2025 மே 19, திங்கட்கிழமை

தோலுரிக்கப்பட்ட தெரிவுக்குழு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

முக்கியமானதொரு காலகட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால், சுதந்திரமாகச் செயற்பட்டு தமது முடிவைத் தீர்மானிக்கும் சூழல் உள்ளதா? அது நியாயமாகச் செயற்படத்தக்க நிலையில் உள்ளதா? என்பன இப்போதுள்ள முக்கியமான கேள்விகளாக உள்ளன.

இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே வரவேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டை, அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலையில் தான் இந்த கேள்வி எழுந்துள்ளது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தெரிவுக்குழுவில் உறுப்பினர்களை நியமிக்க இதுவரை எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. இந்தநிலையில், தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்தது புத்திசாலித்தனமான முடிவா? என்று எதிர்காலத்தில் அரசாங்கம் வருத்தப்படக் கூடும்.

இந்த இரண்டு தெரிவுக்குழுக்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லாதபோதும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் நேர்மைத்தன்மையையும் கேள்வி எழுப்ப இவை காரணமாகிவிட்டன. தலைமை நீதியரசருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசதரப்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 4 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்தத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் தலைமை நீதியரசரைப் பதவி நீக்கி விடவேண்டும் என்ற முனைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டன. இதனை அரசாங்கத் தரப்பில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் செயற்பாடுகளில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால் தான், தெரிவுக்குழுவின் விசாரணைகள் நியாயமற்ற வகையில் முன்னெடுக்கப்படுமானால், தாம் அதிலிருந்து விலகிக் கொள்வோம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எச்சரித்திருந்தனர். ஆனாலும் அதை அரசதரப்பு கண்டுகொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் இருந்து தலைமை நீதியரசர் வெளிநடப்புச் செய்ய, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாமும் அதில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று முடிவு செய்தனர்.

தலைமை நீதியரசர் இனிமேல் தெரிவுக்குழுவின் முன் ஆஜராகப் போவதில்லை என்று அறிவித்த நிலையில், திடீரென அரசதரப்பு உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தெரிவுக்குழு, ஓர் அறிக்கையை தயார் செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

தலைமை நீதியரசர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளில் 5 குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவுக்குழு விசாரித்தது. அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று உறுதியாகி விட்டன. ஏனைய இரண்டும் கைவிடப்பட்டுவிட்டன.

மூன்று குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், இதை வைத்துக் கொண்டே, தலைமை நீதியரசரைப் பதவிநீக்கம் செய்யலாம் என்று தெரிவுக்குழு சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
விசாரணைகள் முற்றிலும் மேற்கொள்ளப்படாத நிலையில் – தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு தலைமை நீதியரசருக்கு போதிய காலஅவகாசம் கொடுக்கப்படாத நிலையில், அவசர அவசரமாக – அரசதரப்பு உறுப்பினர்களை மட்டும் கொண்ட தெரிவுக்குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை. தலைமை நீதியரசர் குற்றவாளி என்றோ - குற்றமற்றவர் என்றோ இங்கு கூறவரவில்லை.

அவரது நியாயத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்காமலேயே அரசதரப்பு அவரைக் குற்றவாளியாக்கியது தான் சர்ச்சைக்குரியது.

தலைமை நீதியரசர் குற்றவாளி என்பதைக் கண்டறிந்திருந்தாலும், அதை எதிர்க்கட்சிகளும் ஏற்கின்ற வகையில் நிரூபித்து பதவி நீக்குவதற்கு வழிசெய்திருக்கலாம். அதைவிட்டு விட்டு, தாமாகவே குற்றச்சாட்டையும் சுமத்தி, தாமே தீர்ப்பையும் எழுதிவிட்டுப் போயுள்ளது அரசதரப்பு.

தலைமை நீதியரசரை எப்படியாவது பதவிநீக்கி விடவேண்டும் என்ற குறியுடன் மேற்கொள்ளப்பட்டதால் தான், அரசதரப்பினால் இவ்வாறு நடந்து கொள்ள முடிந்துள்ளது. அதுமட்டுமன்றி, அரசதரப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், இன்னொரு சுதந்திரமான குழுவின் மூலம் தெரிவுக்குழுவின் அறிக்கையை ஆராயப் போவதாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

தெரிவுக்குழுவின் முடிவே உறுதியானது, இறுதியானது, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின்படி அதுவே உச்சமானது என்று கூறிய அரசாங்கமே, தெரிவுக்குழுவின் அறிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

தெரிவுக்குழுவின் அறிக்கையை ஆராய இன்னொரு குழு நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கை, தெரிவுக்குழுவின் உச்சநிலையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தலைமை நீதியரசர் விவகாரத்தில் அமைக்கப்பட்ட தெரிவுக்குழு நியாயமாகச் செயற்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இனி நாம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தெரிவுக்குழுவுக்கு வருவோம்.

இனப்பிரச்சினைக்குத் தெரிவுக்குழு மூலமே தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் பிடிவாதமாகவே உள்ளது. அதைவிட்டால் வேறு வழியில் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்று உறுதியாக அரசாங்கம் கூறி வருகிறது.

