிலும் புறக்கணிக்கவும் இல்லை. அதனால் தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி வெளிநடப்பின் பின்னர் பிரதம நீதியரசருக்கு தூது அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதேவேளை எது நடந்தாலும் அவரை பதவியில் இருந்து தூக்கியெறிவது தான் அரசாங்கத்தின் பிரதான குறியாகவும் இருக்கிறது.

ஆளும் கட்சியே இந்தக் குற்றப் பிரேரணையை கொண்டு வந்தது. இறுதியில் அதே ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட தெரிவுக் குழு தாமே சுமத்திய இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து பிரதம நீதியரசரை விடுவித்துள்ளது. தாம் நியாயமாக நடந்து கொள்வதாக காட்டுவதற்காகவே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கலாம்.

மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு பிரதம நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டதால் நேரத்தை வீணாக்காமல் சில குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமல் விடப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

இந்த குற்றப் பிரேரணை ஏனைய சகல நீதியரசர்களையும் நீதிபதிகளையும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கும் என்றும் அவர்கள் இனி அரசாங்கத்திற்கு எதிரான வழக்குகளின் போது அரசாங்கத்திற்கு சாதகமான தீர்ப்புகளை வழங்க முற்படுவார்கள் என்றும் அது நீதித்துறையின் சுதந்திரத்தின் முடிவாகும் என்றும் சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர கூறுகிறார்.

இலங்கையில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான குற்றப் பிரேரணையின் போது உயர் நீதிமன்றமே விசாரணை நடத்துகிறது. அமெரிக்காவில் ஜனாதிபதிகளுக்கும் உயர் நீதியரசர்களுக்கும் எதிரான குற்றப்பிரேரணை குற்றச்சாட்டுக்களை செனட் சபை தான் விசாரிக்கிறது. இந்தியாவில் நீதியரசர்களுக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணைகளை மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நடத்துகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் பார்க்கிலும் சிறந்த முறையொன்றை 2000ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சமர்ப்பித்த அரசியலமைப்பு நகலில் இருக்கிறது. அதன் பிரகாரம் உயர் நீதியரசர்களுக்கு எதிரான குற்றப் பிரேரணை குற்றச்சாட்டுக்களை பொது நலவாய நாடுகளை சேர்ந்த மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களே விசாரிக்க வேண்டும்.

இன்று ஐக்கிய தேசிய கட்சி நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற தெரிவுக் குழு விசாரிக்கும் முறையை எதிர்த்தாலும் அக்கட்சியே அம்முறையை அறிமுகப்படுத்தியது. அந்த முறையில் 1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராக விசாரணையையும் நடத்தியது. அப்போது அந்த முறையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது.

இந்த தெரிவுக்குழு விசாரணை முறையை மாற்றியமைக்க அரசாங்கங்கள் முன்வருவதில்லை. சட்டமியற்றும் அரசாங்கங்களே நீதியரசர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திக்க விரும்புகின்றன. எனவே சட்டத்தை வியாக்கியானம் செய்யும் நீதிபதிகளால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த தெரிவுக் குழுவை நியமிக்கும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டங்களா என்பது தொடர்பாக தற்போது வழக்கொன்று உயர் நீதிமன்றத்தின் முன் இருக்கிறது. அவை சட்டங்களல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தற்போதைய நிலைமையின் கீழ் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. நாடாளுமன்ற இறைமையின் படி ஏற்கனவே இந்த வழக்கையே சபாநாயகர் நிராகரித்துள்ளார். அவ்வாறாயின் ஏனைய விடயங்களில் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்களை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்ற கேள்வி எழும்.

மறுபுறத்தில் பிரதம நீதியரசருக்கு எதிராக மேற்படி நிலையியல் கட்டளைகளின் கீழ் தெரிவுக்குழுவொன்று விசாரணை செய்து தீர்ப்பும் வழங்கியிருக்கும் நிலையில் அந்தக் கட்டளைகள் சட்ட விரோதமானது என்று அதே பிரதம நீதியரசரின் கீழான நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அது எந்தளவு நாகரிகமானது என்ற கேள்வியும் எழும். அதேவேளை சட்ட வியாக்கியானம் செய்யும் அதிகாரம் அந்த நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. எனவே இது புதிய சர்ச்சையையும் நெருக்கடியையும் உருவாக்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X