2025 மே 19, திங்கட்கிழமை

இராணுவம் குறித்து கூட்டமைப்பின் நிலை!

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்பது தனது கோரிக்கை அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இனப்போருக்கு பின்னர், மீள்கட்டமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதும் கூட தவிர்க்க முடியாத கட்டாயம். மாறாக, அங்கு இராணுவத்தினர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு செய்வதே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

பிரச்சினைகள் பலவாக இருந்தாலும் அதன் முடிவுகள் என்னவோ ஓரே கருத்தை மட்டுமே வலியுறுத்துவதாக அமைந்து விட்டது துர்பாக்கியமே. அல்லது, தமிழர், சிங்களவர் என்ற இரு தரப்பினரிடையேயும் இருக்கும் பிரச்சினைகள் என்று இல்லாத பிரச்சினைகளையும் தூண்டிவிட்டு அதில் அரசியல் குளிர்காய விரும்புவோர் இருப்பதும் ஒரு காரணமே. இந்த பின்னணியில், கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனின் நாடாளுமன்ற பேச்சு வரவேற்கத்தக்கது. முக்கியமாக, வடக்கிலோ, கிழக்கிலோ பேசியிருப்பதை விட, சிங்கள அரசியல் தலைமைகளையும் மக்களையும் இந்த பேச்சு சென்றடையும் வாய்ப்பு அதிகம்.

வடக்கில் இராணுவம் இருப்பதை தடைசெய்ய முடியாது என்ற கருத்தை தெரிவித்திருக்கும் அதேசமயம், சுமார் ஒன்றரை இலட்சம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தளம் இட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வகையிலும் சம்மந்தன் பேசியிருக்கிறார். உலகெங்கும் பிரச்சினை நிறைந்திருந்த பகுதிகளில் இராணுவம் ஏதோ ஒருவகையில் நிலைகொள்ள வேண்டியுள்ள நிர்ப்பந்தத்தை அந்தந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இது குறித்த தங்களது முடிவுகளையும் நியாயப்படுத்தி வந்துள்ளன. ஏதோ ஒரு காரணத்திற்காக இது குறித்த சர்வதேச சமூகத்தின் அறிவுறுத்தல்களையும் ஆதங்கத்தையும் இலங்கை அரசு பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது என்று தமிழ் சமூகம் முடிவுகட்டி விடக்கூடாது. மாறாக, பிற நாடுகளின் உள்நாட்டு நிலைப்பாடுகள் குறித்து சரித்திரபூர்வமாக இலங்கை அரசு பட்டியலிட தொடங்கினால் அந்த நாடுகள் அதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, தங்களது எதிர்ப்பின் வலிமையை குறைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பின்னர் இது குறித்தும் தமிழ் சமூகம் சர்வதேசத்தை குறை கூறிக் கொண்டு இருக்கலாம்.

மாறாக, பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாகவும், எதிரியை விளம்பர போரில் வெற்றிகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் அணுகாமல், அனைத்து சாராருக்கும் அதன் முடிவில் பங்களிப்பும் பயனும் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை செய்ய விடுதலை புலிகள் தலைமை தவறியதாலே, தமிழ் சமூகத்தின் அவலம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 'அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி' என்ற திரைப்பட வசனம் ஒரு சாராருக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அதுவே ஒரு சமூகத்தின் சாபக்கேடாக மாறிவிடக்கூடாது.

உண்மை என்னவோ, இனப்போர் அரங்கேறிய தமிழர் பகுதிகளில் மட்டும் இன்னமும் அன்றாட வாழ்க்கையில் சகஜநிலை திரும்பவில்லை. இழந்துபோன வாழ்க்கை அவர்களில் பலருக்கும் இல்லாமலே காலம் கடந்து விடலாம். எஞ்சிய சிலருக்கோ, இழந்ததை திரும்பிப்பெற தசாம்சங்கள் கூட ஆகலாம். தங்களை சுற்றி இராணுவம் எப்போதும் இருக்கிறது என்ற எண்ணம் போர் குறித்த எண்ண அலைகளை உசுப்பி விடுகிறதோ இல்லையோ, நிச்சயமாக வாழ்கையில் சகஜநிலை திரும்பி வருகிறது என்ற எண்ணத்தையும் பின்னோக்கி தள்ளிவிடும் என்பதே உண்மை.

அதே சமயம், இனப்போருக்கும் அதன் அவலங்களுக்கும் இலங்கை அரசும், சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளும் மட்டுமே காரணம் என்ற அடிப்படையில் மட்டுமே தமிழ் தலைமைகள் செயல்பட முடியாது, செயல்படக்கூடாது. தாங்களும் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் இருந்தால், அதோடு கூடி உரிமைகளுள் மட்டுமல்ல, கடமைகளும் உண்டு என்ற எண்ணம் உருவாக வேண்டும். அத்தகைய எண்ணம் உருவாகி உள்ளது என்று அரசிற்கும் இராணுவத்திற்கும் நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே கூட்டமைப்பு கூறும் இராணுவத்தை பின்வாங்குவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதே உண்மை.