இந்த தெரிவுக்குழு முன்மொழியப்பட்டு பல காலமாகிவிட்டது. ஆனால், இன்னமும் செயற்படுநிலைக்கு வரவில்லை. காரணம், எதிர்க்கட்சிகள் எதுவும் இந்தத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் தமது பிரதிநிதிகளின் பெயர்களை அறிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால், தெரிவுக்குழுவின் மூலம் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றை எட்டமுடியாது என்று நம்புவதே. 31 பேர் கொண்ட தெரிவுக்குழுவில் அரசதரப்பில் மட்டும் 19 பேர் இடம்பெறுகின்றனர். அவர்களின் பெயர்கள் எல்லாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டாயிற்று. எதிர்க்கட்சிகளுக்கு இந்தத் தெரிவுக்குழுவில் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 4 இடங்கள் மட்டும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப் போகிறது.

எப்படிப் பார்த்தாலும், அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் 10 உறுப்பினர்கள் கூட தெரிவுக்குழுவில் இடம்பெறமாட்டார்கள். இந்தநிலையில், தமிழர்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புகளை தெரிவுக்குழு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதும், அதன் மூலம் நியாயமான தீர்வு ஒன்று கிடைக்குமா என்பதும் மிகப் பெரிய சந்தேகமாகவே உள்ளது.

அரசதரப்பிடம் இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்று இல்லை என்பது வெளிப்படை. தெரிவுக்குழு தான் தீர்வு ஒன்றைத் தரவேண்டும் என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். ஆனால், தீர்வுத்திட்டத்தில் இடம்பெறக் கூடாத விடயங்களை – கொடுக்கப்படக் கூடாத அதிகாரங்களை அரசதரப்பு நன்றாகவே பட்டியலிட்டு வைத்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தைச் செயலிழக்க வைப்பதும் தெரிவுக்குழுவின் இன்னொரு திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே இந்தத் தெரிவுக்குழு அமைப்பும் இடம்பெற்றுள்ளது. எவற்றையெல்லாம் மறுக்க வேண்டும் என்று அரசதரப்பு பட்டியலிட்டுள்ளதோ, அவையெதுவுமே இல்லாத ஒரு தீர்வைத்தான் இந்தத் தெரிவுக்குழுவும் முன்வைக்கும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சம். தலைமை நீதியரசரை விசாரித்த தெரிவுக்குழுவின் அணுகுமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அச்சம் சரியானதே என்பதை உணர்த்தியுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பாற்பட்டதாக, நியாயமாகவும் சுதந்திரமாகவும் செயற்படத் தக்கதொன்றாக இருக்கும்போது தான், அதன் மீது நம்பிக்கை பிறக்கும்.

அல்லது குறைந்தபட்சம், ஆளும்கட்சிக்கு சமமான அளவு பிரதிநிதிகளை நியமிப்பதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இவை இரண்டும் இல்லாத ஒரு தெரிவுக்குழு, தமிழர் பிரச்சினைக்கு நிச்சயம் நியாயமான அரசியல் தீர்வைக் காணமுடியாது. இதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளப் பின்நிற்கிறது.

இதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்து கொண்டாலும், அவர்கள் விரும்புகின்ற ஒரு தீர்வைக் கொண்டு வரவோ, அவர்கள் விரும்பாத ஒரு தீர்வை தடுத்து விடவோ முடியாது. ஏனென்றால் பெரும்பான்மையாக உள்ள அரசதரப்பு உறுப்பினர்கள், தலைமை நீதியரசருக்கு எதிரான ஓர் அறிக்கையை எவ்வாறு சமர்ப்பித்தனரோ, அதுபோன்றே இங்கேயும் சமர்ப்பிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த ஆபத்தை, இலங்கை விவாகாரத்தில் தொடர்புபட்டுள்ள அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவை அழுத்தம் கொடுக்கவில்லை.

இப்போதைய நிலையில், தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க தெரிவுக்குழுவை அமைத்தது, அது நியாயமாகச் செயற்படாது போனது என்பன அரசாங்கத் தரப்பு தமக்குத் தாமே வெட்டிக் கொண்ட குழி என்றே கூறலாம்.

ஏனென்றால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்ட முடியாது என்ற கருத்துக்கு இது வலுச் சேர்த்துள்ளது. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை தெரிவுக்குழுவை வைத்து இழுத்தடித்து வரும் அரசதரப்புக்கு, இது எதிர்காலத்தில் சிக்கலாக அமையும்.

ஏனென்றால், தெரிவுக்குழுவின் மூலம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்போவதாக அரசாங்கத்தினால் இனிமேலும் வெளிநாடுகளை நம்பவைக்க முடியாது. அவ்வாறு நம்பவைக்க முயன்றாலும், தலைமை நீதியரசருக்கே நியாயம் வழங்க முடியாத தெரிவுக்குழு, தமிழர்களுக்கு எவ்வாறு நியாயத்தை வழங்கப் போகிறது என்ற கேள்விக்கு அதனால் பதிலளிக்க முடியாமல் போகும்.

You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 12 December 2012 11:08 AM

    சிறப்பான கட்டுரை

    Reply : 0       0

    mutabi3 Friday, 14 December 2012 06:19 PM

    ""இந்த இரண்டு தெரிவுக்குழுக்களுக்கும்...... "" அவை எவை ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X