சம்பந்தன், தனது நாடாளுமன்ற உரையில் விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் சமூகத்தையும் தான் உட்பட்ட மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களை குறிவைத்தது குறித்தும் பேசி இருக்கிறார். இதுவே, அரசு கூறும் கருத்து. ஆனால், அதற்காக அவர் தலைமையிலான கூட்டமைப்பு இன்னமும் விடுதலை புலிகளின் எடுபிடிகளாகவே செயல்படுகின்றனர் என்று பொத்தாம் பொதுவாக அரசு தரப்பினரில் சிலர் கூறிவருவதில் எந்தவித நியாயமும் இல்லை. அவர்களில் சிலர் கூட்டமைப்பு குறித்து விஷ(ம) பிரசாரம் செய்து வருகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதேநிலை, தமிழ் சமூகத்திலும் தொடர்கிறது. அரசும் இராணுவமும் செய்யும் எந்தவித புனரமைப்பு பணிகளும் எங்கே அவற்றால் பயனடையும் மக்களை அரசிற்கு ஆதரவாக திருப்பி விட்டுவிடுமோ என்ற கவலையும் அவர்களிடையே உள்ளது என்பதும் உண்மை.

அரசு தரப்பினர் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லையென்றாலும், விடுதலை புலிகள் விடயத்தில் சம்மந்தனும் கூட்டமைப்பும் தெளிவான கருத்துக்களையே முன்வைத்து வந்துள்ளனர். அதே சமயம், அரசு குறித்தும் இராணுவம் குறித்தும் தமிழ் சமூகத்திற்கு நம்பிக்கை வரும் அளவிற்கேனும் அரசும் செயல்பட வேண்டும். அது இனப்போரின் கடைசி காலகட்டம் குறித்த சர்வதேசத்தின் கவலைகள் குறித்துமட்டுமல்ல. அதன் தொடக்கமான 1983ஆம் ஆண்டு படுகொலைக்கு இன்றளவும் எந்த ஒரு அரசும் தமிழ் சமூகத்திடமும் நாட்டு மக்களிடையேயும் வருத்தம் தெரிவிக்கவில்லை. அதனையும் இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இனப்போரின் கடைசி அடிச்சுவடுகள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ்பாணம் உட்பட்ட நகர பகுதிகளில் இருந்து தள்ளியே இருந்தது. அதிக அளவில் மக்கள் வசிக்கும் நகர பகுதிளில் போர் மீண்டும் தொடங்கினால் அதனால் இதைவிட அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படலாம் என்று விடுதலை புலிகள் தலைமை மட்டுமல்ல, இராணுவ தலைமையும் கருதியிருக்கலாம். எது எப்படியோ, கடந்த 1996ஆம் ஆண்டிற்கு பின்னரே யாழ்ப்பாணமும் சுற்றுவட்டாரமும் போர் கொடூரத்தை அளவுடனே சந்திக்க வேண்டியிருந்தது.

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில், பிற பகுதிகளிலேயே இனப்போர் கோர தாண்டவம் ஆடியது. அவர்களில் பலருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே உறவினர்கள் இல்லை, அங்கிருந்து அனுப்பப்படும் பணமும் இல்லை. சட்டபூர்வமாகவோ வேறுவழிகளிலோ அந்த நாடுகளை சென்றடைந்தால், அவர்களை வரவேற்று இடமளிப்போரும் இல்லை, சிறைப்பட்டால் சீண்டுவாரும் இல்லை. அவர்களுக்கு இலங்கையே சர்வமயம். ஆனால், தமிழர் அரசியலில் அவர்களது குரல் இன்னமும் ஒலிப்பதும் இல்லை. ஆனால் அனைத்து பாதிப்புகளையும் அவர்களே சந்தித்து வருகிறார்கள். உரிமை குறித்து கடந்த தசாம்சங்களில் குரல் எழுப்பி வரும் தமிழ் சமூகம் இவர்களது நிலைமை குறித்து இன்றளவும் கவலைபட்டதாகவும் தெரியவில்லை.

இது தானா சமூகம்? இது தானா அரசியல்?

You May Also Like

  Comments - 0

  • Mohan Wednesday, 12 December 2012 05:26 PM

    அப்போ உங்கள் கருத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவம் முற்று முழுதாக வெளியேற தேவை இல்லை. நல்லது..... நீங்கள் எதை கூறும் பொழுது தெளிவாக கூறவும் ஏன் என்றால் மக்கள் மற்றும் செய்தி ஊடாகங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிப்பார்கள்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X